கடவுளும் பக்தர்களும்

எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன், படிக்காதவர்களை விட (நான் படிப்பு என்று சொல்வது பள்ளிப்படிப்பை அல்ல) படித்தவர்கள்தான் அதிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள், அதிக மூடர்களாக இருக்கிறார் என்று. நேற்றைய பிக்பாஸில் என்ன நடந்துள்ளது என்று பீராய்ந்தேன். அதாவது, புத்தகத்தில் பக்கங்களைப் புரட்டி விட்டுப் புரட்டி விட்டுப் படிப்பது போல அஞ்சு பத்து நிமிஷத்தை ஓட விட்டுப் பார்ப்பது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் இன்னும் ஆறு நாட்கள் என்ற அறிவிப்பும் அதில் கமல் படமும் தெரிகிறது. அங்கே உள்ள ஐவரில் படித்தவர் சிநேகன் மட்டுமே. அதாவது இலக்கியம், கவிதை இத்யாதி. மற்றவர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்த சராசரிகள். ஆனால் அவர்கள் அனைவரும் கமலின் புகைப்படத்தைப் பார்த்து சாதாரணமாக வணக்கம் சொல்லும் போது சிநேகன் மட்டும், அப்பாடா, காலைலேயே கடவுளைப் பார்த்தாச்சு, இனிமே கவலையில்லை என்கிறார்.

இம்மாதிரி ஆட்கள் தான் பிரிட்டிஷ்காரர்கள் வந்த போது அவர்களிடம் குமாஸ்தா வேலை பார்த்தார்கள். படித்தவர்கள். இம்மாதிரி ஆட்கள்தான் அரசியலிலும் உயர்நிலைக்குத் தாவுகிறார்கள். நக்கு, நக்கு, நக்கிக் கொண்டே இரு. உயர்வாய் என்பது தத்துவம். ஏனய்யா, ரெண்டு கோடி பேர் பார்க்கிறார்களே, ஒரு மனிதனைக் கடவுள் என்கிறோமே என்ற அறிவு வேண்டாமா? அதிலும் கமல் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர். பகுத்தறிவாளர். இங்கே என்ன பிரச்சினை என்றால், கமல்தான் இதையெல்லாம் ஊக்குவிக்கிறார். இல்லை என்று அவர் சொல்லவே முடியாது. ரெண்டு கோடி பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்தும் சிநேகன் ஆஃப்ரிக்க அடிமை மாதிரி முதுகையும் உடம்பையும் குறுக்கும் போது நட்பு ரீதியாகவே சொல்லலாமே? அதேபோல், மற்றவர்களிடமும் இப்படியெல்லாம் என் காலில் விழாதீர்கள், எனக்குத் தொண்ணூறு வயது இல்லை; மேலும் நான் பகுத்தறிவுவாதி, அரசியலில்தான் இப்படி எல்லோரும் காலில் விழுகிறார்கள் அந்த அசிங்கம் இங்கே வேண்டாம் என்று சொல்லலாமே? ஜெயலலிதாவின் ஆட்சியில் எத்தனை எத்தனை அலங்கோலம் நடந்தது இந்தக் காலில் விழும் அசிங்கத்தால். எத்தனையோ வயதான ஆட்களெல்லாம் ஜெ. காலில் விழுந்தார்கள். எத்தனையோ மூத்த காவல் அதிகாரிகள் சீருடையுடனே அவர் காலில் விழுந்தார்கள். கமல் முதல்வராக ஆனால் அந்த அசிங்கம் மீண்டும் நடந்தேறுமா?

மேலும், சிநேகன் தான் பரிசைத் தட்டிச் செல்லப் போகிறார். ஏனென்றால், அம்பது லட்சத்தையும் ஏழை மாணவர்களுக்கு லைப்ரரி கட்டித் தரப் போகிறேன் என்று சொல்லி மற்ற போட்டியாளர்களை ஒரே அடியில் வீழ்த்தி விட்டார். மக்கள் இப்போது சிநேகனுக்குத்தான் வாக்களிப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு emotional blackmail இது. ஆனால் இப்படி ப்ளாக்மெயில் செய்யாமலேயே சிநேகன் வென்றிருக்கலாம். அதற்கான intellect அங்கே அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ரெண்டு புஸ்தகம் படித்தாலே அந்த இண்டெலக்ட் வந்து விடும். பாவம் மற்ற சிறிசுகள் பாடப்புத்தகத்தைத் தவிர வேறு புத்தகத்தைத் தொட்டது கூட இல்லை போல.

கமலைப் பார்த்து கடவுளைப் பார்த்தாச்சு என்கிறார் படித்தவர். தமிழ்நாடு மேலும் மேலும் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.