யுவன் சந்திரசேகரின் சிறுகதை

நற்றிணை பதிப்பகம் யுகன் நற்றிணை பதிப்பகத்தின் சார்பில் நம் நற்றிணை என்று ஒரு அழகான இலக்கியப் பத்திரிகையைக் கொண்டு வந்திருக்கிறார். சமீப காலமாய் நான் தமிழில் எதுவும் படிப்பதில்லை. (ரொம்பக் காலமாகவே அப்படித்தான் என்று தோன்றுகிறது. ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழில் படித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. முன்னோடிகள் அனைவரையும் அவர்கள் எழுதிய எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தாயிற்று. அது போதும் என்று தோன்றுகிறது. உலக இலக்கியம்தான் இப்போதைக்குப் படிக்க ரசமாக இருக்கிறது. தற்சமயம் Radwa Ashour எழுதிய Granada என்ற நாவலையும் மிலன் குந்தேராவின் இம்மார்ட்டாலிட்டி நாவலையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

நம் நற்றிணையைப் புரட்டினேன். யுவன் சந்திரசேகரின் ஒற்றறிதல் என்ற கதை கண்ணில் பட படிக்கத் தொடங்கினேன். வாசிப்பு என்றால் – இப்போது எனக்கு இருக்கும் வேலை நெருக்கடியில் – முதல் பத்தியிலேயே என்னை அதன் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இழுத்துக் கொண்டாலே போதும், அது முதல் தரமான கதை. இந்த ஒற்றறிதல் உள்ளே மட்டும் இழுக்கவில்லை. தி.ஜானகிராமனின் காலத்துக்கும் இழுத்துக் கொண்டு போயிற்று. கதையில் சொல்லப்படாத பகுதிகள் ஏராளம். அதுதான் கதையை இன்னும் செழுமைப்படுத்துகிறது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல சிறுகதையைப் படித்த நிறைவு ஏற்பட்டது. நேற்றுதான் அராத்து சொன்னார், நீங்கள் பழுத்த பழம் மாதிரி ஆகி விட்டீர்கள்; எல்லாமே உங்களுக்குப் பிடித்து விடுகிறது என்று. இல்லையே, உலகமே பாராட்டிய நூறு நாற்காலிகள் எனக்குப் பிடிக்கவில்லையே?

இந்தக் கதையைப் படித்த போது யுவனிடம் இது போல் இன்னும் நூறு கதைகள் இருக்கும் போல் இருக்கிறதே எனத் தோன்றியது.

நற்றிணை தொடர்பு முகவரி: நற்றிணை, 6/84 மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 60005. தொலைபேசி: 044 2848 2818
email: namnatrinai@gmail.com