என் புதிய புத்தகங்கள்

பல நண்பர்கள் என் பிறந்த நாள் அன்று என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  என் உயிரினும் இனிய நண்பர்களே…  ரத்தத்தின் ரத்தமே என்ற பாணியில் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.  ஏனென்றால், எம்ஜியார் உண்மையிலேயே தன் ரசிகர்களைத் தன் ரத்தத்தின் ரத்தமாகத்தான் பாவித்தார்.  அதைப் போலவேதான் நானும் என் எழுத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் என் உயிரையும் மேலாக மதிக்கிறேன்.  உதாரணமாக, நேற்று ஒரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  காரணத்தையும் சொல்கிறேன்.  நான் ஒரு பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரைகள் சாதாரணமாக இருக்கின்றன என்று கருத்து தெரிவித்தார்.  சரி, பழுப்பு நிறப் பக்கங்கள் படித்தீர்களா என்று கேட்டேன்.  இல்லை என்றார்.  அதைப் படித்தவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரிப்பேன் என்று பதில் சொன்னேன்.  ஏனென்றால், அந்த நூல் என் முன்னோடிகளின் வாழ்க்கை.  என் முன்னோடிகளின் தியாகம்.  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, நம்புவதற்கே அரிதான தியாகங்கள் செறிந்த வாழ்க்கை அவர்களுடையது.  பெருமாளையே சேவிக்க மாட்டேன்; பெருமாளை சேவிக்கும் ஆழ்வார்களுக்கே என் சேவை என்று சொன்னார் அல்லவா ஒரு அடியார்.  அப்படிப்பட்டவன் நான்.  பழுப்பு நிறப் பக்கங்களை நான் தான் எழுதினேன் என்றாலும் அதை வாசிப்பவரின் பாதம் பணிவேன்.  ஏனென்றால், அந்த நூல் என்னைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியத்தின் புனித நூல்.  நான் வெறும் தொகுப்பாளன் மட்டுமே.  அந்த நூலை ஒவ்வொரு கல்லூரி மாணவரும் பள்ளி இறுதி ஆண்டு மாணவரும் தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் படித்தே ஆக வேண்டும்.  லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும்.  நானூறோ என்னவோ தான் விற்றிருக்கின்றன.  இத்தனைக்கும் கிழக்கு பதிப்பகம்.  கிழக்கு பதிப்பகத்தில் 365 நாளும் புத்தகம் கிடைக்கும்.  ஆன்லைனிலேயே வாங்கலாம்.  அங்கேயும் நானூறுதான்.  (இல்லை சார், 817 பிரதிகள் விற்றுள்ளன என்று ஹரன் பிரஸன்னா சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.  ஏனென்றால்,  50000-இலிருந்து லட்சம் பிரதிகள் வரை விற்க வேண்டிய புத்தகம் நானூறு விற்றால் என்ன, எண்ணூறு விற்றால் என்ன, வித்தியாசம் ஒன்றும் இல்லை)

ஆக, இப்படிப்பட்ட சூழலில்தான் நான் இந்த ஆண்டு சற்றே வேறு விதமாக நண்பர்களைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  உதாரணமாக கோவை என்ற நகரை எடுத்துக் கொள்வோம்.  அங்கே எனக்குப் பல நண்பர்கள் உள்ளனர்.  நான் கோவை சென்று புத்தகங்கள் பற்றிக் கலந்துரையாடலாம்.  ஆனால் அதை விட, கோவை நண்பர்கள் ஒவ்வொருவரும் நிலவு தேயாத தேசம், To Byzantium ஆகிய நூல்களைக் குறைந்த பட்சம் ஐந்து ஐந்து பிரதிகள் வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்கலாம்.  இரண்டும் ஒரே நூல்தான்.  தமிழில் படிப்பவர்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு ஆங்கிலத்திலும்.  கோவையை விட மதுரையில் எனக்கு நண்பர்கள் வட்டம் அதிகம்.  எனக்குக் குறைந்த அளவு வாசகர்கள் உள்ள ஊர் நான் பிறந்து வளர்ந்த தஞ்சை மண்ணில்தான். என் அறிவிப்பைப் பார்த்து விட்டு பல நண்பர்கள் பதிப்பகத்தாருக்கு போனிலும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.  மகிழ்ச்சி.  அதே சமயம், இதெல்லாம் போதாது என்பதையும் நினைவூட்டுகிறேன்.  பதிப்பக நண்பர் சொன்னார்.  நூல் வெளிவந்த முதல் மூன்று மாதத்தில் நானூறு பிரதிகள் விற்றால் போதும்.   ஓநாய் குலச் சின்னம் எழுதிய எழுத்தாளரையும் ஓரான் பாமுக்கையும் ஹாருகி முராகாமியையும் நினைத்துப் பார்க்கிறேன்.  புத்தகம் வெளிவருவதற்கு முன்னாலேயே ஆயிரக் கணக்கில் முன்பதிவு குவிகின்றன.  லட்சக் கணக்கில் விற்கின்றன அவர்களின் நூல்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர் சொன்னார், என் எழுத்துக்களைப் படித்து மாதம் ஒருமுறை கூடி விவாதிக்கிறார்கள் என்று.  நேற்று ஒரு நண்பர் சொன்னார், சாருவைப் படிப்பவர்கள் வேறு யாரையுமே படிப்பதில்லை என்று.  ஒரு cult following மாதிரி இருக்கிறது என்று இருவருமே சொன்னார்கள்.  ஒரு எழுத்தாளனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்?  இருந்தாலும் என் பதிப்பக நண்பர் இந்தத் துறைக்குப் புதியவர்.  அவர், சாருவின் நூல்களை வெளியிட்டால் ஆறு மாதத்தில் ஆயிரம் பிரதி விற்று விடும் என்று நினைக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு வாசகி இருந்தார்.  உங்களுடைய ஸீரோ டிகிரிக்கு நியூயார்க் டைம்ஸில் மதிப்புரை வராமல் உறங்க மாட்டேன் என்றார்.  ஸீரோ டிகிரி (ஆங்கில) நூறு பிரதிகளை வாங்கினார்.  அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள அரசு நூலகங்களுக்கு எழுதிப் போட்டார்.  ஸீரோ டிகிரி என்ற நாவலை உங்கள் நூலகத்துக்கு அளிக்க விரும்புகிறேன்.  அங்கே அதை ஒரு கமிட்டியில் வைத்துப் படித்து, ஏற்றுக் கொண்டார்கள்.  அமெரிக்காவில் இப்போது நூறு நூலகங்களில் ஸீரோ டிகிரி இருக்கிறது.  என் நண்பர் அஸ்வினி எழுதியிருந்தார்.  அவர் ஊரில் உள்ள நூலகர் என் புத்தகத்தின் ISBN லோக்கல் நம்பராக உள்ளது; சர்வதேச ஐஎஸ்பிஎன்னாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்வோம் என்று சொன்னாராம்.  அந்த நூலகருக்கு விபரம் தெரியவில்லை.  ஐஎஸ்பிஎன் எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியாகும்.  ஐஎஸ்பிஎன் என்றாலே International Standard Book Number என்பதுதான்.

மீண்டும் சொல்கிறேன், மார்ஜினல் மேனில் adult content உண்டு.  ஆனால் நிலவு தேயாத தேசம், To Byzantium, Unfaithfully Yours ஆகிய நூல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் வாசிக்கக் கூடியவை; வாசிக்க வேண்டியவை.  இவற்றை வாங்கி கல்லூரிகளுக்குக் கொடுங்கள்.  அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்கள் மார்ஜினல் மேனை வாங்கி நூலகங்களுக்கு அளியுங்கள்.  ஒரு விஷயம் தெரியுமா?  தமிழில் வெளிவரும் நூல்களின் மின் நூல் வடிவத்துக்கு இந்தியாவில்தான் வாசகர்கள் அதிகம்; அமெரிக்காவில் கம்மி.  ஆனால் அதே நூல் அல்லது பத்திரிகை இலவசமாக இணையத்தில் கிடைத்தால் அமெரிக்க வாழ் தமிழர்கள் படிக்கிறார்கள்.  ரெண்டு டாலர் பணம் கட்டிப் படிக்க விருப்பம் இல்லை.  ஆனால் நரகத்தைப் போன்ற தேசமாக மாறியிருக்கும் இந்தியத் தமிழர்கள் காசு கொடுத்துப் படிக்கத் தயங்கவில்லை.  இது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.  கெட்ட வார்த்தை பேசக் கூடாது என்று இருக்கிறேன்.

ஒரு இயக்கத்தைப் போல் செயல்படுங்கள்.  ஒரு கிலோ வஞ்சிரம் சென்னையில் 1500 ரூபாய் விற்கிறது.  மூன்று பேர் இருக்கும் வீட்டுக்குக் குறைந்தது முக்கால் கிலோ வேண்டும்.  அதை வாங்கக் கியூவில் நிற்க வேண்டியிருக்கிறது.  சினிமாவுக்குப் போனாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய்.  ஆனால் 400 ரூபாய் புத்தகத்தை வாங்க நூறு முறை யோசிக்கிறோம்.  ஐம்பது ரூபாய் டிஸ்கவுண்ட் உண்டா என்று கேட்கிறோம்.  என்னை மன்னியுங்கள்.  வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது.  பதிப்பகத் துறையில் ஒரு பைசா லாபம் இல்லை.  கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி அவரது துறையில் விற்பன்னர்.  அதிலேயே இருந்திருந்தால் கோடிகளில் புரண்டிருப்பார்.  புத்தகங்களின் மீது கொண்ட அதீத ஆர்வத்தினால்தான் புத்தகங்களை வெறுக்கும் தமிழ்ச் சமூகத்தில் புத்தகங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்.  புத்தகம் வெளியிடுவதில் லாபமே இல்லை.  20,000 பிரதி விற்றால் லாபம் உண்டு.  ஆனால் அது எப்போது நடக்கும்?

புத்தகங்களின் விலை இன்னும் நிர்ணயம் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.  இன்னும் ஓரிரு நாளில் அது முடிவாகி விடும்.  மார்ஜினல் மேனுக்கு Irwin Allan Sealy ஒரு முன்னுரை கொடுத்திருக்கிறார்.  அதைப் படித்துப் பார்த்த ஸ்ரீராம், இதை விட வேறு என்ன வேண்டும் என்று கேட்டார்.  மார்ஜினல் மேனை ஒரே வார்த்தையில் வர்ணித்தால் என்ன சொல்லலாம்?  அதைச் சொல்லியிருக்கிறார் ஆலன்.  அதைப் படிப்பதற்காகவே மார்ஜினல் மேனை வாங்கலாம்.  560 பக்கம் வந்திருக்கிறது.  ஜனவரி முதல் வாரத்திலேயே அது கிடைத்து விடும்.  இந்தப் புத்தகங்கள் அனைத்துமே இன்னும் ஓரிரு வாரத்தில் அமேஸான் தளத்தில் கிடைக்கும்.

புத்தகங்களை வாங்க நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

zerodegreepublishing@gmail.com

தொலைபேசி: 98400 65000