ப்ரும்மம்

வொய்ட்டி, ப்ளாக்கி, ப்ரௌனி என்று மூன்று தெரு நாய்களுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவைகளும் உணவுக்காகத் தெருத்தெருவாக அலைவதை நிறுத்தி விட்டு செயின் திருடர்களைப் பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.  (எங்கள் ஏரியாவில் செயின் திருடர்கள் ஜாஸ்தி.  பைக்கில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாவிக் கொண்டு போய் விடுவார்கள்.  அவர்களுக்கு என்ன தலையெழுத்தா, ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு தெருவைத் துப்புரவு செய்வதற்கு?)  எங்கள் தெருவின் பெயர் வெங்கடசாமி தெரு.  இந்தத் தெருவில் பதினோரு வருடங்களாக இருந்தாலும் தெருவின் பெயர் எனக்குச் சட்டென்று ஞாபகம் வராது.  வெங்கடேசன் தெருவா, வெங்கட் நாராயாணா தெருவா, ம்ஹும் அதெல்லாம் தி.நகரில் அல்லவா இருக்கின்றன,  ஏதோ வெங்கடேசன் என்று வருமே… என்ன அது என்றுதான்  குழம்புவேனே தவிர வெங்கடசாமி தெரு என்று மனதில் வராது.  இந்தத் தெருவில் என்ன விசேஷம் என்றால், என் வீட்டுக்கு அடுத்த வீட்டிலிருந்து அப்பு முதல் தெரு துவங்குகிறது.  அதாவது, ஒரு தெருவுக்கே ரெண்டு பெயர்.  ஆனால் நாய்களுக்கு எப்படி இத்தனை நுணுக்கம் தெரிகிறதோ தெரியவில்லை, அப்பு முதல் தெரு துவங்கும் இடத்தில் இரண்டு நாய்கள் உள்ளன.  அவையும் தெரு நாய்கள்தான் என்றாலும் நாய்களிடம் மனிதர்களிடம் உள்ளதைப் போல் எல்லைப் பிரச்சினை எதுவும் இல்லை.  ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஒவ்வொரு ஏரியா.  ஆக, இந்த நிலையில், அப்பு முதல் தெரு துவங்கும் இடத்தில் உள்ள இரண்டு நாய்களும் கூட என்னிடம் உணவு கேட்கின்றன.  அதனால் அவைகளுக்கு தினமும் பிஸ்கட்.  அவை பெடிக்ரி சாப்பிடுவதில்லை.  அந்த இரண்டுக்கும் என்ன பெயர் வைப்பது என்று ஒரு வருடமாகக் குழம்பிக் கொண்டிருக்கிறேன்.  புத்தகங்களுக்கு சுலபமாகப் பெயர் வைத்து விடுகிறேன்.  ஆனால் நாய்களுக்கு அது அத்தனை சுலபமாக இல்லை.  ஒரு நாய் தரையிலிருந்து முக்கால் அடி தான் உயரம்.  அதனால் அதைத் தற்காலிகமாக (அதாவது ஒரு வருடமாக) குள்ளா என்று அழைக்கிறேன்.  மற்றொரு நாய்க்குப் பெயர் இன்னும் சிக்கவில்லை.  இந்த ஐந்து நாய்கள் தவிர முப்பது காகங்கள்.

இவை தவிர வீட்டுக்குள் இருக்கும் பப்பு மற்றும் ஸோரோவை தமிழ் கூறு நல்லுலகுக்கு நன்கு தெரியும்.  தெரியாத விஷயம், இதே வீட்டுக்குள் ச்சிண்டூ (ஆண்) மற்றும் ஸ்னீக்கி (பெண்) என்ற இரண்டு பூனைகளும் வாழ்கின்றன. ச்சிண்டூ ஸ்னீக்கி இரண்டும் காதலர்கள்.  பெரிய ச்சிண்டூ என்ற பூனை வெளியிலிருந்து வந்து அவ்வப்போது சாப்பிடும்.

இந்தக் கதையெல்லாம் எதற்கு என்றால், இன்று இவை எல்லாவற்றுக்கும் உணவிடும் போது யாராவது நண்பர்கள் இந்த செலவைக் கொஞ்சமாகப்  பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.  நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீராமிடமிருந்து போன்.  ”உங்கள் பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்?” “சீலேவுக்கு ஒரு டிக்கட்” என்று சொல்லலாமா என்று நினைத்தேன்.  சரி, அவரைத் துன்புறுத்தக் கூடாது என்று ஒன்றும் வேண்டாம் ஸ்ரீராம் என்றேன்.  அப்படியானால் பொக்கே வாங்கி வருகிறேன் என்றார்.  பொக்கே என்றதும் எனக்கு ப்ரௌனி, ஒய்ட்டி, ப்ளாக்கி ஞாபகம் வந்து விட்டது.  ”கொஞ்சம் பெடிக்ரி வாங்கி வாருங்கள்; அந்த ஜீவன்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும்” என்றேன்.