zero degree publishing

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். இந்தியாவில் வசிக்கும் ஆங்கில எழுத்தாளர்.  ஐந்தாறு நாவல்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நூல்களும் 2000 பிரதிகள்தான் விற்கின்றன.  ஜீவனோபாயத்துக்குக் கொஞ்ச காலம் பேராசிரியர் வேலை பார்த்தார்.  இப்போது மாதத்தில் 15 நாள் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  உலகம் பூராவும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கின்றன.  கலந்துரையாடல்கள், novel reading sessions, seminars, இப்படி இப்படி.  அவரைத் தொலைபேசியிலேயே பிடிக்க முடியவில்லை.  மின்னஞ்சலில்தான் தொடர்பு கொள்ள முடிகிறது.  பிற மொழி எழுத்தாளர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏதாவது ஒரு இலக்கிய அமைப்பு இப்படிப்பட்ட எழுத்தாளர்களை sponsor செய்து கொண்டே இருக்கின்றன.

எழுத்தாளர்களுக்கான இலக்கியச் சூழல் தமிழில் இல்லை.  கோபி கிருஷ்ணனின் கதையை நான் சொல்லச் சொல்ல கேட்டு உங்களுக்கே அலுத்துப் போயிருக்கும்.  200 பிரதிகளே விற்கக் கூடிய ஒரு மொழியில் நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். இல்லையே, உங்கள் எக்ஸைல் நாவலை 2000 பிரதிகள் வாங்கினோமே என்று நீங்கள் கேட்கலாம்.  அப்படி விற்றும் வருடாந்திர ராயல்டி 60000 ரூபாய்தான்.  இது என் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நான் கொடுக்கும் மாத ஊதியத்தை விட ரொம்பக் கம்மி.  என் தெருவில் வசிக்கும் நாய் பூனைகளுக்காகவே நான் மாதம் 15000 ரூபாய் செலவழிக்கிறேன்.  அந்த ஜீவன்கள் சாப்பிடும் போது நாம் அடையும் இன்பத்துக்கு நிகரானது இந்த பூமியில் எதுவும் இல்லை.  அதற்காகவே மீண்டும் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தமிழ் வாசகச் சூழல் மிகப் பரிதாபகரமாக இருப்பதால்தான் என் எழுத்து ஆங்கிலத்தில் போக வேண்டும் என்று கோவில் கோவிலாக வேண்டிக் கொண்டேன்.  தமிழ் இலக்கியப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.  ஆங்கில வாசகர்களால் அதை லகுவாக வாசிக்க முடியவில்லை.  இந்த நிலையில் என் நண்பர்களான காயத்ரி ஆர்., மற்றும் ராம்ஜி நரசிம்மனால் துவக்கப்பட்டது Zero Degree Publishing.  இவர்கள் என் நண்பர்கள் என்பதைத் தவிர இந்தப் பதிப்பகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  இவர்களிடம் மிகத் தரமான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.  இதுவரை நான் கல்யாண்ராமனின் மொழிபெயர்ப்பைத் தவிர வேறு எந்த மொழிபெயர்ப்பையும் அங்கீகரித்தது இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.  எனவே Zero Degree Publishing-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.  மற்றபடி நீங்களே படித்து விட்டுச் சொல்லுங்கள்.

என்னுடைய நான்கு நூல்கள் ஆங்கிலத்தில் வருகின்றன.  Zero Degree (Third edition), Unfaithfully Yours (Asian Age, Times of India, Scroll போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்த என் கட்டுரைகளின் தொகுப்பு – இக்கட்டுரைகள் தமிழில் வெளியாகாதவை), To Byzantium – A Turkey Travelogue, Marginal Man.  இது தவிர நிலவு தேயாத தேசம் என்ற தமிழ் நூலும் வருகிறது.  எல்லாம் Zero Degree Publishing மூலமாக.  இவை தவிர அந்தப் பதிப்பகம் வேறு பல நூல்களையும் கொண்டு வருகிறது.

மேற்கண்ட ஐந்து நூல்களில் மார்ஜினல் மேனை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.  எனக்கு மிகப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான  Irwin Allan Sealy மார்ஜினல் மேனுக்கு முன்னுரை கொடுத்திருக்கிறார்.  அவருக்கு நாவலை அனுப்பி விட்டு உங்களுக்குப் பிடித்திருந்தால் படித்துப் பாருங்கள்; படித்த பிறகு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்; பிடித்திருந்தது என்றால் அதற்கு ஒரு முன்னுரை கொடுப்பது பற்றி யோசியுங்கள் என்று எழுதியிருந்தேன்.  பிரமாதமான முன்னுரை எழுதியிருக்கிறார்.  மார்ஜினல் மேனின் அடிச்சரடு என்று எதை நான் நினைத்தேனோ அதையே பிடித்து எழுதி விட்டார் ஆலன்.

இந்த நூல்களை வாங்குவதற்கு நீங்கள் zerodegreepublishing@gmail.com என்ற முகவரிக்கு எழுதலாம்.  மற்றபடி அமேஸான் போன்ற தளங்களிலிருந்து வாங்க கொஞ்சம் பொறுங்கள்.  இந்த விஷயத்தை இன்றே எழுதக் காரணம், என் பிறந்த நாளுக்காக மலர்க் கொத்து, கேக் போன்ற விஷயங்களுக்காக ஆகும் செலவைத் திசை திருப்பி மேலே குறிப்பிட்ட என் புத்தகங்களை வாங்கலாம்.  அதுதான் நீங்கள் எனக்குத் தரும் உண்மையான பிறந்த நாள் பரிசு.  Marginal Man நாவலை 18 வயதுக்குட்பட்டவர்கள் படிப்பது உசிதம் அல்ல.  ஆனால் To Byzantium பயணக் கட்டுரையை மாணவர்களும் படிக்கலாம்.  கல்லூரிகளில் வாங்கி வையுங்கள்.  நண்பர் ஒருவர் புத்தகங்களுக்கு வெளியீட்டு விழா இல்லையா என்று கேட்டார்.  இல்லை.  மற்றவர்கள் செய்வதையே நாமும் பின்பற்றக் கூடாது.  அதை விட ஒவ்வொரு நகரிலும் ஊரிலும் ஒவ்வொரு நூல் பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்துவோம்.  தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை என்று.  முப்பது பேர் இருந்தால் போதும்.  இப்படிப்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் நூல்களை அதிகம் பேருக்குக் கொண்டு செல்ல முடியும்.

மீண்டும் சொல்கிறேன்.  என் பிறந்த நாள் அன்று பூங்கொத்தோ கேக்கோ வேண்டாம்.  என் புத்தகங்களை வாங்குங்கள். புத்தகம் இன்னும் தயாராகவில்லை என்றால் முன்பதிவு செய்து கொண்டு அதற்கான விலையை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.  மார்ஜினல் மேன் விலையை மிகவும் கம்மியாக வைத்திருக்கிறார்கள் பதிப்பகத்தார்.  இது போன்ற விஷயங்களில் நான் தலையிடுவதில்லை என்பதால் வாளாயிருந்து விட்டேன்.  சாதாரணமாக அதற்கு 800 ரூ விலை வைத்திருக்கலாம்.  அவ்வளவு இல்லை.

மீண்டும் சொல்கிறேன்.  zerodegreepublishing@gmail.com க்கு எழுதி என் நூல்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.  அல்லது, 99624 45000 என்ற எண்ணுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுக் கொள்ளுங்கள்.