தி. ஜா. என்ற மகா கலைஞன்

பழுப்பு நிறப் பக்கங்கள்பாகம் 2 இலிருந்து

தி. ஜானகிராமன் (1921 – 1982)

என் இளமைக் காலம் ‘தீண்டத்தகாதவர்கள்’ என சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த சேரிப் பகுதியில் கழிந்தது. அங்கே மக்களின் எண்ணிக்கையை விட நரகலைத் தின்று வாழும் பன்றிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஒருமுறை ஒரு ஆன்மிகப் பெரியவர் ஊருக்கு வந்து நகர்வலம் வந்தவர் – ஊரில் எல்லா தெருக்களுக்கும் சென்றவர் – எங்கள் தெருவுக்கு மட்டும் வரவில்லை. தெருப் பெண்களின் வேலை, மேட்டுக்குடி வீடுகளில் போய் மலம் அள்ளி அதை பீ சந்து என்ற இடத்தில் நிற்கும் லாரியில் சேர்ப்பது. ஆண்களுக்கு வயல் வேலைகூட கிடைக்காது. எங்காவது காட்டுக்குப் போய் முயல், காட்டுக் கோழி, உடும்பு என்று எதையாவது அடித்துக் கொண்டுவந்து விற்று காசாக்குவார்கள். பிறகு வேலிமுட்டி சாராயத்தைக் குடித்துவிட்டு எங்காவது விழுந்து கிடப்பார்கள்.

இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்த ஒருவனின் மனநிலை எப்படியிருக்கும், உலகத்தை அவன் எந்த அடிப்படையில் பார்ப்பான் என்று நீங்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்த சாதீயப் படிநிலைக்குக் காரணம் என்ன? வெறுப்பு. சாதீய அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவர்களின் மீதான வெறுப்பும் அசூயையும்தானே அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக வைத்திருந்தது?

இப்படி வெறுப்பின் அடிப்படையில் உருவான பிரிவினையை ஒரு காலகட்டத்தில் இன்னொரு வெறுப்பு எதிர்கொண்டது. மேல்சாதி மற்றும் அவர்களது கலாசாரத்தின் மீதான வெறுப்பு அது. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி என்று கற்பிக்கப்பட்ட பள்ளியில் சேர்ந்து முதல் வரிசை மாணாக்கனாகத் தேறினேன். 25 வயது. தி. ஜானகிராமன் கசந்தார். என்னய்யா எழுத்து இது? தீண்டாமை என்ற கொடுமை கொழுந்துவிட்டு எரிகிறது; அதைப் பற்றி இந்த எழுத்தாளருக்குக் கவலையோ அக்கறையோ இல்லை; அவாளுக்கும் இவாளுக்கும் காதலாம், கத்தரிக்காயாம். வெங்காயம். இதில் சங்கீதம்வேறு. எழுத்தில் பறை சத்தம் கேட்கிறதா? என்ன, கேட்கவில்லையா? தூக்கிக் குப்பையிலே போடு.

ஒரு அரசியல் சமூக சித்தாந்தமாக என்னுள் வளர்ந்துவிட்ட வெறுப்பு என்ற புற்று நோயை அகற்றியவர் 25 ஆண்டுகளாக என்னோடு உரையாடி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன். எவ்வளவு வசவுகளைச் சகித்துக்கொண்டிருப்பார் அவர்! “பரவாயில்லை சாரு, உங்கள் நிலையில் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் திட்டியிருப்பேன்,” என்று மட்டுமே பதில் சொல்வார். அவர்தான் எனக்கு ஆப்ரஹாம் லிங்கனை அறிமுகப்படுத்தினார். நான் அதுவரை அறிந்திருந்த கார்ல் மார்க்ஸ், ஈ.வே. ராமசாமி ஆகிய இரண்டு பேரும் ஆப்ரஹாம் லிங்கனும் எதிர் எதிர் துருவங்களில் நின்றார்கள். அதற்குப் பிறகே தொல்ஸ்தோய், காந்தி என்று வந்தேன். வெறுப்பு என்ற புற்றுநோய் என்னைவிட்டு அகன்றது.

இப்படிப்பட்ட பின்னணியிலும்கூட எம்.வி. வெங்கட்ராம், மௌனி, கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு போன்ற கும்பகோணத்துக்காரர்களைப் பிடித்துப் போனதற்குக் காரணம், அவர்களிடமிருந்த ‘ட்ரான்ஸ்கிரஸிவ்’ தன்மைதான் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் தி.ஜா.விடம் இருந்தது முழுக்க முழுக்க அன்பும் உன்னதமும் தரிசனமும். எனக்கோ அப்போது அதெல்லாம் கெட்ட வார்த்தைகள்.

ராகவனுக்குப் பிறவியிலிருந்தே கண் பார்வை மங்கல். சரி செய்துகொள்ள முடியாதபடி வறுமை. கல்லூரியில் படிக்கும்போது மைனஸ் பத்து. பிறகு 25 வயதில் ஒரு லென்ஸ் போட்டுக்கொண்டார். லென்ஸ் போட்ட பிறகும் பார்வையில் உறுத்தல். தரைச் சக்கரம் சுற்றும்போது வட்டம் வட்டமாகத் தெறிக்குமே, அதுபோல பார்வையில் பட்ட எல்லாமே வளையம் வளையமாகத் தெரிகிறது. அல்லது, பனி விழும் மங்கல். உலகத்தையே மங்கலான திரை ஒன்று மறைத்திருந்தது. ராகவனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டே தவிர உறவுகளாலும் நண்பர்களாலும் நாஸ்திகர் என்றே கருதப்படுபவர். அதனால் அதிசயங்களில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. கண்களில் போட்டிருக்கும் லென்ஸைக் கழற்றி தினமும் நீரில் கழுவிப் போட்டுக்கொள்ள வேண்டியது லென்ஸ் அணிந்திருப்போரின் அன்றாடக் கடமைகளில் ஒன்று. அதன்படி ஒருநாள் அவர் காட்டழகர் கோவில் சென்றிருந்தபோது தன் லென்ஸைக் கழற்றி அங்கே வற்றாமல் கொட்டிக்கொண்டிருக்கும் சிறியதொரு அருவி நீரில் கழுவி கண்களில் போட்டுக்கொள்கிறார். ஆஹா, அவர் சொன்ன அற்புதத்தை நான் ஒரு கதையாகத்தான் எழுத வேண்டும். கார் கண்ணாடியைத் துடைத்து விட்டது போல் பனி விலகிவிட்டது. இருளில் சூரிய ஒளி பாய்ந்தது போல் இந்த உலகமே பளீரென்று தெரிகிறது. அந்த அதிசயத்தோடு நிற்காமல் இன்னொரு அதிசயமும் தொடர்ந்தது. காட்டழகரின் தீர்த்தம் தொட்ட அந்த லென்ஸை கடந்த 35 ஆண்டுகளாக அவர் மாற்றவே இல்லை. இது கின்னஸில் பதிவு செய்யப்பட வேண்டிய உலக அதிசயம் என்கிறார் ராகவன்.

ஏன் இதை இவ்வளவு விளக்கமாகச் சொல்கிறேன் என்றால், ராகவனுக்குக் காட்டழகர் அருவி நீரால் பார்வை வந்தது போல் என் மனதில் இருந்த வெறுப்பெனும் திரை விலகியவுடனேயே தி.ஜா.வின் பிரம்மாண்டமும் உன்னதமும் அழகின் ஆராதனையும் எனக்குப் பளீரென விளங்கலாயிற்று.

***

தி. ஜானகிராமன் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றிய பின் அகில இந்திய வானொலியில் சேர்ந்தார். கர்நாடக இசையிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த ஞானம் உண்டு.

1943-இல் எழுதத் தொடங்கிய தி. ஜா. எழுதிய நாவல்கள்: அமிர்தம், மோக முள், அம்மா வந்தாள், அன்பே ஆரமுதே, மலர் மஞ்சம், உயிர்த்தேன், செம்பருத்தி, மரப்பசு, நளபாகம். இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைள், கட்டுரைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் (‘உதய சூரியன்’, சிட்டியுடன் சேர்ந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’, ‘கருங்கடலும் கலைக்கடலும்’, ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’).

மணிக்கொடி காலகட்டத்துக்குப் பிறகு சிறுகதையில் ஒரு தேக்கம் நிலவியது. கு.ப.ரா.வும் இறந்துவிட்டார். அந்தத் தேக்கத்தை உடைத்தவர்கள் தி. ஜானகிராமன், லா.ச.ரா. என்ற இருவர். (லா.ச.ரா.வுக்கு இப்போது – 2015 – நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது.) இவர்கள் இருவருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, இருவருமே 1940களிலிருந்து இன்றளவும் வாசகர்களால் விரும்பப்படும் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்நாளிலேயே பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர்கள். எந்தவொரு எழுத்தாளரும் வாசகரும் தமிழின் ஆகச் சிறந்த பத்து நாவல்கள் என்று பட்டியலிட்டால் அதில் தி.ஜா.வின் மோகமுள்ளோ, அம்மா வந்தாளோ இல்லாமல் இராது. தி.ஜா. அளவுக்குக் கொண்டாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரே இல்லை என்றுகூட சொல்லலாம். இன்றைய நிலையிலும் அத்தனை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கொண்டாட்டத்துக்குரிய எழுத்தாளராகவே இருந்து வருகிறார் தி.ஜா. காரணம், தி.ஜா.வின் உலகம் வாணவேடிக்கைகளும் வர்ண ஜாலங்களும் கொண்ட ஆண் பெண் உறவு. அது மட்டும் அல்ல; அழகின் உபாசகர். அழகையே தெய்வமாக உபாசித்தவர். அதனால்தான் பாமரனிலிருந்து புத்திஜீவி வரை கொண்டாடும் எழுத்தாளராக இருக்கிறார்.

தி. ஜானகிராமனுக்கு நேர் எதிரானது அசோகமித்திரனின் உலகம். வாழ்வின் மிக இருண்ட பகுதிகளை எழுதியவர் அசோகமித்திரன். ஆனால் இருண்மையான மொழியில் அல்ல; ‘ப்ளாக் ஹ்யூமர்’ என்று சொல்லப்படும் துயரம் தோய்ந்த பகடி அவர் எழுத்தின் பலங்களில் ஒன்று. அந்த வகையில் அசோகமித்திரனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றுகூட சொல்லலாம். இன்னொரு விதமாக யோசித்தால், அசோகமித்திரன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நரகத்தையும் தி.ஜா. கடவுளால் அருளப்பட்ட சொர்க்கத்தையும் எழுதுகிறார்கள். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் நாம் தி.ஜா., அசோகமித்திரன் இருவரையும் இன்னும் சிறப்பாக வாசிக்க முடியும்.

Zeus என்ற கிரேக்கக் கடவுளின் புதல்வர்கள் அப்பல்லோ, டயோனிஸஸ். அப்பல்லோ உன்னதம், அழகு, மேன்மை போன்றவற்றின் குறியீடு. டயோனிஸஸ் குழப்பம், இருண்மை, துயரம் ஆகியவற்றின் அடையாளம். இவ்வாறாக இந்த இரண்டு கடவுளர்களையும் தத்துவப்படுத்தியவர் நீட்ஷே. அதை நாம் தி.ஜா.வுக்கும் அசோகமித்திரனுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

1972-இல் வெளிவந்த அசோகமித்திரனின் ‘விமோசனம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் எஸ். வைதீஸ்வரன் இப்படி எழுதுகிறார்: “(அசோகமித்திரனின் மனிதன்) Francis Bacon-இன் ஓவியங்களில் சித்தரிக்கப்படும் மனித முகத்தைப் போல துக்கமும் கோமாளித்தனமும் ஆணவமும் குற்றத்தின் சுமையும் பல பல கோணங்களில் காட்டும் உருக்கமான முகம் கொண்டவன்.”

அசோகமித்திரனின் ‘இருவர்’ என்ற குறுநாவல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். வாலாவின் கணவன் வெங்கடாசலம் தன் வைப்பாட்டி தனத்தைப் பார்த்துவிட்டு வரும்போது ஆற்று மணலில் சிக்கி இறந்துவிடுகிறான். தனத்துக்கு வாலாவின் மீதும் வாலாவின் மகன் விசுவின் மீதும் அதீதமான பாசம். வாலாவுக்கும் தனத்தின் மீது மிகுந்த பிரியம் உண்டு. (அதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சகஜம்.) வாலா விசுவுடன் தன் அண்ணா வீட்டுக்குப் போய் வாழ்கிறாள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிராமண குலத்தில் இளம் விதவைகள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படிப்பட்ட வாழ்க்கை அது. இவ்வளவுக்கும் வறுமை ஒன்றும் இல்லை. வெங்கடேசன் ஒரு குட்டி ஜமீன்தார். ஆனாலும் அண்ணாவின் வீட்டில் விதவையாக வாழும் வாலா அடுக்களையைவிட்டு வெளியே வந்ததில்லை. யாரிடமும் ஒரு பேச்சு பேசியதில்லை. இந்த நிலையில் தனம் தன் தாயாரோடு ஊரைவிட்டு ஒரேயடியாக சென்னைக்குப் போவதால் கடைசி தடவையாக விசுவையும் வாலாவையும் பார்க்க வருகிறாள். வீட்டுக்குள்கூட நுழையாமல் தெருவிலேயே நின்று பார்த்துவிட்டு, தான் செத்தால் கொள்ளி போட வருவாயா என்று விசுவிடம் கேட்டுவிட்டுப் போகிறாள். தன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் விசுவின் மீது அப்படி ஒரு பாசம் அவளுக்கு.

அவள் போன பிறகு வாலாவின் அண்ணா வருகிறான். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களில் நரகத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து காண்பிக்கிறார் அசோகமித்திரன். நேராகச் சென்று வாலாவின் கன்னத்தில் அறைகிறான் அவள் அண்ணா. அவள் குறுகிக்கொண்டது அடிக்காக அல்ல என்று தோன்றியது. ஆனால் அதையும் கவனிக்காமல் அவளைத் தோளிலும் முகத்திலும் மாறி மாறி அடிக்கிறான்.

“அண்ணா, அண்ணா,” என்று அவள் முனகுகிறாள்.

“கட்டினவனை முழுங்கிட்டு இங்கே வந்து என்னடி ஆட்டம் போடறே!” என்று சொல்லிக்கொண்டே அடித்து விளாசுகிறான்.

இடையில் ஓடி வரும் அவன் அம்மா, “டேய், டேய், அவ தூரண்டா,” என்கிறாள்.

“அதை ஏன் முன்னமே சொல்லவில்லை?” என்று அம்மாவைத் திட்டுகிறான்.

“நீதான் சொல்ல விடலியேடா.”

“நீ ஏன் இந்த மூதேவியைத் தடுக்கலே? வாசல்லே ஒரு குச்சுக்காரி வந்தாக்க இவளா அவளைப் போய்ப் பாக்கப் போனாளா?”

தூரமானவளைத் தொட்டு தீட்டுப் பட்டுவிட்டதால் கிணற்றடியில் போய் குளிக்க அமர்கிறான். அவனுடைய மனைவி தண்ணீர் சேந்தி ஊற்றிக்கொண்டே அவனிடம் சொல்கிறாள்: “வந்தவ இவளுக்காக வரலை. அந்தப் பிள்ளைக்காக வந்திருக்கா. வெக்கம் மானம் இல்லாம இவ்வளவு பெரிய பிள்ளையை அத்தனை பேர் முன்னாலேயும் அவளும் கட்டிக்கிறா. இதுவும் தழுவிக் குலாவறது. கொஞ்ச நாழியான்னா ரெண்டு பேரும் அப்படியே படுத்துண்டு புரண்டுப்பா போலவே இருந்தது.”

இப்படி மனிதர்கள் உருவாக்கிய நரகத்தின் வாயில்கள் திறந்து திறந்து போய்க்கொண்டே இருக்கிறது அசோகமித்திரனின் எழுத்தில்.

இதற்கு நேர் எதிரான தெய்வீக உலகம் தி.ஜா.வினுடையது. அந்த உலகில் உன்னதமும் அழகும் ஆராதிக்கப்படுகின்றன. ‘மோகமுள்’ ஒரு ஆகச் சிறந்த உதாரணம். அதன் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னதத்தின் சிலிர்ப்பு என்றே சொல்லலாம்.

“பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலி பெருக்கியிலிருந்து இசை தவழந்து வந்துகொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிஷம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றிவிட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது, அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன்வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ… ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா… என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை…”

“ஆகா! எவ்வளவு பாக்கியம் செய்த விரல்கள்! பாபுவின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக்கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான். கண்ணைத் திறக்கக்கூட மனம் இல்லை. வெளி உலகைப் பார்க்கக்கூட மனம் வராத கண்கள் திறக்க மறுத்தன. காலமும் இடமும் மறந்து அற்றுப் போன நிலையில், வெறும் ஒலி வடிவமான அனுபவத்தில் அவன் உள்ளம் ஆழந்தது. ஒரு கணப்பொழுது உள்ளமும் ஒலியும் ஒன்றாகிவிட்டன. ஆனால் அடுத்த வினாடி உள்ளம் ஒலியினின்றும் விண்டு தனியாகப் பிரிந்து, கேட்பவனாக, அனுபவிப்பவனாகத் தனியாக நின்றது.”

“பாபுவுக்கு உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. பைரவி ராக வர்ணத்தில் உள்ளம் மபகாரீஸநீதபமா என்று வீணை கீழே இறங்குவது கேட்டது. என்னடா இப்படிச் செய்துவிட்டாயே என்று பொறுமையாகவும், இடித்தும் கேட்பது போல் விழுந்த அந்த ஸ்வர வரிசை, நெஞ்சில் பாய்ந்து வயிற்றைக் கலக்கிற்று. மறுபடியும் தாரைதாரையாக அவன் கண்ணில் நீர் பெருகிற்று. தன் தவறிய கடமைகளை நினைத்தா அல்லது, ராகத்தின் வடிவத்தை சுத்தமாக எழுப்பிய அந்த சுருதியைக் கவ்வின இசையில் நனைந்தா. அவன் கண் நனைந்தது. அவன் இதயம் விம்மிற்று!”

இந்த விம்மலைத்தான் ‘மோகமுள்’ முழுவதுமே நாம் உணர்கிறோம்.

அந்தக் காலத்தில் – அதாவது, எண்பது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சாவூரில் வெங்கடேச பெருமாள் அனுமார், சிவகங்கை அனுமார், மேலவீதி விச்வாநதய்யர் கோவில், வாகைப்பையர் சந்தில் தியாகப் பிரம்மம் பூஜை, தெற்கு வீதி காளி கோவில் என்று வருஷம் முழுவதுமே சங்கீதக் கச்சேரிகள் இருந்துகொண்டேயிருக்கும். ஏழு வயதுச் சிறுவனான பாபுவும் அவன் தந்தையும் நள்ளிரவு வரை கச்சேரி கேட்டுவிட்டு வீட்டுக்கு வருவார்கள். அப்படி ஒரு பனிக்காலத்தில் நள்ளிரவில் வீடு திரும்பும் போது, “உனக்கென்னடா கச்சேரி கேட்கத் தெரியும்?” என்று கேலியுடன் கேட்டுப் புன்னகை செய்கிறாள் அம்மா. அதன் பிறகு நடக்கும் சம்பாஷணை:

“‘பியாகடை இன்னிக்கு ரொம்ப நன்னா வாசிச்சார் அம்மா.’

‘சரி சரி, படுத்துக்கோ,’ என்றாள் தாயார். பாபு படுத்துக்கொண்டான். அப்புறம் ஒரு நிமிஷம் தொண்டைக்குள்ளேயே ராகத்தை இழுத்தான். மூடியிருந்த கண்களும் உள்ளமும் ராமலிங்க மடத்தில் இன்னும் பியாகடை ராகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தன. ஒலியில் அதிரும் ஏனத்து நீர் போல அவன் இளம் நெஞ்சு அந்த நினைவின் கார்வையில் சிலிர்த்துக்கொண்டிருந்தது.

‘பாபூ.’

‘….’

‘பாபூ.’

‘ஏம்மா?’

‘மணி மூணடிச்சுப்பிடுத்து.’

‘எப்பம்மா?’

‘இப்ப அடிச்சுதே, காதிலே விழலை? தூங்கு.’

‘பாபு, தூங்குடா,’ என்று அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்த அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார். என்ன ஆனந்தமான ஸ்பர்சம்! ஒரு ஸ்பர்சத்தில் தந்தையின் பாசம் முழுவதையும் வடிக்கக்கூடிய அந்த உள்ளங்கை. இப்போதுகூட தடவுவது போலிருக்கிறது.”

***

“கும்பகோணத்தில் படித்துக்கொண்டிருக்கிறான் பாபு. இருபது வயது. வடவண்டை இருந்த சித்திரக்குளப் படிக்கட்டில் காலை அலம்பிவிட்டு உள்ளே நகர்கிறான். அம்மன் சந்நிதியில் கூட்டம் நெரிந்தது. எதிரே உயரத்தில் சற்று சாய்த்து மாட்டியிருந்த நிலைக்கண்ணாடியில் அம்மனின் வடிவம் தெளிவாகத் தெரிந்தது. இடையைச் சற்று வளைத்து, முடியில் ராஜமகுடம் வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். நல்ல அழகிய சிலைகளில் ஒன்று இது. யமுனாவைவிட வனப்பில் குறைந்தவள்தான் இவள். ஆனாலும் கண்ணை மூடி நின்ற பாபுவுக்கு இந்தச் சிலைதான் கண்முன் நின்றது. யமுனாவை வீட்டில் இருக்கும்போது இதயத்தில் வைத்து வணங்குகிற வழக்கம்தான். ஆனால் இந்த மங்களாம்பிகையின் முக அமைப்பிலும், நிற்கும் நிலையிலும் ஒரு அசாதாரணத்தன்மை, ஒரு அமானுஷ்யம் ஓங்கி ஒளி வீசுகிறது.”

மோகமுள்ளைப் படித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு க்ஷணத்திலும் எனக்கு ஏதோ ஒரு தெய்வத்தோடு பேசிக்கொண்டிருப்பது போலவே இருந்தது. அதுதான் ஜானகிராமன்.

***

ஒரு துறையில் சாதனை செய்த ஒரு மேதை அந்தத் துறைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வேறோர் துறையிலும் சாதனைகள் செய்திருந்தால் அது வெளியே தெரியாமல் போய்விடுவது உலக இயல்பு. உதாரணமாக, பின்நவீனத்துவத்தின் உச்சபட்ச எழுத்தாளராகக் கருதப்படும் வ்ளதிமீர் நபக்கோவ் அவரது ‘லொலிதா’ என்ற நாவலுக்காக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார். ஆனால் அதே நபக்கோவுக்கு இன்னொரு அடையாளமும் உள்ளது. அவர் ஒரு உலகப் புகழ் பெற்ற Lepidopterist. வண்ணத்துப் பூச்சி ஆய்வாளர். அவரது ஆய்வுகள் அந்தத் துறையில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தைவிட உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கக் கூடியது வண்ணத்துப் பூச்சி ஆய்வு. ஏனென்றால், இலக்கியத்தை சிருஷ்டி செய்யும் மனிதர்கள் வாழ்வதற்கு வேண்டிய இந்த பூமி அழிந்துவிடாமல் ஜீவித்து இருப்பதற்கு ஆதாரமான ஒன்று வண்ணத்துப் பூச்சி. ஆக, அதை ஆய்வு செய்யும் ஒருவரது சாதனை இலக்கியச் சாதனையைவிட உயர்ந்தது அல்லவா?

தி. ஜானகிராமனுக்கும் அப்படித்தான் நடந்தது. தி.ஜா.வின் நாவல்கள் ஆண் – பெண் உறவை மையமாகக் கொண்டதாலோ என்னவோ அவர் காலத்திலேயே அவை பிரபலம் அடைந்துவிட்டன. அவரது நாவல்களுக்காகவே அவர் கொண்டாடப்பட்டார்; விமரிசிக்கவும் பட்டார். நானே என்னுடைய 25-வது வயதில் அவருடைய மரப்பசு நாவலைக் கடுமையாக விமரிசித்து எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னுடைய நண்பர் R.P. ராஜநாயஹம் தி.ஜா.வின் சிறுகதைகளைப் படித்துப் பாருங்கள் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போதுதான் தெரிகிறது, ராஜநாயஹம் சொன்னது எவ்வளவு சரி என்று. தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் என்ற பட்டியலில் நாம் யார் யாரையெல்லாம் பார்த்திருக்கிறோம்? கு.ப.ரா., புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி என்று துவங்கிப் போகும் அந்தப் பட்டியலில் நான் என்றுமே தி.ஜா.வின் பெயரைக் கண்டதில்லை. முதல்முதலாக காலச்சுவடு மூலம் தி. ஜானகிராமன் சிறுகதைகள் முழுத் தொகுப்பாக வெளிவந்த ஆண்டு 2014. மொத்தம் 1128 பக்கங்கள். உண்மையில் நாவலை விடவும் தி.ஜா. தனது சிறுகதைகளில் உலகத் தரத்தை எட்டியிருக்கிறார். மாப்பஸான், செகாவ் ஆகியோர் சிறுகதை இலக்கியத்தின் உச்சம் என்று உலகம் கொண்டாடுகிறது. அந்த வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் தி.ஜா. என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பொதுவாகவே உலகமெங்கும் இலக்கிய ரசிகர்கள் நாவல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பவர்கள் – அதிலும் தமிழர்களுக்கு நாவல்தான் உயிர் – என்பதால் சிறுகதைகளில் தி.ஜா.வின் மகத்தான சாதனையைப் புறக்கணித்துவிட்டு அவரை நாவலாசிரியர் என்றே கொண்டாடியும் விமரிசித்தும் வந்திருக்கிறோம் நாம். தி.ஜா.வின் மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை உலகின் முக்கியமான நாவல்களில் சேர்க்க முடியும். அதே சமயம் அந்த நாவல்களையும் விட சிறுகதையில் அவர் அதிகம் சாதித்திருக்கிறார். இதை க.நா.சு., அசோகமித்திரன், ஜெயமோகன், கவிஞர் சுகுமாரன் ஆகியோரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

தி.ஜா.வின் முதல் சிறுகதையான ‘மன்னித்து விடு’ ஆனந்த விகடனில் டிசம்பர் 1937-இல் வெளியாகியது. அப்போது தி.ஜா.வின் வயது 16. கும்பகோணத்தில் கல்லூரி மாணவன். இந்தக் கதை இன்றைய ஜனரஞ்சகப் பத்திரிகையில் வரக் கூடிய, இலக்கிய நயம் இல்லாத கதையாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் எழுதி 1946-இல் கலாமோஹினியில் வெளியான ‘பசி ஆறிற்று’ என்ற கதையில் சிறுகதைக் கலையின் பரிபூர்ணமான நிலையை அடைந்துவிட்டார் தி.ஜா. தமிழ்ச் சிறுகதை அடைந்திருந்த தேக்கத்தை இந்தக் கதை உடைத்தது என்று குறிப்பிடுகிறார் க.நா.சு. இப்போது நினைத்துப் பார்த்தால் தி.ஜா.வுக்கு எப்படி அது சாத்தியமாயிற்று என்றே ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், அந்தக் கதை வெளியான ஆண்டு 1946.

டமாரச் செவிடான சாமிநாத குருக்களின் மனைவி அகிலாண்டம். ராதா கல்யாணத்துக்காகப் பட்டாளத்தில் வேலை பார்க்கும் ராஜம் மூன்று நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வருகிறான். பக்கத்து வீட்டில் பார்த்த மாத்திரத்தில் அவனிடம் மயங்குகிறாள் அகிலாண்டம். அடுத்த இரண்டு நாள்கள் அவளுக்கு எதுவும் ஓடவில்லை. தேனீ மாதிரி அவன் நினைவே வந்து அவளை ஒட்ட ஒட்ட மொய்க்கிறது. சாமிநாதனின் பரிவும் அன்பும் அவளுக்கு ராஜத்தின் மீது ஏற்படும் பாலியல் வேட்கையை அகற்றி, அவளைத் தூய்மைப்படுத்துவதாக முடிகிறது ‘பசி ஆறிற்று.’

‘சண்பகப்பூ’ கதையில் வரும் 18 வயதுப் பெண் கல்யாணமாகி ஒரே ஆண்டில் விதவையாகிறாள். அந்த வீட்டில் குடியிருக்கும் ஒரு கிழவர் அதற்கு ஒரு காரணம் கற்பிக்கிறார். அவள் ஒரு பேரழகி. மண்ணில் பிறந்த பெண்ணும் ஆணும் முயங்கி வடித்த மனுஷ்யப் படைப்பா அது? இந்த இனிமைப் புதையலை எடுத்த தாயும் தந்தையும் விண்ணவள் மேனகையும் மன்னவன் விசுவாமித்திரனுமா? இல்லை. எங்கேயும் பார்க்கக் கிடைக்கிற நடுத்தர ஸ்திரீயான கோசலையம்மாளுக்கும் ஒரு சராசரி பள்ளிக்கூட வாத்தியாரான ராமையாவுக்கும் பிறந்தவள். ஆனாலும் தேங்காய்க்கும் பூவன் பழத்துக்கும் நடுவில் நிற்கிற குத்து விளக்காகப் பிறந்திருக்கிறாள். படைப்பின் எட்டாத மர்மத்தைக் கண்டு இப்படியாக வியந்துகொள்கிறார் கிழவர்.

கிழவருக்கு வேலை ஒன்றும் இல்லை. பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் வாழ்க்கை ஓடுகிறது. இங்கிலீஷ் நாவல், ராமாயணம், கீதை, குறள், வடுவூர் என்று அறிவை அவியல் உருவில் சேர்த்துக்கொண்டும், வெற்றிலையும் பொடியும் போட்டுக்கொண்டும், வேடிக்கைப் பேச்சிலும் காலம் கழிகிறது. கூட, புதையலைக் கண்டு வியப்பது முக்கியமான வேலை. பலனை நோக்கிச் செய்யாத நித்தியக் கடமை போல அவருக்கு ஆச்சரியப்படுவது தினசரிக் கடமை. அதோடு நேரம் கிடைக்கும் போது புதையலோடு பதினைந்தாம் புலி ஆடுவார்.

“மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்ததையும் நீரில் மிதந்த கருவிழியையும் வயசான துணிச்சலுடன், கண்ணாரப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருப்பார். அது என்ன பெண்ணா? முகம் நிறையக் கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்; உடல் நிறைய இளமை; இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய நெளிவு; நெளிவு நிறைய இளமுறுவல். இது பெண்ணா? மனிதனாகப் பிறந்த ஒருவன் தன்னது என்று அநுபவிக்கப் போகிற பொருளா?”

சண்பகப்பூவை முகர்ந்தால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுமாம். அதேபோல் இந்தப் பெண் சண்பகப்பூ. அதனால்தான் இவளை முகர்ந்தவன் செத்துப்போய்விட்டான் என்று நினைக்கிறார் கிழவர். தன் மனைவியிடம் சொல்கிறார்: “என்னடி, மனுஷ்யப் பிறவியாய் இருந்தால் மனுஷனுக்கு மாலை போட்டுச் சந்தோசமா வாழலாம். இதுதான் அக்னி மாதிரி இருக்கே, தகதகன்னு. இப்படி ஒன்னை சிருஷ்டிச்சிப்பிட்டு, மனுஷக் காக்காய் கொத்திண்டு போறதைப் பார்த்துண்டு பேசாமல் இருக்குமா தெய்வம்?”

கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அந்த வகையில் தி.ஜா.வை இடதுசாரி புத்திஜீவிகளும் அதற்குப் பிறகு வந்த அமைப்பியல்வாத விமரிசகர்களும் கொண்டாடியிருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளையாவது விட்டுவிடலாம்; தி.ஜா. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி எதுவும் எழுதாத காரணத்தால். ஆனால் மார்க்சீய புத்திஜீவிகளுக்கு தி.ஜா. எப்படித் தெரியாமல் போனார்? மார்க்சீயத்தின் அடிப்படையே தனிச் சொத்துரிமையைத் தகர்ப்பதுதான்.

மார்க்சீயத்தின் ஆதார நூல்களில் ஒன்றான ‘The Origin of the Family, Private Property and the State ‘என்ற நூலில் ஃப்ரெட்ரிக் எங்கெல்ஸ், குடும்பம் என்ற அமைப்புதான் தனிச் சொத்துரிமைக்கும் அதைத் தொடரும் சுரண்டலுக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம் என்கிறார். அந்த வகையில் தி. ஜானகிராமன்தானே குடும்ப அமைப்பின் அஸ்திவாரத்தையே அசைத்த முதல் தமிழ் எழுத்தாளர்?

கு.ப.ரா.வை அப்படிச் சொல்ல முடியாது. அவர் ஆண் பெண் உறவுச் சிக்கலையும் அதில் நேரும் மீறல்களையும் சொல்ல ஆரம்பித்தார். ஒருவேளை அவர் நாவல் எழுதியிருந்தால் அது நடந்திருக்கலாம். ஆனால் அவருடைய இளவயது மரணத்தால் அவரது இலக்கியப் பயணம் முடிவுறாததாகிவிட்டது. ஆனால் தி.ஜா., குடும்பம் என்ற ஸ்தாபனத்தின் அஸ்திவாரத்தையே உடைத்தெறிந்து இருக்கிறார். மதம், தர்மம், நியாயம், நல்லது, கெட்டது, அறம், கலாசாரம் எல்லாமே தி.ஜா.வின் பாத்திரங்களின் சரீர வேட்கை எனும் தீயில் எரிந்து வீழ்கின்றன. அதன் காரணமாகவே அவர் வாழும் காலத்தில் எண்ணற்ற எதிர்ப்புகளையும் சம்பாதித்திருக்கிறார்.

‘அம்மா வந்தாள்’ நாவலில் வேதம் படிப்பதற்காக ஏழு வயதான தன் புதல்வன் அப்புவை எங்கோ ஒரு குக்கிராமத்திற்கு அனுப்பிவிடுகிறாள் அவன் அம்மா. பதினாறு வருஷங்கள் பெற்றோரை விட்டுப் பிரிந்து வேத பாடசாலையில் பயில்கிறான் அப்பு. குருகுலம் போன்ற அந்தப் பாடசாலையில் விதவையாகிவிட்ட பவானியம்மாள் என்ற மூதாட்டியின் பராமரிப்பில் வளர்கிறான். அங்கே ஏழு வயதில் விதவையாகிவிட்ட இந்து – பவானியம்மாளின் மகள் – அவன் மீது அபிமானம் கொள்கிறாள். ஆனால் அப்புவுக்கு அது அதர்மமாகத் தெரிகிறது. தான் பயிலும் வேதத்துக்கும், தன் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தாயின் ஸ்தானத்தில் இருக்கும் பவானியம்மாளுக்கும் செய்யும் துரோகம் அது. இந்துவைத் தவிர்த்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் இந்து அவனிடம், “நீ படிச்ச வேதத்தின் மேலே ஆணையாச் சொல்றேன்; நீ இல்லாம நான் உசிரோட இருக்கறதுக்கு அர்த்தமே இல்லை,” என்கிறாள்.

“தார்க்குச்சியைத் தோலில் செருகித் திருகி இழுத்த மாடு போல் அப்பு உள்ளே துள்ளினான். வேதத்தின் மேலே ஆணை! இந்த ஆணையைத்தான் பொறுக்க முடியவில்லை அவனால். தார்க்குச்சி ஏறினால், ஒன்று ஒரேயடியாகத் தலைதெறிக்க ஓடவேண்டும்; அல்லது, அப்படியே அந்த வதை தாளாமல் பொத்தென்று கீழே எழுந்து மயங்கவோ சாகவோ வேண்டும்.”

அவளிடம் சொல்கிறான். “வேதத்தை இழுக்காதே. வேதம் எங்கம்மா ஈச்வரன். எனக்கு அம்மா. எங்கம்மா மாதிரி அது ஒரு தெய்வம். எங்கம்மா மாதிரி அது புடம் போட்ட தங்கம். மாற்றுக் குறையாத தங்கம்…”

பதினாறு வருஷ குருகுலவாசத்துக்குப் பிறகு தாயைப் போல் தன்னை வளர்த்த பவானியம்மாளையும் இந்துவையும் பிரிந்து தன் ஊருக்குக் கிளம்புகிறான் அப்பு. இரண்டு பேருக்கும் இரண்டு சால்வைகளைப் பரிசாகத் தருகிறான். கிளம்பும் வேளையில் இந்துவிடம், “நீ என் தங்கை,” என்கிறான் அப்பு.

அதற்கு இந்து, “இன்னொரு தடவை இந்த மாதிரிச் சொல்லாதே. சொல்லாதேன்னா சொல்லப்படாது. என் மனசுப்படி விட்டு, எங்கப்பாவும் உசிரோட இருந்தார்னா, உன்னை இப்ப வழிமறிச்சு, நீ காசிக்குப் போக வாண்டாம்னு என்னைக் கொண்டு நிறுத்தியிருப்பார். நான் என்னமோ மதம் பிடிச்சி அன்னிக்குப் பேத்தினேன்னு நினைக்காதே. இது எட்டு வருஷமா கிடக்கிற நிஜம்,” என்று சொல்லி அவனைக் கட்டி அணைக்கிறாள்.

“சீ, என்ன இது அசுரத்தனம்! அம்மாவைக் கட்டிக்கறாப்பல… எனக்கு என்னமோ பண்றது,” என்று சொல்லி அவளை வேகமாகத் தள்ளிவிடுகிறான் அப்பு.

“அம்மாவாம் அம்மா! உங்கம்மா ரொம்ப ஒழுங்குன்னு நினைச்சுக்காதே. நானாவது உன்னையே நினைச்சுண்டு சாகறேன். உங்கம்மா யாரையோ நினைச்சுண்டு சாகாம இருக்கா பாரு. நான் உங்கம்மா இல்லை. நான் உன்னைத் தவிர யாரையும் நினைச்சதில்லேடா பாவி. அம்மா அம்மான்னு என்னை அவளோட சேர்க்காதே. எனக்கு ஏமாத்தத் தெரியாது.”

“என்ன சொன்னே?”

“சொன்னதைத்தான். உங்கப்பா அவ நல்லவள்னு ஏமாந்திருக்கார். நீ, நான் பொல்லாதவள்னு ஏமாந்து கிடக்கே.”

கடைசியில் ஊருக்குப் போன பிறகுதான் அப்புவுக்குத் தெரிகிறது, அம்மாவுக்கு வேதத்தின் மீது இருந்த பக்தியினால் தன்னை வேதம் படிக்க அனுப்பவில்லை என்று. தான் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகத் தன் பிள்ளை வேதம் படிக்க வேண்டும் என்று அனுப்புகிறாள். அப்படி என்ன செய்தாள் அவள்?

தண்டபாணிக்கு ஹைகோர்ட் ஜட்ஜெல்லாம் சிஷ்யர்கள். வேதத்தில் சந்தேகம் என்றால் அவரிடம்தான் கேட்பார்கள். மெத்தப் படித்தவர். அவர் மனைவி அலங்காரம். மூத்த பிள்ளை, அவனுடைய மனைவி, மகள் காவேரி, இளைய புதல்வர்கள் கோபு, வேம்பு – இவர்கள்தான் அந்தக் குடும்ப உறுப்பினர்கள். வேதம் படிக்க சென்றிருக்கும் அப்பு இரண்டாவது மகன்.

இந்தக் குடும்பத்தில் நுழைகிறான் சிவசு என்ற சிவசுந்தரம். விரைவிலேயே தண்டபாணி வீட்டுக்கு அவனுடைய போக்குவரத்து அதிகரிக்கிறது. ஒருநாள் தண்டபாணி குளியலறையில் இருக்கும்போது சிவசுவின் குரல் கேட்கிறது. இன்னும் சிறிது நேரம் கழித்துப் போகலாம் என்று குளித்துக்கொண்டே இருக்கிறார் தண்டபாணி. பிறகு, “விரல் அழுக்கைக்கூட எடுத்தாகிவிட்டது. எத்தனை நேரம்தான் குளிக்கிற உள்ளில் நிற்க முடியும்?” என்று நினைத்தபடி வெளியே வருகிறார்.

பொதுவாக எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுவார்கள். அதிலும் தி.ஜா. தேவி உபாசகர். அவருக்கு எல்லாப் பெண்களுமே தெய்வத்தின் நடமாடும் உருக்கள்தான். ஆனால் ‘அம்மா வந்தாள்’ நாவலில் தண்டபாணியின் கையறுநிலையைக் கதறி கதறி எழுதியிருக்கிறார். சிவசு அலங்காரத்தைத் தன் வீட்டுக்கு அழைக்கிறான்.

“அதெல்லாம் சரி மன்னி. நீங்க ஆத்துப் பக்கமே வரலியே. வந்து மாசக் கணக்கா ஆயிருக்கும் போலிருக்கே… ரங்கம்கூடப் போன வாரம் சொல்லிண்டேயிருந்தா, மன்னியைக் காணவேல்லியேன்னு…”

இந்தப் பேச்சை மாடியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் தண்டபாணி.

“பொய்! பொய்!’ என்று மூடின கண்ணை இடுக்கினார் தண்டபாணி. புருவம் சுளித்தது. “ரங்கம் அப்படிச் சொல்லி இருக்கவே மாட்டாள். நீதான் சொல்லுகிறாய். அலங்காரத்தைக் குழியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்றுதான் அவள் சொல்லியிருப்பாள்…”

அலங்காரம் என்ன பதில் சொன்னாள் என்று அவர் காதில் விழவில்லை.

அப்பு வண்டியிலிருந்து இறங்கி பெட்டி படுக்கையுடன் வீட்டின் உள்ளே நுழைகிறான். ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் சிவசுவைப் பார்த்து விட்டு, “என்னடா கோபு, மீசையை எப்ப எடுத்தே?” என்று கேட்கிறான். மறுகணமே சற்றுக் குழம்பி உற்றுப் பார்க்கிறான். தங்கை காவேரி அவன் குழப்பத்தைத் தீர்க்கிறாள். “சிவசு மாமாண்ணா!”

“ஆ! மாமா… சௌக்யமா, சார்?” என்றான் அப்பு.

ஒரே வாக்கியத்தில் குடும்பம் என்ற அமைப்பின் அஸ்திவாரத்தையே பெயர்த்து எடுத்துவிடுகிறார் தி.ஜா.

சரி, மார்க்சீயவாதிகள்தான் இதை கவனிக்கவில்லை என்றால் எண்பதுகளில் ஒரு அலையாய் எழுந்த அமைப்பியல்வாத விமரிசகர்களாவது தி.ஜா.வைக் கொண்டாடி இருக்க வேண்டாமா? அமைப்பியல்வாதிகளின் முதல் குறியே குடும்பத்தைச் சிதைக்க வேண்டும் என்பதுதான். காரணம், அதிகார மையங்களிலேயே மிகக் கடுமையானது குடும்பம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைப்பியல்வாதிகளும் ஜி. நாகராஜன் போன்றவர்களைத்தான் பேசினார்களே தவிர தி.ஜா. அவர்களின் கண்ணிலேயே படவில்லை. வெங்கட் சாமிநாதன் ஒருவர்தான் ஒற்றை ஆளாய் ‘மோகமுள்’தான் தமிழின் தலைசிறந்த நாவல் என்று போராடிக்கொண்டிருந்தார்.

அமைப்பியல்வாதம் என்பது அடிப்படையில் அதிகாரத்துக்கு எதிரானது. எதிர்க் கலாச்சாரத்தை முன்வைப்பது. அந்த வகையில் தி.ஜா.வின் எந்தக் கதையை எடுத்துக்கொண்டாலும் அது இதுவரையிலான மதிப்பீடுகளைக் காலடியில் போட்டு துவம்சம் செய்வதாகத்தான் இருக்கிறது.

உதாரணமாக, ‘சண்பகப்பூ’ சிறுகதையில் 18 வயதில் விதவையாகிவிட்ட பெண் அதைப் பற்றிக் கவலையே படாமல் இறந்துபோன கணவனின் தமையனுடன் ஊருக்குக் கிளம்பிவிடுகிறாள். அவன் அவளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்கிறான். “நாணம் புன்னகை பூக்க வண்டியில் ஏறி அமர்ந்தாள்,” என்று எழுதுகிறார் தி.ஜா.

கிழவி ஆளோடியில் நின்று சொல்கிறாள்: “ரத்தப்பூவாம். எல்லா மூக்கும் ரத்தம் கொட்டாது, சண்பகப் பூவை மூந்து பார்த்தா! என்ன சிரிப்பு, என்ன நெளிசல்; அவள் அகமுடையான் உயிரோடுதான் இருக்கான். அதான் நெளியறது.”

***

எழுத்தின் வழியே சில உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. ஒரு சங்கீதக் கலைஞன் ராகத்தின் வழியே, தான் உணர்ந்ததை சங்கீதமாக வெளிப்படுத்துகிறான். அதை ரசிகன் உணர்வது ரஸம். ரஸம் என்றால் சாரம். ரஸத்தை எப்படியெப்படியெல்லாமோ விளக்கியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ரஸம் என்றால் பரவசம். Bliss. தெய்வத்தை தர்ஸிப்பது. பிரம்மனை உணர்தலே ரஸம் என்கிறது தைத்திரீய உபநிஷதம். எது எப்படியிருந்தாலும் நம்மையும் மறந்து பூமியிலிருந்து மேலெழுந்துப் பறக்கும் நிலை… இப்படி எதை எழுதிப் பார்த்தாலும் பரவசத்தை சொற்களால் விளக்குவது கடினம். வாழ்நாள் முழுவதும் கடவுளையே நினைந்து நினைந்து உருகும் பக்தனுக்குக் கடவுள் காட்சியளித்தால் அவனுடைய மனநிலை அப்போது எப்படி இருக்கும்?

பிஸ்மில்லா கான் இளைஞனாக இருந்த காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கர்ப்பக்கிரஹத்தில் தனியாக ஷெனாய் வாசித்துக்கொண்டிருப்பார். அப்போது ஒருநாள் அவர் அருகே வந்து இன்னும் வாசி, இன்னும் வாசி என்று விஸ்வநாதர் சொன்னபோது பிஸ்மில்லா கானுக்கு என்ன உணர்வுகள் ஏற்பட்டதோ அதுதான் பரவசம். கான் சாஹிப் அது பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.

பிஸ்மில்லா கானின் இசையை ஒருவர் கேட்கும்போது என்ன உணர்வுகள் ஏற்படுகிறதோ அதேதான் தி. ஜானகிராமனின் எழுத்தைப் படிக்கும்போதும் ஏற்படுகிறது. எழுத்தால் இயலாததை சங்கீதத்தால் வெளிப்படுத்துகிறான் கலைஞன் என்றால் அந்தக் கலைஞனின் பரவச அனுபவத்தைத் திரும்பவும் எழுத்தில் கடத்துகிறார் தி.ஜா. என்று சொல்லலாம்.

தி.ஜா.வை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது? ரஜினிகாந்த்கூட தனக்குப் பிடித்த எழுத்தாளர் தி.ஜா. என்று சொல்லியிருக்கிறார். காரணம், தி.ஜா. இந்த வாழ்க்கையையே ஒரு கலையாக ரசித்தார்; கொண்டாடினார். அவர் வளர்ந்த தஞ்சை மண்ணும் அவரது குடும்பமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. தந்தை, பாட்டனார் வழியில் அவரது சுவாசமே சங்கீதமாக ஆகியிருந்தது. சங்கீதத்தை விரும்பாதார் யார்? ஆனால் மற்றவர்களுக்கும் தி.ஜா.வுக்கும் வித்தியாசம் என்னவென்றால் தி.ஜா. பிதுரார்ஜிதமாகத் தான் பெற்ற சங்கீதத்தின் கண்கொண்டு இந்த உலகத்தைப் பார்த்தார். உதாரணமாக, தி.ஜா. தஞ்சாவூருக்கு வரும்போது அவரைத் தவறாமல் சந்திக்கும் தஞ்சை ப்ரகாஷ் இப்படி எழுதுகிறார்:

“வெண்ணாற்றங்கரை போவோம். ஹோவென்று பாயும் ஜலப்ரவாகத்தைப் பார்த்தபடி நிற்பார். திருவையாறு போவோம். தியாகையர் சமாதியின் மணல்வெளியில் நிற்பார். மேலவீதி காமாட்சியம்மன் கோவில் சந்நதியில் நிற்போம். இடிந்த மராட்டிய அரண்மனை இடிசல் சுவரில் சரிந்து வளர்ந்திருக்கும் அரசு பூத்திருக்கிறதைக் காட்டுவார். பெரிய கோவில் நிலாமுற்றத்தில் காலத்தை வென்ற காற்றை அண்ணாந்து வியப்பார். சந்தனாதித் தைலம் மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகளிடையே நின்று தெலுங்கு ஸ்லோகத்தை என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். தஞ்சாவூர் பாணி சீரங்கத்துப் படம் எழுதும் ராஜீவிடம் போய் அவன் ரேக்கு ஒட்டுவதைப் பார்த்து நிற்பார். கொண்டிராஜபாளையம், சுவாமிமலை, மன்னார்குடி எல்லாம் போவோம். எங்கும் எதிலும் வியப்புத்தான். குழந்தை சந்தோஷந்தான். ஆச்சர்யம்தான். ஜானகிராமனுக்கு எழுத்து மூணாம் பக்ஷந்தான். வாழ்க்கைதான் அவரது ருசி. மழை பெய்துகொண்டிருக்கும் வராந்தாவில் நின்று பார்த்துக்கொண்டிருப்பார். வியப்பாய் மகிழ்ந்துகொண்டிருப்பது அருகிலிருந்தால் புரியும். இரவு இரண்டு மணி, மூன்று மணி என்று பேசிக்கொண்டிருப்போம். தூக்கம் அண்டாது. மூன்று மணிக்குக் குஞ்சாலாடு சாப்பிட்டுப் பால் குடிப்போம். ஜீரணிக்கும்.”

***

வெங்கட் சாமிநாதனுடனான பேட்டியிலும் வாழ்க்கையையே இசையாகக் காணும் மனோபாவம் பற்றிப் பேசுகிறார் தி.ஜா.

“மன்னார்குடி சுவாமிநாதையர்னு ஒருத்தர். அவர்கிட்டேயும் படிச்சேன். அப்புறம் உமையாள்புரம் சுவாமிநாதையர்னு மகா வைத்யநாதய்யரோட சிஷ்யர். அவர்கிட்ட கொஞ்சநாள் படிச்சேன். தியாகராஜர் பரம்பரையில வந்தவர்னு அவரைச் சொல்வார்கள். அவர்தான் இந்த சுருதி… வாழ்க்கையை பாக்கறபோது… எல்லாம்… வாழ்க்கையே ஒரு இசை மாதிரி அவர் பாத்துண்டு இருப்பார். அவர்கிட்ட நான் அடிக்கடி பாத்துருக்கேன். அதுக்கு முன்னாடியே என் தகப்பானார்கிட்டேயும் இந்தக் குணம் உண்டு. எதைப் பார்த்தாலும் அதிகமான, முரட்டுத்தனமா பேசறது, முரட்டுத்தனமா சத்தங்ளைக் கேக்கறது, இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது.”

(1980-இல் தி.ஜா.வும் வெ.சா.வும். புகைப்படம், நன்றி: ஹரன் பிரசன்னாவின் சேகரிப்பிலிருந்து)

அதே பேட்டியில் ‘மோகமுள்’ளில் வரும் பாபுவின் தகப்பனார் வைத்தியைத் தன்னுடைய தகப்பனாரைக் கொண்டே உருவாக்கியதாகக் கூறுகிறார். மேலும் தி.ஜா.:

“அந்த உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் ரொம்ப நுணுக்கமான செவி கொண்டவர். அவர் சுதி சேக்கறதுக்கு ஒரு மணி நேரமாகும். சுதி சேக்கத் தெரியாதுன்னு அர்த்தமில்லே. சுதில அவருக்கு அத்தனை லயிப்புண்டு. சரியா நூறு பெர்செண்ட் வர்ற வரையில் தம்பூராவில சுதி சேத்துண்டே இருப்பார். அவ்வளவு இம்மி குறையாம இருக்கணும் அவருக்கு. ஒரு fantastic செவி அது. அவர் பேசிண்டேயிருக்கறப்ப ஏதாவது சத்தம் கேட்டதுண்ணா கவனிக்கச் சொல்வார். பறவைகள் சப்தம், செக்கு சப்தம், யாராவது பேசற சப்தம், குழந்தை அழற சப்தம் – இதெல்லாம் கேட்டுண்டு இருக்கச் சொல்வார். அதாவது இந்த உலகம் முழுக்க ஒலி மயம், பேசறபோதுகூட பேசறவர்கள் எந்த சுதியில் பேசுகிறார்கள் – சுதி concept இருக்கே – சுதியப் பற்றி அடிக்கடி சொல்லிண்டே இருப்பார். இது வந்து எனக்கு ஒரு பெரிய விழிப்பா இருந்தது. எங்க பார்த்தாலும்… தாம்பாளம் விழறது… சமையல் உள்ள சத்தம் கேக்கறது… வாசல்ல மசியில்லாம வண்டி போகும் – இதையெல்லாம் கவனிக்கச் சொல்வார். உங்களுடைய basic note-லேருந்து எவ்வளவு தூரத்திலே இருக்கு என்பதையெல்லாம் பார்க்கச் சொல்வார். இது நமக்கு உள்ளுக்குள்ள இருந்த உணர்ச்சியை அதிகமா உத்வேகப்படுத்திக்கொண்டே இருந்தது. பிறகு நான் சென்னைக்கு வந்தப்புறம் பத்தமடை சுந்தரமய்யர் என்பவர் கிட்டக்க  முத்துசாமி தீட்சிதருடைய கீர்த்தனைகள் பல பாடம் பண்ணினேன். அவரும் சங்கீதத்துல ரொம்ப ஆராய்ச்சி பண்ணினவர். உமையாள்புரம் சுவாமிநாதைய்யர் போலவே ரொம்ப நுணுக்கமான பிரக்ஞையும், நுணுக்கமான நாதப் பிரக்ஞையும் கொண்டவர். அவரோட பழகினதுனாலேயும் எனக்குப் பற்பல விஷயங்கள் தெரிந்தது. வாழ்க்கையப் பற்றி… சங்கீதத்தைப் பற்றி… வாழ்க்கையில் உள்ள அடிப்படையான தொடர்புகளைப் பற்றி அடிக்கடி என்கிட்ட பேசிண்டிருப்பார். அவர் என்னை ஒரு சீடனா கருதாமல் ஒரு நண்பனா கருதி எல்லாம் சொல்லிண்டு வருவார். அவர்கிட்டேயும் எனக்குப் பல நுணுக்கங்கள் தெரிஞ்சிக்க முடிஞ்சது. நல்ல சங்கீதத்தை அனுபவிக்கத் தெரியறது என்கிறதுக்கு நாம் இறைவனுக்குக் கடமைப்பட்டிருக்கணும். அந்த மாதிரி ஒரு ஆற்றல் கொடுத்ததுக்கு. அதனால்தான்… of course சங்கீதத்தை அனுபவிக்கறது அதிர்ஷ்டம்தான்… நல்ல சங்கீதம் கேக்கறது…”

தி.ஜா.வின் இசை பற்றி சேதுபதி அருணாசலத்தின் அருமையான கட்டுரை ஒன்றில் தி.ஜா.வின் இசை ரசனை மற்ற எல்லோரையும்விட எப்படி வித்தியாசமானது என்பதை, நான் எப்படி உணர்ந்தேனோ அப்படியே எழுதியிருக்கக் கண்டு வியந்தேன். பின்வருவது சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையிலிருந்து:

“ஜானகிராமனின் இசை ரசனை வெறுமனே தொழில்நுட்ப அறிவைச் சார்ந்தது இல்லை என்பதை அவர் இசை குறித்து எழுதிய படைப்புகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். பெரிய மேதைகளிடம் இசை கற்றிருந்தாலும், நன்றாகப் பாடக்கூடியவராக இருந்தாலும் தன் மேதைமையை வெளிக்காட்டுவது ஜானகிராமனுக்குக் குறிக்கோளாக இருந்திருக்கவில்லை. அவருக்கு இசை என்பது வெறும் புற உலகைச் சார்ந்ததொரு சிற்றின்ப அனுபவமாக இருப்பதில்லை. அதைத் தாண்டிய – அக உலகம் முழுதும் விரியும் ஒரு பெரிய எழுச்சியாக இருக்கிறது. ஜானகிராமனை வசீகரித்த இன்னொரு பெரிய பிரம்மாண்டமான அனுபவம் இயற்கை. அந்த இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார். அதனால்தான் பெரும்பாலும் அவருடைய இசை குறித்த வர்ணனைகள் இயற்கை சார்ந்ததாகவே, மலர்களை, பறவைகளை, இயற்கையின் பேரமைதியை நினைவூட்டுவதாக இருக்கிறது. இயற்கையின் முன்னால் ஒரு திறந்த மனதுடைய மனிதராகத் தோன்றும் பெரும் வியப்பு, இசை முன்னாலும் தோன்றுகிறது. அது வெறும் தொழில்நுட்ப அறிவால் மட்டும் வருவதல்ல.”

மேலும் சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையில் மற்றொரு முக்கியமான தகவலும் கிடைத்தது. தி.ஜா. அவர் காலத்திய சங்கீதக் கலைஞர்களைப் போலவே கச்சேரி செய்யும் அளவுக்கு ஞானம் உள்ளவராக இருந்த போதிலும் கச்சேரி செய்ய வேண்டாம் என்று அவர் முடிவெடுத்திருக்கிறார்.

“ஜானகிராமனுக்கு நல்ல செவி இருந்தது. ஒருமுறை கேட்டதை அப்படியே பாடிவிடுவார். மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டென்றால் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடிக்கும். அவர் பாடிக் கேட்டதும், அந்தப் பாட்டுமுறையை அப்படியே திருப்பிப் பாடிவிடுவார். பல வித்வான்களோடு ஜானகிராமனுக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. லால்குடி ஜெயராமன், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோருக்கு ஜானகிராமனின் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். ஜானகிராமன் கச்சேரிகள் செய்வதில்லையென்று அவர்கள் ஆதங்கப்பட்டுக்கொள்வார்கள். லால்குடி ஜெயராமன் ஜானகிராமனின் சங்கீத அனுபூதியை வியந்து போற்றுவார். நாங்கள் நண்பர்களெல்லாம் கூடியிருக்கும்போது அவரைப் பாடச் சொல்லிக் கேட்போம். ஒருமுறை வானொலியில் மதுரை மணி ஐயர் கச்சேரிக்கு ஜானகிராமன் ஒரு அறிமுக உரையைப் போலப் பேசியிருக்கிறார். தஞ்சாவூரிலிருந்தபோது ஜானகிராமன் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்,” என்றார் ஆத்ரேயன்.

இவ்வாறாக தி.ஜா. பற்றி அவரது நண்பர் ஸ்வாமிநாத ஆத்ரேயன் கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார் சேதுபதி அருணாசலம்.

மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் சங்கீதம் என்பது பணம் பண்ணும் விஷயமாக மாறி இருக்கிறது. ஆனால் தி.ஜா. குறிப்பிடும் சங்கீதம் என்பது சங்கீத மும்மூர்த்திகள் உபாசித்த சங்கீதம் போன்றது. அங்கே பணம், புகழ் போன்ற விஷயங்கள் எல்லாமே செல்லாதவை. அதன் காரணமாகவே தி.ஜா. கச்சேரிகள் செய்யவில்லை. இல்லாவிட்டால் அவர் பெயர் சங்கீதத் துறையிலும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஆத்மார்த்தமான ஒரு கலையை மேடை போட்டு விற்பதா என்றே அவர் நினைத்திருக்கிறார். மோகமுள்ளின் ரங்கண்ணாவைப் பார்க்கும்போது சங்கீதம் பற்றிய தி.ஜா.வின் பார்வையை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தத் தொடருக்காக தி.ஜா.வின் அம்மா வந்தாள், மோகமுள், செம்பருத்தி போன்ற நாவல்களையும் அவரது சிறுகதைகளையும் படித்தபோது என் உணர்வு முழுவதும் சங்கீதமாகவே இருந்தது. உறக்கத்திலும்கூட சங்கீதமே மிதந்துகொண்டிருந்தது. எழுத்து எப்படி சங்கீதம் கேட்ட உணர்வைத் தரும் என்று யாரேனும் கேட்டால் அவர்களை தி.ஜா.வின் எழுத்தைப் படிக்கச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

கவிஞர் பெருந்தேவியின் இந்தக் குறிப்பு ஒரு உதாரணம்:

“இரு மாதங்களாகத் தூக்கமில்லாத துயரம். தூக்கத்துக்குக் கண் செருகும்போது ஏதோ ஒரு புற, அகச் சப்தம் எழுப்பிவிடும். கூடவே, வலது மூளை இருபது திரைப்பக்கங்கள் திறக்கப்பட்ட பழைய கணினி போல சூடாகிவிடும். வியர்வை கழுத்தை நனைக்கும். தூக்கத் தொந்தரவு என்பதைவிட தூங்குவது எப்படி என்பது மறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

மாலை சாய்ந்து இரவு வரும்போதே தூக்கம் குறித்த பதற்றம் தொற்றிக்கொள்ளும். வார்த்தைகள் நிற்காத வார்த்தைகள் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னை மீறி, என்னுடையதில்லாமல். எப்படி நிறுத்துவதென்று புரியாத யோசனையும் வார்த்தைகளாகவே. காட்சிரூபமே கண்ணுக்கு எட்டாமல். செவிப்புலத்தின் சர்வாதிகாரத்தில் இருந்தேன். மருத்துவரின் எந்த மாத்திரையும் பயனளிக்கவில்லை. சூடான பால், பாதத்தில் விளக்கெண்ணெய், வேலைக்காகவில்லை. பிராணாயாமமும் அமுக்கரா சூரணமும் கொஞ்சம் பயனளித்தன. ஆனால், கடைசியில் எனக்கு உதவியது தி. ஜானகிராமன்தான். செம்பருத்தியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முதல்நாள் கொஞ்சம் தூக்கம்வருவதுபோல் தெரிந்தவுடன், பகலில் ஒரு மணி, இரவில் தூங்கும்முன் ஒரு மணி என்று மாத்திரைபோல. நிதானமாக மிக நிதானமாக. ஒருவரி விடாமல். சிலவரிகளில் தேர்போல நின்று. ஒன்றி. தி.ஜா. மொழியைப் பற்றி ‘இரகசியம்’ ஒன்று கண்டுபிடித்தேன். அவர் வார்த்தைகளைக் காட்சிரூபமாக மாற்றுவதில் வல்லவர்.

வாசிக்கும்போதே மொழி காட்சியாக மாற ஆரம்பிக்கும் மனதில். இதனால்தான்போலும், என்னில் நிற்காதிருந்த வார்த்தைகள் நிற்க ஆரம்பித்தன. ஒருவழியாகத் தூக்கத்தின் வசப்பட்டேன், கனவின் வசப்பட்டேன். இலக்கியத்தின் குணமாக்கும் சக்தியை, இறையின் அருளை அனுபவித்த ஒருத்தியின் சாட்சியம் போல, இங்கே சாட்சியம் கூறுகிறேன்.”

தி.ஜா.வின் எழுத்து ஏன் நம்மைப் பரவச நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதற்கு அவர் எழுத்திலிருந்து சில உதாரணங்கள் தருகிறேன்.

“பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலிபெருக்கியிலிருந்து இசை தவழ்ந்து வந்துகொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிஷம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றிவிட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன்வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ… ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா… என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறென்று உணரவில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது. பழைய நினைவுகளை உதறிவிட்டு, மீண்டும் சங்கீதத்தின் இனிமையில் லயிக்க முயன்றான் பாபு.

பாபுவின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக்கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான். கண்ணைத் திறக்கக்கூட மனம் இல்லை. வெளி உலகைப் பார்க்கக்கூட மனம் வராத கண்கள் திறக்க மறுத்தன. காலமும் இடமும் மறந்து அற்றுப் போன நிலையில், வெறும் ஒலி வடிவமான அனுபவத்தில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஒரு கணப் பொழுது உள்ளமும் ஒலியும் ஒன்றாகி விட்டன.”

(மோகமுள்)

இப்படி, உள்ளமும் ஒலியும் ஒன்றாகிவிடும் தன்மையைத்தான் தி.ஜா.வின் எல்லா எழுத்திலும் காண்கிறோம்.

பிஸ்மில்லா கானின் ஷெனாயில் பைரவி ராகம்: https://www.youtube.com/watch?v=HPW–T34ELQ

எனக்கு மிகப் பிடித்த பாடகரான பண்டிட் ஜஸ்ராஜின் குரலில் பைரவி ராகம்: https://www.youtube.com/watch?v=STkDbJrq9Ek

பாபு ஏழு வயதிலிருந்தே கச்சேரி கேட்க ஆரம்பித்துவிடுகிறான். தகப்பனார்தான் காரணம். காசில்லாமல் சங்கீதம் கேட்க தஞ்சாவூரைவிட வேறு இடம் உண்டா என்ன?

(இப்போது எல்.ஆர். ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்களையோ அல்லது அதுவே பரவாயில்லை என்பது போன்ற ஆபாசமான சினிமா பாடல்களையோதான் கேட்க முடிகிறது. இன்றைய தஞ்சாவூர் வேறு. தி.ஜா.வின் தஞ்சாவூர் நூறு ஆண்டுகளுக்கு முந்தியது!)

ஒரு தை மாதத்தில் பாபுவும் அவன் தகப்பனார் வைத்தியும் ராமலிங்கர் கேட்டுவிட்டுத் திரும்புகிறார்கள். நடுநிசிக்கு மேலாகிவிடுகிறது. நல்ல குளிர். இந்தக் குளிரில் குழந்தையையும் கூட்டிக்கொண்டு கச்சேரிக்குப் போக வேண்டுமா என்று கேட்கிறாள் அம்மா.

“என்ன பண்றது, நல்ல பனிக் காலமாப் பார்த்து தியாகராஜர் சமாதி ஆயிட்டார். பாபு கச்சேரி கேக்கப் போறான்னு தெரிஞ்சிருந்தா சித்திரை வைகாசி மாசமாப் பார்த்து சமாதி அடைஞ்சிருப்பார்,” என்று பகடி செய்கிறார் வைத்தி.

“ராமலிங்கசாமியும்தான்,” என்கிறான் பாபு. உனக்கென்ன சங்கீதம் தெரியும் என்று நீ கச்சேரி கேட்கப் போனாய் என்கிறாள் அம்மா.

“பியாகடை இன்னிக்கு ரொம்ப நன்னா வாசிச்சார் அம்மா,” என்கிறான் பாபு.

பாலைக் கொடுத்துவிட்டு அவன் குடித்ததும் படுத்துக்கொள்ளச் சொல்கிறாள் அம்மா. பாபு படுத்துக்கொண்டான். அப்புறம் ஒரு நிமிஷம் தொண்டைக்குள்ளேயே ராகத்தை இழுத்தான். மூடியிருந்த கண்களும் உள்ளமும் ராமலிங்க மடத்தில் இன்னும் பியாகடை ராகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தன. ஒலியில் அதிரும் ஏனத்து நீர் போல அவன் இளம் நெஞ்சு அந்த நினைவின் கார்வையில் சிலிருத்துக்கொண்டிருந்தது.

“பாபூ.”

“…”

“பாபூ.”

“ஏம்மா?”

“மணி மூணடிச்சுப்பிடுத்து.”

“எப்பம்மா?”

“இப்ப அடிச்சுதே, காதிலே விழலை? தூங்கு.”

“பாபு, தூங்குடா,” என்று அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்த அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார்.

என்ன ஆனந்தமான ஸ்பர்சம்! ஒரு ஸ்பர்சத்தில் தந்தையின் பாசம் முழுவதையும் வடிக்கக்கூடிய அந்த உள்ளங்கை. இப்போதுகூட தடவுவது போலிருக்கிறது. அப்போது கூடம் முழுவதும் பெட்ரூம் விளக்கின் முத்தொளியில், மார்பளவு நீரில் நிற்பவனைப் போல, இருளில் மௌனமாக அமுங்கிக் கிடந்தது. அந்த உள்ளங்கையில் ஊறி வடிந்த அமைதியையும் ஆறுதலையும் இன்னும் மறக்க முடியவில்லை.

இதுதான் தி.ஜா. தி.ஜா.வின் மேஜிக். தி.ஜா.வின் அற்புதம்.

இணைப்புகள்:

தஞ்சை பிரகாஷின் கட்டுரை: http://solvanam.com/?p=15157

வெங்கட் சாமிநாதன் எடுத்த பேட்டி: http://solvanam.com/?p=15228

***

தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட தரிசனத்தை நாமும் காணலாம். தி.ஜா.வைப் படித்தவுடனே நான் ஆதி சங்கரரின் கவிதைகளைப் படித்தேன். ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அதனாலேயே நாத்திகர்கள் அவரை வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால், அவர் ஓர் அற்புதமான கவி என்பதை அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். முக்கியமாக, ‘நிர்வாண சத்கம்’. (சதகம் என்பது நூறு பாடல்கள். உ-ம். பர்த்ருஹரியின் சதகங்கள்.)

நிர்வாண சத்கம், வெறும் ஆறே பாடல்கள்தான். ஆனால், அந்த ஆறு பாடல்களுக்குள் இந்தப் பிரபஞ்சத்தையே அடக்கிவிட்டார் ஆதி சங்கரர் என்ற மஹாகவி.

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்,

ந-ச ஷ்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,

ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:

ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோஷ:

ந-வாக் பாணி பாதம், ந- சோபஸ்த பாயு:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹள,

மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:

ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!

ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:

அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:

பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா

ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,

விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்

ந-ச சங்கதம் நைவ, முக்திர் ந-மேய

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

***

நான் மனம் அல்ல புத்தியும் அல்ல சித்தமும் அல்ல

நான் செவி அல்ல நாக்கு அல்ல நாசி அல்ல கண் அல்ல

வானும் அல்ல பூமியும் அல்ல

ஒளியும் அல்ல வளியும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

நான் பிராணனும் அல்ல பஞ்ச வாயுவும் அல்ல

ஏழு தாதுக்களும் அல்ல பஞ்ச கோஷமும் அல்ல

பேச்சும் அல்ல கைகால்களும் அல்ல செயல்புலன்களும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

எனக்கு வெறுப்பு இல்லை விருப்பமும் இல்லை

பேராசையும் இல்லை மோகமும் இல்லை

கர்வமும் இல்லை பொறாமையும் இல்லை

அறம் பொருள் இன்பம் வீடு எதுவுமில்லை

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

எனக்குப் புண்யமும் இல்லை பாவமும் இல்லை

சௌக்யமும் இல்லை துக்கமும் இல்லை

(எனக்கு) மந்திரம் இல்லை தீர்த்த ஸ்தலங்கள் இல்லை வேள்விகளும் இல்லை

நான் துய்ப்பவனும் அல்ல துய்க்கப்படுபவனும் அல்ல

துய்ப்பும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை

சாதியில்லை பேதமில்லை பிதா இல்லை மாதா இல்லை ஜன்மமும் இல்லை

உற்றம் சுற்றம் குரு சிஷ்யன் யாரும் இல்லை

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

நான் குணபேதம் இல்லாதவன் எந்த ரூபமும் இல்லாதவன்

எங்கெங்கும் எப்போதும் எல்லா புலன்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்

எனக்கு பந்தமும் இல்லை முக்தியும் இல்லை நான் அளக்க முடியாதவன்

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

***

எனக்கு சம்ஸ்கிருதம் படிக்க மட்டுமே தெரியும். அர்த்தத்துக்கு, அகராதிகளையும் பேராசிரியர்களையும் நாடுவேன். ‘நிர்வாண சத்கம்’ என்ற ஆதி சங்கரரின் இந்தப் பாடல், இணைய தளங்களில் பல பிழைகளுடன் காணக் கிடைக்கிறது. பலரும், சதகம் என்றே எழுதுகின்றனர். சதகம் என்றால் நூறு. சத்கம் – ஆறு.

நிர்வாண சத்கம் பாடலுக்கு பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக்கொண்டு போகலாம். சில வார்த்தைகளுக்கு மட்டும் சுருக்கமான விளக்கம் தருகிறேன்.

”பஞ்ச வாயு: பிராண, அபான, வ்யான, உதான, சமான வாயு.

பஞ்ச கோஷம்: கோஷம் என்றால் sheath. அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம். உணவு, உயிர், மனம், அறிவு, ஆனந்தம்.

சிதானந்த ரூபம் சிவோஹம் என்ற வார்த்தைகளை, இந்துக் கடவுளான சிவன் என்று புரிந்துகொள்ளக்கூடாது. மதம், சாதி, ரூபம், அரூபம், ஜனனம், மரணம் என்று எல்லா பேதங்களையும் கடந்த பரவசத்தில், கவியின் சந்நத நிலையில் நின்று பாடுகிறார் சங்கரர். சிதானந்த ரூபம் என்பதை இந்தப் பாடலின் முழுமையான பொருளில், ஏகத்துவத்தை உணர்வதன் மூலமாக நமக்குள் அனுபவமாகும் pure consciousness, bliss என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். சிவோஹம் என்பது நான் (சிவன்) அவன் என்பதாகும். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில், மன்ஸூர் அல்ஹலாஜ் என்ற ஒரு சூஃபி கவிஞர் இருந்தார். அவருடைய புகழ்பெற்ற குறுங்கவிதை ஒன்று இது:

என் இதயத்தின் கண்களால்

கடவுளைக் கண்டேன்

நீ யார் என்றேன்

நீதான் நான் என்றான்.

அவருடைய இன்னொரு புகழ்பெற்ற வாசகம், ‘அன-ல் ஹக்’. இதன் பொருள், ‘நானே உண்மை’. ஆனால், இறைவனின் 99 பெயர்களில் உண்மை என்பதும் ஒன்று என்பதால், அல்ஹலாஜ், “நானே இறைவன்,” என்று சொல்வதாகத் தவறாகப் புரிந்துகொண்டு, ஆட்சியாளர்கள் அவரை 11 ஆண்டுகள் சிறையில் தள்ளினார்கள். சிறைத் தண்டனைக்குப் பிறகு, கி.பி. 922-இல் பொதுமக்கள் முன்னிலையில் அல்ஹலாஜ் கொல்லப்பட்டார். எல்லா மதங்களிலும் கவிகளின் குரல் ஒன்றேபோல் இருக்கிறது என்பதற்கு அல்ஹலாஜ் மற்றுமொரு உதாரணம்.

பிரபஞ்சத்தையே நம்முடைய பிரக்ஞையின் விரிவாகவும், பிரபஞ்ச கானத்தின் ஒரு துளியே நாம் எனவும் உணரும் ஏகத்துவ மனோலயத்தைப் பெற்றுவிட்டோம் எனில், ஆதி சங்கரரின் பரவசம் நமக்கும் சாத்தியமாகும். ‘மோகமுள்’ளைப் படிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு அந்தப் பரவசம் கிட்டும். அதனால்தான், ஆதி சங்கரரின் ‘நிர்வாண சத்கம்’ பாடல்களை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அதையும், பின்வரும் ‘மோகமுள்’ தருணங்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

“தெற்குப் பக்கம் பார்த்தான். கறுத்து நெடிது நின்ற தென்னைகளும், நெட்டிலிங்கைகளும், மாமரங்களும் இருளால் ஆக்கியவை போலக் கும்பலாக அடர்ந்து கிடந்தன. இந்தக் காவேரிக் கரைத் தென்னைகள் எவ்வளவு உயரம்! மூங்கில்கூட ஒவ்வொன்றும் தூண் தூணாகக் கூடு சிறுத்து வளர்கிற மண்!”

“வலியன் குருவி கத்த ஆரம்பித்துவிட்டது. ஓசை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. அக்கரையில் நாணற்காட்டின் பின்னால் நின்ற மாமரத்திலிருந்துதான் வருகிறதோ என்னவோ, அதற்கு இன்னொரு குருவி அக்கரையில் உயர்ந்து நின்ற இலவ மரக்கிளையிலிருந்து எதிர்க்குரல் கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த மாற்றுக் குரல்களுக்குச் சுதியாக, இருக்கிற இடமே கண்டுபிடிக்க முடியாத சுவர்க்கோழி நீளமாக ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறது.”

“காவிரியின் குளிர்நீரும், ஜிலுஜிலுவென்று தவழும் வைகறை மென்காற்றும், வலியன்களின் உருக்கமான கூப்பாடும் வெளியே அழைத்தன.”

“ஆற்றங்கரைப் பக்கம் நடந்துகொண்டிருந்தார். எட்டாம் நாள் பிறைச் சந்திரன் உச்சியை விட்டு நகர்ந்து, மேற்குப் பக்கம் சாய்ந்து, தெருவில் பாலைப் பொழிந்துகொண்டிருந்தது.”

“குடமுருட்டியாறு வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. நீரின் சலசலப்பைத் தவிர, ஓசை வேறு இல்லை. மெல்லிய காற்றில் மூங்கில் தோப்பு கிர்கிர் என்று முனகிக்கொண்டிருந்தது. கடவுளைப் போல எந்த இடத்திலும் இருக்கும் சில்வண்டு, எங்கோ ஒரு மரக்கிளையிலிருந்து சுருதி எழுப்பி, ஆற்று வெளியை நிறைத்துக்கொண்டிருந்தது. எப்போதாவது ஊர் நடுவில் போகிற மோட்டார்வண்டியின் ‘ஹார்ன்’ ஓசை லேசாகக் கேட்கும். இத்தனையையும் மீறிய நிசப்தத்தின் வெள்ளி மஞ்சத்தில், ஆற்றுவெளி துயில் முயல்வதுபோல் தோன்றிற்று. எதிர்த்த கரையில் மரங்களும், புதர்களும் இருள் குப்பலாக மண்டிக் கிடந்தன. கரையோரமாக இருந்த ஒரு மூங்கில் கொத்திலும், நெடிது நின்ற அரச மரத்திலும் ஆயிரக்கணக்கில் மின்மினிக் கும்பல் தோன்றியும் மறைந்தும் கண்ணை மயக்கிற்று. தூரத்தில், ஆற்றின் குறுக்கே ஓடுகிற ஓடம் ஊர்வது நிலவில் தெரிந்தது.”

“ஆறு, கரை மீது சிற்றலைகளை ஏவி ஏவி ஓசையிட்டு விரைந்து ஓடிக்கொண்டிருந்தது.”

“குளுக் குளுக்கென்று கொப்பளிக்கும் ஒரு சுழல், இன்னொன்றைத் தொடர்ந்துகொண்டே விரைந்து போயிற்று. ஆற்றின் மையத்தில் அகன்று விழுந்த நிலவொளி, ஓடும் நீரின் சலனம் பட்டு சிலிர்த்தது. மூங்கில் கொத்தும் நீரில் சுழலும் அரச மரத்தின் சலசலப்பும் ரகசியங்கள் பேசிக்கொண்டிருந்தன.”

“நுணாப்பூவின் மணம் நிலவிலும், மெல்லிய காற்றிலும் கலந்து கமழ்ந்தது.”

“செம்பனார் கோயிலிலிருந்து சாயங்காலம் புறப்பட்ட கட்டை வண்டி, மண் சாலையில் அசைந்து அசைந்து ஊர்ந்துகொண்டிருந்தது.”

“எதிர்வீட்டு வாசலில், மாட்டின் கழுத்து மணியோசை கேட்டது. விழுந்து வணங்குவதுபோல், ஒரு கூண்டு அரை வண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த மாடுகளின் மணி சோம்பலுடன் ஒலித்தது.”

பாபுவும் அவன் நண்பன் ராஜமும், படகு ஓட்டியபடி காவேரி தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். துடுப்பு வலித்து ராஜத்தின் பாம்பு விரலடியிலும் ஆள்காட்டி விரல் அடியிலும் கொப்புளம் கண்டிருந்தது. அப்போது ராஜம் சொல்கிறான்: “பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தவுடனே, உங்கப்பா சொல்கிறாற்போல பாட்டுப் பாடப் போயிருந்தா, இந்த மாதிரி ‘கானோ’ விட முடியுமா, பாபு? வேறு எந்தக் காலேஜ் பையனுக்கும் கிடைக்காத பாக்யம் இது. இவ்வளவு தண்ணிக்கு நடுவிலே இந்த நிழல்லேயும் நாணல்லியும் உரசிண்டு போறபோது, எனக்கு வேறு ஏதோ லோகத்திலே உலவறாப்பல இருக்கு.”

ராஜம் சொல்வது கும்பகோணம், முப்பதுகளின் இறுதி.

“தெருச் சப்தமும், காவேரியில் துவைக்கும் சப்தமும், கொல்லையில் செம்போத்து ஜோடியும், கிளிக்கூட்டமும் போடுகிற இரச்சலும் கண்ணை மூட விடவில்லை.”

“சல்லா போட்டதுபோல முழுவதையும் காட்டாத நிலவில் கூட அந்தச் செதுக்கின உடலின் கட்டும் உறுதியும் பளிச்சென்று தெரிந்தன. நந்தியாவட்டை இதழ்போல அந்த நைப்பும் வழவழப்பும் நிலவோடு நிலவாகப் பொலிந்தன.”

பாபுவும் யமுனாவும் யமுனாவின் தாயார் பார்வதியும் காரில் வருகிறார்கள். அதிகாலை நேரம். காரைப் பார்த்துவிட்டு அபசகுனமாக அவர்கள் எதிரே போவானேன் என்று ஒதுங்கி நிற்கிறாள், ஒரு விதவைக் கிழவி. ஈரம் சொட்டச் சொட்ட, கையில் ஒரு டம்ளர். தையுப்பாட்டி மாதிரி இருக்கே? ஆமாம், தையுப்பாட்டிதான். “பாவம், மூணு வயசிலே கல்யாணம். நாலு வயசிலே தாலி போயிடிச்சு. அப்புறம் எழுபது வருஷம் இந்தக் கோலம்…”

“தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து, செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று.

அப்பழுக்கில்லாத நாதமாக, கூடம் முழுவதும் கமழ்ந்தது அது.

சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும்போல, இரவும் இருளும்போல, நிலவும் தண்மையும்போல, வைகறையும் தூய்மையும்போலச் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுவதுபோல. சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது.

புலன்களைக் கூட்டி, ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது. உடலையும் உலகையும் விட்டுச் சென்ற நினைவும், புத்தியே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்ததுபோல் பறந்தது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு.

நாதமுனிகளெல்லாம் இப்படித்தான் திரிந்தார்கள். மூவுலக வழிப்போக்கனாகத் திரிந்த நாரதன், இந்த நாதவெளியில்தான் திரிந்தான் போலிருக்கிறது. இதைத்தான் மனிதனின் விரியாத கற்பனை, மூவுலகென்று குறுக்கிப் பெயரிட்டுவிட்டதா? அல்லது மூன்று ஸ்தாயிகளையே மூவுலகென்று சொல்லிற்றா? தந்தி ஒலிக்க, வாய் பாட, செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர், தெருவிலா நடந்தார்? திக்கை நிறைத்த நாதத்தில் அலைந்த அவர், செம்பை ஏந்தியது அரிசிக்கா? அல்லது நாதவெள்ளத்தில் மொள்ளுவதற்கா? ஊர் ஊராக காசிக்கும், தில்லைக்கும், தீர்த்தங்களுக்கும் தீட்சிதர் அலைந்ததெல்லாம், நாதத்தில் அலைந்ததுதானே? சுந்தரர் காலால் நடந்தது இந்த ஒருமையில்தானே!

பாபுவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாட்டுக் கூட இல்லை இது. வெறும் இரண்டு மூன்று ஒலிகள். வெறும் தம்புராவின் இசை. திருப்பித் திருப்பி வரும் ஒரே ஸ்வரங்கள். இதுவா இப்படிப் பரவசப்படுத்துகிறது? காரணம் என்ன என்று அறிய முடியவில்லை. தந்திகளின் இனிமையா, நின்று ஒலிக்கும் கார்வையின் நீளமா? சுருதி சேர்ந்த தூய்மையின் நிறைவா?”

ஆதி சங்கரரின் ஏகத்துவம் பற்றியும் அவரது நிர்வாண சத்கம் பற்றியும் இங்கே கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொண்டு, ‘மோகமுள்’ளில் வரும் ரங்கண்ணாவைப் பார்ப்போம். இந்த ரங்கண்ணா, ஜானகிராமனின் குரு உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்தான் என்று தி.ஜா. தன்னுடைய பேட்டியிலும், ‘மோகமுள் பிறந்த கதை’ என்ற கட்டுரையிலும் கூறுகிறார்.

“பாபு ரங்கண்ணாவைப் பார்க்கும் முதல் காட்சியில், ரங்கண்ணா தனக்குத்தானே, தன் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் நாதத்தைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருப்பார். அதைக் கலைக்க விரும்பாதபடி, பாபுவும் மற்றவர்களும் தயங்கி நின்றிருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று அது,” என்று ‘தி. ஜானகிராமனின் இசையுலகம்’ என்ற கட்டுரையில் சொல்கிறார் சேதுபதி அருணாசலம். அது உண்மைதான். மேலும், என்னைப் பொறுத்தவரை, ‘மோகமுள்’ முழுவதுமே அதுபோன்ற தருணங்களால் நிரம்பி வழிவதாகத்தான் தோன்றுகிறது. ‘மோகமுள்’ளில் ரங்கண்ணா அறிமுகமாகும் காட்சி இது:

“ரங்கண்ணா, நடையில் இருந்த ஒட்டுத் திண்ணையில் சப்பணம் கட்டி உட்கார்ந்திருந்தார். கண் மூடியிருந்தது. வலது கை, முழங்கைக்கு மேல் அசைந்துகொண்டிருந்தது. மேலும் கீழும் முன்கையை உயர்த்தித் தாழ்த்திக்கொண்டிருந்தார் ரங்கண்ணா. கண் மூடின முகமும், கையோடு மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்தது. உதடுகள் சற்றுப் பிரிந்திருந்தன. ஆனால், சப்தம் ஏதும் வாயினின்று எழவில்லை. தியானத்தில் ஆழ்ந்து, சுழலில் சிக்குவதைப்போல, சூழ்நிலை நினைவின்றி சிக்கின ஒரு நிலையின் முகபாவம்தான் அது. நடுவில் இரண்டு தடவை, இரண்டு கைகளும் ஏதோ வானைக் கண்டு இறைஞ்சுவதுபோல் மல்லாந்தன. நாலைந்து கணங்கள், அந்த நிலையில் நின்று முழங்கால்களின் மீது அமர்ந்தன. முகம் சற்று மேல் நோக்கி, அசைவு ஓய்ந்தது. இருபது விநாடிக்குப் பிறகு, மீண்டும் வலது முன்னங்கை பழையபடியே மெதுவாக உயர்ந்து தாழ்ந்தது. முகமும் அதன் சலனத்துக்கேற்ப உயர்ந்து தாழ்ந்தது.

அந்த முகத்தில் ஒரு எல்லை காணா அமைதி. ஏதோ பெரிய அலைகள் மீது ஏறி ஏறி இறங்குவது போல, இந்தக் கையும் முகமும் எழும்பி இறங்குவது, உள்ளே நிகழும் இயக்கத்தின் வெளித் தோற்றமாகத் தோன்றுகிறது. அப்படி, எந்த அலை மீது இந்த உள்ளம் ஏறி மிதக்கிறது… தன்னை மறந்த அந்த லயிப்பில், அவர் உடல் உள்ளம் உயிர் எல்லாவற்றையுமே இழந்துவிட்டதுபோல்தான் இருந்தது.”

“ரங்கண்ணாவுக்கு சங்கீதம்தான் உயிர். பாடாவிட்டால், நாதத்தைப் பற்றி நினைக்காவிட்டால், அவருக்கு உயிர் தாங்காது. சங்கல்பம் செய்துகொண்டு அதைப்பற்றி நினைக்க வேண்டுமென்றில்லை. தைலதாரை என்று சொல்வதுபோல், அவருடைய சங்கீத உபாசனை கணமும் அறாத உபாசனை. வருடம் முழுதும் வற்றா அருவிபோல், கணமும் ஓயாக் கடலின் அலைபோல், கருத்தும், உணர்வும், கணமும் அறாமல், நாதம் அவருள் நடனமிடுகின்றது. ஓயாத வெள்ளம் அது. இசையே உயிர் அவருக்கு. குளிப்பதும், தின்பதும், பேசுவதும் தற்செயலாக நிலவும் நிகழ்ச்சிகள் அவருக்கு. வேறு சிந்தனையின்றி, நாதத்தையே பரம்பொருளாக எண்ணி, அதன் அருவியின் கீழ் ஓயாமல் நனைந்துகொண்டிருப்பவரின் உணர்வும் அறிவும் குளிர்ந்திடாமல் எப்படியிருக்கும்? அவர் பேச்சும் – ஏன், வெசவும்கூட அருளின் வடிவாகக் குளிர்ந்து, நம் மனதில் எழும் புயலையும், பகையையும், களங்கங்களையும் சாடி விடுவதில் என்ன வியப்பு!”

தி.ஜா.வை விட்டு வெளியிலேயே வர முடியவில்லை. வசியத்துக்குக் கட்டுண்டதுபோல் அந்த உலகத்திலேயே கிடக்கிறேன். தி.ஜா. எழுதிய எல்லாவற்றையும், அவர் பற்றி மற்றவர்கள் எழுதிய எல்லாவற்றையும் படிப்பதிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டும்போல் இருக்கிறது. அவர் அளவுக்குக் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே தோன்றுகிறது. அதேசமயம் இந்தச் சாதனையையும் புகழையும் தி.ஜா. ஒரு ஞானியைப் போல் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார். தன்னுடைய எழுத்து பற்றி எங்கேயுமே அவர் பெருமையாகச் சொல்லிக்கொண்டதில்லை. அவர் சொல்வதை நாம் நம்பினால் அவரைக் காணாமலே கடந்து சென்றுவிடுவோம். அந்த அளவுக்குத் தன்னடக்கம். இதைத் தன்னடக்கம் என்று சொல்வதைவிட ஒரு ஞானியின் ஆழ்ந்த அமைதி என்றே சொல்லத் தோன்றுகிறது. சமுத்திரம் அதன் கரையில் நிற்கும் மனிதனைப் பார்த்து என்ன சொல்லும்? தன்னுடைய பிரம்மாண்டத்தை, தன்னுடைய அகண்டகாரத்தைச் சொல்லிக்கொள்ளுமா? அது போலவேதான் தன் எழுத்தைப் பற்றி தி.ஜா. பெரிதாக ஒன்றும் சொல்லவில்லையோ என நினைக்கிறேன்.

“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளவே நான் விரும்புகிறேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில்கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்துகொள்கிறேன் – எழுத்து மூலம்.”

தி.ஜா. கொண்டாடிய இயற்கையைப் போலவே நாதத்தைப் போலவேதான் அவர் தன் எழுத்தையும் பார்த்திருக்கிறார். பவளமல்லிப் பூக்களுக்கும் மலையடிவாரத்தின் மாலைநேரக் காற்றுக்கும் கோடை மழை கொண்டு வரும் மண் வாசனைக்கும் என்ன அர்த்தம் உண்டோ அதேதான் தி.ஜா.வின் எழுத்துக்கும் என்று தோன்றுகிறது.

“தியானம் பண்ணு. சுருதிதான் தெய்வம். பெற்ற தாய் அது. ஸ்வரங்களையெல்லாம் தியானம் பண்ணி தியானம் பண்ணித்தான் வசப்படுத்த முடியும்.” (மோகமுள்)

“தியான முறையில் சின்ன வயதிலேயே ஈடுபட்ட அப்பா தினமும் வெகு நேரம் தியானத்தில் உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பழகிப்போன ஒன்றாக இருந்தது,” என்று தி.ஜா. பற்றிச் சொல்கிறார் தி.ஜா.வின் புதல்வியான உமா சங்கரி.

“கரையிலிருந்த மரத்தில் டூவ் டூவ் டூவ் என்று ஒரு குருவி வேகமாகக் கத்திக்கொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தான். மிளகாய் அளவுதான், விரல் நீளம்தான் இருக்கும். பச்சைப் பசேலென்று உடல். எவ்வளவு பெரிய குரல்! எவ்வளவு இனிமை!” (மோகமுள்)

தியானத்தின்போது மனம், பேரண்டத்தின் லயத்தோடு சேர்வதால் ஏற்படும் ஓர்மையையே தி.ஜா.வின் எழுத்தும் தருகிறது என்பதால்தான் அவரைப் படிப்பவர்கள் அனைவரும் இனம் புரியாத ஒரு உன்னத உணர்வெழுச்சியை அடைகிறார்கள்.

“இந்த மாதிரி மனிதர்கள், சுத்தாத்மாக்கள் இருந்துகொண்டிருந்தாலே உலகம் க்ஷேமம் அடையும். அவர்கள் யாருக்கும் வாயைத் திறந்து உபதேசமோ நல்ல வார்த்தைகளோ சொல்ல வேண்டிய அவசியமில்லை.” இது ரங்கண்ணாவைப் பற்றி பாபுவின் நண்பன் ராஜத்தின் தகப்பனார் தியாகராமன் சொல்வது.

“அவர் சொல்வது உண்மைதான். நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும். தன்னைச் சுற்றித் தூய்மையின் ஒளியை அவனால் பரப்ப முடியும்; அருவியினின்று எட்டி நின்றும் திவலைகள்பட்டு சுகப்படுவது போல அதன் திவலைகளை உணர முடியும்.”

தி.ஜா.வின் எழுத்துக்கும் இது பொருந்தும்.

“ரங்கண்ணாவுக்கு வாழைப்பட்டையில் சாப்பிடுவதில் தனி ஆசை. கிராமத்தில் வாழை இல்லாதவர்கள் தார் அறுத்த மரத்தை இலவசமாக வாங்கி வந்து திண்ணையில் உட்கார்ந்து துண்டு போட்டு, சூர்க்கத்தியால் சோறு வழித்து, பட்டைகளைத் தேய்த்துப் படுகிற அவதி இந்தக் கும்பகோணத்தில் இவர் ஏன் பட வேண்டும் என்று புரியத்தான் இல்லை. ஆனால் வாழைப்பட்டையைப் பார்த்தாலே உண்டாகிற கவர்ச்சியும் கிளுகிளுப்பும் அவனுக்குப் புரியாமல் இல்லை. ரங்கண்ணா தங்கத் தட்டைப் பார்க்கிறது போல அதைப் பார்த்துக்கொண்டிருப்பார். சாம்பன்தான் பட்டைகளைச் சோறு வழித்துத் தைக்கிற வழக்கம். இப்போது இந்த வேலையையும் ஏற்றுக்கொண்டான் பாபு.

அன்று ஒரு மரத்தைத் துண்டுபோட்டு மேல் பட்டையை உரித்து அடுத்த பட்டையை உரிக்கும்போது, ரங்கண்ணா கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அதை கையை நீட்டிப் பட்டையை எடுத்து சோறு அமைந்திருந்த வரிசைகளையும் சச்சதுரமான துவாரங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தார்.

‘பாபு, இதைப் பார்த்தியாடா? இதைப் பாரேன். என்னமோ தம்புரா, வீணைங்கிறானேடா இந்தச் சோற்றிலே இருக்கிற துவாரத்தைப் பாரு. லக்ஷக்கணக்கிலே இருக்கும் போலிருக்கு. எங்கேயாவது ஒரு கோணல் மாணல் இருக்கா பாத்தியா? பத்து வாத்தியத்தைச் சுருதி சேர்த்துண்டு, ஒருத்தனே ஏக காலத்திலேயே வாசிக்கிறாப்பல இருக்கு… இத்தனை அழகாக ஒரு பாட்டுப் பாட முடிஞ்சாப் போரும். இல்லாட்டா இந்த மாதிரி ஒரு வாத்யம் எங்கேயாவது தேவலோகத்தில் இருக்குமோன்னு தோண்றது.’ “

“பேரண்டம் (Universe) உருவாகிய ‘பிக் பாங்’ (Big Bang) கணத்தை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாக நிரூபிப்பதற்கு இயற்பியலாளர்கள் முயல்கின்றனர். பிக் பாங் வெடிப்பின் கணத்தைக் ‘கடவுளின் கணம்’ என்று சொல்வார்கள். அண்டத்தைப் படைத்தது கடவுள் என்றால், அவர் அதை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாகத்தான் படைத்திருக்க வேண்டும். ‘The whole Universe is nothing but mathematical equations.’

கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்திருந்த அந்தக் கணிதச் சமன்பாடு, ‘ஸ்ட்ரிங் தியரி’ என்னும் ஒரு கோட்பாட்டின் மூலம் கண்டுபிடிக்கப்படும் நிலைக்கு வந்தது. அணுமுதல் அண்டம் வரை இசைக்கருவிகளில் இருக்கும் இழைகள் (Strings) போல அதிர்ந்து கொண்டிருக்கின்றன,” என்று ஸ்ட்ரிங்க் தியரியை விளக்குகிறார் ராஜ் சிவா.

முழுக் கட்டுரைக்குப் பார்க்கவும்: http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6098

சிலருக்கு அறிவியலைத் தமிழில் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்காக இந்த இணைப்பு: http://www.einstein-online.info/elementary/quantum/strings

மேலே சொன்ன ஸ்ட்ரிங் தியரிக்கும் ரங்கண்ணாவின் சங்கீதத்துக்கும் உள்ள உறவைப் பற்றி நீங்களே சற்று நேரம் சிந்தியுங்கள்.

***

ரங்கண்ணா வீட்டுக்கு மகாராஷ்ட்ராவிலிருந்து ஒரு சங்கீதக் கலைஞர் தனது மூன்று சிஷ்யர்களுடன் வருகிறார். “இது என்ன சாரீரம்! இவ்வளவு கனமாகவா மனிதக் குரல் இருக்க முடியும்! இந்தக் குரலுக்கும்தான் எவ்வளவு பலம்! ஆ…ம் என்று அலட்சியமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றது பாபுவுக்குக் கவலையாகத்தானிருந்தது, இவ்வளவு மொத்தமான சாரீரம் மேலே போய் எப்படி எட்டப் போகிறது என்று. ஆனால் மந்திரத்தில் நாலு நிமிஷம் நின்று பிரமிக்க அடித்துவிட்டு, அவர் படிப்படியாக ஏறி, மேல் ஷட்ஜமத்தில் ஏறி கம்பீரமாகக் கார்வை கொடுத்து நின்ற போது, அவன் உடல் அதிர்ந்தது. புல்லரித்தது. கண்ணில் நீர் மல்கிற்று.”

இப்படி மூன்று மணி நேரம் பாடுகிறார்கள் அவர்கள். அப்போது ரங்கண்ணாவின் பழைய சீடர் ராமு வருகிறார். அவரிடம் அவர்களைப் பற்றிச் சொல்லி, மீண்டும் பாடச் சொல்கிறார் ரங்கண்ணா.

வடக்கத்திப் பாடகன், ராமுவுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மறுபடியும் பாட ஆரம்பிக்கிறான். மந்த்ர பஞ்சமத்தில் ஒரு நிமிஷம் நின்றுவிட்டு, கீழே இறங்கி மந்த்ர ஷட்ஜமத்திலும் ஒரு நிமிஷம் நின்று ராகச் சாயை காண்பித்ததைக் கேட்டதும், ராமுவின் அலட்சியப் புன்சிரிப்பு உதட்டுக்குள் ஒளிந்துகொள்கிறது.

“இது என்னடா சாரீரம்! அதல பாதாளங்களெல்லாம் போறது! மேலே போனா, சத்யலோகம் எல்லாம் போறது! த்ரிவிக்ரமாவதாரத்திலே, பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப்பிரம்மாதிகளாலே. இவன் போய் எட்டிப்பிடுவான் போலிருக்கே!” என்று கண் அகல வியக்கிறார் ரங்கண்ணா.

மேலும் சொல்கிறார்: “எழுபது வருஷமாக நான் சங்கீதம் கேட்கிறேன். சங்கீதத்தைப் பத்தி தியானம் பண்றேன். சிந்தை பண்றேன். ஏதோ பகவான் கிருபையினாலே அந்த சமுத்திரத்திலே கொஞ்சம் காலையும் நனைச்சுண்டு நிக்கிறேன். ஆனா இந்த மாதிரி சாரீரத்தை நான் கேட்டதில்லை ராமு. இது ஆச்சரியமான சாரீரம்.”

“சாரீரம் மர்மாவை எல்லாம் சிலிர்க்க அடிக்கிறது. கேக்கற போதே மயிர்க் கூச்செறியறது. அமிர்தத்தாலே காது, உடம்பு, மனசு, ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுபிடறான்.”

அன்று கிருஷ்ணபட்ச பஞ்சமி. பழம்பித்தளைத் தட்டைப் போல சந்திரன் எழவும் இரண்டு நாழிக்கு மேலிருந்தது. நட்சத்திரங்களைத் தவிர வேறு ஒளிகள் இல்லை. கோயிலுக்குள் மட்டும் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

அந்த வடக்கத்திக் கலைஞர்கள் நாகேச்வரன் கோவிலின் உள்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுருதி சேர்த்துவிட்டு மீட்டினபொழுது கோயில் மண்டபத்தில் தம்புராவின் நாதம் எதிரொலித்து வந்தது. பெரியவர் சுருதி சேர்த்துக்கொண்டு பாட ஆரம்பித்தார். கந்தர்வ கானம். அந்த கனமும் கம்மலும் நிறைந்த இனிமை, மண்டபத்தில் மேளம் கட்டி உள்ளத்தை மிதக்க வைத்தது. அந்த கானம் பட்டுப் பரவசமடைந்து, ஆகாகாரம் செய்வதுபோல், மண்டபம் குரல் நின்ற ஒவ்வொரு கனத்தையும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. யமுனாவும் ஒரு தூணில் சாய்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறாள். சுமார் ஒரு மணிக்குப் பிறகு இசை ஓய்ந்தது. யாரும் எழுந்திருக்கவில்லை. பேசவும் இல்லை. அப்படியே மௌனமாகச் சற்று நேரம் உட்கார்ந்திருந்தார்கள். மயக்கம் தெளியாதது போல.

யமுனாவிடம் சென்றான் பாபு. “என்ன யமுனா?”

“நெஞ்செல்லாம் வலிக்கிறது பாபு.”

“ஏன்?”

“இவர் ஏன் இப்படிப் பாடறார்? எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு, பாபு. இவ்வளவு பரவசமாய்ப் பாடினால், என்னால் கேட்க முடியவில்லையே. உடம்பெல்லாம் என்னமோ பண்றது,” என்று மீண்டும் கண்ணை மூடித் தூணில் பின்தலையைச் சாய்த்துக்கொண்டாள் யமுனா. “உடம்பெல்லாம் கூடப் பறக்கிறது,” என்று கண்ணைத் திறந்து மீண்டும் சொன்னாள்.

அதன் பிறகு மறுநாள் அவர்களை நினைத்து மீண்டும் பாபுவிடம் சொல்கிறாள்: “எவ்வளவு நல்லாப் பாடினார், எனக்குப் பயமாயிருந்தது. மாரை மாரை வந்தடைச்சுது. அழுகை அழுகையா வந்தது. அவர் நிறுத்தினதால்தானோ என்னவோ. நிறுத்தாம பாடிட்டே இருந்திருந்தா நானும் அங்கேயே உட்கார்ந்து பிராணனை விட்டிருப்பேன்.”

“மோகமுள் படித்து விட்டேன்,” என்றேன் நண்பரிடம். “எப்படி இருந்தது?” என்று கேட்டார். “செத்துட்லாம் போலருக்கு.” அவ்வளவுதான் சொன்னேன். வடக்கத்திக் கலைஞர்களைக் கேட்டதும் யமுனா சொன்ன பதில். இதுதான் கலையின் உன்னதம். கலை தரும் அனுபூதி நிலை.

***

தி.ஜா. பற்றி கரிச்சான் குஞ்சு சொல்கிறார்: “மன்னார்குடியில் இருந்த மஹாமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர், புராணம் சொல்லும் தொழிலை மேற்கொண்டு பொருளும், வசதியும் பெற்றனர். மாயவரம் சிவராம சாஸ்திரிகள், சிமிழி வெங்கடராம சாஸ்திரிகள், தேவங்குடி தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர்கள் அம்மூவர். தியாகராஜ சாஸ்திரிகளின் குமாரர்கள் இருவரில், ஜானகிராமன் இளையவன். சிமிழி சாஸ்திரிகளின் குமாரர்கள் நால்வரில் இரண்டாமவர் ‘ஆத்ரேயன்’. தஞ்சாவூரில் ஜானகிராமன் தந்தையும், ஆத்ரேயன் தந்தையும் புராணப் பிரசங்கம் செய்து வந்தனர். என் தந்தை, ஜானகிராமன் தந்தையாருக்குச் சீடன் போன்றவர். உறவும் உண்டு.” ஆத்ரேயன் என்பது ஸ்வாமிநாத ஆத்ரேயன்.

“1936-இல் நான் கும்பகோணம் ராஜா பாடசாலையில் சேர்ந்து ‘ஓரியண்டல் எண்டிரன்ஸ்’ பரிக்ஷைக்காகப் படித்தபோது, ஜானகிராமன் காலேஜில் படித்துவந்தான். தனியே ரூமில் இருந்தான். அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் சந்திப்பதுண்டு. எப்படியோ என்னிடம் அவனுக்கு ஒரு ஆழமான அன்பு பிறந்தது. எனக்கு அவன் படிக்கும் ஆங்கில நூல்களைப் பற்றியும் ஆங்கில இலக்கிய விவரங்களும் சொல்வான்.”

“1940-இல், நான் சென்னையில் தமிழாசிரியன் உத்தியோகம் பெற்றுக் குடியேறினேன். ஜானகிராமன் ‘39-இல் அல்லது ’40-இல் பி.ஏ. முடித்து வேலை தேடினான். கிடைக்கவில்லை. என்னைவிட ஒன்றரை வருஷம் வயதில் சிறியவன் என்று ஞாபகம். ஜானகிராமனின் தந்தையார் தஞ்சையைவிட்டுக் குடிபெயர்ந்து வலங்கிமான் அருகே கீழவிடையல் என்ற கிராமத்தில் குடியேறினார். அப்போதுதான் அவனுக்குத் திருமணம் நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிக்கப்போனவன், விரைவில் உதறிவிட்டு, மீண்டும் வேலை தேடி அயர்ந்து, எல்.டி. படிக்கச் சென்னைக்கு வந்தான். எல்.டி. முடித்தபின் சென்னையில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தான். அந்த இரண்டு மூன்று வருஷங்கள் என்னால் என்றுமே மறக்க இயலாதவை. மாம்பலத்தில் ரூமில் சேர்ந்தோம். ஹோட்டல் சாப்பாடு. எனக்கு 25 ரூபாய் சம்பளம். அவனுக்கு 35 அல்லது 40 ரூபாய். அதிருசியான சாப்பாடு அப்போதெல்லாம். 10 ரூபாய்க்கு 60 சாப்பாடுகள். நாங்கள் இருவருமே ருசி பார்த்துச் சாப்பிடுகிறவர்கள். மிகவும் சுகமான நாட்கள், பாட்டு, படிப்பு, சர்ச்சைகள், பழைய இலக்கியம், புது இலக்கியம், ஸம்ஸ்கிருத நாடகங்கள், வாய்விட்டு நடிப்பதைப் போலவே படித்து ரஸிப்பது, நல்ல கோஷ்டி.”

கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையிலிருந்தும் தி.ஜா.வின் புதல்வியான டாக்டர் உமா சங்கரியின் கட்டுரையிலிருந்தும் தி.ஜா.வும் அவரது குருவான கு.ப.ரா.வைப் போலவே நல்ல ஆங்கில இலக்கியப் புலமையும் சம காலத்து இலக்கியம் குறித்துக் கறாரான இலக்கியப் பார்வையையும் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது.

கரிச்சான் குஞ்சு சொல்கிறார்: “ஜானகிராமனுக்கு காலேஜ் நாட்களிலிருந்தே டாகூரைப் பிடிக்காது. போலிக் கவிதை என்பான். இது அவனுடைய இங்கிலீஷ் புரபஸர் பழமார்நேரி ஸ்ரீ தாராமய்யரும் பகிர்ந்துகொண்ட அபிப்ராயம். என்னிடம் அவன் கீதாஞ்சலிப் பாடல்கள் சிலவற்றை விவரித்து விமர்ஸனம் செய்ததுண்டு.”

தாகூர் குறித்த அடியேனுடைய பார்வையும் அதுதான்.

“அப்பா டில்லிக்கு மாற்றலாகி நான் பள்ளியில் சேர்ந்து வரலாறும் ஷேக்ஸ்பியரும் படிக்க வேண்டி வந்தபோது, அவற்றையெல்லாம் எனக்குத் தெளிவாக அல்வா போல சொல்லிக் கொடுத்துவிட்டார். அப்பாவுக்கு எப்படி இங்கிலீஷில் எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.” இது உமா சங்கரி.

தி.ஜா.வின் இளமைப் பருவத்தையும், பெண்கள் குறித்த அவரது பார்வையையும் பற்றி கரிச்சான் குஞ்சு விவரிக்கிறார். கரிச்சான் குஞ்சு அப்போது மாம்பலத்தில் ஒரு பெண்கள் பள்ளியில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதப் பண்டிதராக வேலையில் இருந்தார். (அந்தக் காலத்தில் தமிழ்ப் பண்டிதர் என்றால் அவருக்குக் கட்டாயமாக சம்ஸ்கிருதமும் தெரிந்திருந்தது. இப்போது இருப்பதைப் போன்ற பிற மொழிகள் மீதான துவேஷம் அப்போது இல்லை.)

19 வயதில் கல்யாணமாகியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் கரிச்சான் குஞ்சு. மனைவி தீராத நோயாளி. அப்போது தாகூர் இறந்த செய்தி கேட்டு அவரது பள்ளியில் கரிச்சான் குஞ்சுவைப் பேசச் சொல்கிறார்கள். இவரும் நன்றாகப் பேசிவிடவே அன்றிலிருந்து அவருக்கு ஹீரோ அந்தஸ்து வந்து விடுகிறது. மேலே கரிச்சான் குஞ்சு சொல்கிறார்:

“என்னைத் தேடிக்கொண்டு பெண்கள், என் மாணாக்கியர் சிலர் வரத் தொடங்கினார்கள். நான் மிகவும் சங்கடப்படுவேன் அந்த நேரங்களில். ஜானகிராமன் அவர்களுடன் நெருங்கிப் பேசிப் பழகிக் குதுகுதுப்படைவான். அவன் இளமைப் பருவத்திலிருந்தே பருவத்தை, அழகை, பெண்மையை வயதுக்கு மீறி விரும்பி நேசிக்கும் இயல்புடையவன். மூன்றாவது புருஷார்த்தத்தில் அவனுக்கு எல்லையில்லா வேகம் உண்டு. அது நிறைவேறியதும் உண்டு. என்னைத் தேடி என் ரூமுக்கு வரும் பெண்களில் ஒருத்தி – என்னைக் கேட்டு என் திருமண அவலத்தைப் புரிந்துகொண்டவள் – என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று பச்சையாகச் சொல்லிவிட்டாள். எனக்குத் தைரியமில்லை. வசதிகளும் இல்லை. ஸமூக பயம் வேறு. எடுத்துரைத்து அவளை விலகச் செய்தேன். ஆனால் அவள் அதற்குப் பிறகும் என்னிடம் நேசத்தை மிகுதியாகவே காட்டினாள். ஜானகிராமன் நான் அவளை மணந்துகொள்ளத்தான் வேண்டுமென்றும், என் தாயாரிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் தானே எல்லாம் சொல்லி ஏற்பாடு செய்வதாகவும் ஒற்றைக் காலால் நின்றான். நான் மறுத்துவிட்டேன். அதற்காக நான் வருந்தவும் இல்லை. அவன்தான் மிகவும் வருத்தப்பட்டான். நான் மனோ வேகங்களை அடக்கி ஒடுக்க நிறையப் படித்தேன். முக்கியமாக அன்றும் இன்றும் நான் ஆர்வத்துடன் படிப்பது உபநிஷத்துக்களே. அதற்குப் பிறகு ரொம்ப நாள் வரை ‘வைதீகம்’, ‘சாமியார்’ என்று என்னை அவன் பரிகாசம் செய்துகொண்டே இருப்பான்.”

தி.ஜா. சங்கீதத்தில் ஊறினவர். தி.ஜா.வும் ரங்கண்ணாவைப் போல்தான் வாழ்ந்திருக்கிறார். அதனால்தான் அவர் கச்சேரி செய்யவில்லையோ என சந்தேகப்படுகிறேன். ஆனாலும் அந்த விஷயம் குறித்து, ஒரு மாபெரும் சங்கீத மேதையை சங்கீத உலகம் இழந்துவிட்டதே என்று தி.ஜா.வின் மீது மிகுந்த வருத்தமும் கோபமும் ஏற்படுகிறது. அவரது இசை ரசனை பற்றி அவருடைய நண்பர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். கரிச்சான் குஞ்சு இப்படி எழுதுகிறார்:

“அப்போதெல்லாம் நானும், அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை, கமகப் பிரதானமான ஸஞ்சாரங்கள் ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் வளர்ந்த ஒன்று. ஆகஸ்டில் அவனை நான் கடைசியாகச் சந்தித்தேன். இசைவிழாக்கள் நடக்கும் நாட்களில் தன்னுடனேயே தங்கி இருக்க வேண்டுமென்றும், என்னை மிகவும் ஸெளக்கியமாகக் கூடவே அழைத்துச்சென்று திரும்புவதாகவும், அவசியம் வரும்படியும் வற்புறுத்திக் கூறினான். பிறகு கடிதமும் எழுதினான். ஸங்கீதத்தைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதப்போவதாகவும், அதற்கான சில கலந்துரைகள் செய்ய வேண்டும் என்றும் சொன்னான்.

இளமை முதலே இசைப் பயிற்சி உண்டு அவனுக்கு. அவன் தந்தையாருக்கு நல்ல ஸங்கீத ஞானமுண்டு. அவர் ராமாயணம் சொல்லும் முறையே ஒரு அருமையான அபூர்வமான முறை. அதாவது கதையில் வர்ணனை உரையாடல் முதலியவை எல்லாம் அந்தந்த சந்தர்பங்களுக்கு ஏற்ப பல ராகங்களில் வரும். அவர் வாக்கிலிருந்து அந்தக் காலத்துத் தஞ்சாவூர் சுருதிப்பெட்டி தம்பூராவை விடச் சுத்தமாய், அந்தர காந்தாரம் பேசும். ஒரு கட்டை சுருதியில் நாட்டையில் மங்களம் சுலோகம் – பூர்வ கதைச் சுருக்கம், பின்னால் ஒருவர் – அநேகமாக ஜானகிராமனுடைய அண்ணன் அல்லது அவனே மூலசுலோகங்களைச் சிறிதளவு ராகத்துடன் வாசிப்பார்கள். தொடர்ந்து அதே ராகத்தில் கமகங்கள் குழையும் ஆலாபனைக் கிரமத்தில் கதை கூறுவார் தந்தை. அப்பொழுது வீட்டில் ஜானகிராமனுடைய சகோதரிகளுக்கு இசைப்பயிற்சி நடக்கும். இந்த வகையில் வயதுடன் கூடவே வளர்ந்தது அவனுக்கு ஸங்கீதம். பின்னர் கும்பகோணம், குற்றாலம், அய்யம்பேட்டை, சென்னை எல்லா இடங்களிலும் மேலும் மேலும் பயிற்சி செய்தான். பாடுவான். மேடை ஏறிக் கச்சேரி செய்யவில்லையே தவிர, ஒரு வித்துவானுக்குரிய அத்தனை லக்ஷண, லக்ஷய ஞானம் உண்டு அவனுக்கு. கும்பகோணத்திற்குப் பக்கத்தில், எங்கே உத்ஸவம், கச்சேரிகள் போல் நடந்தாலும் நாங்கள் போவோம். திருவிடைமருதூரில் அந்தக் காலத்தில் நல்ல கச்சேரிகள் நடக்கும். நாங்கள் போவோம். திருவிடைமருதூரில் தைப்பூசத்தன்று இரவு 10 மணிக்கு மேல் புஷ்ய மண்டபத்துறையிலிருந்து சுவாமி புறப்பாடு. கோவில் வாசலுக்கு வருவதற்குள் பொழுது புலரச் சிறிது நேரமே மீதியிருக்கும். அன்று தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள எல்லா நாயனக்காரர்களும் வந்து கூடி வாசிப்பார்கள்.

திருவாவடுதுறைப் பண்டார சந்நிதிகள் பல்லக்கில் வருவார். காலை 3 மணிக்குப் பிறகு டி.என். ராஜரத்தினம் வந்து வாசிப்பார். தேன் மழைதான். ஆனால் அந்த இரவில் பெய்யும் பனி மழையும் ரஸிகர்கள் மேலே பொழிந்து நனைக்கும். அந்த நாயனங்களை நாங்கள் இருவரும் சேர்ந்து சில வருஷங்கள் கேட்டிருக்கிறோம். ஒரு தடவை, பொழுது விடியும் வரை ராஜரத்தினம் வாசித்தார். நூற்றுக்கணக்கில் கூட்டம் கேட்டுப் பரவசம் கண்டது. விடிந்ததும் நாங்கள் ஹோட்டலில் இட்லி, சாப்பிட்டுவிட்டு நடந்தோம். அவன் இரவில் கேட்ட ராகங்களைச் சன்னக் குரலில் பாடிக்கொண்டே வந்தான். நடந்தே திருநாகேசுவரம் வரை வந்துவிட்டோம்.”

***

எழுதி அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. எழுதியவரும் காலமாகி முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. சர்ச்சைகளும் கோபதாபங்களும் மறைந்து, புண் ஆறியது போல் ஆறி, வடுவும் காணாமலாகி அந்த இடத்தில் புதுத் தோல் வளர்ந்துவிட்டது. ‘அம்மா வந்தாள்’ அது வெளிவந்த காலத்தில் எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியையும் அசூயையும் எதிர்ப்பையும் உண்டாக்கியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். இவ்வளவுக்கும் அதில் எழுதப்பட்ட இடங்கள் நிஜம்; பாத்திரங்களின் மூலகங்களும் எதார்த்த வாழ்க்கையில் தென்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அதை எழுதியவருக்கு என்ன ஆக்கினையெல்லாம் நடந்திருக்கும் என்பதை இப்போது யூகிக்க முடிகிறது. தி.ஜா.வின் ‘மோகமுள்’ நமக்குள் உன்னதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதனால் தி.ஜா. உன்னதங்களைப் பற்றி மட்டுமே எழுதினார் என்று அர்த்தமல்ல. ‘மோகமுள்’ அவரது எழுத்து வாழ்வில் ஒரு புள்ளி. மற்றபடி அவருடைய எழுத்தும் வாழ்க்கையும் முழுக்க முழுக்க பெரும் கலகமாகவே இருந்திருக்கிறது. ஏன் வாழ்க்கையையும் சேர்த்துக்கொண்டேன் என்றால், இந்தப் பத்தியில் இதுவரை எழுதப்பட்ட முன்னோடிகளின் வாழ்க்கையிலிருந்து அவர்களின் எழுத்தைப் பிரிக்க முடியாமலிருக்கிறது. இதற்கு ஆதாரமாக சிலரது கருத்துக்களைப் பார்ப்போம். கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையில் உள்ள விபரம் இது:

“‘அம்மா வந்தாள்’ நாவலில் வரும் பாடசாலை – அதை ஏற்படுத்திய அம்மாள் – அங்கு ஒரு பெண் இருந்தது முதலிய அம்ஸங்கள் நிஜமானவை. ஜானகியின் அண்ணா அந்தப் பாடசாலையில் வேதக்கல்வி கற்றதும் முற்றும் உண்மை. ஆனால் அவன் செய்யும் கதைக்கும் இந்த மூலங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை. அந்த நாவலைப் படித்து அவனுடைய தமையனார் மிகவும் வருத்தப்பட்டார். எனக்கும் அதைப் படிக்கும்போது வருத்தம்தான். (ஒருமுறை நான் உயர்திரு. கி.வா.ஜ.வுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜானகிராமனுக்கு ஏன் ஸாஹித்ய அகாடமி அங்கீகாரம் இல்லை என்று கேட்டு விவாதித்தேன். எல்லாருமே ‘Bad taste’ என்று கூறினார்கள் என்றார்.) ‘அம்மா வந்தாள்’ என்னுள் ஏற்படுத்திய உணர்வும் இத்தகையதே. அந்த நாவலைப் பற்றியும், அவன் தமையனார் அடைந்த வருத்தத்தைப் பற்றியும், புனிதமான ஒரு பாடசாலை, வேதாத்யயனம், தர்மம் செய்த ஓர் அம்மாள் போன்ற விஷயங்களை அவன் தூய்மை கெடுத்துவிட்டான் என்ற என் கருத்தையும் அவனுக்குக் கடிதம் எழுதினேன். கோபமாகப் பதில் எழுதினான். ஆனால் அவன் எழுதிய ஒரு வாக்கியம், உண்மையிலேயே அவனுடைய குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது. ‘நான் ஒரு பாசாண்ட எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் அண்ணாவும், உன்னைப் போன்ற ஜடங்களும் என்னிடம், என் எழுத்தைப் பற்றி, அதன் ஏன், என்ன என்பது பற்றிக் கேட்பது தவறு; வாயை மூடிக்கொள்,’ என்பதே அந்த வாக்கியம். பிறகு பலகாலம் கழித்து ‘மரப்பசு’ வந்தது. அண்ணாக்காரர் அதைப் படிக்கவே மறுத்துவிட்டார். பிறகு படித்துப் புரிந்தும் புரியாமலும் கண்டபடி பேசி துயருற்றார். நான் அதிர்ந்து போனேன். அதைப் படித்து, அம்மணி என்ற பாத்திரம், இன்னும் நூறு வருஷங்கள் ஆன பிறகும் அந்தச் சூழலில், குடும்பத்தில், அதுவும் கும்பகோணத்தில் அருகில் உள்ள கிராமத் தொடர்பில் பிறக்கவே முடியாது என்று கடுமையாக விமர்சித்து எழுதினேன். பதிலே எழுதவில்லை. அவன் பிறகு திடீரென்று அவன் குடும்பத்தில் நேர்ந்த ஒரு எதிர்பாராத விளைவுக்குப் பிறகு எழுதினான். ஏதோ ஒரு ஹிந்திப்படத்தைத் தன் மாப்பிள்ளையோடு பார்த்ததாகவும், அண்ணா, நான் போன்ற போலிகள் அதைப் பார்த்துத் திருந்த வேண்டும் என்றும் எழுதினான்.”

கரிச்சான் குஞ்சுவின் இந்த வார்த்தைகளிலிருந்து தி.ஜா. எப்பேர்ப்பட்ட எதிர்ப்பை சமாளித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கரிச்சான் குஞ்சு சொல்வது போல் தி.ஜா.வுக்கு ஒன்றும் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை. ஒரு முழுமையான மூட சமூகத்துக்கு எழுதிக்கொண்டிருக்கிறோமே என்ற வேதனையும் துயரமும் கோபமும்தான் அவரது கடிதத்தில் வெளிப்படுகிறது. தி.ஜா.வை அவரது சமூகம் ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்தது என்றே நம்மால் இன்று யூகிக்க முடிகிறது.

இன்னொரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்த முதல் எழுத்தாளர் மாநாட்டுக்கு கரிச்சான் குஞ்சுவும், தி.ஜா.வும் போயிருந்தபோது நடந்தது. மாநாட்டுத் தலைவர் கல்கி. ஒவ்வொரு எழுத்தாளரும் மேடைக்கு வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். தி.ஜா., கரிச்சான் குஞ்சுவையும் மேடைக்கு அழைத்துக்கொண்டு போய், நாங்கள் புதிய எழுத்தாளர்கள்; விரைவில் தமிழகத்தின் பெர்னார்ட் ஷாவாக மலரப் போகிறவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அப்போதுதான் கல்கி அண்ணாத்துரையை தமிழகத்தின் பெர்னார்ட் ஷா என்று சொல்லியிருந்தார். மேலும் கல்கியைத் தாக்கும் விதமாக, நாங்கள் ஒரிஜினலாக சிந்தித்து எழுதப் போகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார் தி.ஜா. அதாவது, கல்கி அலெக்ஸாந்தர் துய்மா, சர் வால்டர் ஸ்காட் போன்றவர்களைக் காப்பி அடித்து எழுதுவதாக புதுமைப்பித்தன் ‘ரஸ மட்டம்’ என்ற பத்தியில் எழுதியிருந்தார். அதைத்தான் மாநாட்டில் சுட்டிக் காட்டி கல்கியைத் தாக்கினார் தி.ஜா. இது பற்றி கல்கி மிகவும் பாதிக்கப்பட்டுப் பேசியதாக எழுதுகிறார் கரிச்சான் குஞ்சு.

இந்த மேற்கோள்கள் எல்லாமே 1982-இல் வெளிவந்த ‘யாத்ரா’ என்ற இலக்கியச் சிறு பத்திரிகையின் தி.ஜா. நினைவுச் சிறப்பிதழில் இடம் பெற்றவை. அக்கட்டுரைகள் யாவும் ‘சொல்வனம்’ இணைய இதழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சொல்வனம் நண்பர்களுக்கு என் பிரத்தியேக நன்றி. அதே ‘யாத்ரா’வில் தி.ஜா.வின் கல்லூரி நண்பரும் ‘மோகமுள்’ நாவலில் பாபுவின் கல்லூரி நண்பனாக வருபவருமான எம்.வி. வெங்கட்ராம் எழுதுகிறார். எம்.வி.வி.யும் தி.ஜா.வும் 1936-இலிருந்து 1940 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சக மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். ‘மோகமுள்’ நாவலிலும் இதே காலகட்டம்தான் வருகிறது.

“கல்லூரிப்படிப்பு முடிந்ததும், அவரைப் போல் எனக்குக் கட்டுக்கோப்பான வாழ்க்கை அமையவில்லை. அவர் அய்யம்பேட்டையில் பள்ளி ஆசிரியரானார். நான் மிலிடரி அக்கவுண்ட்சில் சேர பூனாவுக்குப் போய்விட்டேன். அங்கே இருப்புக் கொள்ளாமல் 1943-இல் நான் திரும்பியபோது கும்பகோணம் ஓர் இலக்கிய க்ஷேத்திரமாகி இருந்தது. துறையூரிலிருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன்’ ஆசிரியராக கு.ப.ரா. கும்பகோணத்தில் இருந்தார். அவரைச் சுற்றிலும் ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, சாலிவாகனன், திரிலோக சீதாராம், இன்னும் பல எழுத்தாளர்கள். என்னுடைய வருகையால் கு.ப.ரா. மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். புதிதாய்ப் பத்திரிகை தொடங்க விரும்பிய என்னைத் தடுத்து தமது பத்திரிக்கையைப் பயன்படுத்திக்கொள்ளும்படி கூறினார். இந்தக் கால கட்டத்தில் ஜானகிராமனுக்கும், எனக்கும் இருந்த நெருக்கம் மிகுந்தது. கு.ப.ரா., ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, நான் ஆகிய நால்வரும் கும்பகோணம் தொண்டர் ஷாப்பிலோ, கு.ப.ரா. வீட்டு மாடியிலோ, கணபதி விலாஸ் ஹோட்டலிலோ கூடிப் பேசிக் கழித்த மாலைகளும், இரவுகளும் எத்தனை!”

“அப்போது ‘மாதம் ஒரு புத்தகம்’ வெளியீடுகள் பிரபலமாக இருந்தன. நான் அப்படி ஒரு வெளியீடு தொடங்க வேண்டும் என்று கரிச்சான் குஞ்சு சொல்லிக்கொண்டிருந்தார். ஜானகிராமனைக் கலந்தபோது மாதப் பத்திரிகையாக நடத்தலாம் என்று கூற, அப்படியே முடிவு செய்தோம். ‘தேனீ’ இப்படித்தான் ஆரம்பமாயிற்று. கரிச்சான் குஞ்சு உள்ளூர்க்காரர். எனக்குத் துணையாக இருந்தார். ஜானகிராமன் அய்யம்பேட்டையில் இருந்தார். விடுமுறை நாளன்று எங்கள் வீட்டில்தான் இருப்பார். ‘தேனீ’க்காக நான் போட்ட திட்டத்தைவிட, அவர் போட்ட திட்டம் மகாப் பெரிது.

‘தேனீ’க்காக விளம்பரம் சேகரிப்பதற்கென்று நான் ஜானகிராமனை அழைத்துக்கொண்டு பம்பாய் போனேன். வழியில், புனாவில் அவருடைய மாமனார் – ராணுவத்தில் காப்டன் – பங்களாவில் தங்கினோம். ‘தேனீ’யில் மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரின் ஒத்துழைப்பு இருந்தது. புதுமைப்பித்தனையும் எழுத வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி’ என்ற படத்திற்கு வசனம் எழுதப் பூனாவுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அவருடைய முகவரி எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் இருவரும் பூனாவில் சுற்றி அலைந்து புதுமைப்பித்தன் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்தோம். எங்களுடைய துர்பாக்கியம், இரண்டு நாளுக்கு முந்திதான் அவர் முற்றிய நோயாளியாகத் திருவனந்தபுரம் சென்றுவிட்டதாகத் தெரிந்தது. பிறகு, நாங்கள் பம்பாய்க்குச் சென்று சில நாட்கள் தங்கி விளம்பர நிறுவனங்கள் சிலவற்றை அணுகினோம். நாங்கள் இருவருமே இத்துறைக்குப் புதியவர்கள். யாருடைய ஆலோசனையும் கேளாமல் களத்தில் இறங்கியிருந்தோம். எங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை. எங்களை விளம்பரம் செய்ய எங்களிடமே பணம் பறிக்க முயன்றார்கள். எல்லா வகையிலும் பம்பாய்ப் பயணம் படுதோல்வி. ஊருக்குத் திரும்பிவிட்டோம்.

‘தேனீ’ பன்னிரண்டு இதழ்களே வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் அவருடைய கதைகள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே எழுதிக் கொடுத்தார். ‘தேனீ’யில் ஸீரியஸான கதைகள் வருகின்றன. லைட்டாக ஏதாவது எழுதுங்கள் என்றேன். அவரால் முடியாது என்பது என் எண்ணம். ஆனால், அழகான நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிக்கொண்டு வந்து என்னைத் திகைக்க வைத்தார். ‘தேனீ’யில் நான் எழுதியது கொஞ்சம். ஜானகிராமனின் கைவண்ணம்தான் அதிகம்.”

இவ்வளவு விரிவான இந்த மேற்கோள்களுக்குக் காரணம், இந்திய தேச விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் அதே தீவிரத்துடனும் தியாகத்துடனும் போராடியிருக்கிறார்கள் அந்தக் காலத்து எழுத்தாளர்கள். அவர்களுடைய அந்தப் போராட்டத்தினால்தான் உலகில் எந்த மொழியிலுமே இல்லாத அளவுக்கு வளமான இலக்கியம் தமிழில் உண்டாகியிருக்கிறது. ஒரு மொழியில் ஒரு காலகட்டத்தில் ஒன்றிரண்டு சாதனையாளர்கள் தோன்றுவதுதான் உலக இயற்கை. ஆனால் தமிழ் இலக்கியத்தில் ஒரே சமயத்தில் டஜன் கணக்கில் மாபெரும் எழுத்தாளுமைகள் உருவானார்கள் என்றால் அதற்குக் காரணம், நமது முன்னோடி எழுத்தாளர்களின் போராட்டமும் தியாகமும்தான்.

இந்தப் போராட்டக்காரர்களில் முதன்மையான கலகக்காரராக தி. ஜானகிராமனைச் சொல்லலாம். சொல்வனத்தில் வெளியாகியுள்ள தி.ஜா. பற்றிய அசோகமித்திரனின் நேர்காணலில் அவர் குறிப்பிடும் ஒரே ஒரு விஷயம் போதும், தி.ஜா.வின் கலகம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள. கணையாழியில் தி.ஜா.வின் ‘மரப்பசு’ வெளியாகிக்கொண்டிருந்த நேரம். (பொதுவாக பதிப்பாளர்கள் ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட நூல் முதல் முதலாக எந்த ஆண்டு எழுதப்பட்டது / வெளியிடப்பட்டது என்ற முக்கியமான தகவலை விட்டுவிடுகிறார்கள். மிகுந்த சிரமப்பட்டே மரப்பசு, கணையாழியில் 1972-73-இல் வெளிவந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.) அப்போது பொள்ளாச்சி நா. மகாலிங்கம் கணையாழியின் சந்தாவையே ரத்து செய்துவிட்டதாக அசோகமித்திரன் அந்த நேர்காணலில் குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு சனாதனிகளைக் கோபப்படுத்தியிருக்கிறது தி.ஜா.வின் எழுத்திலுள்ள கலகம். ஆனால் தனிப்பட்ட முறையில் தி.ஜா. ஒரு ஞானியைப் போல் இருந்திருக்கிறார்.

“ஜானகிராமன் யாரையும், எதனையும் மிகைப்படுத்தி வருணிப்பார். போற்றுவதும் அப்படித்தான், தூற்றுவதும் அப்படித்தான்.

கு.ப.ரா.வைப் போல் ஜானகிராமனுக்கும் சன்னக்குரல். இருவருமே சற்றே நாசி வழியாகப் பேசுவது போல் இருக்கும். இருவருமே குரலைத் தூக்கிப் பேசியதை நான் கேட்டதில்லை. ஆனால் இருவருடைய பேச்சிலும் மென்மை இருந்தாலும் அழுத்தம் இருக்கும்,” என்கிறார் எம்.வி. வெங்கட்ராம்.

தி.ஜா. பற்றிய சிட்டியின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

“தன்னைக் கடுமையாகத் தாக்கியவர்களை அவர் மிகப் பெரியவர்களென்ற முறையில்தான் நோக்கினார்.”

“எழுத்தாளராகவோ, இலக்கியகர்த்தாவாகவோ நடந்துகொள்ளத் தெரியாத ஜானகிராமனிடம் காணப்பட்ட பெருங்குறை, அவர் தம்முடைய படைப்புகளைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக, தம்முடைய எழுத்தைப் பற்றி பேட்டிகளிலோ, கூட்டங்களிலோ பேசும் வாய்ப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள் ஏற்படும்போதெல்லாம் எப்படியாவது இலக்கியப் பொதுமையைப் பற்றிப் பேசிவிட்டுத் தன்னுடைய சாதனையைக் குறிப்பிடாமல் விட்டுவிடுவது அவருக்குக் கைவந்த கலை. அவர் சென்னை ரேடியோவில் கல்வி ஒலிபரப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, அவருடன் நெருங்கிப் பழகியதில் அவரை ஒரு இளைய சகோதரனாகப் பாவிக்கும் உணர்வு ஏற்பட்டதும் அவருடைய பரிவினாலும் அன்பினாலும்தான். அவர் மயிலையின் வடகோடியில் வசித்துவந்தார். நான் மந்தைவெளியில். மாலை வேளைகளில் வீட்டுக்கு வந்து அளவளாவிவிட்டுச் செல்பவரை வழியனுப்ப லஸ் வரை பேசிக்கொண்டே போவோம். அங்கிருந்து நான் விடைபெறும்போது என்னை வழியனுப்ப அவர் திரும்பவும் கூட வருவார். கடைசியில் கபாலி தெப்பக் குளக்கரை படிகளில் உட்கார்ந்து இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருப்போம். இது பெரும்பாலும் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி, இலக்கியப் படைப்பில் என்னென்ன சாதிக்க வேண்டும், மற்ற ஐரோப்பிய மொழிகளில் எவ்வாறு சிறந்த படைப்புகள் தோன்றியுள்ளன என்பதே பேச்சின் பொருள்.

அப்பொழுதுதான் அவருடைய மனதில் ‘மோகமுள்’ உருவாகிக்கொண்டிருந்தது. உண்மையான காதல் பக்திக்குச் சமம் என்பதைப் பற்றி அவர் விளக்க முயன்றதால் ஏற்பட்ட சர்ச்சையில் பொழுது பொன்னாகத்தான் போகும்.”

***

‘I Saw The Devil’ என்று ஒரு தென்கொரியப் படம். இதுவரையிலான என் சினிமா அனுபவத்திலேயே இந்தப் படத்தில் வருபவனைப் போன்ற ஒரு குரூரமான பாத்திரத்தை நான் பார்த்ததில்லை. இளம்பெண்களைக் கடத்திக்கொண்டு போய் வன்கலவி செய்து, அவர்களது உடல் உறுப்புகளை வெட்டித் தின்றுவிடுகிறான் அவன். இது அவனுக்குப் பெரும் இன்பத்தைத் தருகிறது. இலக்கியத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் மார்க்கி தெ சாத். ஆனால் அந்தக் கொரிய சினிமாவிலும், மார்க்கி தெ சாத்-இன் பாத்திரங்களும் அசாதாரணமான மனநிலை கொண்டவர்களாக, மனநிலை பிறழ்ந்தவர்களாக இருப்பார்கள். இப்படி அசாதாரண மனநிலையில் அல்லாமல், சராசரியோடு சராசரியாய் – ஆனால் மேற்கண்ட சினிமாவிலும் எழுத்திலும் நாம் பார்த்த வன்முறை, வக்கிரம் ஆகியவற்றையெல்லாம் தூக்கியடிக்கின்ற விதத்தில் ஒரு ஆளுமை இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘செம்பருத்தி’யில் வரும் பெரிய அண்ணி பாத்திரம். தி.ஜா.வின் எழுத்து கருணையை வெளிப்படுத்துகிறது என்றே எல்லோரும் சொல்கிறோம். இந்தக் கட்டுரையிலும்கூட அதுவேதான் சொல்லப்பட்டது. ஆனால் தி.ஜா.வை அப்படி ஒரு சட்டகத்தில் அடைக்க முடியாது என்று தோன்றுகிறது. தி.ஜா.வின் புகழ் பெற்ற நாவல்களைவிட ‘உயிர்த்தேன்’, ‘மலர் மஞ்சம்’, ‘செம்பருத்தி’யெல்லாம் நன்றாக இருக்கும் என்று நேர்காணலில் அசோகமித்திரன் சொல்வது உண்மைதான். ‘செம்பருத்தி’ ஒரு அதிதீவிரமான இருண்மையைப் பேசும் பிரதி. கதையின் நாயகன் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்களும் வன்மத்தின் மொத்த குறியீடாகவே இருக்கிறார்கள். (அதில் ஒருத்தி – சட்டநாதனின் மனைவி, புவனா சில ஆண்டுகள் அப்படி இருக்கிறாள். பிறகு கடைசியில் திருந்திவிடுகிறாள். இருந்தாலும் தான் ஒரு காலத்தில் கொண்டாடிய தன் கணவனை அவள் படுத்தும் பாடு கொடூரமானது.) தன் எழுத்து பூராவும் பெண்மையைக் கொண்டாடிய தி.ஜா., ‘செம்பருத்தி’யில், நான் மேலே குறிப்பிட்ட கொரிய சினிமாவின் வன்முறை தன் அருகில்கூட நெருங்க முடியாது என்ற அளவில் ஒரு பெண்ணை உருவாக்குகிறார்.

சட்டநாதன் படித்துக்கொண்டிருக்கும் பருவத்தில் அவனது ஆசிரியர் தாண்டவ வாத்தியாரின் மகள் குஞ்சம்மாளைக் காதலிக்கிறான். அவளுக்கும் அவன் மீது பிரியம் உண்டு என்பதையும் தெரிந்துகொள்கிறான். இவ்வளவுக்கும் இவர்களுக்குள் ஒரு வார்த்தைப் பரிமாற்றம்கூட ஏற்படுவதில்லை. இதற்கிடையில் மளிகைக் கடை வைத்திருக்கும் சின்ன அண்ணன் முத்துசாமிக்கும் குஞ்சம்மாளுக்கும் திருமணம் ஆகிறது. காதலித்தவளே அண்ணியாக வரும் அவலத்தை மௌனமாக ஏற்றுக்கொள்கிறான். குஞ்சம்மாளும் பழசை மறந்துவிட்டவளாகவே தெரிகிறாள். அறம் சார்ந்த மதிப்பீடுகளிலும் மனித மாண்புகளிலும் தீவிர நம்பிக்கை கொண்டு அதையே தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வரும் சட்டநாதன் அவளைத் தன் அன்னையின் ஸ்தானத்தில் வைத்து வணங்குகிறான். திடீரென்று சின்ன அண்ணன் இளம் வயதிலேயே இறந்து போக, குஞ்சம்மாள் ஒரு பெண் குழந்தையோடு விதவையாகிறாள். வீட்டின் முழுப் பொறுப்பும் சட்டநாதனின் மேல் விழுகிறது. படிப்பை விட்டுவிட்டு சின்ன அண்ணனின் மளிகைக்கடையை எடுத்து நடத்துகிறான். குஞ்சம்மாளையும் அவள் குழந்தையையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்கிறான். கூடவே அவனுக்கும் திருமணமாகி மனைவி புவனாவும் வந்து சேர்கிறாள். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் ஆகிறது.

இதற்கிடையில் பெரிய அண்ணன் ஒரு சாட்சிக் கையெழுத்துப் போட்டு தன் சொத்தையெல்லாம் இழந்து ஓட்டாண்டியாக நான்கு குழந்தைகளுடனும் மனைவியுடனும் சட்டநாதனிடம் வந்து சேர்கிறார். அம்மா, குஞ்சம்மாள், அவள் மகள், புவனா, தன்னுடைய ஐந்து குழந்தைகள், பெரிய அண்ணன், பெரிய அண்ணி, அவர்களின் நான்கு குழந்தைகள் – ஆக பத்து குழந்தைகள், ஆறு பெரியவர்கள் ஆகிய இந்தப் பெரிய குடும்பத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒற்றை ஆளாகத் தாங்கிக் கரை சேர்க்கிறான்.

இந்த நாவலில் இரண்டு ஜோடி motifs ஒன்றையொன்று எதிர்த்தபடியே கதையை இழுத்துச் செல்கின்றன. ஒன்று, காமம் – அறம்; இரண்டு, நன்மை – தீமை. தி.ஜா. பெண்மையைப் போற்றியவர் என்றே நாம் இதுவரை பேசி வந்திருக்கிறோம். ஆனால் ‘செம்பருத்தி’யில் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்களில் இருவர் தீமையின் மொத்த வடிவமாக இருக்கிறார்கள். முத்துசாமி இறந்ததுமே குஞ்சம்மாள் சட்டநாதனை வெளிப்படையாக மோகிக்கத் துவங்குகிறாள். அதுவரையிலும்கூட அவள் சட்டநாதனை மனதில் வரித்துக்கொண்டுதான் அங்கே இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. சட்டநாதன் ஏன் எல்லோரிடமும் வெளிப்படையாகச் சொல்லித் தன்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற தீராத கோபமும் ஆற்றாமையும் அவளுக்குள் தீயாய் எரிகிறது. பெரிய அண்ணனின் குழந்தைகள் வளர்ந்ததும் பெரிய அண்ணனின் குடும்பம் தனி வீட்டுக்குச் செல்கிறது. சட்டநாதனின் தாயும் இறந்து போகிறாள். அப்போது கிடைக்கும் தனிமையில் குஞ்சம்மாள் சட்டநாதனோடு உறவுகொள்ள முயல்கிறாள். ஒரே ஒருமுறை எனக் கெஞ்சுகிறாள். அதுவும் முடியாமல் போக வலுக்கட்டாயமாக அவனைக் கட்டி அணைக்கிறாள். இதுவே போதும்; என் வாழ்நாளை ஓட்டிவிடுவேன் என்கிறாள். தன் மனைவி புவனாவிடம் எதையுமே மறைத்திராத சட்டநாதன் இதையும் அவளிடம் சொல்லிவிடுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் குஞ்சம்மாளிடம் அவன் இதைத் தெரிவிக்க நேர்கிறது. புவனாவிடம் தான் எதையுமே மறைத்ததில்லை என்கிறான். அதிர்ந்து போகும் குஞ்சம்மாள் இனி உன் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுத் தன் மகள் வீட்டுக்குப் போய்விடுகிறாள்.

குஞ்சம்மாளின் குழந்தையைத் தன் குழந்தையாகவும், குஞ்சம்மாளைத் தன் தாயாகவும் எண்ணி வளர்த்த சட்டநாதனுக்குக் குஞ்சம்மாளின் வன்மத்தைத் தாங்க முடியாமல் போகிறது. இதே சமயத்தில் இதுவரையிலும் சட்டநாதனுக்கு மிகப் பெரும் ஆதரவாக இருந்த புவனாவும் தீமையின் வடிவாய் மாறுகிறாள். உனக்கும் குஞ்சம்மாளுக்கும் இடையில் என்ன நடந்தது என்று கேட்டுக் கேட்டு அனுதினமும் சட்டநாதனைக் குதறி எடுக்கிறாள். அந்தக் காலகட்டத்தில் சட்டநாதன் ஒரு மகாத்மாவைப் போல், ஒரு ஞானியைப் போல் பொறுமையுடனும் கருணையுடனும் புவனாவை நடத்துகிறான்.

குஞ்சம்மாள், புவனா ஆகிய இருவரிடமும் செயல்படும் வன்மம், தீமை என்பதெல்லாம் துச்சம் என்பது போல் தீமையின் மொத்த வடிவமாகவே இருக்கிறாள் பெரிய அண்ணி. ஒரு சிறிய மளிகைக் கடையை வைத்துக்கொண்டு, தன்னுடைய ஐந்து குழந்தைகளோடும், சின்ன அண்ணனின் குடும்பத்தையும், பெரிய அண்ணனின் குடும்பத்தையும் பராமரித்து, அண்ணனின் நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்து, பெண் குழந்தைகளுக்குத் திருமணமும் செய்து வைத்து ஒரு தியாகியாகவே வாழும் சட்டநாதனுக்கு அவள் கொடுத்ததெல்லாம் வன்மமும் தீராப் பகையும்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நரகத்தையே அவன் கண் முன்னே காண்பிக்கிறாள் அவள்.

தி.ஜா. பற்றி இவ்வளவு எழுதியும் இன்னும் ஆரம்பிக்காதது போலவே உள்ளது. தி.ஜா.வின் இருண்மையைப் பற்றிப் பார்த்துவிட்டு அடுத்த எழுத்தாளருக்குச் செல்வோம். தி.ஜா. பல நாடுகளுக்கும் பயணம் சென்று வந்தவர். பயண நூல்களையும் எழுதியவர். அதையெல்லாம் சேர்த்தால் தனிப் புத்தகமாகப் போய்விடும் என்பதால் அவற்றை நான் இந்தத் தொடரில் எடுத்துக்கொள்ளவில்லை.

***

தி.ஜா.வின் எழுத்து எல்லாவற்றிலும் உணர்வுகளின் உன்மத்த நிலையைக் காண முடிகிறது. அதிலும் பெண்கள் என்றால் உச்சத்துக்குப் போகிறார். இது தஞ்சைக் காவிரியின் சிறப்புக் குணமோ எனத் தோன்றுகிறது. செம்பருத்தியில் ஒரு இடம்:

“நானாயிருந்தால்… அவள் காலில் கிடப்பேன்… அவள் கால் கட்டை விரலை எடுத்துக் கண் இமை மீது தேய்த்துக் கொள்ளுவேன். உள்ளங்கால் இரண்டையும் உச்சந்தலையில் வைத்து அழுத்தி, இரண்டு கன்னங்களிலும் பதிய வைத்துப் பொத்திக்கொள்வேன்…”

***

செம்பருத்தியின் இருண்மை, அதில் வரும் மூன்று பெண்களின் வன்மமும் வன்முறையும் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதே சமயம் ஒரு மகா உத்தமியான ஒரு பெண்ணும் அந்த நாவலில் வருகிறாள். பெரிய அண்ணனின் வைப்பாட்டியாக வரும் பொட்டுக் கட்டின தாசி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண். கிட்டத்தட்ட ஒரு காவிய நாயகியைப் போல் அவளை உருவாக்கியிருக்கிறார் தி.ஜா. அவளைப் பற்றி பெரிய அண்ணன் சட்டநாதனிடம் சொல்கிறார். “அவ என்ன சாதாரண பொம்பளையா? வாயைத் தொறந்து ஒரு வெசவு வெசதுண்டா? கொடூரமா ஒரு வார்த்தை பேசினதுண்டா? அவ தம்பீங்கள்ளாம் எத்தனையோ ஏமாத்திருக்கானுக! ரொம்ப நாள் தவம் பண்ணின ஆளுங்களுக்குத்தான் அந்த மாதிரி எல்லாத்தையும் ஜெயிச்சு, அமெரிக்கையா நிக்க முடியும். ஒரு நாளைக்கு ஏதோ சந்தேகமா கேட்டுப்ட்டேன். ‘இந்த இடத்தைத் தவிர எனக்கு மனசாலேகூட எதையும் நினைக்க முடியாது,’ என்று அதுக்கும் கோபப்படாமத்தான் சொன்னா! எப்படிக் கோபப்படாம சொன்னான்னுதான் எனக்கு அப்பறம் நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருந்தது… எத்தனைதான் சொல்றது?”

I Saw The Devil என்ற கொரியப் படத்தைப் பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டேன். அதில் வரும் கொலைகாரன் ஏன் உச்சபட்ச வன்முறையின் குறியீடாக இருக்கிறான் என்றால், அவனைத் தண்டிக்கவேண்டும் என்று நினைக்கும் போலீஸ் அதிகாரியால் அவனை கடைசி வரை தண்டிக்கவே முடியவில்லை. கையையே வெட்டினாலும்கூட சிரித்துக்கொண்டே நிற்கிறான். வலி அறியாதவன் நான் என்கிறான். என்னைக் கொன்றால்கூட நீ என்னை வெல்ல முடியாது என்கிறான். ஏனென்றால் அதற்குள் அந்தக் கொலைகாரன் போலீஸ்காரனின் எல்லா உறவினர்களையும் கொன்றுவிடுகிறான். “என்னை வெல்ல உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. உன் காதலியை நான் கொன்றுவிட்டேன் என்று தெரிந்ததுமே என்னை நீ கொன்றிருக்கவேண்டும். ஆனால் நீ என்னைத் தண்டிக்கவேண்டும் என்று நினைத்தாய். அது மட்டும் முடியவே முடியாது. இப்போது நீ என்னைக் கொன்றால்கூட நான்தான் ஜெயித்தவன்,” என்று கடைசியில் அந்தப் போலீஸ்காரனிடம் சொல்கிறான்.

அந்தக் கொலைகாரனைவிட வன்முறை அதிகம் கொண்டவளாய்த் தெரிகிறாள் செம்பருத்தியின் பெரிய அண்ணி. தன் குடும்பத்தையே தாங்கிய மைத்துனன் சட்டநாதனையும், மற்ற உறவுகள் எல்லோரையும் பாடாய்ப் படுத்திவிட்டு கடைசியில் எதுவுமே சாப்பிடாமல் சாகப் பார்க்கிறாள். தான் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக அல்ல; மேலும் மேலும் தன் சுற்றத்தாரை சித்ரவதை செய்வதற்காக அப்படிச் செய்கிறாள். அப்போது அவளிடம் சட்டநாதனின் மனைவி புவனா சொல்கிறாள்:

“கிடைக்க முடியாத ஒரு ஆமடையான் கிடைச்சாங்க உங்களுக்கு. கிடைக்கக் கூடாத இடத்திலெ சம்பந்தம் கிடைச்சுது. இதெல்லாம் நரக வேதனையா இருந்துதாக்கும் உங்களுக்கு? அண்ணன் உங்களுக்கு என்ன அப்படி அநியாயம் பண்ணிட்டாங்க, ஒரு ஜன்மாயுசு முழுக்க அவரைப் புண்ணா அடிக்கிறதுக்கு? ஹும்? அவங்களோட சந்தோஷமா இருக்கக் கொடுத்து வைக்கலெ. இப்பவும் நேரமாயிடலெ. ஆனா சாமிக்கு முன்னாலெ பிசாசு எப்படி நிக்க முடியும்? அந்த மாதிரி இங்கெ இருக்கப் பிடிக்கலெ. பட்டினி கிடந்தாவது செத்து ஒழியணும்னு எண்ணம் போலிருக்கு. இதைப் பிராயச்சித்தம்னு எப்படி நினைக்க முடியும்? வயித்தெரிச்சல் கொட்றதிலெ இதுவும் ஒரு தினுசுன்னு தோணுது. வேற என்ன? சோத்துக்கும் மருந்துக்கும் நாள் கணக்கா மன்றாடுறோம் இப்படி நின்னுகிட்டு. கேக்கல. ரத்னமா ஒரு புருஷன் கிடைச்சாரு. அது உனக்கு சரகாத் தோணுச்சு. அவரை சரகாத்தான் விரலெ வச்சு சுக்கு சுக்காப் பொடி பண்ணினே. இனிமே என்ன? செத்து என்ன, சாகாட்டி என்ன? நான் இனிமே இங்கே உபசாரம் பண்ணிக்கிட்டு நிக்க மாட்டேன். போறப்ப ஒண்ணு மட்டும் சொல்றேன். பெரியண்ணனைக் கூப்பிட்டு அவர் காலை எடுத்துக் கண்ணிலெ ஒத்திக்கிட்டு இருபத்தஞ்சு வருஷப் பேயாட்டத்துக்கு நீ மன்னிப்புக் கேட்டுக்காம போனே! உன் உசிரு இந்த உடம்பைவிட்டு இன்னும் ஒரு இடத்துலெ போய் இப்படித்தான் அல்லாடிக்கிட்டுக் கிடக்கும். சாகறதுக்கு முன்னாலெ அதையாவது செய்யி!”

இவ்வளவு சொல்லியும் பெரிய அண்ணி மசியவில்லை. மருந்தும் சாப்பாடும் உட்கொள்ள மாட்டேன் என்று மறுத்து, அடாவடி செய்து, எல்லோரையும் வதை செய்துதான் சாகிறாள்.

சின்ன அண்ணியும் சட்டநாதன் தன் சரீர இச்சைக்கு மசியவில்லை என்று தெரிந்ததும் அவனை மிகக் கேவலமாக உதாசீனப்படுத்துகிறாள். நன்றியில்லாமல், துளிக்கூட அன்பில்லாமல் பழசையெல்லாம் ஒரே நொடியில் தூக்கி எறிந்துவிடுகிறாள்.

செம்பருத்தியின் இன்னொரு விசேஷமான அம்சம், சட்டநாதனுக்கும் அவனுடைய பெரிய அண்ணனுக்குமான உறவு. ராம லக்ஷ்மணர்களை நினைவுபடுத்தக் கூடிய அத்தருணங்கள் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காத அபூர்வம்.

***

தி.ஜா.வின் நாவல்களில் ஆக முக்கியமான ஒரு நாவல் ‘மரப்பசு’. ‘அம்மா வந்தாள்’ காதலின் உச்சம் என்றால் ‘மரப்பசு’ காதல் மறுப்பின் உச்சம். அன்னவாசல் கிராமத்தில் தலை மொட்டையடிக்கப்பட்டு, நார்மடிப் புடவையோடு மூலையில் சுருண்டு கிடக்கும் இருபது வயதுகூட நிரம்பாத ஒரு விதவையை அவளுடைய எதிர்வீட்டில் இருக்கும் சிறுமி அம்மணி பார்க்கிறாள். அந்தக் காட்சியே அவளுடைய மொத்த வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் ஒன்றாக அமைகிறது.

பிறகு அம்மணி பெரியவள் ஆனதும், அதே வீட்டைச் சேர்ந்த பையனைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தும் அம்மாவிடம், “என் புருஷனும் செத்துப்போய்விட்டால் நானும் அப்படித்தானே தலைமயிரையெல்லாம் அவன் ஆத்மா கையிலே கொடுத்துட்டு காமிரா உள்ளிலே மயக்கம்போட்டுக் கிடக்கணும், புளிப்பானைக்கும் ஊறுகா ஜாடிக்கும் நடுவிலே?” என்று ஆவேசத்துடன் கேட்கிறாள்.

“மகான்ரீ அவர்! குடும்பமே தெய்வாம்சம். பராசக்தி கடாட்சம் பொங்கற குடும்பம், ஜாக்கிரதை, நாக்கு இத்துப் போயிடும்!”

“ஆமா, தெரியறது. வீட்டிலேதான் ஒரு பராசக்தியை மழுங்க சிரைச்சு வச்சிருக்கே?”

இதுதான் நாவல் நெடுகிலும் – அம்மணியின் நாற்பது வயது வரை – அவளைத் துரத்திக்கொண்டுவரும் காட்சி. திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்று முடிவு செய்கிறாள். அதேபோல் ஆண் பெண் உறவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்கிறாள். எல்லோரையும் தொடப் போகிறேன். தழுவப் போகிறேன். யாரையும் தொடாமல், பற்றாமல் பேசப் போவதில்லை. பள்ளியில் வாத்தியாரிடம் அடிபட்டு மயக்கம் போட்டு விழுந்த சக மாணவனைத் தொடுகிறாள். “அம்மணி சண்முகநாதனை வைத்துக்கொண்டிருக்கிறாள்.” “அம்மணி சண்முகநாதனின் வைப்பாட்டி.” “தலைவலியா, அம்மணி தடவித் தீர்ப்பாள்.” இப்படியாக பள்ளியின் சுவர்களில் தாரில் எழுத வைக்கிறார் பையனை அடித்த வாத்தியார். இங்கேதான் நாம் பார்க்கும் பெண்பிள்ளைகளுக்கும் அம்மணிக்குமான வித்தியாசத்தைக் காட்டுகிறார் தி.ஜா. அம்மணி வெகு துணிச்சலாக பள்ளித் தலைமையாசிரியரிடம் புகார் செய்து, வாத்தியாரின் வேலையே போவதற்குக் காரணமாக இருக்கிறாள்.

கல்லூரியில் நுழையும்போது கோபாலி என்ற மாபெரும் சங்கீதக் கலைஞரை சந்திக்கிறாள். கோபாலி தியாகராஜரையும் ஸ்ரீராமனையும் வழிபடுபவராக இருந்தாலும் ஒரு சௌந்தர்ய உபாசகர். அழகான பெண்களைக் கண்டால் விடமாட்டார். அம்மணியை சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்துப் படிக்க வைக்கிறார். ஆரம்பத்திலேயே கோபாலியின் மீது அவளுக்கு சந்தேகம் வருகிறது. “குழந்தை குழந்தை என்று வாய் அரற்றுகிறது. கை குழந்தையை அணைக்கிறதாகப் படவில்லையே…” சில நாட்களிலேயே அதுவும் தீர்மானமாகி விடுகிறது. நீ என் பிராம்மண தாசியா ஆயிடு என்கிறார் கோபாலி. எப்படி? “பட்ணத்திலே ஜார்ஜ் டவுன்லெ பெரிய செட்டிமார் வீடுகள் என போய், செட்டியார்வாள் இருக்காளான்னு கேட்டா, அவர் சம்சாரம் வந்து, ‘கூத்தியா ஊட்டுக்குப் போயிருக்காங்களே,’ன்னு சந்தோஷமா சொல்லுவாளாம். அந்த மாதிரி குஞ்சாளியும் சொல்லிட்டுப் போறா கௌரவமா.” குஞ்சாளி கோபாலியின் மனைவி.

ஆனாலும் அவரிடம் தெளிவாகச் சொல்லிவிடுகிறாள் அம்மணி. நான் உங்களுக்கு தாசியாக இருந்தாலும் நான் உங்கள் உடைமை அல்ல – “மாதா கோயிலுக்குக் கோடி ரூபாய் எழுதி வைத்தாலும் நான் மட்டும்தான் போவேன் என்று சொல்ல முடியாது அல்லவா, அப்படி” – அப்போது அவள் வயது 20. கோபாலியின் வயது 47. கோபாலிக்கு அப்போது 22 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

சிறுவயது அனுபவங்களால் முழு நாஸ்திகவாதியாகவும் ஆகிவிடுகிறாள் அம்மணி. “நான் தொழுதது இல்லை. பள்ளிக்கூடத்தோடு போய்விட்டது. யாரைத் தொழுகிறது, எதைத் தொழுகிறது என்று காலேஜில் சேரிக்கு என்னோடு வந்து சமத்துவம் சகோதரத்துவம் பேசும் தோழர்கள் சொல்லுவார்கள். ஏழைதான் கடவுள். மக்கள்தான் கடவுள். பதினைந்து வயதில் விநாயகர் அகவல், சௌந்தர்ய லஹரி, திருப்பாவை, ஊமையைப் பேச வைத்த காஞ்சி பஞ்சசதி என்னும் மாட்டு வாகன, எலி வாகன, மயில் வாகன, கருட வாகன, சிங்க வாகன, தாமரை வாகனக் கடவுள்களையெல்லாம் ஏழைகளுக்கு முன்னால், மக்களுக்கு முன்னால், அவர்கள் பசிக்கு முன்னால் சொக்கப்பனையாக அடுக்கிக் கொளுத்திவிட்டேன். அவர்கள் இருந்த இடங்களில் இப்போது கட்டைக்கரியும் புகையுமாக நெடி வீசுகிறது.”

கோபாலிக்கு அம்மணியின் மீது அன்பு அதிகம். ஆனால் அவளுடைய உடல் தேவையைத் தீர்க்க அவருக்கு வயதில்லை. அதனால் அம்மணிக்குத் தூக்கம் வருவதில்லை. இரவுகளில் குளிக்கிறாள். கோபம் வருகிறது. வித்வான்கள் யாரும் சுருதி சேர்த்துவிட்டு வாசிக்க மறந்துபோவதில்லை. ஆனால் இங்கே வேடிக்கையாக இருக்கிறது. உடம்பின் இச்சை தாங்க முடியாமல் ஒருநாள் வெயிலில் போய் மணிக்கணக்கில் படுத்துக் கிடக்கிறாள். அப்போது கோபாலியின் உறவுக்காரப் பையன் 18 வயது பட்டாபியோடு உறவு கொள்கிறாள். 18 வயதாக இருந்தாலும் அவள் உடலுக்கும் மனதுக்கும் சமமானவனாக இருக்கிறான் அவன். அவன் அவளை உண்மையாக நேசிக்கிறான். திருமணம் செய்துகொள்கிறேன் என்கிறான். அவனைப் பற்றி அம்மணி நினைக்கிறாள்: “அவன் நாக்கில் இல்லை நான். அவன் கையில் செய்கிற வேலையில் இருந்தேன். காலால் ஓடுகிற ஓட்டத்தில் இருந்தேன். அவன் பண்ணுகிற சமையலின் ருசியில் இருந்தேன். சுந்தரம் மாதிரி நலுக்கு மினுக்கு ஆசாமிகளிடம் அவன் காட்டுகிற மௌன முரட்டுத்தனத்தில் இருந்தேன். இன்ஃபுளூன்ஸா வந்து கிடந்தால், என்னமோ நான் சாகக் கிடக்கிற மாதிரி என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவன் மாட்டுமுழி நிறைய கிலேசத்தைச் சுமந்து எங்கோ சூன்யத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கிற வெறிப்பில் இருந்தேன். அவன் வாங்கிக்கொண்டு வருகின்ற பூவில் இருந்தேன். என் புடவைகளை மடித்து வைக்கிற கரிசனத்திலும் நறுவிசிலும் இருந்தேன்.”

அப்படிப்பட்ட பட்டாபியிடமும்கூட திருமணம் வேண்டாம் என்றே சொல்கிறாள் அம்மணி. “கலியாணம் நாகரிகம் பெற்றதாகச் சொல்லிக் கொள்பவர்களின் மௌட்யம் – இல்லாவிட்டால் சூழ்ச்சி – இல்லாவிட்டால் தவறு – இல்லாவிட்டால் கழுத்துப் பட்டி – இல்லாவிட்டால் தடுமாற்றம் – இல்லாவிட்டால் போதை – இல்லாவிட்டால் தன்னையே சாட்டையால் ரத்தவிளாராக அடித்துக்கொள்ளும் கல்லுளிமங்கத்தனம் – இல்லாவிட்டால் அவர்களே தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுகிற கடவுள் என்ற இயற்கைக்குத் துரோகம் – இல்லாவிட்டால் துடைநடுங்கித்தனம்…” இப்படி போய்க்கொண்டே இருக்கிறது அம்மணியின் வாதம்.

மணமாகாத பெண் என்பதால் எல்லா ஆண்களுமே அவளைத் துருவித் துருவிப் பார்க்கிறார்கள். “பிறந்த மேனிக்குப் பார்க்கிற வெறி. ஆனால் வெவ்வேறு வடிவம். புகையும் வடிவம். குமைகிற வடிவம். கொழுந்துவிட்டு எரிகிற வடிவம். எப்பொழுது எப்பொழுது என்று பரக்கிற வடிவம். எத்தனை காலமானாலும் காத்திருக்கிறேன் என்று பொறுமையே வடிவான வடிவம்.” கல்லூரிப் படிப்போடு நாட்டியமும் கற்றுக் கொண்டு பிரபல நாட்டியக்காரியாகவும் ஆகிறாள் அம்மணி.

கோபாலிக்கு அவளுடைய வாழ்க்கை முறையில் இஷ்டமில்லாவிட்டாலும் ஒன்றும் கேட்பதில்லை. எப்போதாவது சீண்டிப் பார்ப்பதோடு சரி. அப்போது அம்மணி நினைக்கிறாள். “அதற்கு (கோபாலியை எப்போதும் அவள் அது இது என்றே பிரியத்துடன் நினைக்கிறாள்) என்ன புரிந்துவிடப் போகிறது? இந்த உலகத்தில் அத்தனை ஆண்களுக்கும் ஒரு கணமாவது மனைவியைப் போல இருந்துவிட வேண்டும் என்று எனக்கு ஆசை, என்று சொன்னால் அதற்கு என்ன புரிந்துவிடப் போகிறது? நான் அதை வாயைவிட்டுச் சொன்னால், பதில் என்று ஏதோ கிண்டலாகச் சொல்லப் போகிறது. கிண்டல் பண்ணுகிறவர்கள், புரியாததால்தான் கிண்டல் செய்கிறார்கள். ‘ப்ளாரின், லட்விக், ஐவன், பீனே, கயோவானி, பர்வேனு’ – என்று அந்த இளைஞர்கள் பெயர்களை அடுக்கினால் அதற்குக் கோபம் வரலாம். அல்லது என்னைக் கல்லுரல் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு சிரிக்கவோ, பரிதாபமோ படலாம். ஜாடைமாடையாக ஒருதடவை அப்படிச் சொல்லவும் சொல்லியிருக்கிறது. நாராயணசாமி என்று அவர்கள் கிராமத்தில் ஒரு மனிதராம். அவர் மனைவியிடம் இரவுபகல் தெரியாமல் அடைந்து கிடப்பதைப் பார்த்து, நாராயணசாமியின் வீட்டோடு கிடந்த ஒற்றைக்கண் கூனல் அத்தைக் கிழம் சொல்லிற்றாம், ‘ஏண்டிம்மா உனக்குத்தான் கொஞ்சம் கோபம் சுரணை இருக்கவாண்டாமோ? என்னன்னு நினைச்சுண்டே – தோல்னு எண்ணமா, கல்லோரல்னு எண்ணமான்னு கேட்டா, பேசாம, வயலுக்குப் போய் வேலையையாவது கவனிப்பானோல்லியோ?’ என்று கடிந்துகொண்டாளாம். என்னமோ ஊர்க்கதை சொல்வதுபோல் இதை என்னிடம் சொல்லிற்று கோபாலி… நான் நடந்ததைச் சொன்னால் உடம்பு, வியாதி என்று ஏதாவது ஆரம்பித்திருக்கும்.”

திருமணத்தை மறுதலித்து பாலியல் சுதந்திரம் பேசுபவளாக இருந்தாலும் அம்மணியின் வீட்டு அழகான பணிப்பெண்ணின் மீது அவளுடைய இரண்டு நண்பர்கள் தவறாகப் பார்த்தார்கள், அம்மணி இல்லாதபோது அவள் இல்லை என்று தெரிந்தும் போனார்கள் என்று அவளுக்குத் தெரிய வருகிறபோது அந்த நண்பர்களைத் தன் வீட்டுப் பக்கமே வரக்கூடாது என்று கண்டித்துவிடுகிறாள்.

அடிக்கடி வெளிநாடு போகிறாள். வெளிநாட்டில் பணம் தீர்ந்து போனால் இரவு நேரத்தில் சாலையில் நின்று விபச்சாரம் செய்கிறாள். அதில் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. (தி.ஜா. பல நாடுகளுக்கும் சென்றுவந்தவர். அந்த அனுபவங்களெல்லாம் இந்த நாவலில் தெரிகிறது.) ஒருமுறை லண்டன் பிக்காடிலி சதுக்கத்தில் ‘இரவு ராணி’ போல் நிற்கும்போது ப்ரூஸ் என்ற இளைஞனைச் சந்திக்கிறாள் அம்மணி. அவளுடைய வாழ்க்கை, கானல் நீரைத் தேடும் அபத்த விளையாட்டு, என்பதை அவன்தான் அவளுக்கு உணர்த்துகிறான். “அறுநூறு ஆண்களுக்கு மேல் முத்தமிட்டிருக்கிறேன்; அதில் பாதி பேரோடாவது படுத்திருக்கிறேன் என்கிறாய். சரி, முந்நூறு பேர் கொடுக்காததை முந்நூற்றோராவது ஆள் கொடுத்துவிடப் போகிறானா? அதிபோகத்தினால் உன் கன்ன எலும்புக்கு மேல் சதை தடித்திருக்கிறதே – அதுவும் பெரிய தடிப்பாக ஆகி உனக்கு நானும் ஒரு அறிவுதான் என்று ஆச்வாசப்படுத்தப் போகிறதா?”

அம்மணியும் ப்ரூஸும் நண்பர்களாகி பல ஊர்களுக்குச் செல்கிறார்கள். ஒருநாள் ப்ரூஸிடம் சொல்கிறாள். “கி.மு. பன்னிரண்டாயிரம் அல்லது கி.மு. இருபதினாயிரம் அல்லது கி.மு. முப்பதாயிரமாவது ஆண்டு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறந்தவர்கள் எல்லோரும் மேலே இருந்தார்கள். மேலே இருந்து அன்பு செய்தார்கள். நீங்கள் அதை வாங்கிக்கொண்டீர்கள். மல்லாந்து கிடந்தீர்கள். நாங்கள்தான் மேல் என்று ஒப்புக்கொண்டு கையாலாகாமல் கிடந்தீர்கள். பிறகு ஏழெட்டு சோம்பேறிப் பெண்கள் இடம் மாற்றிக்கொண்டார்கள். விறகு வெட்டி, தீனி தேடிக்கொண்டு வருகிறவன் இதையும்தான் செய்யட்டுமே என்று சோம்பல் அடித்தார்கள். தொற்றுநோய் பரவி விட்டது. இப்போது மீண்டும் மேலே போகவேண்டும். அப்போது எல்லாம் சரியாகிவிடும். நீ வியட்நாமுக்குப் போக மாட்டாய். குண்டு விழாது. எச்சில் விழாது. (ஒரு வியட்நாம்காரி ப்ரூஸின் முகத்தில் காறி உமிழ்ந்திருப்பாள். அதனால் அவன் பித்துப் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறான்.) இதெல்லாம் அசக்தியால் வருகிறது. எங்கள் ஊரில் பதினாயிரம் வருஷம் முன்னால் பெண்ணை சக்தி என்றார்கள். அவள் சிங்கத்தின் மீது உட்கார்ந்திருந்தாள். நீங்கள் எல்லாம் எருமையாகக் கீழே கிடந்தீர்கள். இப்போது அந்த சக்தி அசக்தியாகி விட்டாள். அவளுக்கு அடிக்கடி அந்த கி.மு. ஞாபகம் வருகிறது. அதற்காக வருஷத்தில் ஒரு ஒன்பது நாள் அவள் சிங்கத்தின் மீது இருக்கிற மாதிரி படம் போட்டு, சாப்பாடு போட்டு, பத்தாம் நாள் அன்று படத்தை அழித்துவிடுகிறார்கள். பொம்மையாக இருந்தால் ஆறு குளத்தில் போட்டுவிடுகிறார்கள், இன்னும் ஒரு வருஷத்திற்கு வாயைத் திறக்காதே என்று.”

கடைசியில் அவளுடைய வாழ்க்கை முறை ப்ரூஸ் கேட்ட ஒரு கேள்வியில் தோற்றுவிடுகிறது. ஏற்கனவே ஒரு ஆங்கிலேயர் அவளிடம் இதை வேறு மாதிரிக் கேட்டிருக்கிறார். “உடம்பெல்லாம் அழுகிச் சொட்டுகிற ஒரு மனிதனிடம் இதே மாதிரி நீங்கள் செய்வீர்களா?” என்று அவர் கேட்டபோது அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த ஆங்கிலேயர் அப்போது சொல்கிறார். “நீங்கள் எல்லோரையும் அணைத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னபோது வாசல் திறக்கிற மாதிரி இருந்தது; ஆனால் நல்ல உடம்புகளுக்குத்தான் அந்த உரிமை உண்டு என்று நீங்கள் டிக்கட் வைத்த பிறகு வாசல் மூடிவிட்டது.”

ப்ரூஸ் கேட்ட கேள்வி இதுதான். வயதான பிறகு, தோலெல்லாம் சுருங்கிய பிறகு என்ன செய்வாய்? உன் தனிமை அப்போது உன்னைக் கொன்றுவிடாதா?

இதுபற்றி யோசித்துக்கொண்டு இந்தியா திரும்பும்போது அவளுடைய பணிப்பெண்ணும் தோழியுமான மரகதத்தை கோபாலி தீண்ட முயற்சித்து, அவளும் அவள் கணவனும் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதைப் பார்க்கிறாள். அவர்களோடு அம்மணியும் வெளியேறிவிடுகிறாள். பட்டாபியோடு சேர்ந்து வாழத் தொடங்குகிறாள்.

இந்த நாவலைத் தமிழ்ச் சமூகம் நிராகரித்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படி நிராகரித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். எண்பதுகளின் ஆரம்பம் அது. கோபாலி எந்தப் பெண்ணைக் கண்டாலும் அழகாக இருந்தால் படுக்க முயற்சி செய்வார். பல சமயங்களில் வெற்றியும் காண்பார். (கடவுளே நேரில் வந்து பாடுவது போன்ற சங்கீதம். எண்பது வயதான ஒரு பாட்டி அவர் காலில் விழுந்து சேவிக்கிறார். அப்பேர்ப்பட்ட சங்கீத சாம்ராட்.) அப்படி கண்ட பெண்களோடும் உறவுகொள்ள நினைக்கும் கோபாலி பற்றி யாருக்கும் – எனக்கு உட்பட – ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் அம்மணி என்ற ஒரு பெண் அதையே செய்யும் போது ஆபாசம் ஆபாசம் என்ற கூச்சல் ஏற்பட்டுவிட்டது.

இந்த அம்மணியைப் போல் ஒரு அமெரிக்கப் பெண் வாழ்ந்தாள். ஒரு சமயம் ஆசிரியையாகவும் ஒரு சமயம் live show performer-ஆகவும் இன்னும் பலவிதமாகவும் வாழ்ந்திருக்கிறாள். ‘ஸீரோ டிகிரி’ என்ற என்னுடைய நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவளுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறேன். கேத்தி ஆக்கர் என்பது அவள் பெயர். அப்படிப்பட்ட நானே ‘மரப்பசு’வைத் தாக்கி எழுதியிருக்கிறேன் என்பதை இப்போது நினைத்து அவமானம் அடைகிறேன். இந்த நாவலைப் புரிந்து கொள்ள 35 ஆண்டுகள் ஆயிற்றா என்று மலைப்பாக இருக்கிறது. ஆனால் மிகவும் சௌகர்யமாக தி.ஜா. என்றால் ‘மோகமுள்’ என்றே சொல்லிப் பழகிவிட்டோம். லண்டன் பிக்காடில்லி சதுக்கத்தில் வேசியாக நின்ற அம்மணி நம்முடைய ஆணாதிக்கச் சிந்தனைக்கும், சனாதன மதிப்பீடுகளுக்கும் சாட்டையடியாக இருப்பதால்.

தமிழில் பெண்ணியவாதிகள் என்று அறியப்படுகின்ற அத்தனை பேரும் – ஏன் பெண்ணாகப் பிறந்தவர்கள் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் ‘மரப்பசு’. மற்றபடி இயற்கை உபாசனை மிக இயல்பாக நாவல் முழுவதிலும் விரவிக் கிடக்கிறது. அதுபற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம். அதேபோல் தி.ஜா.வின் பயண நூல்கள். எழுத ஏராளமாக இருக்கிறது. ‘செம்பருத்தி’யில் ஒரு இடம் வரும்.

“‘மனுஷங்க போயிட்டேதான் இருக்காங்க. அதுக்காக மத்தவங்க எல்லாரும் தாங்களும் போயிட்டாப்பலவே இருக்கிறதா?’

பெரிய அண்ணன் சொல்வது ஏதோ பெரிய ஞானியின் வாக்குப் போலிருந்தது. அந்த இருளில் அந்தப் பரந்த வெளியைப் பார்க்கும்போது, ஆயிரக்கணக்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும் சிள்வண்டுகளையும் சுவர்க் கோழிகளையும் கேட்கும்பொழுது, அவர் சொல்வது இயற்கையின் வாக்கு, தொல்லறிவின் வாக்கு என்று அத்தனையும் சொல்வது போலிருக்கிறது. இந்தச் சாலை இப்படியே இருக்கும்; இந்த மண் இப்படியே இருக்கும்; இந்த மரங்கள் இப்படியே இருக்கும்; இந்த ஒலிகள் எழுந்துகொண்டே இருக்கும்; உயிர்கள் வரும்போது ஒலிப்பதுபோல் போகும்போதும் ஒலிக்கும்.”

எத்தனை எழுத்தாளர்கள் வந்தாலும் போனாலும் இந்த வானும் மண்ணும் இருப்பது போல் தி.ஜா.வின் எழுத்து இருந்துகொண்டே இருக்கும்.

***

 தி.ஜா.வின் நாவல்களில் மலர் மஞ்சம் (1961), அன்பே ஆரமுதே (1963), மோக முள் (1964), அம்மா வந்தாள் (1966), உயிர்த் தேன் (1967), செம்பருத்தி (1968), மரப்பசு (1975) ஆகிய நாவல்களைப் படித்திருந்தாலும் அவருடைய கடைசி நாவலான நளபாகத்தைப் படித்திருக்கவில்லை. 1979 ஏப்ரல் முதல் 1982 ஜூலை வரை கணையாழி மாத இதழில் தொடராக வந்த போது ஒருசில அத்தியாயங்களைப் படித்ததோடு சரி.

ஃபெப்ருவரி 28-ஆம் தேதியாகிய இன்று தி.ஜா. உயிரோடு இருந்திருந்தால் தனது 96-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். குஷ்வந்த் சிங் இறக்கும் போது நூறு வயது ஆவதற்கு மூன்று மாதங்கள் குறைவு. தமிழ் வாசகர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் அறுபதைக்கூடத் தொடுவதில்லை. தி.ஜா. மறைந்த போது அவர் வயது 61. அதற்குள் அவர் செய்திருக்கும் சாதனைகளைக் கண்டால் எழுந்து நின்று தொழத் தோன்றுகிறது. பல தமிழ் சினிமா இயக்குனர்கள் அகிரா குரஸவாவின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்துத் தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகிறார்கள். குரஸவா ஒரு மேதை. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதே போன்றதொரு மேதை தி. ஜானகிராமன். ஆண்டாளையும் மதுரகவி ஆழ்வாரையும் படிக்கும் போது எத்தகைய உணர்வெழுச்சிகளை ஒருவர் அடைய முடியுமோ அதே உணர்வெழுச்சிகளை தி.ஜா.வின் எழுத்திலும் அடையலாம். ஒரு சினிமா ரசிகனுக்கு குரஸவாவின் படங்கள் எத்தகைய உன்னதங்களை தரிசிக்கத் தர முடியுமோ அதைவிடப் பன்மடங்கு அதிகமான தர்சனங்களைத் தரக் கூடியது தி.ஜா.வின் எழுத்து.

நம் அடையாளம் தமிழ் என்று சொல்கிறோம் என்றால், அதை எந்தெந்த அடிப்படைகளிலிருந்து சேகரிக்கிறோம்? நம்முடைய தோலின் நிறத்தை வைத்து அல்ல என்பதை நாம் அனைவருமே ஒப்புக்கொள்வோம். அப்படியானால் நாம் பேசும் மொழிதான் நம் அடையாளத்தின் முதல் அங்கம். அந்த மொழியை நம் சமகாலத்தில் நம்மால் எட்டியே பார்க்க முடியாத உயரத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றவர் தி.ஜா.

வெறும் மூன்று மணி நேரத்தில் முடித்துவிடக் கூடிய 300 பக்கங்களைக் கொண்ட நள பாகத்தை மூன்று தினங்களாகக் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் திருப்பூர் பயணம். நின்றுகொண்டிருக்கும் போதும், நடந்துகொண்டிருக்கும் போதும், வரிசையில் காத்திருக்கும் போதும் நள பாகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். உறங்கும் போதுகூட முழுசாக உறங்கவில்லை. படித்த பக்கங்கள் காட்சி காட்சியாக வந்துகொண்டேயிருந்தன. 300 பக்கத்துக்கு ஏன் இத்தனை நேரம்? காரணம், ஒரு பத்தியை முடித்தவுடனேயே ஏதோ பிரம்மாண்டமான ராட்டினத்தில் ஏறி இறங்கியது போன்ற ஒரு பரவச உணர்வு உடம்பிலும் மனசிலும் பரவுகிறது; முதல்முறையாக ஆகாயத்திலிருந்து பாராசூட்டில் குதிப்பவரைப் போன்று நெஞ்செல்லாம், தசைத் துணுக்குகளிலெல்லாம் ஒரு சிலிர்ப்பும் அதிசயமும் தொற்றுகிறது; பரவசம் தாங்காமல் செத்துவிடுவோமோ என்ற தருணத்தில் உயிர் திரும்பினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு orgasmic உணர்வில் மிதக்கிறோம். ஒவ்வொரு பத்திக்கும் இப்படி ஆகிறது என்றால் எப்படிப் படித்து முடிப்பது? ஒரு பத்தியைப் படித்ததுமே ஆனந்தப் பரவசத்தில் ஆகாயத்தில் மிதக்கிறோம் என்றால் அடுத்த பத்திக்கு எப்படிப் போவது? ஏதோ பிதற்றுகிறேன் என்று தோன்றுகிறதா? இதோ சில இடங்களைத் தருகிறேன்…

ரங்கமணியின் கணவன் விச்வேச்வரன் அவளைத் திருமணம் செய்துகொண்ட ஐந்தே ஆண்டுகளில் காச நோயால் இறந்துவிடுகிறான். அந்த ஐந்து ஆண்டுகளிலும்கூட அவளை சுகித்தவன் அல்ல. சுகிப்பதற்கும் உடம்பில் தெம்பு இல்லை. நாற்பது வயதில் டெல்லி, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் என்று தீர்த்த யாத்திரை செல்கிறாள் ரங்கமணி. யாத்ரா ஸ்பெஷல் என்று சொல்லி எல்லோரும் ஒரு குழுவாக ரயிலில் போய் வருவார்கள். அவளுடைய பெட்டியில் ஜோதிட சிம்மம் என்று கருதப்படும் முத்துசாமி என்ற பெரியவர், அவருடைய மனைவி சுலோச்சனம்மாள், யாத்ரீகர்களுக்கு சமைத்துப் போடும் காமேச்வரன் ஆகியோருடன் கதை துவங்குகிறது.

ரங்கமணிக்கு இருபத்தைந்து வயது இருக்கும் போது எட்டு வயது ஆன ஒரு பிள்ளையை ரங்கமணியின் சுவீகாரப் பிள்ளையாகக் கொண்டு வருகிறாள் அவள் மாமியார். அப்படிக் கொண்டு வருவதற்கு முன் மாமியார் ஒரு வருஷமாக ரங்கமணியிடம் அது பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறாள். ரங்கமணியோ அது பற்றி ஒரு வார்த்தை பதில் பேசுவதில்லை. ஏன் பேச வேண்டும்? சுவீகாரப் பிள்ளையின் தேவை என்ன? மாமியார் பேசும் வரை கேட்டுக்கொண்டே நிற்பாள். பேச்சு முடிந்ததும் அந்த இடத்தை விட்டு வாசலுக்கோ கொல்லைப் பக்கமோ போய்விடுவாள். சம்மதமாகவும் சரி, மறுப்பாகவும் சரி, எந்தப் பதிலும் சொல்வதில்லை.

ஒருநாள் மாமியார் பதில் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள். அப்போதுதான் மாமியார் எதற்கு இதில் தீவிரமாக இருக்கிறாள் என்று ரங்கமணிக்குப் புரிகிறது. அதாவது, செத்துப் போன தன் மகன் காமேச்வரனின் ஜீவன் கரையேற வேண்டும். அதற்கு வருடாவருடம் பிண்டம் போட வேண்டும். இல்லாவிட்டால் அது பசியோடு அலையும். அதன் மனம் ஆயாசம் கொண்டால் வம்சம் கஷ்டப்படும் என்று விளக்குகிறாள் மாமியார். இனி தொடர்கிறது உரையாடல்:

“ ‘எங்கே இருக்கு வம்சம்?’ என்று கேட்கிறாள் ரங்கமணி. மாமியார் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

‘வம்சம் உண்டாக்காமத்தான் போய்ட்டுதே அந்த ஜீவன்?’ என்று ரங்கமணி குரலைத் தாழ்த்திக் கொள்கிறாள்.

‘அது யாரோட குத்தம்?’

சூட்டுக்கோல் இழுக்கிற கேள்வி.

ரங்கமணிக்கு ஒரு வெறி வந்து ஆட்டிற்று. அரைப் புடவையை அவிழ்த்து, ரவிக்கையைக் கழற்றிவிட்டு நிற்க வேண்டும் போல் இருந்தது. சராசரிக்குச் சற்று மிஞ்சின உயரத்தை, தன் உடம்பை, எலும்போடும் நரம்போடும் இழுத்துக் கட்டியிருந்த தசைக் கட்டை, அழுத்தத்தை, இரவின் அரை வயிற்று உணவையும் மீறி மதர்த்திருந்த வளத்தை, மணிக்கட்டு உள்ளங்கைகளின் உரத்தை – அப்படியே தன் ஆகிருதி அனைத்தையும் நிமிர்ந்து நின்று விசிற வேண்டும் போலிருந்தது.

‘யாரோட குத்தமா? கலியாணத்துக்கு முன்னாடியே சுவாசப்பையிலே ஒரு மூலை ஒட்டடை மாதிரி காசம் தின்னு தொங்கிண்டிருந்ததாம். அதை மறைச்சது யார் குத்தம்? அதை எத்தனை நாளைக்கு மறைச்சு வைக்க முடிஞ்சது? கையைப் பிடிச்ச ரெண்டு வருஷத்துக்குள்ள படுத்த படுக்கை… அஞ்சாம் வருஷம் ஆளே இல்லே… வம்சம், வம்சம்! வம்சம் வளர்க்கத் திராணி இல்லாத ஆத்மாவுக்குப் பிண்டம்? உடம்பு இருக்கிற போதே மூச்சும் இரைப்புமாக் கரைஞ்ச ஆத்மாவுக்கு உடம்பு போனப்புறம் பிண்டமில்லாம ஆயாசமாயிடுமாம்!…’ – இத்தனையும் ரங்கமணி மனசுக்குள் கத்தினாள். வார்த்தையால் கத்தவில்லை. சிரிப்பு வரும் போலிருந்தது. மாமியாரை விட்டு கொல்லைத் தாழ்வாரத்துக்குப் போனாள். மூலையில் கொட்டிக் கிடந்த நெற்றுத் தேங்காய் நான்கை எடுத்து குத்துப் பாறையில் குத்தி மட்டையை உரித்துப் போடத் தொடங்கினாள். வந்த சிரிப்பு அடங்கவில்லை. அந்தரங்கமான சேதி. கட்டிலில் கட்டிப் படுத்திருந்த விச்வேச்வரன் எழுந்து போக ஒரு தடவை முயன்ற போது அவன் காலை இழுத்துக்கொள்ள முடியாமல் தன் காலால் அழுத்திக்கொண்டிருந்தாள் அவள். பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தான் அவன். கால் நசுங்கிற்று. உதட்டை வாய்க்குள் மடக்கி முக்கிப் பார்த்துப் பார்த்து முடியாமல் கடைசியில் வாய் திறந்து பெருமூச்சுத்தான் வந்தது. அவள் சிரித்தாள். கடைசியில் இரங்கி, காலைத் தளர்த்தினாள். எழுந்து போனவன், என்ன நினைத்துக்கொண்டானோ, ‘காத்தே இல்லையே,’ என்று அறைக்கு வராமல் கூடத்திலேயே படுத்துக்கொண்டான். தூங்கியும் விட்டான். காலை விடுவித்துக்கொள்ள அவன் பட்ட இரண்டு நிமிஷ சிரமம் இரண்டு சம்போக அயர்வாக இருந்ததோ என்னவோ, அவள் சற்று நேரம் பார்த்துவிட்டு எழுந்து கூடத்துக்குப் போய், மெதுவாக அவனை எழுப்பி கையாலேயே கூப்பிட்டு அறைக்குள் கொண்டு சேர்த்தாள். அவன் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

யாருக்கும் எதற்கும் பயனில்லாமல் அவன் போனது யார் குற்றம்?”

யாத்ரா ஸ்பெஷல் ஆக்ரா போய்ச் சேர்கிறது. முத்துசாமிக்கும் சுலோசனம்மாளுக்கும்கூட குழந்தை கிடையாது. முத்துசாமியும் மற்ற ஆடவர்களும் தாஜ்மஹலைச் சுற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, சுலோசனம்மாள் வேகமாக நடக்க முடியாமல் ஒரு மர நிழலில் அமர்கிறாள். கூடவே ரங்கமணி. அப்போது ரங்கமணி சுலோசனம்மாளிடம் ஆக்ரா ராணிக்குப் பதின்மூன்று குழந்தைகளாம் என்கிறாள். அதற்கு சுலோசனம்மாள் சொல்கிறாள்:

“ஒத்திக்குப் பதிமூணுக்காக இதே வேலை. ஒத்திக்கு ஒண்ணுக்காக இதே வேலை. ஒத்திக்கு வேலையே கிடைக்காம போயிடுத்து.”

காமம் என்பது தி.ஜா.வின் எல்லா நாவல்களிலும் ஒரு வலுவான lietmotif-ஆக இருக்கிறது. முப்பத்தெட்டு வயதில் பதின்மூன்று குழந்தைகளைப் பெற்று இறந்து போன ஒரு பதினாறாம் நூற்றாண்டுப் பெண்ணைப் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டு பெண்கள் விவாதிக்கிறார்கள்.

***

தி.ஜா.வின் விசேஷம் என்னவென்றால், சென்ற நூற்றாண்டின் வாழ்க்கையை மிகத் தேர்ந்த கலை நுணுக்கத்துடன் நமக்கு ருசிக்கத் தருகிறார் என்பதுதான். வரலாறு பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாத ஒரு சமூகத்தில், வரலாற்றைப் பதிவு செய்யும் காரியத்தை வேறு எந்தத் துறையினரும் செய்திருக்காத நிலையில் தி.ஜா. அதை ஒரு கலையாகவே மாற்றியிருக்கிறார். ஒருசில இடங்களை உதாரணம் தருகிறேன்.

“காமேச்வரனைப் பார்ப்பதற்காக முத்துசாமி, ஸ்பெஷலை வண்டி வண்டியாக ஊடாடிப் போன போது, காமேச்வரனின் சிறு அறை சாத்தியிருந்தது. தூங்குகிறாரோ என்று திறந்து பார்த்தார். காமேச்வரன் பெஞ்சு மீது ஒரு கம்பளியைப் போட்டு விறைத்து உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி புருவ மத்தியைப் பார்க்கிற கோலத்தில் இமை ஏறியிருந்தது. அப்பால் அடுக்களைப் பெட்டியில் இரவுச் சாப்பாட்டுக்கு வேண்டிய கறிகாய்களை நறுக்கிக்கொண்டிருந்தார்கள்.”

இந்த ஆச்சரியத்தைப் பற்றித் தன் மனைவி சுலோசனம்மாளிடம் சொல்கிறார்.

“காலமெலேர்ந்து இப்ப இன்னொரு ஆச்சரியம். காமேச்வரன் ரூம்லே எட்டிப் பார்த்தேன், தகதகன்னு அக்கினி மாதிரி உட்கார்ந்திருந்தான் மனுஷன். நிஷ்டையிலே. மூணு மணி நேரமா உக்காந்திருக்கானாம். இன்னும் ஏந்திருக்கலெ, நாம என்னமோ பூஜை பண்றோம் பூஜை பண்றோங்கறோமே… அந்தர்முக ஸமாராத்யா பஹிர்முகசதுர்லாபன்னு பரதேவதையைச் சொல்றோம். வெளிப்படைப் பூஜையினாலெ பரதேவதை கிடைக்க மாட்டா. உள்ளுக்குள்ளே அவளைப் பார்த்தாத்தான் கிடைப்பான்னு சொல்றமே, காமேச்வரன் அதைத்தான் பண்ணிண்டிருக்கான். அனலைப் பிடிச்சு உட்கார்த்தி வச்சாப்பல இருக்கு. பாக்கறயா?”

“காமேச்வரன் வெறும் உடம்போடு உட்கார்ந்திருந்தான். கழுத்தில் துளசிமணி மாலை. நெற்றியில் ஒன்றுமில்லை. உடலில் அசைவில்லை, மூச்சு போவது தெரியவில்லை. பாளம் பாளமாக இரு மார்புகள் கோடரி இரும்பை நீட்டி விட்டாற் போல இடைவடை குறுகி வந்தன. ஒட்டின வயிற்றுச் சதைகளுக்கு நடுவில் கரிய மயிர்க் கோடு. கையிரண்டும் கோத்திருந்தது.

இரண்டு நிமிஷம் போல் நின்று பார்த்தார்கள் மூவரும்.

ரங்கமணி பார்த்துக் கொண்டே நின்றாள். ‘என் பிள்ளை மாதிரி இருக்கிறான்,’ என்று மனதிற்குள் எதோ சொல்வது போலிருக்கிறது. ‘எனக்கேது பிள்ளை?’ என்று சுதாரித்துக்கொண்டாள். முதுகுத் தண்டு ஒரு தடவை குலுக்கிற்று – குளிர்நீர் பட்டாற்போல.

சுலோசனம்மாள் அதைப் பார்த்தாள்.”

தி.ஜா.வின் நாவல்களில் வரும் கணவர்கள் பெரும்பாலும் பலஹீனமானவர்களாகவும் பெண்ணின் காமத்தைத் தீர்க்க முடியாதவர்களாகவுமே இருக்கிறார்கள். அம்மா வந்தாளில் வரும் அம்மா ஒரு உதாரணம். ரங்கமணியின் தத்துப்பிள்ளையும் அதே மாதிரி ஆண்தான். முத்துசாமி ஜோதிட சிம்மம் அல்லவா? அவர் அந்தத் தத்துப்பிள்ளையின் ஜாதகத்தையும் அவன் மனைவியின் ஜாதகத்தையும் அலசுகிறார். தத்துப்பிள்ளை வாரிசு அற்ற தரிசு. ஆனால் அவன் மனைவிக்கு வாரிசு உண்டு.

எப்படி என்பதுதான் தி.ஜா.வின் முடிச்சு.

***

தி.ஜா. பற்றி என்ன எழுதுவது? உண்மையில், நான் உணர்ந்து ரசித்து மகிழ்ந்த எந்த எழுத்தாளரைப் பற்றியும் எழுதுவதற்கான எந்த அளவுகோல்களும் தகுதியும் பயிற்சியும் எனக்குக் கிடையாது. உதாரணமாக, ஐஸ் க்ரீமுக்கும் எனக்கும் உள்ள உறவு பற்றிச் சொல்லலாம். நாகூரில் சிறுவயதில் குச்சி ஐஸ், பாலைஸ் என்ற இரண்டுவிதமான ஐஸ்களை நாங்கள் அறிந்திருந்தோம். ஒருநாள்கூட அவற்றை வாங்கித் தின்பதற்கான வசதி எங்களுக்கு இருந்ததில்லை. நெருங்கிய சிநேகிதன் எவனாவது ஒரே ஒரு நக்கு நக்குவதற்காகக் கொடுப்பான். அதுவும் அவன் நமக்கு மிகப் பெரிதாக நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும். அவன் வகுப்புக்கு வராதபோது நடத்திய பாடங்களுக்கான கேள்வி பதில் நோட்டைக் கொடுப்பது, பரீட்சையில் காப்பி அடிக்கத் தோதாக நம் விடைத்தாளைக் காண்பிப்பது, இப்படி ஏதாவது செய்தால் குச்சி ஐஸில் ஒரு நக்கு கிடைக்கும்.

அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து அருண் ஐஸ் க்ரீம் அறிமுகமானபோது இது ஐஸ்க்ரீமே இல்லை என்று நான் சொல்வது வழக்கம். பிறகு என்னென்னவோ ஐஸ் க்ரீம்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டன. உயிரே போனாலும் கல்யாண விருந்துகளில் தரப்படும் ஐஸ்க்ரீம் என்ற கண்றாவியைத் தொட்டதே இல்லை. ஐஸ்க்ரீம் என்ற பெயரில் தின்னப்படுவதெல்லாம் ஐஸ்க்ரீமே இல்லை. சரி, இவ்வளவு சொல்கிறாயே, நல்ல ஐஸ் க்ரீம் எப்படி இருக்கும், தெரியுமா? தெரியாது. நல்ல ஐஸ் க்ரீம் சாப்பிட்டதில்லை. ஆனால் நாம் சாப்பிடும் ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீம் இல்லை. அது மட்டும் நிச்சயமாகத் தெரியும்.

இப்படி ஐஸ்க்ரீம் பற்றிய என்னுடைய நூதனமான விமர்சனம் நண்பர்களிடையே பிரசித்தி பெறவே, ஒரு நண்பர் என்னை காதர் நவாஸ்கான் சாலைக்கு (நுங்கம்பாக்கம்) அழைத்துச் சென்று ஐபேகோ ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தார். ம்ஹும். இதுவும் ஐஸ்க்ரீம் இல்லை. முப்பது மார்க் போடலாம். அவ்வளவுதான். இந்த நிலையில் என் நண்பர் ராம்ஜி நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘மூவ் அண்ட் பிக்’  என்ற ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றார்.

சாப்பிட்டபோது தி.ஜா.வின் எழுத்தே ஐஸ்க்ரீமாக மாறி இருக்கிறது என்றேன். இதுதான் ஐஸ்க்ரீம். என்ன காரணம்? இத்தாலிக்காரன் இட்லிக் கடை வைத்தால் அவன் சுடுகிற இட்லி எப்படி இருக்கும்? அப்படித்தான் நாமும் ஐஸ்க்ரீம் செய்துகொண்டிருக்கிறோம். ‘மூவ் அண்ட் பிக்’ சுவிஸ்ஸிலிருந்து வரும் ஐஸ்க்ரீம். நிஜமான ஐஸ்க்ரீம். அதற்குப் பிற்பாடுதான் விலையெல்லாம் விசாரித்தேன். மற்ற ஐஸ்க்ரீமைவிட ஆறு மடங்கு விலை கூடுதல். அதுவா முக்கியம்?

‘மூவ் அண்ட் பிக்’ சுவிஸ் ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது ஏற்படும் உணர்வை எப்படி விவரிப்பது? அப்படித்தான் தி.ஜா.வும் என்று தோன்றுகிறது. ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘துய்ப்பு’… இதுதான் தி.ஜா. எழுத்தின் ஒட்டுமொத்த சாரம்.

நளபாகத்தை இன்னும் கொஞ்சம் வாசிக்கலாம். ரங்கமணியின் வம்சத்திலேயே யாருக்கும் புத்திர பாக்கியம் கிடையாது. அதன்படி, அவளுடைய சுவீகாரப் புத்திரனான துரைக்கும் திருமணமாகிப் பல ஆண்டுகள் கழிந்தும் பிள்ளை இல்லை. அப்படி ஒரு சமயத்தில் துரையும் அவன் மனைவி பங்கஜமும் தனியாக இருக்க நேர்கிறது. வீட்டில் ரங்கமணி இல்லை. துரையின் அண்ணன் தம்பிகள் இல்லை. தமக்கை தங்கைகள் இல்லை. வேலைக்காரன் இல்லை. கடைச் சிப்பந்திகள் இல்லை. (துரை மளிகைக்கடை வைத்திருக்கிறான்.) கல்யாணமான இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு தனிமை கிடைத்ததில்லை. சில சமயங்களில் வீட்டில் யாருமில்லாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் எந்த நேரத்திலும் ரங்கமணி வந்துவிடக் கூடும். கடையாட்கள் வரக்கூடும். அதனால் அந்தத் தனிமை வேறு. இது வேறு. அன்று அவர்களுக்குக் கிடைத்திருந்த தனிமை இந்த ஜன்மத்திலேயே அவளுக்குக் கிட்டிய ஒரு நிகழ்ச்சிபோல் பங்கஜத்தை பரபரக்க வைத்தது. ஏதோ நடக்காதது நடப்பதுபோல ஒரு சிறிய திகைப்பு, வியப்பு. ஒரு கணம் வீட்டை – அந்த நீள வீட்டை தானே தனியாக ஆள்வதுபோல ஒரு பிரமை, துளி பெருமிதம் – என்ன இது! – என்று ஒரு கணம் இந்தத் துள்ளல், வியப்பெல்லாம் சற்றுப் புரியவும் புரியாத நிலை.

மறுநாள் காலை வரை வீட்டுக்கு யாரும் வரப் போவதில்லை என்ற நிலையில், கிடைத்த அந்தத் தனிமையில் துரையும் பங்கஜமும் எந்நாளுமில்லாதவகையில் முயங்குகிறார்கள். துரை அப்பாவி. ஆனால், “உடல் அப்பாவியாக இல்லை,” என்று ஒரு விபரத்தைப் போடுகிறார் தி.ஜா. “பொழுது நீளமாக நகர்ந்தது. வேகமாகத் தாவிற்று. நின்றது. சோர்ந்தது. மீண்டும் நீளமாக நகர்ந்தது. எழுந்து தாவிற்று. சோர்ந்தது.”

“பங்கஜம் எழுந்து கூடத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தாள்.

‘மணி என்ன தெரியுமா?’

‘என்ன?’

‘பதினொண்ணரை.’

‘ஆ! எட்டு மணிக்குக் கடையை விட்டுப் புறப்பட்டேன்.’

‘எட்டு – எட்டு இல்லெ – ஒன்பது.’ பங்கஜம் விரலை விட்டு எண்ணிக்கொண்டிருந்தாள்.

‘என்னது?’

‘ஒண்ணும் இல்லெ,’ என்று சொல் நாணிற்று.

‘பாவம்,’ என்றாள் அவனைப் பார்த்து.”

அந்த இரண்டரை மணி நேரக் கலவிக்குப் பிறகு இரவு உணவை முடிக்கிறார்கள். அப்போது துரை பங்கஜத்திடம் சொல்கிறான், “இன்னிக்கு இடுப்பு ஒடியற வேலை உனக்கு. பசி முத்திக்கூட போயிருக்கும்.”

பிறகு அந்த அகோரப் பசி நான்காம் ஜாமத் தொடக்கத்திலும் கிளைக்கும் என்று பங்கஜமும் நினைக்கவில்லை. துரையும் எதிர்பார்க்கவில்லை. “ஒரு இரக்கத்தோடு, அவன் மார்பை, கை தடவிக் கொடுத்தது… உடல் முழுவதையும் தடவிற்று. அப்பாவியை மீண்டும் முரடாக்க வேண்டும்போல துடித்தது. இரவு விழித்துக்கொண்டே இருந்தது. சாப்பாட்டுக்கு முன்பு தாவியதைப்போல தாவிற்று – துள்ளிற்று. சோர்ந்தது. அயர்ந்தது. மீண்டும் தாவிற்று.

மணி மூன்று அடித்தது.”

***

தி.ஜா.வின் நாவல்களில் நாம் காணும் மற்றொரு சரடு, பிரபஞ்ச ஓர்மை. தன்னுள் எல்லா உயிர்களையும் தன்னை எல்லா உயிர்களிலும் பார்க்கிறவனுக்குத் துன்பம் கிடையாது; அவன் யாரையும் வெறுப்பதில்லை; யார் மீதும் கோபம் கிடையாது. அலட்சியம், அசட்டை, மொட்டை கர்வம், அதிகப்பிரசங்கித்தனம், மார்பைப் பார்த்துக்கொள்கிற தனம் – ஏதும் வராது. இது ஈஸாவாஸ்ய உபநிஷதம். இந்தக் கருத்துதான் தி.ஜா.வின் எழுத்துகளில் திரும்பத் திரும்ப வருகிறது.

யஸ்து ஸர்வாணி பூதாணி ஆத்மனி ஏவ அனுபச்யதி

ஸர்வபூதேஷு சாத்மானம் ததோ ந விஜூகுப்ஸதே.

***

ஆக்ராவில் மஜீத் பாய் சொல்கிறார்:

“தாஜ்மகால் கட்டுறான். பெரிய கோவில் கட்டுறான். பெரிய பெரிய அரண்மனையெல்லாம் கட்டுறான், சரி. அண்ணாந்தா களுத்து நோவும். அப்படியெல்லாம் கட்டுறாங்க. கட்டட்டும். அதிலெ ஆச்சரியப்படும்படியா என்னா ஆயிரிச்சு! வெறும் மண்ணு எப்படி சலவைக் கல்லாச்சு? வெறும் மண்ணும் கல்லும் எப்படி வைரமும் பச்சையும் கெம்புமா ஆச்சு? இக்கினியூண்டு விரை எப்படி மண்ணை இடிச்சுத் தள்ளிக்கிட்டு முளையா வருது? அது எப்படி இலையா ஆவுது? நிமிர்ந்து வளருதே. அதைவிடவா ஆச்சரியம் இருக்க முடியும்? முளை வர்றதுக்கு முன்னாலெ தளம் அடிச்சாப்பல இருக்கிற தரையிலே விரிசல் காணுது பாருங்க. இக்கினியூண்டு முளையைக் கண்டு தரையே பயந்து விரிஞ்சு குடுக்குதே, அதைவிடவா ஆச்சரியம்! அது பயந்துகிட்டு விரிஞ்சு குடுக்குதா? இல்லெ ஆண்டவன் செடியா வர்றாருன்னு பக்தியோட ஆச்சரியமா, ‘எலே, ஒதுங்கிக்கிடுவோம்டா’ன்னு விரிஞ்சு குடுக்குதா? அதைத்தான் நினைச்சுக்கிட்டு வர்றேன். ஒரு புல்லு எப்படி நிலத்தைக் கீறிக்கிட்டுக் கிளம்புதுன்னே நமக்குத் தெரிஞ்சுக்கறதுக்கில்லெ. பத்தாயிரம் பேர் சேந்து இருபது வருசம் முப்பது வருசத்திலெ இந்த மாதிரி ஒரு கட்டடத்த கட்டிப்பிடலாங்க. ஒரு புல்லை உண்டாக்கிடறேன்னு சொல்லுங்க பார்ப்பம்.”

***

காமேச்வரன் ஒட்டுத் திண்ணை மீது புரண்டு புரண்டு அலைந்துகொண்டிருந்தான்… ஆமாம். அவனுக்கு எல்லாரும் குருமார்கள்தான். அவனுக்குத் தத்தாத்ரேயனின் நினைவு வந்தது. நாய்களும் புலிகளும் மாடுகளும் சகாக்களாகத் தெரிந்த தத்தாத்ரேயனை – எல்லாம் அறிந்த அவனுடைய தெய்வீக அறிவைக் கண்டு பிரமித்துப் போய் யாரோ கேட்டாராம் – உனக்கு யார் ஆசிரியர் என்று. “எனக்குக் குரு யாரும் இல்லை – நானேதான் எனக்குக் குரு – இந்த நாய்களில் இருக்கும் நான், இந்தப் பசுக்களில் இருக்கும் நான், அதோ அந்த மலை, நதி, மரம், சேற்றில் நெளியும் புழு – எல்லாரும் எனக்குக் குருமார்கள் – இந்த எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன் என்று காண்பித்த இத்தனையும் என் குரு,” என்று பதில் சொன்னாராம் தத்தாத்ரேயன்.

***

“காமேச்வரன் என்ன சொன்னார் தெரியுமோ – பாரதியார் எங்க அண்ணா. அம்பாள் எங்க அண்ணாவுக்குக் கவிபாடச் சொல்லிக் கொடுத்தா. என் கையிலெ கரண்டியைக் கொடுத்திருக்கா. எங்க ரண்டு பேருக்கும் அவதான் அம்மா – எங்க பராசக்தி! எங்க குருநாதன், பாரதி, நான் – மூணு பேரும் அண்ணன் தம்பி. திராட்சாபாகமாப் பாடி உலகத்தையே மயக்கினார் எங்க அண்ணா. அவரை நெனச்சிண்டே, நளபாகமா இல்லாட்டாலும் முகத்தைச் சுளுக்காம சாப்பிடும்படியா எனக்குத் தெரிஞ்சதைப் பண்ணிப் போடறேன்னு ரொம்ப பவ்யமாச் சொன்னார். அவர் ஒன்றும் சாமர்த்யமாச் சொல்லலெ. மனசோட, இளக்கமாச் சொன்னார். அவர் சொன்ன தோரணையைப் பார்த்ததும் எனக்கு எல்லாம் ஒண்ணுதான்னு தோணித்து ஒரு நிமிஷம். சமையல் பண்றது, சர்க்கார் நடத்தறது, வியாபாரம் பண்றது, கவி பாடறது, சொல்லிக் கொடுக்கறது, பாலம் கட்றது, வீடு கட்றது, பள்ளிக்கூடம் நடத்தறது, தோட்டம் கொத்தறது, பயிர்ச் செலவு பண்றது – எல்லாம் ஒண்ணுதான்னு தோணித்து.”

***

உபதேசம் பண்ணும் போது வத்ஸன் எதோ சொன்னார். “இந்தப் பிரபஞ்சத்திலே சௌந்தர்யத்தின் பராகாஷ்டை, பரம உச்சம் லலிதைதான். அவள் சாயல்தான் மலையிலெ, சமுத்திரத்திலெ, மேகத்திலெ, மழையிலெ, மூணாம் பிறையிலெ, அஷ்டமி சந்திரனிலெ, அருணோதயத்திலெ, உச்சிவெயில்லெ, சூறைக்காத்திலெ, நீரோட்டத்திலெ, அங்க அவயங்களிலெ, புலி சிங்கத்தோட அழகிலெ, நாயோட அழகிலெ – எங்க பார்த்தாலும் வீசறது. ஒரு சாயல்தான். அப்படின்னா லலிதை எப்படியிருப்ப பார்த்துக்கோ. அதைப் பார்த்து, அதையே பார்த்துக் கரைஞ்சு போகணும். மத்ததெல்லாம் பார்த்தா உடம்பு கரையும் – ஊன் கரையும் – உள்ளே மூளியாகும். மூக்கு கண்ணெல்லாம் பள்ளமாப் போய், கைகால்லாம் குறையறது பாரு – அந்த மாதிரி…”

“இந்த உலகத்தில் சின்னது பெரியது என்று உண்டா என்ன? எல்லாம் முக்கியம்தான். சின்னது என்றால் சின்னதுதான். பெரிசு என்றால் எல்லாம் பெரிசுதான். காளிதாசனும் முக்கியம், கம்பனும் முக்கியம். எலிமெண்டரி ஸ்கூல் வாத்யாரும் முக்கியம். அவரோட குழந்தைகள் எல்லாம் சேர்ந்து கத்துகிற ஆத்திச்சூடியும் முக்கியம். பெரிய கோவிலும், ரிஷிகேசத்தில் லக்ஷ்மன் ஜூலா கயிற்றுப் பாலத்துக்குப் போகிற வழியில் வைக்கோலையும் புல்லையும் போட்டு, தொடை உயரத்துக்கு மலைவாச குஷ்டரோகிகள் பின்னிக்கொண்டிருக்கிற குடிசையும் முக்கியம். எது பெரிசு, எது சிறிசு – எல்லாம் ஒன்றுதான். சாணும் முக்கியம், சூரியனுக்குப் போகிற தூரமும் முக்கியம்…”

***

நளபாகத்தில் தி.ஜா. காண்பிக்கும் சென்ற நூற்றாண்டு வாழ்க்கை பற்றிய ஒருசில காட்சிகள்:

ஒரு கிழவி, தான் வளர்க்கும் எருமையோடு பேசுகிறாள்:

“என்னடீ, கொம்பேறி மூக்கான், என்ன வந்துடுத்து உனக்கு ரண்டு நாலா? நேத்திக்கு ரண்டு சேர் பாலைக் கொடுத்துட்டு காலைக் காலைத் தூக்கினே. இன்னிக்கு ஒன்றரைச் சேர் கொடுத்துட்டு மடியை மடியை எக்கிக்கிறே! ஒரு வீசை புண்ணாக்கும், கால் குறுனி பருத்திக் கொட்டையும் முழுங்கிப்ட்டு! என்ன அடம்னேன்! என்ன! என்ன! சமத்தாயிருடீ…! இல்லாட்டா அதொபாரு தென்ன மட்டை, அதை எடுத்துண்டு முதுகிலெ ரண்டு வாங்கினேனோ, ஏன்னு கேக்கப்படாது… இன்னிக்கு மடத்துத் தெருவுக்குப் போயி ரண்டு கட்டுப் புல்லு வாங்கிப் போட்டுடறேன்… கோச்சுக்காதேம்மா… படவாச் சிறுக்கி.”

“புல்லுக்கட்டுன்னா அத்தனை ஆசையாடியம்மா? புல்லுன்ன உடனே மடியை இளக்கிப்பிட்டியே… நிச்சயமா ரண்டு கட்டு இன்னிக்கு ராத்திரி வாங்கிப் போடத்தான் போறேன், இல்லாட்டா ஏண்டி வேம்பூன்னு கேட்க மாட்டியோ நீ!”

“மனசுக்குள் ஒரு பரபரப்புடன் நடந்தான் காமேச்வரன். தெரு நல்ல அகலம். இரண்டு சாரி வீடுகளுக்கும் முன்னால் தென்னை மரங்கள் – பன்னீர்ப்பூ, பவழமல்லி மரங்கள். பெரும்பாலும் மேலும் கீழுமாக இரட்டைத் திண்ணைகள் கொண்டு பெரிய வீடுகள். நடுநடுவே ஆங்காங்கு சிறிய வீடுகள் – பெரியவர்களுக்கு நடுவில் குழந்தைகள் திணிந்திருப்பதுபோல. ஒரு பெரிய வீட்டு மேல் திண்ணை மீது ஏழெட்டு பேர் வளைய அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். தூணோரமாக இருந்த ஒரு மொட்டைத் தலையர் சற்று முகத்தை வெளியே நீட்டி மூக்கில் விரல் வைக்காமலேயே மூச்சின் பலத்தாலேயே மூக்கு சிந்துவதைப் பார்த்தான் காமேச்வரன் – பொடி போடுகிறவர் போலிருந்தது. திண்ணைப் பக்கத்தில் வாசல் நிலை மீது சங்கு சக்கரம் என்று வைஷ்ணவச் சின்னங்கள் வரைந்திருந்தன.”

“காமேச்வரன் திரும்பினான். அகலமான சாலை. இரண்டு பக்கமும் தென்னைகள். ரயிலடி ஒரு மைல் தூரத்தில் தெரிகிறது. கைகாட்டி தெரிகிறது. சாலையில் நின்று இரு பக்கமும் பார்த்தால் அடிவானம் வரையில் வயல்கள். பசபசவென்று அடிவானம் வரை பச்சை. நடவாகி ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சை பச்சையாய் அலை வீசிக்கொண்டிருந்தது. குளுகுளுவென்று காற்று. மேல் துண்டை இழுத்து இழுத்து இடத்தில் சேர்க்க வேண்டியிருந்தது. இரண்டு பர்லாங்குக்கு ஒரு சுமைதாங்கி.”

“காமேச்வரனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. ஒரு எம்பாக எம்பி ஒரு சுமைதாங்கி மீது உட்கார்ந்தான். காற்று ஆளைத் தள்ளுகிறாற்போல் வாரி வாரி அடித்தது. சூரியன் அடிவானத்தைத் தொடப் போகிற சமயம். மின்னல் கால்களின்றி, ஜொலிப்பின்றி, வெறும் வெள்ளைக் கோளமாக அதிர்ந்துகொண்டிருந்தது. கண் கொட்டாமல் பார்த்தான். மார்புக்குள் விம்மி விம்மி ஒரு சந்தோஷம். உடம்பு கொள்ளாத பூரிப்பு. எதனால்? ஏன் இந்த நிலைகொள்ளாத பரவசம்?”

***

சென்ற நூற்றாண்டின் வாழ்க்கையை தி.ஜா. நளபாகத்தைவிடவும் துல்லியமாக, விவரமாக மோகமுள்ளிலும் செம்பருத்தியிலும் அம்மா வந்தாளிலும் பதிவு செய்திருக்கிறார். அந்தவகையில் தி.ஜா.வின் எழுத்து அத்தனையும் வரலாற்று ஆவணங்கள் என்றே சொல்லலாம். சென்ற நூற்றாண்டு வாழ்க்கை மட்டும் அல்ல; அப்போது புழக்கத்தில் இருந்த மொழியும். அவர் கையாளும் பல வார்த்தைகள் இப்போது வழக்கத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது, தேய்ந்து கொண்டிருக்கிறது. தி.ஜா.வின் அத்தனை எழுத்துகளிலிருந்தும் இப்போது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை எடுத்து ஒரு பெரும் அகராதியாகத் தொகுக்கலாம். ஆனால் அது சங்கத் தமிழ் வார்த்தைகளைப்போல் இப்போது முழுமையாக நம் தமிழ் வாழ்விலிருந்து அந்நியமாக இல்லை. மிகச் சமீபகாலத்திலிருந்துதான் அவை நம்மிடமிருந்து அகன்று கொண்டிருக்கின்றன. உ-ம். பல்லாக்கு, நகரா எல்லாம், மோடனம், காமாதூரன், தாயாதி, உடம்புக்கு எதாவது ஜாட்யமாயிருக்கோன்னு பார்த்தேன், மனசார ரமிச்சு இந்தப் பிள்ளைகளைப் பெத்தேன், நறுவிசு, சும்மா ஔதாக்கட்டிக்குத் தான்யா. இந்த வார்த்தைகளையெல்லாம் தொகுத்தால் தமிழுக்கு அது ஒரு பெரும் கொடையாக இருக்கும்.

***

இறுதியாக, தி.ஜா. அளவுக்குப் பெண்களின் மீறலை எழுதியவர் யாரும் இல்லை. தி.ஜா.வின் பெண்கள் என்று தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். ஆனால் தமிழ்ப் பெண்ணியவாதிகள் தி.ஜா.வை வாசிக்காமலே இருப்பது பெரும் துரதிருஷ்டம்.

தி.ஜானகிராமனை அவசியம் பெண்கள் படிக்க வேண்டும். அதிலும் பெண்ணியவாதிகள் கட்டாயம் படிக்க வேண்டும். மரப்பசுவிலிருந்து ஆரம்பியுங்கள். மரப்பசுவின் அம்மணியிடம் உங்களையே காண்பீர்கள். தி.ஜா.வைப் படிக்காதவர்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதத்தைக் காணத் தவறியவர் ஆவீர்கள்.

***

பின்குறிப்பு:

 

  1. ஆதி சங்கரரின் ‘நிர்வாண சத்கம்’ மொழிபெயர்ப்பில், சம்ஸ்கிருத பேராசிரியை டாக்டர் சுபஸ்ரீ செய்த உதவி மிகவும் பெரியது. ஒரு நாள் முழுவதும், நான் கேட்ட சந்தேகங்களையெல்லாம் பொறுமையாக விளக்கினார். மூன்றாவது பாடலில், தமிழில் சொல்வதுபோல், “எனக்கு விருப்பமும் இல்லை; வெறுப்பும் இல்லை,” என்று எழுதினேன். அதை சுபஸ்ரீ திருத்தினார். சம்ஸ்கிருதத்திலும் ‘ராகௌ த்வேஷம்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், சங்கரர் அதை மாற்றி ‘ந-மே த்வேஷ ராகௌ’ என்று பாடியிருப்பதால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும் என்றார். பிறகே, வெறுப்பு விருப்பு என்று மாற்றினேன். இப்படிப் பல நுணுக்கங்கள். கடைசியாக ஒரு வார்த்தையை முழுசாக விட்டுவிட்டேன். ஆறாவது பாடலில் ‘ந மேய’ என்று வருகிறது அல்லவா? அதை, எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் விட்டுவிட்டார்கள்.

 

(ந மேய: அளக்க முடியாதவன்.)

 

இதுபற்றி சுபஸ்ரீ, தன் தாயார், ‘அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பால்’ என்று சொல்வார்கள் என்றார்.

 

இந்த வரி, ஔவையார் பாடிய விநாயகர் அகவலில் வருகிறது:

 

அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

 

  1. நிர்வாண சத்கம், பலராலும் பாடப்பட்டிருக்கிறது. எஸ்.பி.பி.கூட பாடியிருக்கிறார். எல்லாவற்றிலும், உமா மோகன் பாடியதே எனக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. மேற்கத்திய இசைப் பின்னணியும் காரணமாக இருக்கலாம். இதைக் கேட்பது ஓர் அற்புத அனுபவம். அவசியம் கேட்டுப் பாருங்கள். இதைவிட நல்ல முறையில் பாடப்பட்டிருந்தாலும் இணைப்பை அனுப்பிவையுங்கள்.

 

இணைப்பு –  https://www.youtube.com/watch?v=Ccxfg37E6Ws

 

சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை – http://solvanam.com/?p=15341

 

***