என்னைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் விமர்சனம், என் எழுத்து சுயசரிதைத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாகும். நான் படித்தவரை சி.சு. செல்லப்பா, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா. போன்ற பலரும் அப்படித்தான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அதிலும் தி.ஜானகிராமன் முழுக்க முழுக்க அவர் வாழ்ந்த, அவர் பார்த்த, அவர் அனுபவித்த வாழ்க்கையையே எழுதியிருக்கிறார். அதற்கு அவரோடு வாழ்ந்தவர்கள், அவருடைய பள்ளி, கல்லூரி கால சிநேகிதர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளும் பேட்டிகளுமே சாட்சி.
அம்மா வந்தாள் நாவலின் கதாநாயகன் வேதபாடசாலையில் வேதம் பயில்கிறான். அவன் அம்மா தன் கணவன் இருக்கும் போதே வேறொருவரோடு உறவு கொண்டு குழந்தையும் பெற்றுக் கொள்கிறாள். இப்போது தி.ஜா.வின் சிநேகிதர் கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையைப் பாருங்கள். நானெல்லாம் சும்மா பிசாத்து என்று தோன்றுகிறது. கீழே கரிச்சான் குஞ்சு:
“‘அம்மா வந்தாள்’ நாவலில் வரும் பாடசாலை – அதை ஏற்படுத்திய அம்மாள் – அங்கு ஒரு பெண் இருந்தது முதலிய அம்ஸங்கள் நிஜமானவை. ஜானகியின் அண்ணா அந்தப் பாடசாலையில் வேதக்கல்வி கற்றதும் முற்றும் உண்மை. ஆனால் அவன் செய்யும் கதைக்கும் இந்த மூலங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை. அந்த நாவலைப் படித்து அவனுடைய தமையனார் மிகவும் வருத்தப்பட்டார். எனக்கும் அதைப் படிக்கும்போது வருத்தம்தான். (ஒருமுறை நான் உயர்திரு. கி.வா.ஜ.வுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜானகிராமனுக்கு ஏன் ஸாஹித்ய அகாடமி அங்கீகாரம் இல்லை என்று கேட்டு விவாதித்தேன். எல்லாருமே ‘Bad taste’ என்று கூறினார்கள் என்றார்.) ‘அம்மா வந்தாள்’ என்னுள் ஏற்படுத்திய உணர்வும் இத்தகையதே. அந்த நாவலைப் பற்றியும், அவன் தமையனார் அடைந்த வருத்தத்தைப் பற்றியும், புனிதமான ஒரு பாடசாலை, வேதாத்யயனம், தர்மம் செய்த ஓர் அம்மாள் போன்ற விஷயங்களை அவன் தூய்மை கெடுத்துவிட்டான் என்ற என் கருத்தையும் அவனுக்குக் கடிதம் எழுதினேன். கோபமாகப் பதில் எழுதினான். ஆனால் அவன் எழுதிய ஒரு வாக்கியம், உண்மையிலேயே அவனுடைய குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது. ‘நான் ஒரு பாசாண்ட எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் அண்ணாவும், உன்னைப் போன்ற ஜடங்களும் என்னிடம், என் எழுத்தைப் பற்றி, அதன் ஏன், என்ன என்பது பற்றிக் கேட்பது தவறு; வாயை மூடிக்கொள்,’ என்பதே அந்த வாக்கியம். பிறகு பலகாலம் கழித்து ‘மரப்பசு’ வந்தது. அண்ணாக்காரர் அதைப் படிக்கவே மறுத்துவிட்டார். பிறகு படித்துப் புரிந்தும் புரியாமலும் கண்டபடி பேசி துயருற்றார். நான் அதிர்ந்து போனேன். அதைப் படித்து, அம்மணி என்ற பாத்திரம், இன்னும் நூறு வருஷங்கள் ஆன பிறகும் அந்தச் சூழலில், குடும்பத்தில், அதுவும் கும்பகோணத்தில் அருகில் உள்ள கிராமத் தொடர்பில் பிறக்கவே முடியாது என்று கடுமையாக விமர்சித்து எழுதினேன். பதிலே எழுதவில்லை. அவன் பிறகு திடீரென்று அவன் குடும்பத்தில் நேர்ந்த ஒரு எதிர்பாராத விளைவுக்குப் பிறகு எழுதினான். ஏதோ ஒரு ஹிந்திப்படத்தைத் தன் மாப்பிள்ளையோடு பார்த்ததாகவும், அண்ணா, நான் போன்ற போலிகள் அதைப் பார்த்துத் திருந்த வேண்டும் என்றும் எழுதினான்.”
கரிச்சான் குஞ்சுவின் இந்த வார்த்தைகளிலிருந்து தி.ஜா. எப்பேர்ப்பட்ட எதிர்ப்பை சமாளித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கரிச்சான் குஞ்சு சொல்வது போல் தி.ஜா.வுக்கு ஒன்றும் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை. ஒரு முழுமையான மூட சமூகத்துக்கு எழுதிக்கொண்டிருக்கிறோமே என்ற வேதனையும் துயரமும் கோபமும்தான் அவரது கடிதத்தில் வெளிப்படுகிறது. தி.ஜா.வை அவரது சமூகம் ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்தது என்றே நம்மால் இன்று யூகிக்க முடிகிறது.