விநோதமடைதல்

1

விழிகளடிக் கருவளையம்
நீங்க ஒரு பசை
தோற்சுருக்கம் போக்கவொரு பசை
கறை-மரு-தேமல் போக்குகின்ற தைலங்கள்
தோல் மின்ன-மிளிர-மினுமினுக்கப்
பல களிம்புகள்
எல்லாமும் தேடித் தேடி வாங்கும்
எனக்கு அதைப்
பயன்படுத்தும் வேகமில்லை
அதனதன் ஆயுட்காலம் முடியமுடிய
எல்லாம் குப்பைத் தொட்டியில்
போய்ச்சேரும்

நூறாண்டுகளைத் தாண்டியும்
ஜீவிக்கும் உயிர்களும் ஓரிடத்தில் உண்டு.
அதன் பெயர் விநோத நூலகம்

கன்னிகளின் பெருமூச்சு
பசியின் கதறல்
போர்களின் குருதிவாடை
கடவுளருகே சென்றோரின்
புதிர்மொழிகள்
பாணர்களின் பாடல்கள்
காதலர்களின் கனவுமொழி
அரச குலத்தோரின் அதிகாரக் கூச்சல்
அடிமைகளின் ஓலங்கள்
இசைஞர்களின் ராகசஞ்சாரம்
துறவிகளின் மௌனம்
துரோகிகளின் துர்வாடை
கணக்கற்ற யோனிகளின் தாபம்
கரமைதுனங்களால் நிரம்பிய
கழிவறைக் கோப்பைகளின் அபத்தம்
கொலைகாரர்களின் ஆசுவாசம்
பைத்தியங்களின் சிரிப்பொலிம்
அழுகையொலி
யானைகளின் வாஞ்சை
பூனைகளின் மர்மம்
நாய்களின் விஸ்வாசம்
தாவரங்களின் கருணை
அரசியல்வாதியின் தந்த்ரம்
மூடர்களின் கூச்சல்
அசடர்களின் ஆரவாரம்
ஞானிகளின் புன்னகை
எல்லாமும் ததும்பி வழியும்
அந்த நூலகத்தினுள்
யான்
இதுவரை ஒருமுறை கூடச்
சென்றேனில்லை

2

இப்போது
பசை தைலமெல்லாம்
ஆயுள் முடியுமுன்னே
பயன்படுத்தத்
தொடங்கியிருக்கிறேன்
அவ்வப்போது
விநோத நூலகத்துக்குச்
சென்று வருகிறேன்.

“இதுவரை
ஏன் அப்படி நடக்கவில்லை
இப்போது
ஏன் அப்படி நடக்கிறது?”
என்று கேட்டேன்

“காரணம் அறிந்தால் கவிதை போய்
விடும்,ஜாக்ரதை”
என்றாள்
மோகினிக்குட்டி.