அவன் வயது எழுபத்து நான்கு
அவள் வயது இருபத்து நான்கு
எதுகை மோனைக்காகச்
சொல்லவில்லை
நிஜமே அப்படித்தான்
இருவரும் வெளியே போனால்
எதையும் யாரையும்
கண்டுகொள்ளாத அந்த
நகரில்
‘இவர் யார், உன் தந்தையா?’
என்று பலர்
கேட்பதுண்டு
அவள் தாய் வயது
நாற்பத்தெட்டு
தாயின் தந்தைக்கு
எழுபத்து நான்கு
அதைச்
சொன்னால்
போடா பாஸ்டர்ட்
உன் வயது இருபத்து நான்கு
என்பதுதான் என் நினைப்பு
என்பாள்
அவனை அதுவரை
அப்படி யாரும்
அழைத்ததில்லை
அடிக்கடி அவள்
அப்படி அழைக்க
வேண்டுமெனத்
தோன்றும்
தோன்றியதைச்
சொன்னதில்லை
அவளுக்குப் பணம்
வேண்டும்
பணத்துக்கொரு வேலை
வேண்டும்
வேலை தேடப் படிக்க
வேண்டும்
அதை முதலில்
செய்யென்றான்
கூடவே
தன் நாவலையும்
கொடுத்தான்
படிப்பை விட்டுவிட்டு
நாவலில் வேலை
செய்தாள்
காலை நாலு மணிக்குத்
தூங்கி
எட்டுக்கு எழுந்து
கொள்வாள்
நாவலை விட்டுவிட்டுப்
படிப்பைப் பாரென்றான்
என் உடல் பொருள் ஆவி
யெல்லாமே நீதான்டா
பாஸ்டர்ட் என்றாள்
ஒருநாள் ஒரு உணவு விடுதியில்
அவள் தட்டிலிருந்து
நண்டு ஒன்றை எடுத்துத்
தின்றான்
சில தினங்கள் சென்று
அப்படித் தன் தட்டிலிருந்து
யாரும் எடுத்தால்
ஆகாதென்றாள்
யார் தட்டிலிருந்தும்
அப்படி அவன் எடுத்ததில்லை
அதுவே முதல்
அதுவே கடைசியென்றும்
முடிவு செய்தான்
சில தினங்கள் சென்று
அதை அவளிடம் சொன்னான்
You bloody cunning bastard
என்று சொல்லி
அடித்தாள்
பலமான அடிதானெ
னென்றாலும்
இன்னும் அடித்தாலி
ன்பமென நினைத்தான்
என் காலை முத்தமிடு
என்றாள் ஒருநாள்
அந்தக் கணம்
அந்தக் கணம்
அந்தக் கணம்
—-
சொல்லக் கூடாது
இருந்தாலும்
சொல்லக் கூடாததைச்
சொல்வதுதான்
அவன் வழக்கம்
முத்தமிடும்போது
கவனித்தான்
அவள் பாதம்
முயல்குட்டியின்
முகம்போலிருந்தது