Other is Hell

இளையராஜா ரமணர் பற்றியும் இயேசு பற்றியும் உளறியிருப்பதைப் படித்தேன். இதைப் போலவேதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாப் மார்லி பற்றியும் உளறினார். அதை உளறல் என்று நான் சொன்னதும்தான் இளையராஜா பைத்தியத்திலிருந்த தமிழ்நாடே என்னைப் போட்டுத் துவைத்து எடுத்தது. இப்போது இளையராஜா பைத்தியம் கொஞ்சம் விலகி விட்டதால் அவருடைய உளறல்களை பலரும் உளறல் என்று புரிந்து கொள்கிறார்கள். அவருக்கு சாஸ்த்ரீய சங்கீதம் தவிர வேறு எதுவுமே தெரியாது. இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எதைப் பற்றியும் கருத்து சொல்லலாம் என்கிற தந்தக் கலசத்தில் அமர வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் உளறுவதுதான் ஆன்மீகம்; அவர்கள் உளறுவதுதான் அரசியல்; அவர்கள் உளறுவதுதான் தத்துவம். இதற்கு இன்னொரு உதாரணம் கமல்ஹாசனார். நல்லவேளை, ரஜினிக்குத் தன்னுடைய இடம் தெரியும். அதிகம் உளறுவதில்லை. கொள்கை என்றதுமே எனக்குத் தலை சுற்றுகிறது என்று இந்த உலகில் வேறு யார் சொல்வார்? அது போகட்டும்.

இன்றைய தினம் ஆன்மீகம் என்றால் அது மத அடிப்படைவாதம். அவ்வளவுதான். இன்னொரு விஷயம், கிறிஸ்தவ மதத்தினர் மிகத் தீவிரமாக மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அதன் விளைவாக இந்துத்துவாவும் தீவிரமடைந்து கொண்டு வருவதை ஏன் நடுநிலையாளர்கள் பார்க்க மறுக்கிறார்கள்? ஒரு கிறிஸ்தவக் கல்லூரியில் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் தன் மகளைச் சேர்க்க வருகிறது.  மதிப்பெண் மிகவும் குறைவு.  அவர்கள் இந்துவாக இருந்த போது தலித் என்பதால், அந்த தலித் இட ஒதுக்கீட்டில் இடம் வாங்குவதற்கு தேவாலயத்தின் பாதிரியார் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.  சான்றிதழில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

This family is saved from Hinduism.

இப்படிப்பட்ட மதத் துவேஷம் இன்று மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களிடத்திலும் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் அவதானிக்க வேண்டும்.  வெறுமனே இந்துத்துவாவை மட்டும் திட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

திரும்பவும் சொல்கிறேன்.  மோடி என்ற மனிதர் இந்தியாவை 1930களின் ஜெர்மனியைப் போல் ஆக்கி விட்டார்.  படித்தவர்கள் கூட, மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் கூட, நடுநிலையில் சிந்திக்கக் கூடியவர்கள் கூட இன்று இந்து மதம் அழிந்து விடப் போகிறது என்று அஞ்சுகிறார்கள்.  அதன் காரணமாக, மிக ஆபத்தான இந்துத்துவா சக்திகளின் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்கள்.

மோடியின் ஆபத்து இவர்களுக்குத் தெரியவில்லை.  இந்தியாவின் சிறப்பு இதன் பன்மைத்துவம்.  பல நூற்றுக்கணக்கான மொழிகள்.  பல ஆயிரக் கணக்கான கலாச்சாரங்கள்.  பல கடவுள்கள்.  பல வழிபாட்டு முறைகள்.  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பேச்சு, ஒரு மொழி.  இது எல்லாவற்றையும் சமமாகவே பாவிப்பது நம் முன்னோர் வாழ்ந்த முறை.  முன்னாடி எல்லாம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது என்று நான் சொல்லவில்லை.  சாதி அடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம் எல்லாமும் இருந்தது.  ஆனால் பன்மைத்துவம் போற்றப்பட்ட கலாச்சாரம் நம்முடையது.  அந்தப் பன்மைத்துவம் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.  இதை கவனியுங்கள்.

இன்று ஆன்மீகவாதிகள் என்போர் மிக மோசமான மதத் துவேஷிகளாகவும் அவசியம் ஏற்பட்டால், உணர்வுகள் தூண்டப்பட்டால் மாற்று மதத்தினரைக் கொல்லவும் தயங்காதவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.  என் மதம் அழிந்து விடப் போகிறது என்பதற்காக என் சக மனிதனை நான் எப்படிக் கொல்ல முடியும்?