அமேத்திஸ்டில் பூனையுடன் ஒரு விருந்து…

அமேத்திஸ்டில் சமீபத்தில் அராத்துவைச் சந்தித்தேன்.  அது பற்றி அவர் முகநூலில் எழுதிய பதிவு இது:

“சாருவின் மனநிலையைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். முந்தா நாள் அவரைப் பார்க்க அமேதிஸ்ட் சென்றிருந்தேன். அவரை பார்க்க மட்டும் தான் அங்கே செல்வது! நவீன கிளியோபாட்ராக்களைக் கூட சாலையோர தேநீர்க்கடைகளில் தான் சந்திப்பது.

சாரு, ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்தார். ரூ 495 /- நான் ஒரு மரினாரா பீட்சா ! அதுவும் 495 /-

சாப்பிட ஆரம்பித்தோம். ஒரு பூனை வந்து சாருவின் காலடியில் மியாவ் மியாவ் என்றது.

சாரு ஒரு சாண்ட்விச் துண்டை அதற்கு போட்டு தடவிக்கொடுத்தார். இருந்ததே 4 துண்டுகள் தான். எனக்கு பக்கென்று இருந்தது.

சரி சாரு பாவம் என்று என் பீட்சாவில் ஒரு துண்டை எடுத்து சாருவுக்கு கொடுத்தேன், அதையும் பூனைக்குப் போட்டார். திடுக்கிட்டேன்.

போய்த்தொலையிது என்று இரண்டு துண்டு பீட்சாவை சாருவுக்கு கொடுத்ததும் , அவர் ஒன்றை எடுத்துக்கொண்டு , பூனைக்கு ஒன்று போட்டார்.

பீட்சா வெல்லாம் சாப்பிட்டால் பூனைக்கு வயிறு கெட்டு விடும் என்று நைஸாக சொல்லிப்பார்த்தேன்.

அதெல்லாம் கெடாது சீனி. நல்லா பழகி இருக்கும் என்றார்.

மீதமுள்ள துண்டுகளை நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில் , பூனை மியாவ் மியாவ் என கத்திக்கொண்டு இருக்கிறது. சாரு என் தட்டையே பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

போங்கடா , நீங்களும் உங்க பிராணிகள் பாசமும் என்று, யாரையும் கண்டுகொள்ளாமல், கல் நெஞ்சாக்கிக்கொண்டு பீட்சாவை தின்று தீர்த்தேன்.

நானும் நாய் பூனை மேல் பாசம் கொண்டவன் தான். அதற்காக 5 ஸ்டார் விலையில் வாங்கி அதற்குப் போட மாட்டேன்.

ஆனால் சாரு எப்படி என்றால், இந்த கால்குலேஷனே அவர் மனதில் ஓடாது.

இப்போது பூனைக்கு பசிக்கிறது. கேட்கிறது , நம்மிடம் இருக்கிறது , போட வேண்டும் , அவ்வளவுதான்.”

அராத்து எழுதியதில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன.  இப்போதெல்லாம் நான் அமேத்திஸ்ட் போவதில்லை.  சவேராவில் உள்ள ப்ரூ ரூம்தான்.  காரணம், அமேத்திஸ்ட்டை விட ப்ரூ ரூமில் உணவு பிரமாதமாக இருக்கிறது.  மேலும், நான் ஒரு காப்பி அடிமை.  ப்ரூ ரூம் கேப்பச்சினோ போல் நான் சென்னையில் எங்குமே குடித்ததில்லை.  அப்படி ருசி.  எனவே அராத்துவும் நானும் ப்ரூ ரூம் தான் போனோம்.  ஆனால் கதீட்ரல் ரோட்டில் செல்லும் வாகன இரைச்சல் இடையூறாக இருக்கிறது என்றார் அராத்து.  ”அப்படியானால் அமேத்திஸ்ட்?” என்றேன்.  உடனே சம்மதிக்கவில்லை.  நான் பைக்கில் அல்லவா வந்திருக்கிறேன் என்றார் அராத்து.  அராத்து ஒரு தேர்ந்த ஓட்டுநர்.  அவரோடு தாய்லாந்தில் மேகாங் நதிக்கரையின் ஊடாக பைக்கில் பல காத தூரம் போயிருக்கிறேன்.  இமயத்தின் அதலபாதாளங்களில் பைக்கில்தான் அவரோடு.  ஷிம்லாவிலிருந்து லே வரை பைக்கில்.  அவ்வப்போது வேனில்.  அவ்வப்போது கணேஷ் அன்புவின் பைக்கில்.

ஆனால் ப்ரூ ரூமிலிருந்து அமேத்திஸ்ட் போகும்போதுதான் தெரிந்தது, இமயத்தில் பைக்கில் போகலாம், சென்னையில் ஆபத்து என்று.  அவருடைய ஆலிவ் க்ரீன் புல்லட்டில் பயந்து கொண்டேதான் போனேன்.  பின்னால் உள்ள கம்பியை வேறு பிடித்துக் கொண்டேன்.  ஆனால் பெண்கள் எல்லாம் எப்படித்தான் ஒரே பக்கத்தில் இரண்டு கால்களையும் போட்டுக் கொண்டு கைக் குழந்தையையும் எடுத்துக் கொண்டு மோட்டார்பைக்குகளின் பின்னே அமர்ந்து போகிறோர்களோ, கடவுளுக்கே வெளிச்சம்.

நான் சாண்ட்விச் சாப்பிடும் போது பூனை வரவில்லை.  நான்கு துண்டு சாண்ட்விச்சில் கடைசியைக் கையில் எடுத்த தருணத்தில் வந்தது.  அப்போது அராத்துவுக்கு பீட்ஸா வந்திருந்தது.  பூனை பசி என்றது.  என் கடைசி சாண்ட்விச்சைப் போட்டேன்.  முதலிலேயே வந்திருக்கக் கூடாதா என்று பலமுறை திட்டினேன்.  அராத்துவிடம் வாங்கி வாங்கிப் போட்டேன்.  என்னிடம் தீர்ந்து விட்டதை அறிந்து எதிரே இருந்த ஜோடியிடம் சென்றது பூனை.  சிக்கன் சிக்கனாக வெட்டிக் கொண்டிருந்த ஜோடி, எள்ளளவு கூட பூனைக்குப் போடவில்லை.  பூனை மீண்டும் எங்களிடம் வந்தது.  இல்லை; அராத்துவிடம் போனது.  அவர் பாட்டுக்கு சுவாதீனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  பூனை எவ்வளவு கெஞ்சியும் கொடுக்கவில்லை.  சரி, ரொம்பப் பசி போல என்று நினைத்துக் கொண்டேன்.  பூனையோ எனக்குக் கொலைப்பசி என்று சொல்லி என்னிடம் அழுதது.

என்ன கல்நெஞ்சம் கொண்ட மனிதர்கள் பாருங்கள்; இப்படி மலை மலையாக சிக்கனை முழுங்குகிரார்கள்.  ஒரு துண்டு இதற்குப் போடவில்லை என்று அராத்துவிட அரற்றினேன்.   அதுக்கு நிறைய கிடைக்கும் சாரு என்று சொல்லி ஒரு துண்டு கொடுத்தார்.  பிறகு நடந்ததைத்தான் அவரே எழுதியிருக்கிறார்.  அடுத்த முறை அமேத்திஸ்ட் போனால் கையோடு cat food எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  இந்த நிலையில் அராத்துவின் முகநூல் பதிவுக்கு யாரோ ஒரு சராசரி பின்னூட்டம் போட்டிருக்கிறது.  அதாவது, பில் நீங்கள்தானே கொடுத்தீங்க அராத்து என்று.

அந்த சராசரியின்  கேள்வி பற்றி நிறைய யோசித்தேன். சும்மாவானும் தெருவில் செல்பவரை நீங்கள் செருப்பால் அடிக்க முடியாது. மற்ற அத்தனை பேரும் சேர்ந்து உங்களைக் குப்பி அடித்து விடுவார்கள். ஆனால் முகநூலில் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்? இவர் யார்? ஆணா பெண்ணா? இவருக்கு என்னைப் பொதுவெளியில் அவமதிக்க என்ன உரிமை இருக்கிறது? இவரை நான் நேரில் பார்த்தால் நான் என்ன செய்யலாம்? அது என்னய்யா நீங்கதானே குடுத்தீங்க? மற்றவரது சொந்த விஷயத்தில் குறுக்கிட இது போன்ற ஆட்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த ஆளுக்குப் பணம் தான் தெய்வம் போல. எனக்குப் பணம் என்பது பீ துடைக்கும் பேப்பர். அது என் நண்பர்களுக்குத் தெரியும். அராத்து இதை எழுதியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். சாருவுக்குப் பணம் என்பது பீ துடைக்கும் பேப்பர் என்று அராத்து எழுதியிருக்க வேண்டும். ஆனால் ட்ராஜிக் காமெடி என்னவென்றால், அராத்து எழுதியிருப்பதே இந்த மேட்டரைத்தான். ஆனால் அதற்கு ஒரு சராசரி பணச் சாயம் பூசுகிறது. இதற்குத்தான் உங்களிடம் சண்டை போட்டேன் அராத்து, நான் பணம் கொடுக்கிறேன் என்று. நாம் ஒரு சாக்கடை சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன செய்வது?