பாரதிராஜாவுடன் என் புகைப்படத்தைப் பார்த்தவுடன் ஒரு ஆசாமி “எவ்ளோ நாள் ஓடுதுன்னு பாப்போம்” என்று முகநூலில் எழுதியிருக்கிறார். பாரதிராஜாவின் படங்களை நான் புகழ்ந்து எழுதி இருக்கும் அளவுக்கு வேறு யாரும் புகழ்ந்ததில்லை. இப்போதும் சொல்கிறேன், என்னுயிர்த் தோழன் என்ற அவருடைய படம் தமிழ்நாட்டு அரசியல் பற்றிய மிக முக்கியமான பதிவு. அவருடைய படங்களில் பாடல்களை நீக்கி, கொஞ்சம் கறாரான எடிட்டிங்கும் செய்தால் அவர் உலக அளவில் பேசப்பட்டிருப்பார். மணி ரத்னத்துக்கு அந்த அதிர்ஷம் இருந்தது. பாரதிராஜாவுக்கு இல்லை. அதனால் அவர் உலகத் தரமான இயக்குனர் இல்லை என்று அர்த்தம் இல்லை. தமிழ் சினிமாவில் இரண்டு பள்ளிகள் இருந்தன. பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா. நான் பாரதிராஜாவின் பள்ளியை ரசிப்பவன். பாலச்சந்தரின் படங்களில் சினிமா மொழி இல்லை. அவை சினிமாவும் இல்லை. நாடகங்களின் எக்ஸ்டென்ஷன் தான் பாலச்சந்தரின் படங்கள். இதுபற்றியெல்லாம் பலப் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்து விட்டேன்.
அவரோடு எனக்கு 13 ஆண்டுக் கால நட்பு உண்டு. பார்த்திபனோடு 20 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு உண்டு. வசந்த்துடன் எத்தனை ஆண்டுகள் என்றே ஞாபகம் இல்லை. அவ்வளவு பழசு. இன்னமும் வசந்தை நான் ஒரு சீரிய இலக்கிய வாசகராகவே என் மனதில் வைத்திருக்கிறேன். அவரது ஆரம்பக் கால படங்கள் பற்றியும் ரசித்தே எழுதியிருக்கிறேன்.
கொஞ்சகாலம் பழகி விட்டு சண்டை போட்டு விடுவேன் என்பது என்னைப் பற்றிய ஒரு தப்பு அபிப்பிராயம். நம்பியார் கெட்டவர் என்பது போன்ற நம்பிக்கை அது. ஜால்ரா அடிக்க மாட்டேன், உண்மை மட்டுமே பேசுவேன் என்பதுதான் அதன் பொருள். பாரதிராஜாவிடம் உங்கள் படம் நன்றாக இல்லை என்று சொல்ல அவருடைய உதவியாளருக்கே முழு உரிமை உண்டு என்கிற போது மற்ற நண்பர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சினிமா உலகில் அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்றே சொல்ல வேண்டும். இந்த அளவுக்குக் கருத்துச் சுதந்திரம் கொண்ட மனிதரை சினிமாவில் பார்ப்பது அரிது. காரணம் என்ன தெரியுமா? தன்னம்பிக்கையும் அடக்கமும்தான்.
மிஷ்கின் ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் கேட்டார். சாரு உங்களைத் திட்டியிருக்கிறாரே? அதற்கு மிஷ்கினின் பதில்: இளையராஜாவும் சாருவும் என்னை என்ன வேண்டுமானாலும் திட்டலாம். அவர்கள் இருவருக்கும் அந்த உரிமை உண்டு.
மிஷ்கின் மட்டும் அல்ல; என்னோடு பழகும் அத்தனை நண்பர்களுமே அப்படித்தான். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? என்னையும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் விமர்சிக்க உரிமை உண்டு என்பதுதான். கருத்துச் சுதந்திரம், நட்பு என்பதற்கெல்லாம் அர்த்தம் தெரியாத சில முகநூல் பதர்களுக்கு இதெல்லாம் புரியாது. காயத்ரி போன்ற என் அன்பு நண்பர்கள் அது போன்ற உதவாக்கரைகளுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.