உலகின் மிகச் சிறந்த கவிதை

’இலக்கியத்தின் படிக்கட்டுகளில் மிக உயர்ந்த தளத்தில் வீற்றிருப்பவர் புஷ்கின்;  தால்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களின் இடம் அதற்கெல்லாம் மிகவும் கீழே’ என்பது என் கருத்து.  இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் ரஷ்ய இலக்கிய மேதைகளை முதலில் பயில வேண்டும்.  இல்லையெனில் இது ஒரு அடாவடிக் கருத்தாக மட்டுமே மனதில் பதியும்.

இந்த உலகின் மிகச் சிறந்த கவிதை எது என்று என்னைக் கேட்டால் ஒருக்கணமும் யோசியாமல் புஷ்கின் எழுதிய தீர்க்கதரிசி என்று சொல்வேன்.  நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன், எழுத்தாளன் என்பவன் ஒரு கடவுள் என.  இன்றைய முகநூல் பதிவில் கூட புத்தகங்களின் கடவுளிடம் போய் ஏழு புத்தகங்களின் பெயர்களைச் சொல் என்று கேட்க எத்தனை துணிச்சல் உனக்கு என ஒருவரைக் கேட்டிருந்தேன்.  ஒவ்வொரு எழுத்தாளனும் கடவுள்தான்.

என்னுடைய அந்தக் கருத்தைப் புரிந்து கொள்ள தீர்க்கதரிசி என்ற இந்தக் கவிதையைப் படித்தால் போதும்.  எழுத்தாளன் ஏன் தீர்க்கதரிசி ஆகிறான்?  எப்படி ஆகிறான்?

புஷ்கின் சொல்கிறார்:  லௌகீக வாழ்வில் அர்த்தமில்லை என்ற ஞானம் ஒருவருக்குக் கிடைக்கிறது.  வீடு, வாசல், பொருள், புகழ் – ம்ஹும், இதிலெல்லாம் பயனில்லை.  பாரதி பாடினான் இல்லையா?

தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

இலக்கியம் படிக்காவிட்டால் மனிதன் மிருகத்துக்குச் சமானம் என்கிறார் பர்த்ருஹரி.  எனவே எனக்குப் புரிந்து விட்டது.  நான் மிருகம் அல்ல.  என் வாழ்வின் அர்த்தம் இந்த லௌகீக சாதனைகள் அல்ல.  அப்படியானால் என் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?  நான் என்ன செய்ய வேண்டும்?  சாமான்யர்கள் எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன் என்கிறார்களே?  நான் செய்வது சரியா?  நான் எங்கே போக வேண்டும்?  எனக்கு யார் வழி காட்ட முடியும்?

நீர் இல்லாவிட்டால் மரணம் அடைவதைப் போலே என் ஆன்மா துடிக்கிறது.  ஒரு இருண்ட பாலையில் கிடக்கிறேன்.  அப்போது ஒரு தேவதை கனவு போன்ற மிருதுவான தன் கைகளால் என்னைத் தீண்டுகிறது.  அப்புறம் அங்கே என்னென்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.

Tormented by spiritual thirst
I dragged myself through a somber desert.
And a six-winged seraph
appeared to me at the crossing of the ways.
He touched my eyes
with fingers light as a dream:
and my prophetic eyes opened like those of a frightened eagle.
He touched my ears
and they were filled with noise and ringing:
and I heard the shuddering of the heavens,
and the flight of the angels in the heights,
and the movement of the beasts of the sea under the waters,
and the sound of the vine growing in the valley.
He bent down to my mouth
and tore out my tongue,
sinful, deceitful, and given to idle talk;
and with his right hand steeped in blood
he inserted the forked tongue of a wise serpent
into my benumbed mouth.
He clove my breast with a sword,
and plucked out my quivering heart,
and thrust a coal of live fire
into my gaping breast.
Like a corpse I lay in the desert.
And the voice of God called out to me:
“Arise, O prophet, see and hear,
be filled with My will,
go forth over land and sea,
and set the hearts of men on fire with your Word.”

அந்த மனிதனின் நெஞ்சைப் பிளந்து உள்ளே இருக்கும் இருதயத்தை எடுத்து அதில் ஒரு அக்கினித் துண்டை வைக்கிறது தேவதை.  ஏ தீர்க்கதரிசி, இந்த அக்கினிக் குஞ்சினால் மானுட குலத்தோரின் இதயத்தைத் திற என்று சொல்லி விட்டு மேலே போகிறது தேவதை.

அதனால்தான் எழுத்தாளன் தீர்க்கதரிசி.

வாசிப்பு என்பது நடிப்பைப் போல் ஒரு கலை.  எனக்குத் தெரிந்த வகையில் ஆலன் சீலியின் கவிதை வாசிப்பில் மேடையில் ஒரு அற்புதமான நாடகமே நடந்தேறும்.  பார்வையாளர்கள் அத்தனை பேரும் வசியத்தால் கட்டுண்டவர்களைப் போல் ஆவார்கள்.

தஸ்தயேவ்ஸ்கி தன் காலத்தில் பல முறை புஷ்கினின் தீர்க்கதரிசி கவிதையை வாசித்திருக்கிறார்.  தஸ்தயேவ்ஸ்கி என்ற திரைப்படத்தில் தஸ்தயேவ்ஸ்கியாக நடிப்பவர் தீர்க்கதரிசி கவிதையை வாசிப்பது ஓர் காவிய அனுபவம்.  மொழி புரியாவிட்டாலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டோ அல்லது வைத்துக் கொள்ளாமலோ அந்த நடிகரின் தீர்க்கதரிசி கவிதை வாசிப்பைக் கேளுங்கள்.  மூன்று நிமிடம் 58-ஆவது (3.58) நொடியிலிருந்து கவிதை வாசிப்பு தொடங்குகிறது.

https://www.youtube.com/watch?v=eeY0NLkq2hI

இதே தீவிரத்துடன், இதே உணர்ச்சிக் கொந்தளிப்புடன் என்னால் என் கவிதைகளை வாசிக்க முடியும்.  பின்னணியில் chamber music லேசாக ஒலிக்க வேண்டும்.

(‘Prophet’ : Translated from the Russian by Dimitri Obolensky)