பெயர்க் காரணம்

எனக்குப் புத்தாண்டு வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. தனித்தனியே வாழ்த்து அனுப்ப முடியாததற்கு மன்னிக்கவும்.  மிகக் கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கிறேன்.  பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் தொகுதியை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  செப்பனிடுதல் என்றால் என்ன?

சி.சு. செல்லப்பா பற்றிய கட்டுரையில் இப்படி ஒரு இடம் வருகிறது:

”இந்தப் போராட்டத்தின் பயனாக பிரிட்டிஷ் அரசு சில இடங்களைத் தவிர மற்ற ஊர்களில் மக்கள் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று தான் போட்ட சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.”

1920களில் பிரிட்டிஷ் அரசு இந்தியர் யாரும் வாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று ஒரு சட்டம் போட்டது.  அதன்படி பனையேறிகளையும், இளநீர் விற்பவர்களையும் – ஏன், காய்கறி விற்போரைக் கூட கைது செய்யலாம்.  இதை எதிர்த்து வாளேந்தும் போராட்டம் என்று ஒரு போராட்டத்தைத் தமிழர்கள் முன்னெடுத்தார்கள்.  இது பின்னர் மதறாஸிலிருந்து இந்தியா முழுவதும் பரவி, அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இப்போது பின்வரும் வாக்கியத்தைப் படியுங்கள்.

”இந்தப் போராட்டத்தின் பயனாக பிரிட்டிஷ் அரசு சில இடங்களைத் தவிர மற்ற ஊர்களில் மக்கள் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று தான் போட்ட சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.”

மேலே ‘பயனாக’ என்பதை விட விளைவாக என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்.  இதை விட முக்கியமான விஷயம், இரண்டாவது மூன்றாவது வரிகள்.  மக்கள் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று தான் போட்ட சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.  தப்பாச்சே?  ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று அரசு சட்டம் போடவில்லையே?  ஆக, இந்த வாக்கியத்தைச் செப்பனிட வேண்டும்.  இப்படி எழுதலாம்:

”இந்தப் போராட்டத்தின் விளைவாக பிரிட்டிஷ் அரசு மக்கள் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தான் போட்ட சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு,  சில இடங்களில் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று மறு வரையறை செய்தது.”

 

இப்படியெல்லாம் இன்று கவனமாகத் தமிழைப் பயன்படுத்துவோர் அரிதாகவே உளர். போகட்டும்.  பழுப்பு நிறப் பக்கங்கள் வேலை தவிர மற்றுமொரு வேலை, கு.ப.ரா.வின் சிறுகதைகள் மட்டும் கட்டுரைத் தொகுப்பைப் படிக்க வேண்டும்.  வரும் 21-ஆம் தேதி கு.ப.ரா. பற்றி ஒன்றேகால் மணி நேரம் பேச இருக்கிறேன்.  மேற்கோள்களைப் படிக்க வேண்டாம் என்று ஒரு சில அன்பர்கள் சொல்வதால் படிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.  உங்கள் கருத்து என்ன? இன்னும் இது போல் பல வேலைகள்.

இதற்கிடையில் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாத காயத்ரி ஆர்., அராத்து, ஸ்ரீராம், ராம்ஜி, ரமா சுரேஷ், குமரேசன், கார்ல் மார்க்ஸ், ப்ரியா கல்யாணராமன், மதுரை அருணாசலம், ஷாலின் போன்றவர்களை என் உள்வட்ட நண்பர்களாக மனதில் நினைத்து மகிழ்ந்தேன்.

மாதத்தில் இரண்டு முறை ரோட்டரி கிளப் கூட்டங்களில் கலந்து கொண்டு முக்கால் மணி நேரம் உரையாற்றுகிறேன்.  சன்மானம் எதுவும் கிடையாது.  நானே தான் வாடகைக் காரில் போகவேண்டும்.  போக வர 300 ரூ ஆகும்.  இப்படி 300 ரூ. செலவு செய்து அங்கே போய் பேசி ஆகப் போவது என்ன என்று தோன்றும்.  மேலும், அங்கே உள்ள நண்பர்களில் பலரும் என் பெயரை அப்போதுதான் முதல்முதலாகக் கேள்விப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  ஒரு ரோட்டரி கிளப்பில் சாரு நிவேதா என்று போட்டுப் பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள்.  இன்னொரு கிளப்பில் அப்துல் கலாம் எழுதிய குழந்தைக் கதைகள் என்ற 30 பக்க புத்தகம் கொடுத்தார்கள்.  அன்பளிப்பாம்.  அந்தக் காலத்துப் பாட்டுப் புத்தகம் போல் இருந்தது.

இதையெல்லாம் ஏன் செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.  ஏதோ பாவம் பண்ணி இங்கே வந்து பிறந்து விட்டேன்.  நாய் வேஷம் போட்ட பிறகு பாடாமல் இருக்க முடியுமா?  (பழமொழியை மாற்றி விட்டேனே என்று பார்க்கிறீர்களா?  தோழர் ஸ்டாலினின் பேச்சைக் கேட்டுக் கேட்டு இப்படி ஆகி விட்டது; பொறுத்துக் கொள்ளுங்கள்!)

 

சமயங்களில் நல்ல இடங்களும் அமைகின்றன.  லஸ்ஸில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் செண்ட்டரில் பேசிய அசோகமித்திரன் உரை ஒரு விதிவிலக்கு.  அதேபோல் தான் இருந்தது ஹிப்னாடிக் சர்க்கிளில் பேசியது.  மொத்தம் 80 பேர் வந்திருந்தனர்.  ஒன்றேகால் மணி நேரம் ஏன் இலக்கியம் என்ற தலைப்பில் பேசினேன்.  பலருக்கும் பேச்சு பிடித்திருந்தது.  ஒரே ஒரு உள்வட்டம் மட்டும் “பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை” என்று சொன்னது.  நான் என்ன தமிழருவி மணியனா பேசி அசத்த?

சுவாரசியம் என்னவென்றால், என் புத்தகங்களை அங்கே விற்கலாம் என்று பதிப்பாளரிடம் சொல்லியிருந்தேன்.  எல்லா தலைப்பிலும் பத்துப் பத்து புத்தகம் எடுத்துப் போகலாம் என்றார்.  நான் இருபது இருபது என்றேன்.  மார்ஜினல் மேன் 20, பைஸாண்ட்டியம் 20, நிலவு தேயாத தேசம் 20, ஸீரோ டிகிரி 20, unfaithfully yours 20.  பேசி முடித்து எல்லோரும் வடை சாப்பிட்ட பிறகு ராம்ஜியிடம் எத்தனை பிரதி போயிற்று என்றேன்.  வள்ளலாரின் முகபாவத்தில் மூன்று என்றார்.  நான் என்னென்னவெல்லாம் நினைத்தேன் என்று இங்கே பதிவிட முடியாது.  கொஞ்சம் நேரம் கழித்துக் கிளம்பும் போது மொத்தமாக 10 பிரதிகள் விற்றிருந்தன. எடுத்துக் கொண்டு போன 100 புத்தகங்களும் எப்பேர்ப்பட்ட சுமை!  முழுக்க முழுக்க தவறு என்னுடையதே.  படிக்கவே மாட்டோம் என்று சபதம் போட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இப்படித்தான் நடக்கும்.

இனிமேல் கலாமின் வழியைப் பின்பற்றலாம் என்று இருக்கிறேன்.  எங்கேயாவது அவரைப் பேச அழைத்தால் தன்னுடைய அக்கினிச் சிறகுகள் நூலில் 200 பிரதிகளை வாங்கி விடச் சொல்வார்.  கல்லூரிகளாக இருந்தால் 200.  இது போன்ற கிளப்புகளில்  50 என்று நினைக்கிறேன்.

விடுங்கள்.  இதெல்லாம் எழுத்தாளனின் வாழ்வில் சகஜம்.  எதற்காக நான் இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன் என்பதைச் சொல்லி விடுகிறேன்.  ஹிப்னாடிக் சர்க்கிளில் ஒரு முதியவர் என்னிடம் பேசினார்.  என்னுடைய நிலவு தேயாத தேசம் அவர் கையில் இருந்தது.  என் தொலைபேசி எண் கேட்டார். கொடுத்தேன்.  மறுநாள் காலை எட்டு மணிக்கு அவரிடமிருந்து போன்.  சார், உங்களுடைய பெயர்க் காரணம் என்ன?

அடக் கடவுளே, எழுத்தாளனுக்கு மீட்சியே கிடையாதா?  பெயர்க் காரணம் எல்லாம் கூகிளைப் பார்த்தால் தெரியாதா?  இந்தியர்களுக்கு வாழைப் பழத்தை உரித்து வாயில் போட்டால் கூட வலிக்கும்.  சாறாகப் பிழிந்து வாயில் புகட்ட வேண்டும்.  இதோ நானே கூப்பிடுகிறேன் என்று சொல்லி அவரிடமிருந்து தப்பினேன்.  பிறகு மறுநாள் காலை எட்டு மணிக்கு அவரிடமிருந்து போன்,. அதே கேள்விதான்.  ஆனால் என் பெயரை மறந்து போனார்.  சாரு லதான்னு வச்சிருக்கீங்களே, அந்தப் பெயர்க் காரணம் என்ன?  இதோ நானே கூப்பிடுறேன் சார் என்று சொல்லித் தப்பி விட்டேன்.

எப்பேர்ப்பட்ட சூழலில் வாழ வேண்டியிருக்கிறது பாருங்கள்!  இப்படி ஒரு philistine சமூகம் இந்த உலகிலேயே இருக்க வாய்ப்பு இல்லை.