லேடீஸ் தேசிகா தெருவில் கு.ப.ரா.வும் நானும்…

கு.ப.ராஜகோபாலன் என்  மனதுக்குப் பிரியத்துக்குரிய எழுத்தாளர்.  கும்பகோணத்துக்காரர்.  தஞ்சை மாவட்டம் என்றால் எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு.  தமிழ் இலக்கியமே ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் தான் குடியிருந்தது.  அதிலும் கும்பகோணத்தில்.  அதிலும் ஒரு குறிப்பிட்ட தெருவில்.

கு.ப.ரா. பற்றி சுமார் ஒரு மணி நேரம் பேச இருக்கிறேன்.  அது பற்றிய அழைப்பிதழ் இதோ:

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 35

                   கு.ப. ராஜகோபாலனும்  நானும்

சிறப்புரை :     சாருநிவேதிதா

இடம் :             ஸ்ரீராம் குரூப் அலுவலகம்

மூகாம்பிகை வளாகம்

4 லேடீஸ் தேசிகா தெரு

ஆறாவது தளம்

மயிலாப்பூர்

சென்னை 600 004

(சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

தேதி 21.04.2018 (சனிக்கிழமை)

நேரம்  மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு :   நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர்,  கட்டுரையாளர், சிறந்த பேச்சாளர்.

அனைவரும் வருக,

அன்புடன்

அழகியசிங்கர்

9444113205

(சிறந்த பேச்சாளர் என்று போட்டது அழகிய சிங்கர், நான் அல்ல.  எனவே அது பற்றிய தங்கள் ஆட்சேபணைகளை அவருக்கே போன் போட்டு சொல்லி விடவும்…)

மேற்கண்ட அழைப்பிதழில் உள்ள தெருவின் பெயர் தான் என்னைப் பெரிதும் குழப்பி விட்டது.  அது என்ன லேடீஸ் தேசிகா தெரு.  தேசிகா தெரு என்ற பெயரே குழப்பி அடிக்கிறது.  விசாரித்ததில் அது தேசிகாச்சாரி தெருவாம்.  சாரி ஜாதிப் பெயர்.  ஆனால் அந்தத் தெருவுக்குப் பத்தடி தள்ளி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் சாலை உள்ளது.  அந்தத் தேவரை இப்படி எழுதியிருக்கிறார்கள்.  பசும்பொன் முத்துராமலிங்கம் (தேவர்) சாலை.  அதேபோல் மற்ற சாதிகளுக்கும் – குறிப்பாக பிராமண உபஜாதிகளுக்கும் பிராக்கட் போட்டால் இந்தக் குழப்பம் இல்லை அல்லவா?

சரி, அது என்ன, லேடீஸ் தேசிகா தெரு,  லேடீஸ் ஆஃப் தேசிகா தெருவா, அவர் என்ன நம் மார்க்கி தெ சாத் மாதிரியா என்றெல்லாம் சிந்தனை எனக்குக் குழப்பி அடித்தது.  அழகிய சிங்கரை அழைத்தேன்.  அவரோ விசாரிக்கிறேன் என்று சொல்லி விட்டார்.  நாளோ நெருங்கிக் கொண்டிருக்கிறது.  என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது என் பேண்ட் பாக்கெட்டில் அழகிய சிங்கரின் குரல் கேட்டது.  தொழில்நுட்பம்தான் எப்படியெல்லாம் மாறி எப்படியெல்லாம் மேஜிக் காண்பிக்கிறது!  என் அலைபேசியின் மூலம் யாரையாவது அழைத்துப் பேசி விட்டு அந்தப் பெயரை பட்டியலிலிருந்து நீக்காவிட்டால் அலைபேசியிலிருந்து அவருக்குத் தானாகவே போன் அழைப்பு போகும்.  இது எத்தனை பெரிய வாழ்க்கைப் பிரச்சினை பாருங்கள்.

நான் என் நண்பர்களோடு பேசும் போது பு, சு, கூ, மு.பு., கே.பு., கே.கூ., எல்லாம் படு சகஜமாகப் பயன்படுத்துவேன்.  ஒருநாள் அவந்திகா என்னிடம் போனில் ஜாக்கிரதையாக இரு என்றாள்.  ஏன் என்றேன். உன்னிடமிருந்து கால் வந்தது.  எடுத்தால் நீ ராகவனோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தாய்.  எனக்கு விரைக்கொட்டை வயிற்றுக்குள் போய் விட்டது.  ஆனால் காண்பித்துக் கொள்ளாமல் என்ன பேசினேன் என்றேன்.  ஏதோ செல்லப்பாங்கிறவரைப் பத்தி ஆவேசமாப் பேசிட்டிருந்தே.  யாரு சி.சு. செல்லப்பாவா?  தெரியல.  ஆனா புஸ்தகம்லாம் போட்டுத் தோளில் சுமந்து வித்தார் அது இதுன்னு சொல்லிட்டு இருந்தே.   ஒரு பத்து நிமிஷம் கேட்டேன்.  அப்புறம் போர் அடிச்சு வச்சுட்டேன்.  இதுவே நானா இருக்கக் கண்டி போச்சு.  வேற யாருக்காவது போயிருந்தா என்னா ஆயிருக்கும்?

பகவான் தான் காப்பாற்றினார்.  ஏனென்றால், என்ன ஒரு ஆன்மிக சமாச்சாரமாகவே இருந்தாலும் அதை Slum slangs போடாமல் பேசத் தெரியாது எனக்கு.  மேலும்…

சரி, அழகியசிங்கர் குரல் கேட்டு அந்த லேடீஸ் விஷயத்தைக் கேட்டேன்.  அழகிய சிங்கர் இருக்கிறாரே, அவர் நிஜமாலுமே அழகியசிங்கர்தான்.  அவரிடம் போய் லேடீஸ் விஷயம் பேசும்படி ஆனது.

அப்புறம் நீண்ட நேரம் கூகிளில் தேடியதில்தான் தெரிந்தது, அது லேடி தேசிகா தெரு.  அடப் பாவிகளா, தேசிகாச்சாரியின் மனைவி ’பெயரில்’ (!) அமைந்த தெரு.

அவசியம் வந்து விடுங்கள்.  லேடி தேசிகா தெரு. ஆழ்வார்ப்பேட்டையில் சி.பி. ராமசாமி சாலையில் உள்ள பாலத்துக்குக் கீழே உள்ள இடம்.  ஸ்ரீராம் குரூப் அலுவலகம், மூகாம்பிகை வளாகம், ஆறாவது வளாகம், 4 லேடி தேசிகாச்சாரி தெரு, ஆழ்வார்ப்பேட்டை.

21.04.2018 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 6.00 மணி

 நுழைவுக் கட்டணம் இல்லை.