அடிப்படைவாதிகள் சொல்லும் செய்தி!

இன்று எனக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தைப் படித்து மிகவும் அதிர்ந்து போனேன்.  ”எஸ்.வி.சேகர் அப்படி ஒரு முகநூல் குறிப்பைப் பகிர்ந்தது தப்புதான்.  அதற்குத்தான் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே, அப்புறம் என்ன?  ரொம்பத்தான் ஓவரா பண்றாங்க எல்லாரும்.”

இதை எழுதியிருப்பது ஒரு பெண்.  எஸ்.வி. சேகர் பகிர்ந்து கொண்ட குறிப்பு என்ன சொன்னது தெரியுமா?  அதை விட அசிங்கமாக பெண்களை யாரும் பேசி விட முடியாது.   பத்திரிகைகளில் வேலை செய்யும் பெண்களை மட்டும் அது குறிக்கவில்லை.  ஒட்டு மொத்தமாகப் பெண்களைப் பற்றிக் கேவலமாக நினைக்கும் ஒருவர்தான் அப்படி எழுத முடியும்.  அதை நான் இங்கே மேற்கோள் கூட காண்பிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.  ’எந்தப் பெண்ணும் படுக்க அழைத்தால் வந்து விடுவாள்’ என்று நினைக்கும் காவாலிப்பயல்தான் அப்படி எழுத முடியும்.  இதைப் படிக்காமல் பகிர்ந்து கொண்டு விட்டேன் என்று எஸ்.வி. சேகர் சொல்வது பொய்.  அந்தக் குறிப்பு ஒரு நாலு வரி.  அதில் வரும் வார்த்தைகள் முகத்தில் தடியால் அடிக்கக் கூடியவை.  அதை எப்படி ஒருவர் படிக்காமல் பகிர முடியும்?

எஸ்.வி. சேகர் மீது எல்லோரும் கொந்தளிப்பது ஏன் தெரியுமா?  எனக்குக் கடிதம் எழுதிய அம்மணி இங்கே கொஞ்சம் கவனிக்க வேண்டும்.  பெண்கள் பப்புக்குப் போகக் கூடாது என்கிறார்கள்.  யார்?  எஸ்.வி. சேகர்கள்.  நரேந்திர மோடிகள்.  பெங்களூரில் பப்புக்குள் புகுந்து அங்கே குடித்துக் கொண்டிருக்கும் பெண்களை அடித்துத் துரத்திய காவிகள்.  நிர்பயா என்ற பெண்ணை ஐந்து பேர் வன்கலவி செய்து கொன்றார்கள் இல்லையா?  அப்போது அந்தக் குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் என்ன சொன்னார் தெரியுமா?  என் பெண் அப்படி இரவில் தன் ஆண் நண்பரோடு போயிருந்தால் அவளை உயிரோடு கொளுத்தியிருப்பேன்.  இதுதான் இன்றைய இந்தியக் காவிகளின் செய்தியாக இருக்கிறது.  பெண்ணே, நீ தாய்.  நீ காளி.  நீ இந்திய மாதா.  உன்னை வணங்குகிறோம்.  எதுவரை?  நீ படி தாண்டாத வரை.  படியைத் தாண்டினால் உன்னைக் கொளுத்துவோம்.  இதுதான் காவிகளின் பெண் கோட்பாடு.  இதுதான் தாலிபானின் கருத்தும் கூட.  எல்லா அடிப்படைவாதிகளின் கொள்கைகளும் அடிப்படையில் ஒன்று போலவே தான் இருக்கும்.

அம்மணி, எஸ்.வி. சேகரின் கூற்றை (அதாவது, அவர் பகிர்ந்து கொண்டதை) நீங்கள் இன்றைய சூழலின் நடுவே வைத்துப் பார்க்க வேண்டும்.  வட இந்தியாவில் கிராமங்களில் முஸ்லீம்களையும் தலித்துகளையும் அடித்துக் கொல்கிறார்கள்.  இது குறித்த பல கள ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  இதையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டும்.  காஷ்மீரில் என்ன நடந்தது?  கோவிலில் வைத்து முஸ்லீம் சிறுமியை ஒரு கூட்டமே வன்கலவி செய்து சிதைத்துக் கொன்றது.  ஒரு போலீஸ்காரர் அந்தச் சிறுமியின் முதுகில் தன் முழங்காலை வைத்து உடம்பை இரண்டாக உடைத்திருக்கிறார்.  அம்மணி, அந்தச் சிறுமியை உங்கள் மகளாக நினையுங்கள்.  ஆனால் அப்படிச் செய்த குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள பிஜேபி எம் எல் ஏக்கள் இரண்டு பேர் ஊர்வலம் போயிருக்கிறார்கள்.  இது என்ன விதமான சமிக்ஞையைத் (signal) தருகிறது.  ஆசிஃபா நம் மகள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி, ஆசிஃபாவை வன்கலவி செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போன தன் கட்சி எம்மெல்லேக்களை ஏன் ஜெயிலில் தூக்கிப் போடவில்லை?  வன்கலவி குற்றத்துக்கு ஆதரவாக ஊர்வலம் போவது குற்றம் இல்லையா?

இப்போது, இந்தச் சூழலில் எஸ்.வி. சேகர் பகிர்ந்த கருத்தைப் பாருங்கள்.  பெண்கள் மீது அடிப்படையிலேயே மரியாதை இல்லாத, பெண்ணடிமைத்தனத்தைப் பேணுகின்ற ஒருவர் தான் இப்படியெல்லாம் பேச முடியும்.  ஒரு சிவில் சமூகத்தில் பத்திரிகையில் வேலை செய்யும் பெண்களெல்லாம் முதலாளிகளோடு படுத்தவர்கள் என்று எழுதியவரையும் பகிர்ந்தவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதுதான் முறை.  மன்னிப்புக் கேட்டால் ஆயிற்றா?

இப்போது நடப்பதைத்தான் நான் கடந்த ஒரு ஆண்டாக எழுதி வருகிறேன்.  இந்தியாவின் படித்த வர்க்கமே ஃபாஸிஸ்டுகளாக மாறி வருகிறது.  படித்தவர்களே வன்முறையைக் கையில் எடுக்கத் துணிகிறார்கள்.  படுத்தால்தான் பத்திரிகை வேலை கிடைக்கும் என்று எழுதுகிற துணிச்சல் வேறு ஆட்சியில் எவனுக்காவது வருமா அம்மணி?  அடிப்படைவாதிகளையும், வன்முறையாளர்களையும், ஃபாஸிஸ்டுகளையும் மோடி அரசு தூண்டி விடுகிறது.  இந்தியா படுகுழியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

அம்மணி, ஹிட்லருக்கு எதிராக மார்ட்டின் என்ற பாதிரி எழுதிய கவிதையை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.  இந்தக் கவிதை இப்போது இந்தியாவில் அர்த்தமாகும் தருணம் வந்து விட்டது.

First they came for the Socialists, and I did not speak out—

Because I was not a Socialist.

Then they came for the Trade Unionists, and I did not speak out—
Because I was not a Trade Unionist.

Then they came for the Jews, and I did not speak out—
Because I was not a Jew.

Then they came for me—and there was no one left to speak for me.