எஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை?

ஹலோ சாரு, என் பேர் ———————– உங்க கிட்ட ஒரு தடவ பேசிருக்கேன்.  இன்னிக்கு உங்கக் கட்டுரை நல்லா இருந்தது.  தொடர்ந்து தீவிரமா இந்த மாதிரி உருப்படியான விஷயங்கள எழுதுங்க.  நன்றி…

என் வாட்ஸப்பில் இப்படி ஒரு குறுஞ்செய்தி இன்று காலையில் வந்திருந்தது.  இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.   நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  கடித நபரின் வயதே அத்தனை இருக்குமா தெரியாது.  இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஆறு நூல்களே நாவல்கள்.  மற்றதெல்லாம் மேற்படி நபர் சொல்லும் ‘உருப்படியான’ விஷயங்கள்தான்.  அதில் ஒரு புத்தகத்தைக் கூட இந்த நபர் படித்திருக்க மாட்டார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.  ஏன் உறுதியாகச் சொல்கிறேன் என்றால், இம்மாதிரி முகநூல் போராளிகள் பெரும்பாலானோர் புத்தகம் எதுவும் படிப்பதில்லை.  ஒட்டு மொத்தத் தமிழ் சமூகமே புத்தகம் படிப்பதில்லை என்கிற போது அதிலிருந்து வரும் இந்த சமூகக் கொழுந்து மட்டும் எப்படிப் படித்திருக்கும்?  வாய்ப்பே இல்லை.

பிரச்சினை என்னவென்றால், எஸ்.வி. சேகரைப் போன்ற நிரட்சரகுட்சிகள்தான் இப்படிப்பட்ட சமூக ஆர்வக் குஞ்சுகளும்.  எஸ்.வி. சேகர்களை எவ்விதமான மனோபாவம் இயக்குகிறதோ அதேவிதமான மனோபாவம்தான் இந்த சமூக ஆர்வக் குஞ்சுகளையும் இயக்குகிறது.  புரியும்படி சொல்கிறேன்.  எஸ்.வி. சேகர்களை இயக்குவது நிலப்பிரபுத்துவ சிந்தனை.  பெண் என்பவள் ஒரு ஓட்டை.  அவ்வளவுதான்.  ஆண்கள் படுத்து எழுவதற்கான ஒரு போகப் பண்டம்.  டாய்லட் மாதிரி.  அடேய், தாய் போன்ற புனிதவதிகளுக்கும் இதேதான் கதியா என்று கேட்டால் அவர்களிடம் அதற்கான பதிலும் தயாராக இருக்கும்.  படுப்பதைத் தவிர பெண்களுக்குக் கடவுள் கொடுத்துள்ள மற்றொரு வேலை, ஆணின் விந்தைச் சுமந்து குழந்தை பெற்றுத் தருவது.  இப்படிப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர்களே இந்து மத அடிப்படைவாதிகளும் தாலிபான்களும் ஆவர்.

எல்லா ஃபாஸிஸ்டுகளின் அடிப்படையும் இயங்குதளமும் இதுதான்.  அதனால்தான் சொன்னேன், எஸ்.வி.சேகரும் எனக்குக் கடிதம் எழுதிய சமூகக் குஞ்சும் ஒன்றுதான் என்று.  சமூகக் குஞ்சுவைப் பொறுத்தவரை, ஒரு எழுத்தாளன் என்றால் சமூகத்தில் நிகழும் அநீதிகளைக் கண்டிக்க வேண்டும்.  கண்டிக்காதவன் உருப்படியாக எதுவும் செய்யாதவன்.  அது போன்ற ஆட்களை அடித்து உதைக்கலாம்; நாடு கடத்தலாம்.  உலகம் பூராவும் கம்யூனிஸ்டுகள் செய்தது அதைத்தானே?  எழுத்தாளர்களை வதை செய்ததில் கம்யூனிஸ்டுகள் நாஜிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.  இதுவரை உலக சரித்திரத்திலேயே கம்யூனிஸ்டுகளால்தான் அதிக அளவிலான எழுத்தாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; கொல்லப்பட்டிருக்கிறார்கள்.    இப்போதைய இந்து அடிப்படைவாதிகளுக்கும் நாஜிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.  பெர்லின் நகரிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள ஷாஸன்ஹாஸன் வதைமுகாமில் ஒரு இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன்.  அது ஹோமோசெக்‌ஷுவல்கள் கொல்லப்பட்ட இடம்.  இப்போது எஸ்.வி.சேகரும் மற்ற இந்துத்துவத் தடியர்களும் பத்திரிகைகளில் பணிபுரியும் பெண்களைப் பற்றி இத்தனை துவேஷமாகப் பேசுகிறார்களே, இவர்கள் லெஸ்பியன்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?  கொல்ல வேண்டும் என்பார்கள்.  ஒரு லெஸ்பியனை ஹெச். ராஜாவும் எஸ்.வி. சேகரும் எப்படிப் பரிகசிப்பார்கள் என்று மனதில் கற்பனை செய்து பார்க்கிறேன்.  நாஜிகளிடம் இருந்த அதிகாரம் இவர்களிடம் தற்சமயம் இல்லை.  அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டால் லெஸ்பியன்கள் அடித்துக் கொல்லப்படுவார்கள்.

இவர்களைப் போன்றவர்களே கம்யூனிஸ்டுகளும்.  எனக்குக் கடிதம் எழுதிய சமூக ஆர்வக் குஞ்சும் இப்படிப்பட்டதுதான்.  அவரை எனக்குத் தெரியாது.  ஒருமுறை பேசியது ஞாபகமும் இல்லை.  ஆனால் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.  ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எழுத்தாளர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றது இது போன்ற கம்யூனிஸக் குஞ்சுகள்தான்.

ஒரு எழுத்தாளன் என்ன எழுத வேண்டும் என்று சொல்ல நீ யார்?  யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று சொன்ன கவிஞனின் பெயர் தெரியுமா உனக்கு?  நான் இந்தியன் அல்ல; பாகிஸ்தானி அல்ல; பாங்ளா தேஷி அல்ல; எனக்குத் தேசமே கிடையாது.  எமனைக் கண்டே அஞ்சாதவர்கள் நாங்கள்.  நாங்கள் எழுத்தாளர்கள்.  எழுத்தாளர்கள் பறவைகளைப் போன்றவர்கள்.

இந்திய சரித்திரத்தில் சுதந்திரப் போராட்டத்தைப் போன்ற ஒரு கொந்தளிப்பான கட்டம் எதுவும் இல்லை.  ஆனால் தமிழ் இலக்கியத்தின் மேதைகள் எனச் சொல்லத்தக்க க.நா.சுப்ரமணியனோ, தி. ஜானகிராமனோ, கு.ப.ராஜகோபாலனோ, லா.ச.ராமாமிர்தமோ யாருமே சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு வார்த்தை – கவனியுங்கள் – ஒரு வாக்கியம் அல்ல;  ஒரு வார்த்தை கூட  எழுதவில்லை.  (சி.சு. செல்லப்பா மட்டுமே வ் விதிவிலக்கு) அதனாலேயே அவர்களை எழுத்தாளர்கள் என்று ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? மாட்டார்கள்.  ஏனென்றால், எஸ்.வி.சேகர்களைப் போலவே இந்த சமூக ஆர்வக் குஞ்சுகளுமே ஒரு ஒட்டு மொத்த ஃபிலிஸ்டைன் சமூகத்தின் அடையாளங்கள் ஆவர்.

நேற்று என் வாசகியிடமிருந்து அப்படி ஒரு கடிதம் வந்திருக்காவிட்டால் இந்த எஸ்.வி.சேகர் விவகாரம் பற்றி எழுதியே இருக்க மாட்டேன்.  ஏனென்றால், உருப்படியாக செய்வதற்கு வேறு எத்தனையோ பணிகள் காத்துக் கிடக்கின்றன.  எஸ்.வி.சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்கள் சமூக வெளியில் உளறிக் கொட்டுவதற்கெல்லாம் என்னைப் போன்ற ஒரு எழுத்தாளன் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றால் ஒரு நாளில் அவன் வேறு எந்த வேலையுமே செய்ய முடியாது.

இந்தியாவில் வாழ்வதையே ஒரு அவலம் என்று நினைக்கிறேன் நான்.  அதிலும் தமிழில் எழுதுவது அவலத்திலும் அவலம்.  (சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்: இந்தியாவோ தமிழோ அவலம் அல்ல;  இந்த இரண்டையும் அவலமாக மாற்றியிருக்கும் மனிதர்களையே சாடுகிறேன்.)   என்னிடம் பணம் இருந்தால் என் இறுதி நாள் வரை உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருப்பேன்.  இல்லாததால் என் அறையில் அமர்ந்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  மற்றபடி நான் என்ன எழுத வேண்டும் என்பதைச் சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை.  இது பற்றி சுந்தர ராமசாமியின் அழகான கவிதை ஒன்று உள்ளது.  அதை எனக்கு அறிவுரை சொல்லப் புகுந்த நிரட்சர குட்சிக்கு வாசிக்க வைக்கிறேன்.

 

உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி 

 நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

 எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

 எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

 ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு.

சுந்தர ராமசாமி

கொல்லிப்பாவை அக்டோபர் 1985