ஒரு லெஜண்ட் பற்றி மற்றொரு லெஜண்ட்!

நாளை தில்லி செல்கிறேன்.  அங்கிருந்து நாளை மறுநாள் காலை ஆறு மணிக்கு புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் ரயிலில் நைனிட்டால் செல்கிறேன்.  அடுத்த மூன்று தினங்களும் ஆஷிஷ் நந்தியுடன் கலந்துரையாடல்.  அமார்த்யா சென் பொருளாதாரத்துக்கு என்றால் ஆஷிஷ் நந்தி சமூகவியல் மற்றும் உளவியல் துறையில்.  நோபல் கிடைத்திருக்க வேண்டும்.  இனிமேலும் கிடைக்கலாம்.  வங்காளம் தான் இப்படி அறிஞர்களையும் கலைஞர்களையும் உருவாக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது.  தாகூர், ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மஹாஷ்வேதா தேவி, எம்.என் ராய், தேவி ப்ரஸாத் சட்டோபாத்யாய, அமார்த்யா சென், ஆஷிஷ் நந்தி.  புகழ்பெற்ற பத்திரிகையாளரான ப்ரித்திஷ் நந்தி ஆஷிஷின் சகோதரர் ஆவார்.  வங்காளிகள் நோபல் பரிசை கியூவில் நின்று வாங்குகிறார்கள்.  நாம் காலா டிக்கட்டை முதல் ஷோ வாங்குவது எப்படி என்று யோசிக்கிறோம்.  சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

ஆஷிஷ் நந்தியுடனான உரையாடலுக்காக நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும் அல்லவா?  40 ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரைப் படித்ததோடு சரி.  உரையாடலுக்கு என்றால் அவருடைய ஒரு புத்தகத்தையாவது படிக்க வேண்டாமா என்று இன்று காலையிலிருந்து பரீட்சைக்குப் படிப்பது போல் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பதிப்பாளரும் நண்பருமான ராம்ஜி, வண்ணநிலவனின் சிறந்த கதை எது என்றார்.  எல்லோரும் சொல்வதை வைத்து எஸ்தர் என்று சொல்லி விட்டேன்.  வண்ணநிலவனை நான் தி.ஜா., போலவோ, அசோகமித்திரன், ஆதவன், எம்.வி.வெங்கட்ராம், லா.ச.ரா. போலவோ ஆழ்ந்து வாசித்ததில்லை என்றாலும் தமிழ் இலக்கியத்தில் அவர் இடம் என்ன என்று தெரியும் அளவுக்கு வாசித்திருக்கிறேன்.

ஜனவரியில் நடந்த சென்னை புத்தக விழாவில் நற்றிணை அரங்கில் திடீரென்று வண்ணநிலவனைப் பார்த்தேன். அப்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கைச் சேர்ந்த காயத்ரியும் அங்கே நின்று கொண்டிருந்தார்.  வண்ணநிலவனை அவருக்கு அறிமுகப்படுத்தி சமகாலத் தமிழ் இலக்கியத்தின் legend-களில் ஒருவர் என்றேன். வண்ணநிலவன் சற்று வியப்புடன் என்னைப் பார்த்தார்.

ராம்ஜியிடம் எஸ்தர் என்று சொல்லி விட்டதால் எஸ்தரைப் படித்தேன்.  இன்று நான் ஒரு நிமிடத்தைக் கூட அஷிஷ் நந்தியைத் தவிர மற்ற காரியங்களில் செலவிடக் கூடாது.  அவரைப் படிக்காமல் அவருடனான உரையாடலே சாத்தியமில்லை.  இப்போது நான் எஸ்தர் படிப்பது குற்றம்.  ஆனாலும் படித்தேன்.  படித்ததோடு போயிற்றா, இப்போது உட்கார்ந்து தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.  ஆஷிஷ் போனால் போகிறார்.  இப்போது எஸ்தர் முக்கியம்.

உலகின் பத்து முக்கியமான சிறுகதைகளில் ஒன்று என தஞ்சை ப்ரகாஷின் பொறா ஷோக்கு சிறுகதை பற்றி நான் சொல்வதுண்டு. அந்தப் பத்தில் எஸ்தரையும் சேர்த்துக் கொள்ளலாம்.  அட அடா, கதையா இது, காவியம்.  ஏழெட்டுப் பக்கங்களில் ஒரு காவியம்.  லூயிஸ் புனுவல் மெக்ஸிகோவில் இருக்கும் போது எடுத்த படங்களை இந்தக் கதை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.  அடுத்து ஞாபகம் வருவது யுவான் ருல்ஃபோவின் பெத்ரோ பாரமோ.  இந்த நாவலை ஆரம்பத்திலிருந்து முடியும் வரை, முடிவிலிருந்து ஆரம்பம் வரை மனப்பாடமாகச் சொல்ல முடியும் என்று சொல்லியிருக்கிறார் கார்ஸியா மார்க்கேஸ்.  உலகில் எந்த மொழியிலும் எழுதப்பட்ட எந்த நாவலையும் விட சிறந்த நாவல் பெத்ரோ பாரமோ என்கிறார் போர்ஹேஸ்.  அப்படிச் சொல்வதற்கு போர்ஹேஸுக்கு முழுத் தகுதியும் உண்டு.  உலக மொழிகளில் உள்ள எல்லா சிறந்த நாவல்களையும் படித்தவர் அவர்.  அந்த வகையில் நான் சொல்கிறேன், எஸ்தர் என்ற சிறுகதைக்கு ஒப்பான கதைகள் உலக மொழிகளில் ஒருசில தான் இருக்கக் கூடும்.

காயத்ரி அவர்களை போனில் அழைத்து வண்ணநிலவனை அறிமுகப்படுத்தியது ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டேன்.  ஓ, வண்ணநிலவனை மறக்க முடியுமா என்று கேட்டார்.  அதைக் கேட்கவில்லை; அவரைப் பற்றி என்ன சொல்லி அறிமுகப்படுத்தினேன் என்றேன்.  ம்ம்ம் என்று யோசித்தார்.  ஞாபகம் இல்லை.  லெஜண்ட் என்றேன்.  மேலும் சொன்னேன், ஒரு லெஜண்டை மற்றொரு லெஜண்ட் லெஜண்ட் என்று சொல்லி அறிமுகப்படுத்திய வரலாற்றுத் தருணத்தை மறந்து விட்டீர்களே என்றும் விசனப்பட்டேன்.

ஆனால் வண்ணநிலவன் எப்படிப்பட்டவர் தெரியுமா? எஸ்தரை எல்லோரும் ஏன் பாராட்டுகிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை.  ஏதோ எழுதத் தோன்றியது.  எழுதினேன்.  எல்லா கதைகளையும் அப்படித்தான் எழுதுகிறேன்.

ஆஹா, இந்த அடக்க குணம்தான் அடியேனிடம் இல்லாமல் போய் விட்டது.  நானாவது பரவாயில்லை; என் தம்பி என்னை விட ஒரு படி மேலே போகிறான்.  என்னை விட சிறப்பாக எழுதுபவன் எவனுமே இல்லை என்கிறான்.  அது ரொம்ப ஜாஸ்தி.

ஆளை விடுங்கள், ஆஷிஷ் நந்தியைப் படிக்க வேண்டும்.