குருவும் சீடனும்!

நண்பர் கார்ல் மார்க்ஸின் மீது ஜெர்மன் கார்ல் மார்க்ஸின் ஆவி வந்திருக்கிறது போல என்று நினைக்கும் அளவுக்கு அமெரிக்க ஆயில் கம்பெனி, உலகப் பொருளாதாரம், சந்தை மதிப்பு (அப்டீன்னா என்னா?), வளைகுடா ஆயில் கம்பெனிகள் என்று வீசு வீசு என்று வீசிக் கொண்டிருப்பார்.  ரெண்டு வரிக்கு மேல் தாண்ட மாட்டேன்.  நமக்கு அதுக்கெல்லாம் புத்தி கம்மி.  இந்தப் பய புள்ளைக்கு இம்புட்டு அறிவு எங்கேர்ந்து வந்துதுன்னு கூட நினைப்பேன்.  இந்தக் கவிதா சொர்ணவல்லி வேறு சும்மா இருக்காமல் அந்த அமெரிக்க ஆயில் கம்பெனிகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கட்டுரையை எடுத்து இப்டி ஒரு கட்டுரையை எவண்டா எழுதி இருக்கான்னு ஒரு கேள்வியோட ஷேர் பண்ணுமா?  நான் துண்டைக் காணும் துணியைக் காணும்னு ஓட்டம் எடுப்பேன்.  இன்று பரவாயில்லை.  கார்ல் மார்க்ஸ் லைட் மூட்ல இருக்கப்ல இருக்கு.  காலெல இப்டி ஒரு பதிவு போட்டார்.

”தண்ணி குடிக்க கிச்சனுக்கு வந்தவன, அப்படியே அந்த குக்கர் குண்ட கழட்டி வச்சிட்டு போங்கன்னு உசுப்பேத்தி, கைய கருக்குனவ நீ. ஏற்கனவே நீ சமைக்கிறது, கலர் மட்டும்தான் பாக்க நல்லாருக்கு ஆனா வாயில வைக்க வெளங்கல. இதுல சமைக்கவும் மாட்டேன்னா என்ன அர்த்தம் ”

மேற்படி பதிவைப் பார்த்து குதூகலித்தேன்.  ஏன்னா அமெரிக்க ஆயில் கம்பெனி பொருளாதாரத்தை விட இப்டிப்பட்ட பதிவுதானே நம்ம அறிவுக்கும் நம்ம லெவலுக்கும் ஏத்தது? உடனே நான் இப்படி ஒரு பதில் போட்டேன்.

”அது எப்டி கார்ல், குக்கர் குண்டை கழட்டுனா கை கருகும்? குக்கர் குண்டைக் கழட்டறேன்னு வேற எதையாவது ட்ரை பண்ணினீங்களா? அதுனால சூடு வச்சுட்டாங்களா? மனைவி கிட்ட மட்டும் பண்ண வேண்டியதை தோழிகள்ட்டவும் பண்ணினா இப்படித்தான்னு படிச்சுப் படிச்சு சொன்னேன்ல?”

இதுக்கு கார்ல் மார்க்ஸின் உடனடி பதில்:

”எந்தெந்த விஷயமோ உங்ககிட்டேருந்து ஈஸியா கத்துக்கறேன். ஆனா சூடு வாங்காம ட்ரை பண்ண மட்டும் இன்னும் கத்துக்கல சாரு ”

அடப் பாவிங்களா!  எனக்கு ஜெயமோகனே தேவையில்லை போல இருக்கே?