அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும்…

இப்போது நான் இங்கே எழுதப் போகும் விஷயம் பலருக்கும் பிடிக்கப் போவதில்லை என்று முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.  இந்தியச் சமூகம் சாதியச் சமூகம்.  சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினாலும் அது ஒரு கனவு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  நகரங்களைப் பொறுத்தவரை அவ்வளவாக சாதிகள் துருத்திக் கொண்டு வெளியே தெரிவதில்லை.  எனக்கு எவ்விதமான சாதி அபிபானமும் கிடையாது.  தேச அபிமானமே இல்லாதவனிடம் சாதி அபிமானம் எப்படி இருக்கும்?  மேலும், பல சாதிகளின் கலப்பில் பிறந்ததால் எந்த சாதியை என்று கொண்டாடுவது?  மேலும், எழுத்தாளர்களை நான் துறவிகளுக்கு இணையாகப் பார்க்கிறேன்.  இஸ்லாத்தில் சூஃபிகள்.  சூஃபிகளுக்கும் துறவிகளுக்கும் சாதி இல்லை; மதம் இல்லை; தேசம் இல்லை.  பல விஷயங்களில் எனக்குப் பெரியாரைப் பிடிக்காவிட்டாலும் தேசாபிமானம், குலாபிமானம், பாஷாபிமானம் கூடாது என்று சொன்னாரே, அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  எவ்வளவு உயர்ந்த பரந்துபட்ட சிந்தனை!

தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் இதற்கு மேல் வளர்வதற்கு ஏதாவது இருக்க முடியுமா என்ன என்று வியப்புறும் அளவுக்கு வளர்ந்திருந்தாலும், அதன் பயன்களை நாம் அனைவருமே வர்க்க வித்தியாசமின்றி அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இன்னமும் இந்திய கிராமங்களில் சாதிக் கொடுமை இருக்கத்தான் செய்கிறது.  இன்னமும் தலித்துகளைப் பிடித்து மூத்திரத்தைக் குடிக்கத்தான் செய்கிறார்கள்.  சென்ற வாரம் உத்தரப் பிரதேசத்தில் இது செய்தி.  ஆனால் நகர்ப்புறங்களில் படித்தவர்களிடையே கலப்புத் திருமணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக சாதி அடையாளம் அழிந்து கொண்டு வருகிறது.  ஒரு அய்யர் பையன் பஞ்சாபிப் பெண்ணை மணந்து கொள்கிறான்.  (ஆனால் வட இந்திய ஆண்கள் தென்னிந்தியப் பெண்களைத் துணிந்து மணந்து கொள்வதில்லை. இது ஏன் என்று சமீபத்திய நைனித்தால் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.  யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை.  பிறகு தென்னிந்தியப் பெண்கள் aggressive என்பதால்தான் வட இந்தியப் பையன்கள் பயப்படுகிறார்கள் போல என்ற என் யூகத்தைச் சொன்னேன்.  சரியோ தப்போ, ஒத்துக் கொண்டார்கள்.  சொல்ல வந்தது என்னவென்றால், படித்த வர்க்கத்திடையே சாதி அடையாளம் அழிந்து வருகிறது. என் மகன் கார்த்திக் ஒரு மராட்டிப் பெண்ணை மணந்திருக்கிறான்.  பெண் என்ன சாதி என்றே தெரியவில்லை.  குறைந்த பட்சம், சைவச் சாதியா, அசைவச் சாதியா என்று கேட்டேன்.  அப்பா சைவம், அம்மா அசைவம் என்றாள் மருமகள்.  மேலிடத்திலேயே கலப்பு மணம்.  ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணந்திருந்தான் என்றால் மகிழ்ந்திருப்பேன்.  அப்படி ஒரு கலாச்சாரக் கலப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

நான் கலாச்சார ரீதியாக ஒரு இஸ்லாமியனாகவே கருதிக் கொள்கிறேன்.  இஸ்லாமியக் கலாச்சாரம் என்பதும் ஒரு ஆயிரம் வகை இருக்கிறது.  டாக்கா  முஸ்லீமுக்கும் ராவல்பிண்டி முஸ்லீமுக்கும் இறை நம்பிக்கை தவிர வேறுவிதமான கலாச்சார ஒற்றுமைகள் இருக்க சாத்தியம் இல்லை.  துனீஷிய முஸ்லீம்களைப் பார்த்தால் ஃப்ரெஞ்சுக்காரர்களைப் போல் இருக்கும்.  ஒரு மகளும் தந்தையும் ஒன்றாக சிகரெட் புகைப்பார்கள்.  தந்தைக்கு மகள் முகச் சவரம் செய்து விடுவாள்.  எனவே நான் அடையாளப்படுத்திக் கொள்ளும் இஸ்லாமியக் கலாச்சாரம் என்பது தஞ்சை மாவட்டத்துக்கு உரியது.  தஞ்சை ப்ர்காஷ் அக்கலாச்சாரத்தை பிரமாதமாக இலக்கியமாக்கியிருக்கிறார்.

ஆனாலும் என் வாழ்க்கையில் இஸ்லாமிய நண்பர்கள் யாரும் இல்லை.  நான் காரணம் இல்லை.  கலாச்சார வாழ்வில் இன்னமும் இஸ்லாமியர்களின் பங்கேற்பு ஏற்படவில்லை.  ஒரு உதாரணம் தருகிறேன்.  உலகப் புகழ் பெற்ற இலக்கிய நிகழ்வான Hay Festival-இன் துவக்க விழா ஒருமுறை சென்னை பிரிட்டிஷ் தூதரின் வீட்டில் நடந்தது. 25 பேர்தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். என் நண்பரோடு சென்றிருந்தேன். நண்பர் அய்யர்.  அங்கே அந்த நண்பரின் உறவினர் ஒருவரும் வந்திருந்தார்.  அப்போது என் நண்பரிடம் விளையாட்டாகச் சொன்னேன், என் உறவுகளைப் பார்க்க வேண்டுமானால் புழலுக்குத்தான் போக வேண்டும் என்று.  பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி, இலக்கியம், சினிமா என்று எதை எடுத்துக் கொண்டாலும் அங்கே இஸ்லாமியரின் பங்களிப்பு இல்லை.  இஸ்லாமியர் என்று மட்டும் அல்ல; பெண்கள், தலித்துகள், இஸ்லாமியர் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இங்கே சமமான வாய்ப்புகள் தரப்படவில்லை.  ”தந்தாகி விட்டது; அவர்கள்தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று நாகேஸ்வர ராவ் பூங்காவில் பல சமூகவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.  அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இது பற்றி நான் விவாதிக்கக் கூட விரும்பவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் இல்லை; தலித் நண்பர்கள் இல்லை; பெண் நண்பர்களும் அதிகம் இல்லை.  இருப்பதெல்லாம் அய்யர், அய்யங்கார் நண்பர்கள்தான்.  நான் சாதி பார்ப்பதில்லை; சாதியில் உயர்வு தாழ்வும் பார்ப்பதில்லை;  இதையெல்லாம் ஒரு எழுத்தாளன் வெளியே சொல்ல நேர்வது கூட அவமானம்தான்.  பூனை நாயை எல்லாம் மனிதருக்குச் சமமாக பாவிக்கும் நான் மனிதரிடையேயா சாதி பார்க்கப் போகிறேன்?  ஆனாலும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு இனக்குழுவுக்கு உரிய கலாச்சார அடையாளங்கள் இருப்பதை மறுக்க முடியவில்லை.  அப்படி மறுப்பது பொய் என்பது என் எண்ணம்.  நான் பா. ராகவனிடம்தானே அக்கார அடிசில் பற்றி உரையாட முடியும்?  இப்ராஹீம் ராவுத்தருக்கு அக்கார அடிசில் பற்றி என்ன தெரியும்?  தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவரிடம்தானே நான் மாசிக் கருவாடு பற்றிப் பேச முடியும்?  இந்த விஷயத்தில்தான் கொஞ்சம் பிரச்சினை.  கதீட்ரல் சாலை வுட்லன்ட்ஸ் ஓட்டலை நண்பர்கள் ஆஹா ஓகோ என்கிறார்கள்.  ஆனால் எனக்கோ அங்கே எதையும் வாயிலேயே வைக்க முடியவில்லை.  அதேபோல் ஒருநாள் ஓட்டல் பாம்குரோவில் நண்பர்களோடு சாப்பிட்டேன்.  சோறு, சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் இன்னபிற.  எல்லோரும் அதைப் புகழ்ந்து சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.  என் நண்பர்களுக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது.  ஆனால் நான் அதற்கு பூஜ்யம் மதிப்பெண் கூடக் கொடுக்க மாட்டேன்.  அதற்கும் கீழே.  இங்கே தான் கலாச்சாரம் வருகிறது.  இனக்குழு.  அந்த உணவைப் பாராட்டிய நண்பர்கள் அனைவரும் அய்யர் சமூகம்.  எனக்கும் அய்யர் சாப்பாடு ரொம்ப இஷ்டம்தான்.  ஆனால் என் நண்பர்கள் ராம்ஜி, காயத்ரி போன்றவர்களின் வீட்டில் சாப்பிட வேண்டும்.  அதுதான் மிகச் சிறந்த அய்யர் சாப்பாடு.  அதிலும் காயத்ரி அவர்களின் வீட்டில் பூண்டு வெங்காயம் கூட இருக்காது.  ஆனால் ருசி தூக்கி அடிக்கும்.  ராம்ஜியின் அம்மா சமையல் போல் சமைக்க ஆளே இல்லை.  இங்கே ஏன் அவந்திகாவைச் சேர்க்கவில்லை என்றால் அவள் அசைவத்திலும் ரகளை.  அவந்திகாவின் அசைவ உணவைப் போல் என் ஆயுளில் சாப்பிட்டதில்லை.

இதெல்லாம் இன்று பா. ராகவன் முகநூலில் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்து நினைவில் ஓடியது.  பாவி மனுஷன், 250 கிராம் பனீராம்.  50 கிராம் எதுவோ ஒன்றாம்.  என்னய்யா வாழ்க்கை இது?  நான் இப்போதுதான் மாசிக் கருவாடு செய்து வைத்திருக்கிறேன்.  நேற்று அவந்திகா செய்த வெங்காய ரசமும் வஞ்சிர மீன் வறுவலும்.  எனக்கு மாகாளிக் கிழங்கு ஊறுகாய் என்றால் ரொம்ப இஷ்டம்.  உயிர்.  ஆனால் பல அ-பிராமணர்கள் அதில் கரப்பான்பூச்சி ஸ்மெல் அடிப்பதாகச் சொல்லி முகத்தைச் சுளிப்பார்கள்.  எனக்கு எல்லா பிராமண உணவும் உயிர்.  ஆனால் இந்த அவியல் மற்றும் பனீர் என்ற இரண்டு அய்ட்டங்களையும்தான் மனிதர்கள் எப்படிச் சாப்பிட முடிகிறது என்று வியந்து வியந்து போகிறேன்.

எல்லாம் சொன்னது போக, எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்பப் பிரியமான, இஷ்டமான உணவு என் அம்மாவைப் பெற்ற தாத்தாவின் உணவான பர்மிய ஃபிஷ்பால் சூப் தான்.  அடுத்த ஜென்மத்திலாவது பர்மா, சீனா அல்லது தாய்லாந்தில் பிறந்து தோம்யாமிலேயே திளைத்து வாழ வேண்டும்.  அதுசரி, அடுத்த ஜென்மம் மெக்ஸிகோ என்றல்லவா சொன்னார் ஜோசியர் முருகேசன்? சரி, அடுத்தடுத்த ஜென்மங்களில் கவனிக்க வேண்டியதுதான்.