பன்னெண்டு டாலர் மேட்டர்!

தலைக்கு மேல் வேலை. அதற்கிடையில் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் மார்ஜினல் மேன் நாவல் amazon.com மூலம் கிடைக்கிறது. விலை 12 டாலர். அது விஷயமாகத்தான் இதை எழுதுகிறேன். தயவுசெய்து யாரும் என் மீது கோபம் கொள்ளாமல் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவில் வசிக்கும் சுமார் நூறு தமிழ் நண்பர்கள் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். என்னைப் பெரிதும் நேசிப்பவர்கள். என்னைப் புரிந்து கொண்டவர்கள். அவ்வப்போது என்னைத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்பவர்கள். சரி, மார்ஜினல் மேன் அமெரிக்காவில் அமேஸான் மூலம் எத்தனை பிரதிகள் விற்றிருக்க வேண்டும்? 50 பிரதிகள் என்று யூகித்தேன். ஆனால் என்னுடைய தேர்தல் யூகங்கள் தான் சரியாக இருக்கிறதே தவிர மற்ற யூகங்கள் எல்லாம் ஃபனால். ரெண்டு காப்பி விற்றிருக்கிறது. அதிலும் ஒரு நண்பர் என் குடும்பம் மாதிரி.

நிறைய வருத்தத்துடனும் கொஞ்சம் கோபத்துடனும் இதை எழுதுகிறேன். எனக்காக 12 டாலர் உங்களால் செலவு செய்ய முடியாதா? இந்த நாவலை அமேஸான் மூலம் அமெரிக்காவில் கிடைக்கச் செய்வதற்காக என் பதிப்பாளர் எக்கச்சக்கமான பணம் செலவழித்திருக்கிறார். நாவல் https://www.amazon.co.uk/ மூலம் UK-விலும் கிடைக்கிறது. எனக்கு யூ.கே.வில் ஒன்றிரண்டு நண்பர்களே இருக்கிறார்கள். எனவே அது பற்றிக் கவலை இல்லை. ஆனால் யூ.கே.வில் புத்தகம் கிடைக்க வேண்டும் என்று நினைத்ததற்குக் காரணம், பரந்து பட்ட வாசகர் தளத்தைக் கொண்ட ArtReview Asia-வில் மார்ஜினல் மேன் நாவலுக்கு மிக நல்ல மதிப்புரை வந்திருக்கிறது என்பதே. இதுதான் யூ.கே. அமேஸான் லிங்க்:

https://www.amazon.co.uk/s/ref=nb_sb_noss…

இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்களையும் வாசகர்களையும் மார்ஜினல் மேன் நாவலை amazon.com மூலம் வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஜக்கி, ஓஷோ, யு.ஜி., ஜிட்டு போன்றவர்கள் பேச்சையும் எழுத்தையும் கேட்டால் நான் எழுதுவதைத்தான் அவர்களும் எழுதிப் பேசுகிறார்கள் என்று தெரிகிறது. நானும் ஒரு காவியைக் கட்டிக் கொண்டால் இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்காது; 92 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கியாயிற்று, இன்னும் எட்டு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். (அவர் 99 என்றால் நான் நூறு வாங்க வேண்டாமா?) ஆக, நான் உடுத்தும் ஆடை தான் இப்படி எழுத வேண்டிய காரணத்தை உண்டாக்குகிறது. எல்லாம் ஒரே விஷயம்தான்; காவி கட்டினால் ரோல்ஸ் ராய்ஸ். ஜீன்ஸ் போட்டால் மெட்றாஸ் ஆட்டோ.

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார், அவர் ஊரில் உள்ள என் வாசகர்கள் மாதாமாதம் கூடி என் எழுத்தை விவாதிக்கிறார்கள் என்று. அவர்களாவது 12 டாலர் கொடுத்து மார்ஜினல் மேனை வாங்கக் கூடாதா? அமேஸானில் பணம் கட்டி விட்டால் மூன்று தினங்களில் வந்து விடுகிறது என்று வாங்கிய நண்பர் சொன்னார். அங்கேயே தான் அச்சடித்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் அச்சடித்தது அல்ல. அநேகமாக அமேஸான் டாட் காமில் அமெரிக்காவில் கிடைக்கும் முதல் தமிழ்நாட்டு நாவல் மார்ஜினல் மேனாக இருக்கலாம். வேறு புத்தகங்கள் இருந்தால் தெரிவியுங்கள். தெரிந்து கொள்கிறேன். அங்கே பத்து டாலர் என்பது ஓட்டலில் டிப்ஸ் தொகை. Dallas நகரில் வீட்டுக்கு பீட்ஸா கொண்டு வந்து கொடுக்கும் கறுப்பு மனிதனுக்குக் கொடுக்கும் டிப்ஸ் 3 டாலர். குளிரும் பனியுமாக இருந்தால் அவனுக்குக் கொடுப்பது 5 டாலர். சரியா? மார்ஜினல் மேனின் விலை 12 டாலர், நண்பர்களே!
ஆனால் மார்ஜினல் மேன் இந்தியாவில் பிரமாதமாக விற்றுக் கொண்டிருக்கிறது. எல்லா விமான நிலையங்களிலும் பெரிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது.

அமெரிக்க நண்பர்கள் யோசிக்கவும். தமிழர் அல்லாத, வாசிப்புப் பழக்கம் உள்ள சக அமெரிக்க நண்பர்களுக்கு இந்த நூலை சிபாரிசு செய்யவும். ஸீரோ டிகிரி வெளிவந்த போது அமெரிக்காவில் வசிக்கும் ஒரு வாசகி 50 பிரதிகளை வாங்கி அமெரிக்க நூலகங்களில் வைக்கச் செய்தார். இப்போது சில நண்பர்கள் புத்தகங்களை இங்கிருந்தே எடுத்துக் கொண்டு போய் அங்கே நூலகங்களில் இடம் பெறச் செய்கிறார்கள்; அங்கேயிருந்து வரும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்கள். அவர்களுக்கு என் பிரத்தியேக நன்றி. மற்ற நண்பர்கள் அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். வெறும் 12 டாலர் கொடுத்து வாங்கினால் நலம்.

https://www.amazon.com/s/ref=nb_sb_ss_i_1_18…