சோறே தெய்வம்!!!

வரும் 18-ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நான் வெளியில்தான் சாப்பிட்டாக வேண்டும்.  எனக்கு சமைக்கப் பிடிக்கும் என்றாலும் என் ஒருவனுக்காக சமைப்பது அலுப்படிக்கும் விஷயம்.  அவந்திகா வெளியூர் செல்கிறாள்.  என் வீட்டை ஒட்டியிருக்கும் தாவத் உணவு விடுதி ஆடம்பரமாக இருக்கிறதே தவிர எதை வாங்கினாலும் அதில் நூறு மில்லி அளவுக்கு எண்ணெய் மிதக்கிறது.  No exaggeration.  நூறு மில்லி.  என் வீட்டுக்கு எதிர்சாரியில் உள்ள பாம்ஷோர் தேவலாம்.  ஆனால் அங்கேயே சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டது.  சென்ற வாரம் மிஷ்கினைச் சந்தித்த போது Swiggy இருக்கும் போது என்ன கவலை என்று கேட்டார்.  He is also a loner like me.  ஆனால் இன்னமும் என்னால் ஸ்விக்கியைப் பயன்படுத்தத் தெரியவில்லை.  ஆனால் இன்னமும் சென்னையில் ஒரு நல்ல சைவ உணவுக்கோ நல்ல அசைவ உணவுக்கோ இடம் இல்லை என்பதுதான் உண்மை.  இருக்கிறது; பார்க் ஷெரட்டனில் உள்ள ஒரு உணவகம், சோலாவின் ஏழாவது மாடியில் உள்ள உணவகம், சவேராவில் உள்ள மால்குடி இங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கும்.  அதேபோல் எனக்கு மிகப் பிடித்த ஐரோப்பிய வகை உணவு சவேராவின் ப்ரூ ரூமிலும் அமேதிஸ்டிலும் கிடைக்கும்.  ஆனால் எனக்கு மதியத்தில் மட்டுமே உணவு தேவை.  காலை உணவை நண்பர் கவனித்துக் கொள்கிறார்.  இரவுக்கு பப்பாளி.  மதியம் செரியாக சாப்பிட வேண்டும் எனக்கு.  அதற்காக ப்ரூ ரூமுக்குத் தனியாகப் போக முடியுமா?  குளிர்காலமாக இருந்தால் போகலாம்.  இப்போது போனால் என் லினன் சட்டை உடம்போடு ஒட்டி விடுகிறது.  வெள்ளை சட்டையாக இருந்தால் உடம்பெல்லாம் தெரிகிறது.  நான் பனியனே போட்டதில்லை.  (பெண்ணாகப் பிறந்திருந்தால் தமிழ்நாடு தாங்கியிருக்காது தோழிகளே!) அமேதிஸ்ட், ப்ரூ ரூம் இரண்டுமே தனியாகப் போய் சாப்பிடும் இடங்கள் அல்ல.

எனக்குச் சென்னை பிடிக்காத நகரம் என்பதற்கு முதன்மைக் காரணமே, இங்கே ஒரு நல்ல சாப்பாட்டுக் கடை கிடையாது.  சைவத்துக்கும் சரி, அசைவத்துக்கும் சரி.  ஒரு நண்பர் வீட்டுக் கதவைத் தட்டி, அக்கார அடிசல் போடும் ஓய் என்று கேட்க எனக்கு உரிமை கொடுத்திருக்கிறார். பா. ராகவன் தான் அது. ஆனால் அவர் குரோம்பேட்டையில் வசிக்கிறார்.  அது எங்கோ செங்கல்பட்டு அருகில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு தூரம் போக இயலாது.  நண்பர்கள் குறிப்பிடும் பாம்குரோவ், வுட்லண்ட்ஸ் எல்லாம் என்னால் வாயில் வைக்க வழங்காது.  அதெல்லாம் உணவே இல்லை.  எந்தக் காய்கறியும் போடாமல் வெறும் மணித்தக்காளி வற்றல் போட்ட வத்தக் குழம்பு, ரசம், சுட்ட அப்பளம் இருந்தால் போதும்… ஆஹா, சொர்க்கம்.  அப்படி ஒரு சாப்பாட்டுக்கு நான் 500 ரூபாய் கொடுக்கத் தயார்.  ஆனால் எந்தக் கடையில் கிடைக்கும் சொல்லுங்கள்?  இந்த ”பவன்” இருக்கிறதே, அது கொடுமையிலும் கொடுமை.  ஒரு பெரிய தாம்பாளம் மாதிரி தட்டை வைத்து 30 கிண்ணிகளை வைத்து அதில் ஆட்டாம் புழுக்கை ஆட்டாம் புழுக்கையாக 30 வித காய்ப் பதார்த்தங்களை வைத்து, மாட்டு மூத்திரம் மாதிரி ஒரு சாம்பார், ஆட்டு மூத்திரம் மாதிரி ஒரு ரசம், பத்து நாள் புளித்த கள்ளின் அடியில் கிடக்கும் வண்டலைப் போன்ற தயிர்… இந்த இடத்தில் கடுமையான கெட்ட வார்த்தையைச் செருகிக் கொள்ளுங்கள்… சாப்பாடா ஐயா அது?  இதற்கு இருநூறோ முன்னூறோ… விடுமுறை தினங்களில் கூட்டம் அள்ளித் தெள்ளுகிறது.

அசைவ உணவகங்களை எடுத்துக் கொண்டால் ரத்தக் கண்ணீர் வருகிறது.  அந்தக் காலத்து வேலு மிலிட்டரி, செட்டிநாடு போன்ற இடங்களில் வெறும் காரம், தேங்காய், எண்ணெய் – இதைத் தவிர வேறு இல்லை.  எல்லாம் அந்தக் காலத்தோடு போய் விட்டது.

ஐந்து நாட்களில் ஒருநாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாலியா ஜப்பானிய உணவகமும், ஒருநாள் க்ரீம் செண்டரும் போகலாம்.  மற்றபடி தீவிரமாக யோசிக்க வேண்டும்.  சோறே தெய்வம்!!!