முடி கொட்டுது…

சின்ன வயதில் நான் என் அம்மா மாதிரியே இருக்கிறேன் என்று பலரும் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன்.  உருவத்தில் மட்டும் அல்ல; சில பழக்கவழக்கங்களிலும் நான் அம்மா மாதிரிதான்.  அதில் ஒன்று, அவ்வப்போது ஜோசியம் பார்ப்பது.  மற்றவர்களுக்கு அல்ல; எனக்கு.  மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது அம்மா ஜோசியம் பார்ப்பது வழக்கம்.  யாரையும் தேடிப் போக மாட்டார்கள்.  ஜோசியர்களே வீடு தேடி வருவார்கள்.  அது ஒரு சடங்கு போல் நடக்கும்.  நாங்கள் ஆறு குழந்தைகள்.  எல்லோருக்கும் பார்ப்பார்கள்.  இதெல்லாம் எதுக்கும்மா, எல்லோரும் ஒரே மாதிரிதானே சொல்கிறார்கள் என்று கேட்பேன்.  ”கோவிலுக்குக் கூடத்தான் போகிறோம், சாமியை நாம் கண்ணால் பார்த்தோமா?  எல்லாம் ஒரு நிம்மதிக்குத்தான்.  நீ இவ்ளோ படிக்கிறியே, அதில் இதைப் போட்டில்லையா?” நான் ஒன்றும் பதில் சொல்ல மாட்டேன்.  நான் அப்போது படித்த புத்தகங்களில் ஜோசியம் ஒரு புரளி, புளுகு மூட்டை என்றுதான் போட்டிருந்தது என்று சொன்னால் நான் படிக்கும் புத்தகங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போய் பழைய பேப்பர்காரனிடம் போட்டிருப்பார்கள்.

ஜோசியம் உண்மையோ பொய்யோ, நான் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கவும், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேராமல் இருக்கவும் எனக்கு இலக்கியம் உதவவில்லை; ஜோசியர்களே உதவுகிறார்கள். புதுமைப்பித்தன் சொல்லியிருக்கிறான், பேய் இருக்கிறதோ இல்லையோ, பயமாக இருக்கிறது என்று.  அது மாதிரிதான்.  கொஞ்சம் சீரியஸாகப் பேசினால், ஜோசியம் ஒரு விஞ்ஞானம் என்றே தெரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் போலி விஞ்ஞானிகள் ஜாஸ்தி என்பதால் இது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாகப் பார்க்கப் படுகிறது.  மேலும், பல பகுத்தறிவாளர்களின் கேள்விகளுக்கு என் எளிய மனதினால் பதிலும் சொல்ல இயலவில்லை.  ஒரு பகுத்தறிவாளர் கேட்டார், அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தில் ஒரே நேரத்தில் 2000 பேர் இறந்தார்களே, அவர்களின் ஜாதகம் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்குமா?  அதேபோல், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரிலும் பல நூறு பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே, அவர்களின் ஜாதகமும் ஒரே மாதிரிதான் இருக்குமா?  இதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை.

ஆனால்,

இதுவரை நான் பதினைந்து ஜோதிடர்களையாவது பார்த்திருப்பேன்.  இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாகவும் இருக்கலாம்.  ஆனால் போலி ஜோசியர் யாரையும் பார்த்ததில்லை.  பல பகுத்தறிவுப் பகலவர்களின் குடும்பங்களிலேயே இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்து பார்க்கும் ஜோசியர்களாக இருப்பார்கள் நான் சந்திக்கும் ஜோசியர்கள். சமீப காலமாக ஒரு மன உளைச்சல்.  அந்த மன உளைச்சல் என் மனப் பிராந்தியால் வந்தது.  பிராந்தி குடிச்சா சரியாப் போய்டும், குடி என்றார் நண்பர்.  அவர் சொல்வது சரிதான்.  சரியாகப் போய் விடும்தான்.  ஆனாலும் நான் ஒரு தடவை முடிவு பண்ணினால் அப்புறம் மாற்ற மாட்டேனே?  ரெமி மார்ட்டின் எல்லாம் முடிஞ்சு போன கதை.  இனிமேல் கிடையாது.  அதனால் அந்த மனப் பிராந்தியை, மன உளைச்சலை நீக்க என்ன செய்யலாம்?  சைக்கியாட்ரிஸ்டுகளைப் போல் நான் வெறுக்கும் ஆசாமிகள் வேறு யாருமே இல்லை.  அதனால் ஜோசியர் முருகேசனையே பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.  போன வருஷம் பார்த்தது.

என் நண்பரும் வருகிறேன் என்றார்.  அவர் ஒரு கோடீஸ்வரர்.  கவலையே இல்லாத மனிதர்.  அவருக்கு எதற்கு ஜோசியர்?  இருந்தாலும் அழைத்துக் கொண்டு போனேன்.  நீங்கள் தனியாகவும் நான் தனியாகவும்தான் பார்க்க வேண்டும் என்றேன்.  அதற்கு அவர், “நீங்கள் தனியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  ஆனால் எனக்குப் பார்க்கும் போது நீங்கள் இருக்க வேண்டும்” என்றார்.  ”ஐயோ, உங்கள் அந்தரங்கம்?” என்றேன்.  “அது பரவாயில்லை.  நீங்கள் இருந்தால் ஒன்றிரண்டு கேள்வி கேட்பீர்கள்.  நான் வாயை மூடிக் கொண்டு வந்து விடுவேன்.”

உள்ளே நுழைந்ததுமே என்னைப் பார்த்து “எப்டி இருக்கீங்க, ஹீரோ சார்?  போன வருஷம் பார்த்தது…” என்றார் ஜோசியர் முருகேசன்.  நல்ல ஞாபக சக்தி என்று நினைத்துக் கொண்டு முதலில் நண்பருக்குப் பார்க்கச் சொன்னேன். இனி வருவது நண்பருக்கும் ஜோசியருக்கும் நடந்த உரையாடல்:

ஜோசியர்: (நண்பரின் ஜாதகத்தைக் கையில் வைத்துக் கொண்டு) “உங்களை மாதிரி ஆட்களுக்கு என் போன்ற ஆட்கள் தேவையில்லையே?  நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வந்தீர்கள்?”

நண்பர்: “ஏன் அப்டி சொல்றீங்க சார்?”

ஜோசியர்: “பாருங்க.  உங்க ஜாதகத்தில் நீங்கள் கோடீஸ்வரர் என்று கண்டுள்ளது.  உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும் உங்களுக்கு ஒரு அன்பான காதலி இருக்கிறாள்.  இருவரும் விரைவில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா செல்வீர்கள்.  உங்களுக்கு என்ன பிரச்சினை?  பிரச்சினை இருந்தால்தானே ஜோசியரைத் தேடுவோம்?

நண்பர்: “திருமணம் ஆகியிருந்தா உங்களிடம் வந்திருக்க மாட்டேன்.  திருமணம் ஆவதற்குள்ளேயே முடி கொட்டுகிறது.  இன்னும் வயது 30 கூட ஆகவில்லை…”

ஜோசியர்: (ஜாதகத்தை அவரிடம் கொடுத்து) மயிரேப் போச்சுன்னு விடுங்க சார்.

ஜோ: (இருக்கையை விட்டு எழுந்து கை கூப்பி வணங்கி) நீங்க பணமே குடுக்க வேணாம்.  வெளியில இருங்க. (என்னைக் காண்பித்து) சாருக்குப் பார்த்துடுவோம்.

என் கட்டங்களைப் பரிசீலித்து விட்டு போன ஆண்டு சொன்னதையே அட்சரம் பிசகாமல் சொன்னார்.  ”ஹெல்த்?” என்றேன்.  இதுவரை நான் சந்தித்த 15 ஜோசியர்களும் சொன்ன அதே ஆண்டைச் சொல்லி “அதுவரை ஆயுள் கெட்டி” என்றார்.  அது ஒரு சந்துஷ்டியான விஷயம் என்பதால் அடுத்த கேள்விக்குப் போனேன்.  மனப் பிராந்தி.  பூ என்று ஊதித் தள்ளி விட்டார்.  அது மனப் பிராந்திதான் என்பதை என் ஜாதகக் கட்டங்களை வைத்து விளக்கினார்.  அவ்வளவுதான்.  கிளம்பி விட்டேன்.  இனிமேல் அவரை நல்ல செய்தியோடு பார்க்க வேண்டும்.