எஸ்.வி. சேகருக்கு உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள செய்தி நீதித் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், பாடகர் கோவன் அரசுக்கு எதிராகப் பாடிய போது ஏதோ தேசத் துரோகியை, பயங்கரவாதியைக் கைது செய்வது போல் ஒரு போலீஸ் பட்டாளமே போய் அவரைக் கைது செய்தது. இப்படித்தான் அரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் போட்டது அரசு. இந்த இரண்டு சம்பவங்களையும் உயர்நீதி மன்ற நீதிபதி மேற்கோள் காட்டி, இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். ”பாடகர் கோவன், மாணவி வளர்மதி மற்றும் பத்திரிகையாளர்கள் மீது மட்டும் உடனுக்குடன் கைது நடவடிக்கையில் இறங்கும் போலீஸார் எஸ்.வி. சேகர் மீது மட்டும் பாரபட்சம் பார்ப்பது ஏன்?” என்பது நீதிபதியின் கேள்வி. மேலும் நீதிபதியின் உத்தரவில் கூறுகிறார்:
”பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் குற்றத்துக்காக பல இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்துக்கு முன் அனைவரும் சமமே.
படுக்கையைப் பகிர்ந்துதான் ஒரு பெண் உயர்பதவிக்கு வர முடியுமா? இது போன்ற எதிர்மறையான கருத்துக்கள் பெண்களை பொதுவாழ்க்கைக்கு வர விடாமல் செய்து விடும். இது பெண்ணுரிமைக்கு எதிரானது. இந்தச் செயல் ஒருவரை சாதியைச் சொல்லி அழைப்பதை விட கொடுமையானது. ஒரு சாதாரண நபர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே நடவடிக்கையை எஸ்.வி. சேகர் மீதும் எடுக்க வேண்டும்.”
எஸ்.வி. சேகர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் சுணக்கம் காட்டுவதன் காரணமும் நாம் அனைவரும் அறிந்ததே. காரணம், அவரது சகோதரரின் மனைவிதான் தமிழ்நாட்டின் முதன்மைச் செயலாளர். இப்படிப்பட்ட நிலையில் சேகர் தான் செய்த தவறை உணர்ந்தவராக இருந்தால் தானே முன்வந்து அல்லவா சரணடைந்து தான் அந்தச் செய்தியைப் பகிர்ந்ததற்கு மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்? ஏன் அவர் கேட்கவில்லை என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தான் மேட்டுக்குடி. ஆளும் வர்க்கம். தன் கட்சிதான் தில்லியில் ஆளுகிறது. தமிழ்நாடு அரசு அதன் பொம்மை. தன் மைத்துனிதான் சீஃப் செக்ரடரி. இந்த அதிகார மமதை ஒரு காரணம்.
இரண்டாவது காரணம், அவரே அப்படித்தான் நம்புகிறார். எந்தப் பெண்ணும் தொட்டால் மடிந்து விடுவாள்; படிந்து விடுவாள். பெண் ஆண் வர்க்கத்தின் போகப் பொருள். இதே ரீதியில்தான் அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசி விவாதித்திருக்கிறார். ஒரு உதாரணம் தருகிறேன். கவர்னர் ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டினார். அந்தப் பெண் முகநூலில் எதிர்ப்பைத் தெரிவித்ததும் கவர்னர் மன்னிப்புக் கேட்டார். அதற்கு எஸ்.வி. சேகர் முகநூலில் எழுதிய பதில் என்ன தெரியுமா? “இனிமேல் தமிழ்நாட்டில் யாரும் பெண் குழந்தைகளைக் கூட கொஞ்ச முடியாது போல.” எப்படி இருக்கிறது கதை? உங்களைப் பேட்டி எடுக்கும் பெண்ணின் கன்னத்தைத் தடவுவீர்கள். கேட்டால் குழந்தையைக் கூட கொஞ்ச முடியாது தமிழ்நாட்டில்? ஆமாம், முடியாதுதான். ஏனென்றால், குழந்தையைக் கொஞ்சுகிறோம் என்று குழந்தைகளை பலாத்காரம் செய்கிறது இந்திய சமூகம்.
நான் ஒரு நண்பரோடு மகா முத்ராவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அந்த நண்பர் ஒரு மகாத்மா. அப்பழுக்கற்ற மனிதன். பெண்களை ஆண்களைப் போலவே நடத்துபவர். எந்தப் பெண்ணுமே அவரிடம் ஒரு ஆண் என்ற வித்தியாசத்தோடு பழக மாட்டாள். எங்கள் எதிரே ஒரு மூன்று வயது பெண் குழந்தை அதன் அம்மாவோடு வந்தது. பேரழகுக் குழந்தை. நண்பர் அதன் கன்னத்தில் செல்லமாகத் தட்டினார். உடனே அந்தக் குழந்தை ஆங்கிலத்தில் நோ, அப்படித் தட்டாதீர்கள் என்று கூறியது. நண்பர் அதிர்ந்து போய் பல முறை ஸாரி சொல்லி, அதன் கைகளைக் குலுக்கினார். குழந்தையும் கை குலுக்கி விட்டுப் போனது. அந்தக் குழந்தையின் அம்மாவை நான் பாராட்டினேன். குழந்தையிடம் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்.
மேலே எழுதியிருப்பதை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இப்போது மீண்டும் சேகர். நம் கைபேசியில் வாட்ஸ் அப்பில் ஒரு மெஸேஜ் வருகிறது. அதை டெலீட் செய்வதற்கு பதிலாக ஷேர் செய்து விடுகிறோம். அதுவும் முகநூலில் வரும் செய்தியை ஷேர் செய்வதும் வேறு. படிக்காமல் ஷேர் செய்ய வாய்ப்பே இல்லை. அப்படியே ஷேர் செய்திருந்தாலும் அதை உடனடியாக டெலீட் செய்து விட்டு மன்னிப்புக் கேட்டிருக்கலாம். அதையும் செய்யாவிட்டால் போலீஸில் சரணடைந்தாவது விளக்கம் சொல்லியிருக்கலாம். சேகர் அதையெல்லாம் செய்யாததற்குக் காரணம், மேலே சொல்லியிருக்கிறேன். இத்துடன் ஒரு 30 ஆண்டுக் கால நட்பு முடிவுக்கு வருகிறது. அவர் என் 30 ஆண்டுக் கால நண்பர். 15 ஆண்டுகளாகப் பக்கத்துத் தெரு. அவ்வப்போது என்னை என் வீட்டில் காரில் கொண்டு வந்து விடுவார். அவர் வீட்டுக்குப் பலமுறை சென்று காப்பி குடித்திருக்கிறேன். ஆனால் பொது விஷயம் என்று வரும் போது என்னால் நட்பைப் பார்க்க முடியவில்லை. வருந்துகிறேன்.