சேகரிடம் எனக்கு ஒரு கேள்வி…

எஸ்.வி. சேகருக்கு உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.  இந்த விஷயம் பற்றி பல நண்பர்கள் சேகருக்கு ஆதரவாக முகநூலில் எழுதுவது எனக்குப் பெரும் ஆச்சரியத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.  நம் சமூகம் எந்த அளவு க்ஷீணம் அடைந்து விட்டது என்பதாலேயே கவலை.  எஸ்.வி. சேகரின் முகநூல் பதிவு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.  ஏனென்றால், பெண்களைப் பற்றி இந்துத்துவவாதிகள், மத அடிப்படைவாதிகள் போன்றவர்களின் கருத்தே அப்படிப்பட்டதுதான்.  பெண் என்றால் வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டும்.  வெளியே வந்தால் ஒழுக்கம் கெட்டவள்.  ஆனால் சேகர் என்ன அப்படித் தவறு செய்து விட்டார், வந்த மெஸேஜைப் படிக்காமல் ஷேர் செய்தது அத்தனை பெரிய குற்றமா?  அவர்தான் மன்னிப்புக் கேட்டு விட்டாரே?

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற பழமொழிதான் எனக்கு நினைவு வருகிறது.  சேகர் பகிர்ந்த விஷயம் என்ன தெரியுமா?  அதன் மொழியை என்னால் இங்கே மேற்கோள் கூட காட்ட முடியாது.  அது போன்ற ஒரு கச்சடா மொழியில் எழுதப்பட்டிருந்தது.  பத்திரிகைகளில் வேலை செய்யும் பெண்கள் மேலிடத்தில் உள்ளவர்களோடு படுத்துத்தான் வேலை பெறுகிறார்கள் என்பது அதில் இருந்த ஒரு கருத்து.  இந்தக் கருத்தை சேகர் ஒன்றும் வாயில் விரலை வைத்துச் சப்பும் ஒரு வயதுப் பாப்பாவைப் போல் பகிர்ந்து விடவில்லை.  இப்படி ஒரு கருத்தை முகநூலில் பதிந்த அன்பர் அதை ஏன் பதிந்தார்?  பின்னணி என்ன?  கவர்னர் கன்னத்தில் தட்டியதால் வருத்தம் அடைந்த பெண் முகநூலில் தன் வருத்தத்தைப் பதிந்ததால் அதன் எதிர்வினையாக எழுதிய பதிவு அது.  ”ஏய், கன்னத்தில் தட்டுனா எகிர்றியே?  நீ வேலை செய்யும் துறையே “படுத்து” வேலை வாங்கும் துறைதானே?  இதுக்குப் போய் இப்டி எகிர்றே?” என்பதுதான் இந்த மொத்தப் பிரச்சினையின் அடிப்படை.

சேகர் சொல்கிறார்.  நான் படிக்காமல் பகிர்ந்து விட்டேன்.  சரி, கவர்னர் பத்திரியாளர் பெண்ணின் கன்னத்தில் தட்டி, அதற்கு அந்தப் பெண் முகநூலில் வருத்தம் தெரிவித்ததும் சேகர் முகநூலில் எழுதியது என்ன தெரியுமா?  ”இனிமேல் தமிழ்நாட்டில் குழந்தைகளைக் கூடக் கொஞ்ச முடியாது.” ஏன்யா, குழந்தையும் பெண்ணும் ஒன்றா?  மேலும், குழந்தையைக் கொஞ்சும் நிலையில்தான் இந்தியச் சமூகம் இருக்கிறதா?  குழந்தையைக் கொஞ்சுகிறேன் பேர்வழி என்று இடுப்புக்குக் கீழே அல்லவா கை வைக்கிறார்கள்?  அந்த அளவுக்கு child abuse பெருகிக் கிடக்கிறதே?  சென்ற ஆண்டு தானே ஒரு இளைஞன் ஆறு வயதுப் பெண் குழந்தையை வன்கலவி செய்து பெட்ரோல் ஊற்றிக் கொன்றான்?  அப்புறம் எப்படிக் குழந்தையைக் கொஞ்ச அனுமதிப்பது?

ஏற்கனவே பணியிடங்களிலும் சாலைகளிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிராகப் பல வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  பல பிரச்சினைகள் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக நடக்கின்றன.  யாருமில்லாத தெருவில் ஒரு பெண்ணைப் பார்த்தால் ஒரு ஆண் தன் குறியை எடுத்துக் காட்டிக் கொண்டே போகிறான்.  பல பெண்கள் சொல்லியிருக்கிறார்கள்.  இருசக்கர வாகனங்களில் பெண்கள் போனால் பின்னாலேயே துரத்தித் துரத்தி கேலி.  ரௌடித்தனமாக இருந்தால்தான் ஒரு பெண் வெளியிலேயே வரலாம் என்ற நிலை நிலவுகிறது.  இந்த நிலையில் எஸ்.வி. சேகரின் பதிவு பற்றி யோசித்துப் பாருங்கள்.

சேகரிடம் எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.  மோடி பற்றி எவனாவது ஒரு ஆபாசமான பதிவை அனுப்பினால் படித்துப் பார்க்காமல் ஷேர் செய்வீரா?  படித்துப் பார்க்காமல் ஷேர் செய்தேன் என்பது பொய்.  அவர் இதுகாறும் தொலைக்காட்சிகளில் பெண்களைப் பற்றிப் பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் பார்த்தால் இந்தப் பதிவுக்கும் அவர் கருத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம்.

சேகர் வீடு என் வீட்டிலிருந்து கல்லெறி தூரத்தில் – ஓ மை காட், பழக்க தோஷத்தில் கல்லெறி தூரம் என்று வந்து விட்டது; அதற்காக என்னைத் தேசத் துரோகி என்று சொல்லி உள்ளே போட்டு விடாதீர்கள்; இன்றைய தினம் மோடிஜி எல்லாம் பெரிய எடம்; சேகர், எச். ராஜா போன்றவர்களைத் திட்டினாலே நீங்கள் தேசத் துரோகிதான் – இருப்பதால் என் நண்பர் ஒருவரைக் காண அங்கே சென்றேன்.  சேகர் வீட்டுக்குப் பக்கத்து வீடு.  அடப் பாவிகளா!  அந்தத் தெரு முழுக்கவுமே போலீஸ் பட்டாளம்.  தெருவின் ஆரம்பத்திலும் முடிவிலும் இரும்புத் தடுப்புகள்.  முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டன் எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது.  இன்னும் மணல் மூட்டைகள் தான் வரவில்லை.  இந்த நாடு உருப்படுமா?  வாய்க்கு வந்ததை உளறும் ஒரு சினிமா நடிகருக்கு இம்புட்டுப் பாதுகாப்பு!  எல்லாம் நம் வரிப் பணம்!

என் மைத்துனியும் சீஃப் செக்ரடரியாக இருந்தால், நான் ஆதரிக்கும் கட்சியும் தில்லியில் ஆட்சி புரிந்தால், தில்லி ஆட்சியின் பொம்மையாக மாநில அரசு விளங்கினால், என் நெற்றியிலும் பட்டை பட்டையாக குங்குமமும் மஞ்சளும் இருந்தால் என் தெருவுக்கும் இப்படி நடக்கும்.

இந்தியா ஒரு அடிமை நாடு.  இந்தியர்கள் அடிமைகள்.