உயிர்மையில்தான் என்னுடைய பெரும்பாலான புத்தகங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. புத்தகங்களின் உருவாக்கத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. ஃபாண்ட், டைப்செட்டிங் போன்ற வார்த்தைகள் கூட அப்போது எனக்குத் தெரியாது. பிழை திருத்தம் செய்ய பிரதி என்னிடம் வரும். திருத்திக் கொடுப்பேன். அவ்வளவுதான். அட்டைப் படத்தைக் கூட நான் பார்க்க மாட்டேன். ஏனென்றால், அவை மிக நேர்த்தியாகவும் அழகியலோடும் அமைந்திருக்கும்.
அடுத்து கிழக்கு. அங்கேயும் அவ்வண்ணமே நடந்தது. கிழக்கில் அட்டைப் படம் மட்டும் பிழை திருத்தத்தோடு சேர்த்துப் பார்ப்பேன்.
இதற்கு இடையில் எத்தனையோ பேர் என் நூல்களைக் கேட்டு வந்துள்ளனர். நான் தொடர்ந்து மறுத்தே வந்திருக்கிறேன். பிறகு சினிமா நூல்களை மட்டும் ஒரு நண்பரிடம் அவரது வற்புறுத்தலால் கொடுத்தேன். நம்பிக் கொடுத்தேன். ஆனால் அந்த நூல்கள் நூல்கள் என்ற அடையாளத்திலேயே இல்லை. பக்கத்துக்குப் பத்து பிழை. ஃபாண்ட் படு கேவலம். பழைய அம்புலிமாமா ஸ்டைல். எனது மிக நெருங்கிய நண்பர் அவர். அவர் எனக்கு உணவிட்டவர். செஞ்சோற்றுக் கடன் பார்க்கவில்லை நான். எனக்கு எல்லாவற்றையும் விட என் எழுத்தே பெரிது. என் உயிரையும் விட. அவரோடு பேசுவதைக் கூட நிறுத்தி விட்டேன்.
அடுத்து ஒரு நண்பரின் வேண்டுகோளுக்காக ஊரின் மிக அழகான பெண்ணைக் கொடுத்தேன். பிரசுரித்தார். என்னால் பிழை திருத்தம் செய்ய முடியாது. கூடிய வரை பிழைகள் இன்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றேன். கொடுமையான பிழைகளோடு வந்துள்ளது. கீழே பாருங்கள்.
இரவில் ஒரு அழுகுரல் தப்பியோடும் கூட்டம் தாண்டத் துணியாத புல் படர்ந்த நெடுஞ்சுவர்களில் பாம்பின் சரசரப்பு அவர்கள் அபாயகரமானதொரு சுரங்கப்பாதையில் அடைபட்டிருந்தார்கள்.
என்னடா இது, கோணங்கி ஸ்டைல் எழுத்தாக இருக்கிறது என்று திகைத்து உயிர்மை வெளியிட்ட பிரதியைப் பார்த்தேன். கீழே பாருங்கள்.
இரவில் ஒரு அழுகுரல்… தப்பியோடும் கூட்டம் தாண்டத் துணியாத புல் படர்ந்த நெடுஞ்சுவர்களில் பாம்பின் சரசரப்பு… அவர்கள் அபாயகரமானதொரு சுரங்கப்பாதையில் அடைபட்டிருந்தார்கள்.
புரிகிறதா? தட்டச்சு செய்த தம்பி மூன்று புள்ளிகளை எடுத்து விட்டார். பதிப்பாளருக்கு இதையெல்லாம் பார்க்க நேரமில்லை. பதிப்புத் துறை எப்படிச் சீரழிந்து விட்டது பாருங்கள்! இதனால்தான் நான் வார்த்தை வார்த்தையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…