அடடா, இது நேற்று எழுதியது. ஆனால் பதிவிட மறந்து போனேன்.
”நாலு மணிக்கே எழுந்து விடுவதால் எட்டு மணிக்கெல்லாம் கொலைப்பசி பசிக்க ஆரம்பித்து விடுகிறது. நாலுக்கு எழுந்த உடனே வாட்டர் தெரபி. பல் கூடத் துலக்காமல் ஒரு லிட்டர் தண்ணீரைக் குடிப்பது. அதற்குப் பிறகுதான் பல் துலக்கலாம். ஒரு மணி நேரத்துக்குக் காப்பி தேநீர் எதுவும் அருந்தக் கூடாது. பிறகு கெய்ரோவுக்கு சாப்பாடு போடுவேன். அது சாப்பிடும் போது நான் அதன் பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும். எழுந்து கொண்டால் அதுவும் பின்னாலேயே வந்து தன் கூட அமர்ந்திருக்கச் சொல்லிப் பலவிதமாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும். ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை; அப்புறம்தான் அது சாப்பிடும் போது நானும் அதன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அது விரும்புவது தெரிந்தது. ஏனென்றால், ரெண்டு வாய் cat food உள்ளே போனதும் தரையில் அமர்ந்திருக்கும் என்னை ஒரு சுற்று சுற்றும். பிறகு சாப்பிடும். பிறகு ஒரு சுற்று. பிறகு சாப்பாடு. பிறகு ஒரு சுற்று. இப்படியே ஒரு பத்து நிமிடம் ஆகும். பிறகு ஒரு மணி நேரம் மீகன் பெட். அது முடிந்ததும் காப்பி. ஐந்தரை ஆகி விடும். மொட்டை மாடிக்குப் போவேன். எதிரே கடல். சூரிய உதயத்தைப் பார்க்கலாம்.
அரை மணி நேரம் தியானம். இன்று (அதாவது நேற்று) ஏழரைக்கே பசித்தது. பெரிய பப்பாளி இருந்தது. ஆனால் அது கொஞ்சம் கெட்டியாக இருந்ததால் ரத்னா கஃபே போகலாம் என்று முடிவு செய்தேன். ரத்னா கஃபேவில் மூன்று இட்லிகளை சாம்பாரில் முழுக்காட்டி முழுங்கி விட்டு நண்பர் வீட்டுக்குப் போய் ஒரு அற்புதமான காப்பியைக் குடித்தேன்.
அவந்திகா ஊருக்குப் போயாயிற்று. மதிய உணவுக்கு என்ன செய்யலாம்? பாம்ஷோர்? அல்லது, மதியத்துக்குள் பப்பாளி பழுத்து விடுமா? மைலாப்பூர் பக்கம் குடியேறியதே சாப்பாட்டுக்காகத்தான். ஊர் முழுதும் உணவகங்கள். ஆனாலும் ஒரு எளிமையான வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமும் தரும் உணவகம் கிடையாது. ஒரு எளிமையான மத்தி மீன் குழம்புக்கு வழி கிடையாது. இதெல்லாம் கேரளத்தில் உண்டு.
வேலை ஒரு பக்கம் யோசனை ஒரு பக்கமாக இருந்த போது வாசலில் ஒரு கேக். ஆஹா, எனக்குக் கேக் பிடிக்காதே? யார் அனுப்பியது? ஷாலின் மேடம் என்றார் வந்தவர். சாப்பிட்டேன். ஆஹா, பத்மஸ்ரீ கேக்கை விட நன்றாக இருந்தது. பிரமாதம். இத்தனை அருமையான கேக்கை இதுவரை சாப்பிட்டதில்லை. அவந்திகா ஊருக்குப் போவது பற்றி எப்போதோ எழுதியதை ஞாபகம் வைத்திருந்து கேக் அனுப்பிய ஷாலினுக்கு என் அன்பு. நண்பர்களின் இந்த அன்புக்காகவே எழுதிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.