பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை முன்பதிவு செய்ய இந்த லிங்கைத் தொடரவும்:
பின்வரும் முன்பதிவுத் திட்ட சலுகை ஜூன் 5-ஆம் தேதி வரை மட்டுமே.
இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி வெளிவர இருக்கிறது. வெளியீடு: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் தமிழ்ப் பிரிவான எழுத்து பிரசுரம். ஒரு பிரதியின் விலை ரூ. 350/- முன்பதிவுத் திட்டத்தில் விலை ரூ.250/- முன்பதிவுத் திட்டத்தின் கீழ் புதிய எக்ஸைல் வெளியான போது 900 பிரதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இது தமிழ்ப் பிரசுர உலகில் அதுவரை நடந்திராத ஒரு சாதனை. ஆனால் அது பற்றி அந்நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. அவர்களின் ப்ளாகில் அது பற்றி ஒன்றும் எழுதப்படவில்லை. முன்பதிவிலேயே 900 பிரதிகளுக்கு வாசகர் வட்ட நண்பர்கள் பணம் கட்டி விட்டதால் புத்தக விழாவில் எக்ஸைல் சுமார் 100 பிரதிகளே விற்றிருக்கும். அதிக எண்ணிக்கையில் விற்ற புத்தகங்கள் என்று தி இந்துவில் கட்டம் கட்டி செய்தி வந்த போது அதில் எக்ஸைல் பெயரே இல்லை. ஒரே மாதத்தில் 1000 பிரதிகள் விற்ற நூலுக்கு எந்த இடத்திலும் அது பற்றிய செய்தி இல்லை. என் சம்பந்தமாக எந்த நல்ல விஷயம் நடந்தாலும் அது செய்தி இல்லை. ஆனால் நான் தடுக்கி விழுந்தால் அது பெட்டிச் செய்தி. அதுவும் ஆங்கிலப் பத்திரிகையில். பரவாயில்லை; எனக்கு நேரும் எல்லாவற்றையுமே இறைவனின் கருணையால் நிகழ்வது என்று எடுத்துக் கொள்வதால் இது பற்றி அதிகம் நான் அலட்டிக் கொள்வதில்லை. மேலும், ஒரு transgressive எழுத்தாளனைப் பல நாடுகளில் சுட்டுக் கொன்று விடுவார்கள். அல்லது, ஜெயிலில் போட்டு விடுவார்கள். இங்கே அந்த அளவுக்குப் போகவில்லை. அந்த மட்டுக்கு நான் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும்.
சரி, பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி. இது என் முன்னோடிகளுக்கு நான் செய்த வழிபாடு. இதற்கும் எக்ஸைலுக்கும் ஒரு அடிப்படையான வித்தியாசம் உள்ளது. எக்ஸைல் நாவலை நீங்கள் உங்கள் சகோதரிக்கோ அன்னைக்கோ வாங்கிக் கொடுக்க முடியாது. கடுமையான பாலியல் சொல்லாடல்கள் அதில் உண்டு. ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களை உங்கள் உற்றம் சுற்றம் எல்லோருக்கும் நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம். வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தி. ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தெரிந்தாக வேண்டும். நாம் தமிழில் சிந்திக்கிறோம், தமிழில் பேசுகிறோம், நம்முடைய பழைய இலக்கியம் பற்றியும் பண்பாடு பற்றியும் பெருமை கொள்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இலக்கியம். இலக்கியம் ஒன்றுதான் மொழியை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. நண்பர்களின் பிறந்த நாள், திருமணம் போன்ற வைபவங்களுக்கு பழுப்பு நிறப் பக்கங்கள் நூலை நீங்கள் பரிசளிக்க வேண்டும்.
எனவே, முன்பதிவுத் திட்டத்தில் இந்த நூல் 1000 என்ற இலக்கைத் தாண்டுவதுதான் என் விருப்பம். அதற்கு நீங்கள் உதவ வேண்டும். நூல்களை முன்பதிவு செய்து எத்தனைப் பிரதிகளுக்கு ஆர்டர் செய்கிறீர்களோ அத்தனை பிரதிகளுக்கான தொகையைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பழுப்பு நிறப் பக்கங்கள் ஆய்வுக்காக நான் சுமார் நான்கு ஆண்டுகள் வேறு எதையும் எழுதவில்லை. அந்த அளவுக்கு அந்த முன்னோடிகளின் உலகில் மூழ்கித்தான் இதை என்னால் எழுத முடிந்தது.
ஒரு பிரதியின் விலை ரூ. 350/- முன்பதிவுத் திட்டத்தில் விலை ரூ.250/- இப்போதே அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்தால்தான் புத்தகத்தை வெகு நேர்த்தியுடன் பதிப்பிக்க முடியும். புத்தக விஷயத்தில் அதன் விற்பனை எண்ணிக்கை தான் புத்தகத்தின் தயாரிப்புக்கு அதிக அளவில் உதவுகிறது.
தொலைபேசி: 98400 65000
மின்னஞ்சல்: zerodegreepublishing@gmail.com