ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி? – மனுஷ்ய புத்திரன்

ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று அளித்த மக்கள் விரோத பேட்டியை தொடர்ந்து காலாவை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினேன். காலாவை தோற்கடிப்பதாக நினைத்து ரஞ்சிதை தோற்கடித்துவிடாதீர்கள் என்ற அழுகுரல்கள் ஒரு புறம். ரஜினியை தோற்கடித்து ரஞ்சித்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற போர்தந்திர அறைகூவல் இன்னொரு புறம். தூத்துக்குடியில் மக்கள் செத்ததைவிட காலா தோற்றுவிடக்கூடாது என்ற பதட்டம் பலரிடமும் இருக்கிறது. தூத்துக்குடி பிரச்சினையில் காலாவை கொண்டுவரக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் காவிரிக்காக ஐ.பி.எல் லை துரத்தியதை ஆரவாரமாக ஆதரித்தவர்கள். ஐ.பி.எல் நடத்துகிறவர்களா காவிரியில் தண்ணீர்விடமாட்டேன் என்று சொன்னார்கள்? அது ஒரு போராட்டத்தின் மீதான கவன ஈர்ப்பு. ரஜினி ஒரு குடிமை சமூகத்தின் உணர்வுகளை மோசமாக அவமானப்படுத்தியிருக்கிறார். அவரை எப்படி எதிர்ப்பது? அவர் படத்தைதான் எதிர்க்க முடியும். ரஜினியினால் ரஞ்சித் ஆதாயம் அடைகிறார் எனில் ரஜினிக்கு ஏற்படும் இழப்புகளிலும் ரஞ்சித் பங்குபெறுவதுதான் நியாயமானது.

காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார். அதில் அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். கபாலி மற்றும் இப்போது காலாவிற்கு கிடைக்கும் இந்த அதீத முக்கியத்துவம் ரஜினியின் சந்தை மதிப்பிற்கேயன்றி ரஞ்சித் என்ற சிறந்த இயக்குனருக்கு அல்ல. ரஞ்சித் மட்டுமல்ல எந்த சிறந்த இயக்குனருமே தோற்கக்கூடாது என்று விரும்புகிறவன் நான். ஆனால் தமிழ்நாட்டில் இந்துத்துவா அரசியலை விதைக்கும் நாசகார சக்தியாக ரஜினி உருவெடுத்து வருகிறார். அவருடைய அகங்காரம் என்பது அவருடைய சினிமா வெற்றிகளிலிருந்தே பிறக்கிறது. அதைத்தான் பா.ஜ.க இப்போது தனது ஆயுதமாக பயன்படுத்துகிறது.
ரஜினியின் படத்தில் சில தலித்திய குறியீடுகளையும் வசனங்களையும் வைத்து வளர வேண்டிய அளவு தலித்தியம் பலவீனமானதா? கத்தி படத்தில் விஜய் பேசிய வசனத்தால் மார்க்சியம் வளர்ந்ததுபோலத்தான்.
ரஞ்சித் ரஜினியைவைத்து மெட்ராஸ்போன்ற ஒரு எதார்த்த சினிமாவை உருவாக்க முடியுமா? கபாலி போன்ற கேங்க்ஸ்டர் படங்களுக்கு எதற்கு இத்தனை தத்துவார்த்த அரசியல் முகமூடிகள்?
ரஜினியை பயன்படுத்தி ரஞ்சித் வளரலாம். அப்படி வளர்ந்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ரஜினி படங்கள் மூலமாக தலித்தியம் ஒரு போதும் வளராது. மாறாக ரஞ்சித் போன்றவர்கள் பா.ஜ.கவின் அடியாளான ரஜினியை  ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒரு புரட்சிநாயகன் போல காட்டும் வரலாற்று தவறையே செய்கிறார்கள். ஒரு வேளை பல மாநிலங்களில் நடந்ததுபோல ஒரு இந்துத்துவா- தலித் கூட்டணிக்கு ரஞ்சித் பயன்படக்கூடும்.
ஜோடி குரூஸ்  என்ற எழுத்தாளர் மோடியை ஆதரித்தற்காக அவரை கடுமையாக எதிர்த்தவர்கள்தான் நாம். ஆனால் இப்போது ரஜினியின் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க வேண்டும் என்றால் எப்படி? ஒரு ப்ராஜெக்டில் இருவர் வேலை செய்யும்போது ஒருவரை தோற்கடித்து ஒருவரை வெற்றிபெறச் செய்யும் உத்திதான் என்ன? பாதிப்படத்தில் எழுந்து வந்துவிடவேண்டுமா?
ரஞ்சித் ரஜினியை விமர்சிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரஜினியை வைத்து படம் எடுப்பதற்காக நான் ரஞ்சித்தை விமர்சிக்கப்போவதும் இல்லை. அது அவரது தொழில். அவருக்கு கிடைத்த புதையல். ஆனால் ரஞ்சித் தலித்திய சிந்தனை உள்ளவர் என்பதற்காக ரஜினி என்ற இந்துத்துவா ஏஜெண்டிற்கு எதிராக யாரும் போராடக் கூடாது என்பது என்ன நியாயம்? ரஜினியை மன்னித்து ரஞ்சித்தை காப்பாற்ற வேண்டி அவசியம் ஒன்றுமில்லை.
ரஞ்சித்தை ஒரு அவதாரமாக கருதுபவர்கள் கோயில் கட்டி கும்பிடட்டும். என்னைப் பொறுத்தவரை அவர் தமிழில் உள்ள பல நல்ல இயக்குனர்களில் ஒரு நல்ல இயக்குனர். அவ்வளவுதான். இன்றைய காலகட்டத்த்தில் புரட்சிகர உணர்வுள்ள ஒரு இயக்குனர் ரஜினி போன்ற ஒரு அதிகாரவர்க்க- இந்துத்துவா ஏஜெண்டுடன் சேர்ந்து வேலை செய்கிறார் என்பது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.
அம்பேத்கரைகூட விமர்சித்துவிடலாம். ரஞ்சித்தை தொட முடியாது போலும்.
சினிமா தமிழனின் அபின்
– மனுஷ்ய புத்திரன்