நிர்வாணமாக அந்த பேச்சிலர்ஸ் லாட்ஜில்…

ஸீரோ டிகிரி வந்த புதிது.  அப்படி ஒரு எழுத்து முறை 2000 ஆண்டுத் தமிழுக்குப் புதிது.  யாருடைய கற்பனைக்கும் எட்டாதது.  அப்படி ஒரு புரட்சியை இப்போது என்னால் கூட கற்பனை செய்ய முடியாது; எழுத முடியாது.  அந்த நாவல் வந்த அந்தக் காலகட்டத்தில் என் மீது அன்பு மிகக் கொண்ட நண்பர் சிலர் தான் தான் அந்த நாவலை எழுதிக் கொடுத்ததாக பத்திரிகைகளில் பேட்டி அளித்தார்கள்.  சுமார் ஆறு பேர் அப்படிச் சொன்னார்கள்.  அது பற்றி என்னைக் கேட்ட போது நான் சொன்ன பதிலை பத்திரிகைகள் பிரசுரிக்கவில்லை.  இப்போது என்னால் கூட இங்கே எழுத முடியவில்லை.  தனிப்பட்ட முறையில் கேட்டால் சொல்கிறேன்.  மிக மூர்க்கனாக இருந்த காலகட்டம் அது.  எடுத்த எடுப்பில் அடிதான்.  அப்புறம்தான் பேச்சு.  ஆனால் நான் சொன்ன பதில் வன்முறையின் உச்சம்.

ம்… அப்படியெல்லாம்தான் நான் இருந்திருக்கிறேன்.

அந்தக் காலகட்டத்தில் ஒருநாள் – திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் ஒரு லாட்ஜ் இருந்தது.  முன்மதியம் 12 மணியிலிருந்து நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.  ஸீரோ டிகிரி உங்கள் நண்பர் எழுதிக் கொடுத்ததாமே?  நான் என் வழக்கமான பதிலை மென்மையான குரலில் சொன்னேன்.  நண்பர் குழாம் அதிர்ந்தது.  அப்போது என் உயிர் நண்பர் சொன்னார்.  என்னா சாரு, இதுக்குப் போயி இப்டி டென்ஷன் ஆவுறீங்க.  நாவல்ல பாதிய நான் தானே எழுதிக் குடுத்தேன்.

உடனடியாக அவரைக் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போக வேண்டும் என்று எண்ணினேன்.  கையில் ஆயுதம் இல்லை.  தேடினேன்.  பக்கத்தில் ஒரு குடை இருந்தது.  எடுத்து அவர் மூஞ்சியில் குத்தினேன்.  அவர் தந்திரர்.  விலகினார்.  அடி இல்லை.  அவர் என்னை அடிக்க எழுந்தார்.  நண்பர்கள் விலக்கினர்.  அவர் சமாதானமானர்.  நான் உடனடியாக என் சட்டையைக் கழற்றினேன்.  பேண்ட்டைக் கழற்றினேன்.  ஜட்டியைக் கழற்றினேன்.  நிர்வாணமாக அந்த பேச்சிலர்ஸ் லாட்ஜில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன்.  பத்து நிமிடம்.  அங்கே இருந்த நண்பர் குழாமில் தளவாய் சுந்தரமும் ஒருவர்.  அந்த நிலையிலும் அவர் கேட்டார்.  என்ன இவருக்கு இவ்ளோ சின்னதா இருக்கு.  நான் கொடுத்த பதில்:  டேய் மு… பு…  விரைச்சா பெருசா ஆவுண்டா.

திரும்பவும் ஆடைகளை அணிந்தேன்.  அணிந்திராவிட்டால் இப்போது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன்.

அசோகமித்திரன் இறந்த போது என் தம்பி கடும் மன உளைச்சலில் இருந்தான்.  என்ன செய்வது என்று தெரியவில்லை.  அவன் வீட்டில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே உண்டு.  காந்தி.  அசோகமித்திரன்.  அப்போது அவன் தன் மன உளைச்சலிலிருந்து விடுபட அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காத தன் அண்ணனின் ப்ளாகுக்கு வந்தான்.  அதன் பெயர் charuonline.com   அன்றைக்கு என்று பார்த்து cradle of filth-இன் பாடல்களின் லிங்க்கைக் கொடுத்திருந்தேன்.  நாள் பூராவும் கேட்டான்.  துக்கத்திலிருந்து வெளியே வந்தான்.

நீங்களும் கேளுங்கள்…  ஆனால் அடித் தொண்டையில் கத்துவது வெறும் கத்தல் அல்ல.  அது ஒருவித இசை.  பயிற்சி வேண்டும்.  இல்லையெனில் தொண்டை கிழிந்து விடும்.  என்னைப் பொறுத்தவரை கிரேடில்  ஆஃப் ஃபில்த் தான் உலகின் ஆகச் சிறந்த இசைக் குழு.