இசைக் கடவுளின் நிலவின் ஒளி…

நீ எழுதிய கவிதையை உனக்கே பரிசளிக்கிறேன்; கூடவே இசைக் கடவுளின் நிலவின் ஒளியையும்…

https://www.youtube.com/watch?v=4Tr0otuiQuU

நீ வளர்ப்புப் பிராணிகளைக் கையாளும்போது
எப்படியோ அவற்றின் உலகங்களில்
நுழைந்துவிடுகிறாய்
அவற்றின் மொழிகளை
நீ அறிந்துகொண்டு விடுகிறாய்

ஒரு பறவையை
நீ கைகளில் எடுத்துக்கொள்ளும்போது
எப்படி பற்றிக்கொண்டால்
அவை ஒரு ஆகாயத்தில் நீந்துவதுபோல உணருமோ
அந்த இடத்தில் சரியாக உன்னால்
பற்றிக்கொள்ள முடியும்

ஒரு நாய்க்குட்டியை
நீ லாவகமாகத் தூக்கி் சுழற்றும்போது
அது பதட்டமடைவதில்லை
அது புதர்களில் ஒரு முயலைத்தேடி
உற்சாகமாகத் தாவுவதுபோல
உன் கைகளில் தாவுகிறது
அக்கணம் உன் கைகளில்
அது அவ்வளவு பாதுகாப்படைகிறது

நீ சிறிய ஆமைக்குஞ்சுகளை
எங்கிருந்தோ கொண்டுவந்தாய்
அவை அசைவற்று நீண்ட நேரம்
கண்ணாடித் தொட்டியில் தூங்குகின்றன
நீ அவற்றை கையில் எடுத்துக்கொள்ளும்போது
அந்த நாளின் கதையை உன்னிடம் பேசத் தொடங்குகின்றன

நீ என்னைக் கையாளும்போது
ஒரு சிறிய உயிரைக் கையாள்வதுபோலத்தான் இருக்கிறது
நீ என் அந்தரங்கத்தைக் கையாளவில்லை
என் மனதைக் கையாளவில்லை
மாறாக நான் கடந்துவந்துவிட்ட
என் பால்யத்தைக் கையாள்கிறாய்
நான் மறந்துவிட்ட
என் மகிழ்ச்சியை கையாள்கிறாய்
என் நினைவுகளில் விழுந்துவிட்ட
கசப்பின் முடிச்சுகளை கையாள்கிறாய்

நீ ஒரு பறவையையோ
நாய்க்குட்டியையோ கையாள்கிறாய்
அப்போது
என் உடல் அவ்வளவு கூசுகிறது
அவ்வளவு ததும்புகிறது

செல்வி ராமச்சந்திரன்
15.05.2018