ஊரின் மிக அழகான பெண் – kindle edition

1978-இலிருந்து 1990 வரையிலான காலகட்டம் என் வாழ்வில் மிக முக்கியமானது.  அப்போது நான் தில்லி சிவில் சப்ளைஸ் நிர்வாகத்தில் ஸ்டெனோவாக இருந்தேன்.  பாதி நாள் ஆஃபீஸ் போக மாட்டேன்.  லைப்ரரி மற்றும் மண்டி ஹவுஸில் உள்ள அரங்கங்களில் சினிமா, நாடகம், இசை, நடன நிகழ்ச்சிகள்.  அப்போதுதான் எனக்கு லத்தீன் அமெரிக்க சினிமாவும் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பரிச்சயம்.  1990-இல் சென்னை வந்த பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் என் வாசிப்பு தீவிரமாயிற்று.  கொஞ்சம் எஸ்பஞோலும் கற்றுக் கொண்டேன்.  மரியோ பர்கஸ் யோசாவின் அத்தனை நாவல்களையும் படித்தேன்.  மார்க்கேஸ், அலெஹோ கார்ப்பெந்தியர், கார்லோஸ் ஃபுவெந்த்தேஸ் எல்லோரையும் விழுந்து விழுந்து படித்தேன்.  Christopher Unborn, Terra Nostra, The Lost Steps போன்ற நாவல்களை எப்படியெல்லாம் தேடி வாங்கினேன் என்பதெல்லாம் பெரிய கதை.  இப்போது கைபேசியைத் தட்டினால் புத்தகம் ரெண்டு நாளில் வீட்டுக்கு வந்து விடும்.  அப்போது அப்படி இல்லை.  ஊர் ஊராக அலைந்து நூலகம் நூலகமாக அலைந்து கிடைக்காமல், சென்னையில் கன்னிமாரா ஓட்டலில் கிகிள்ஸ் என்று புத்தகக் கடை இருந்தது – அங்கே போய் சொல்லி வைத்தால் மூன்று மாத காலத்தில் புத்தகம் வரும்.  அதற்கும் வாராவாரம் போய் வந்து விட்டதா என்று கேட்பேன்.

அது தவிர கூபாவிலிருந்து க்ரான்மா என்ற ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது.  அதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத லத்தீன் அமெரிக்க எழுத்துக்களை அந்தப் பத்திரிகை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.  அதையும் வாராவாரம் படித்துக் கொண்டிருந்தேன்.  சில கதைகளை, சில கவிதைகளை அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்.  பிரம்மராஜன், நாகார்ச்சுனன் போன்ற நண்பர்கள் அப்போது அம்மாதிரியான செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தனர்.  எல்லோரும் ஒரு குழு போல் செயல்பட்டுக் கொண்டிருந்தோம்.

அதன் பிறகு சமகால அரபி இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.  அதற்குக் காரணமாக இருந்தது சவூதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துர் ரஹ்மான் முனிஃப்.  அவரது நாவலைப் படித்த போது அந்தக் கால ரஷ்ய இலக்கிய மேதைகளைப் படிப்பது போல் இருந்தது.   இத்தனைக்கும் அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். மொராக்கோவைச் சேர்ந்த Mohammad Choukriயைப் படித்த போது ஜான் ஜெனே போல் இருந்தது.  இருவருமே திருடர்களாக இருந்து எழுத்தாளர்கள் ஆனவர்கள்.  நண்பர்களும் கூட.  இன்றைய நிலையில் அரபி மொழியில் எழுதப்படுவது போன்ற இலக்கியம் உலகில் வேறு எந்த மொழியிலும் எழுதப்படவில்லை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.  சந்தேகம் இருந்தால், இந்தத் தொகுப்பில் உள்ள மாண்புமிகு மந்திரியின் மரணம் என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.  Nawal al-Saadawi எழுதியது.  இந்தத் தொகுப்பை கிண்டிலில் கொண்டு வரக் காரணமாக இருந்த அராத்துவுக்கு என் நன்றி.  புகைப்படத்தை அளித்த பிரபு காளிதாஸுக்கும், சைத்திரிகர் கார்த்திக் மேடிக்கும் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் என் நன்றி.

ஊரின் மிக அழகான பெண் – தொகுப்பின் விலை 99 ரூ.  எல்லோரும் வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதில் உள்ள கதைகளை நீங்கள் வேறு எங்குமே படிக்க முடியாது.  கேள்விப்படவும் முடியாது.

புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்பு:

https://www.amazon.in/dp/B07DD38F91/ref=cm_sw_r_wa_apa_i_zelfBb23YQB33oorin