பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாவது பாகம் – முன்பதிவு

சில தினங்களுக்கு முன் அராத்து, செல்வகுமார், கருப்பசாமி ஆகியோருடன் மாலையிலிருந்து நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தேன். க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம், எஸ். சம்பத், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற முன்னோடிகளை நாம் ஏன் கற்க வேண்டும் என்பதே என் பேச்சின் சாரம். அது ஒரு உரையாக இல்லாமல் உரையாடலாகவே இருந்தது. தி.ஜா.வின் மோகமுள்ளைப் படித்ததாகவும் அதிலிருந்து தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் அராத்து சொன்னதிலிருந்து ஆரம்பித்தது விவாதம். ”நான் உங்களிடமிருந்துதான் ஆரம்பித்தேன். அதனால் எனக்கு அவரெல்லாம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. மோகமுள் ஒரு காதல் கதை. அவ்வளவுதான்.” அராத்து நீண்ட நேரம் விவாதித்ததை இப்படித்தான் நான் சுருக்கிக் கொண்டேன்.

தி.ஜா.வின் வாசகர்களுக்கு அராத்து சொன்னது அதிர்ச்சியாக இருக்கலாம்; அல்லது, அராத்துவுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தோன்றலாம். ஆனால் சுமார் 25 ஆண்டு காலம் நானுமே அராத்து நினைத்த மாதிரியே தான் நினைத்திருந்தேன். தி.ஜா.வை முற்றாக நிராகரித்திருந்தேன். தி.ஜா.விடமே நேரில் நீங்கள் ஒரு sophisticated Balakumaran தி.ஜா. என்று சொன்னேன். அப்போதெல்லாம் இப்போதைய software மாதிரிதான். யாருமே சார் என்று சொல்வதில்லை. அவர் என் தோளில் தட்டிக் கொடுத்து அன்புடன் சிரித்தார். அப்போது என்னை மட்டம் தட்டுவது போல் வெங்கட் சாமிநாதன் ஏதோ சொன்னார். நடந்தது தி.ஜா.வின் வீட்டில். தில்லியில். அந்த என் நிராகரிப்புக்குக் காரணம், அராத்து சாருவிடமிருந்து ஆரம்பித்தது போல் மார்க்கி தெ ஸாத்-இடமிருந்தும் ஜான் ஜெனேவிடமிருந்தும் ஆரம்பித்திருந்தேன்.

யோசித்துப் பாருங்கள். மார்க்கி தெ ஸாத்-இன் ஒரு நாவலை ஸாத் யார் யார் தன் தாயின் யோனியை ஊசியால் தைக்கத் துணிகிறார்களோ அவர்களுக்கு இந்த நாவலை சமர்ப்பிக்கிறேன் என்று எழுதுகிறார். ஸாத்-இன் நாவல்கள் எதுவுமே கற்பனை இல்லை. எல்லாமே அவர் வாழ்வில் அவரே நிகழ்த்தியவை. அவர் ஒரு பிரபு. தன் அரண்மனை போன்ற இல்லத்தில் பல இளம்பெண்களை வரவழைத்து அவர்களை அவர்களின் தாய்களின் யோனிகளை ஊசி நூலால் தைக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். செய்தும் இருக்கிறார்கள்.

இந்த உலகிலேயே அதிக காலம் தன் எழுத்துக்காக சிறையில் இருந்த எழுத்தாளர் ஸாத் தான். அவர் செய்த குற்றங்களுக்கு அவரைக் கொன்றிருப்பார்கள். ஆனால் மார்க்கிகளைக் கொல்லக் கூடாது என்று ஃப்ரான்ஸில் ஒரு சட்டம் இருந்ததால் அவரைக் கொல்ல முடியவில்லை. தன் நண்பனான ஸாத்-இடம் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள், ஆனால் அதையெல்லாம் எழுதாதே, இல்லாவிட்டால் என்னால் கூட உன்னைக் காப்பாற்ற முடியாது என்று நெப்போலியன் சொல்லியிருக்கிறார்.
இப்படிப் படித்து விட்டு வந்த என்னால் யமுனா – பாபு காதலை எப்படி வாசித்திருக்க முடியும்?

ஆனால் 25 ஆண்டுகள் கழித்துப் படித்த போது தி.ஜா. காட்டும் உலகம் மார்க்கியின் உலகிலிருந்து நேர்மாறானது என்று கண்டு கொண்டேன். மார்க்கியின் உலகம் எப்படி நிஜமோ அதே போன்ற நிஜம்தான் தி.ஜா.வின் உலகமும். அது நரகம். இது சொர்க்கம். இரண்டையும் மனிதர்கள்தான் உருவாக்கி வாழ்கிறார்கள். தி.ஜா.வும் நரகத்தை எழுதியிருக்கிறார். செம்பருத்தியில். லா.ச.ரா.வும் நரகத்தை எழுதியிருக்கிறார். பாற்கடலில். ஜனனியில். ஆனால் மார்க்கியின் நரகத்தில் நரகம் நரகத்தோடு முடிந்து விடும். ஒளி தெரியாது. ஆனால் லா.ச.ரா.விலும் தி.ஜா.விலும் நரகத்தின் முடிவில் ஒளிக்கீற்று தெரியும். அல்லது, அந்த நரகத்தின் இயங்கியலைச் சொல்லி விடுவார்கள். அதாவது, நரகத்திலிருந்து வெளியே செல்வதற்கான சாவியோடுதான் நரகத்தில் பயணம் செய்து கொண்டிருப்போம். என்ன சொல்கிறேன் என்பதற்கான விளக்கத்தை நீங்கள் பழுப்பு நிறப் பக்கங்களில் பார்க்கலாம்.

மோகமுள்ளில் இருந்து ஒரு இடம்:

“இது என்னடா சாரீரம்! அதல பாதாளங்களெல்லாம் போறது! மேலே போனா, சத்யலோகம் எல்லாம் போறது! த்ரிவிக்ரமாவதாரத்திலே, பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப்பிரம்மாதிகளாலே. இவன் போய் எட்டிப்பிடுவான் போலிருக்கே!” என்று கண் அகல வியக்கிறார் ரங்கண்ணா.

மேலும் சொல்கிறார்: “எழுபது வருஷமாக நான் சங்கீதம் கேட்கிறேன். சங்கீதத்தைப் பத்தி தியானம் பண்றேன். சிந்தை பண்றேன். ஏதோ பகவான் கிருபையினாலே அந்த சமுத்திரத்திலே கொஞ்சம் காலையும் நனைச்சுண்டு நிக்கிறேன். ஆனா இந்த மாதிரி சாரீரத்தை நான் கேட்டதில்லை ராமு. இது ஆச்சரியமான சாரீரம்.”
***
“சாரீரம் மர்மாவை எல்லாம் சிலிர்க்க அடிக்கிறது. கேக்கற போதே மயிர்க் கூச்செறியறது. அமிர்தத்தாலே காது, உடம்பு, மனசு, ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுபிடறான்.”
அன்று கிருஷ்ணபட்ச பஞ்சமி. பழம்பித்தளைத் தட்டைப் போல சந்திரன் எழவும் இரண்டு நாழிக்கு மேலிருந்தது. நட்சத்திரங்களைத் தவிர வேறு ஒளிகள் இல்லை. கோயிலுக்குள் மட்டும் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
***
அந்த வடக்கத்திக் கலைஞர்கள் நாகேச்வரன் கோவிலின் உள்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சுருதி சேர்த்துவிட்டு மீட்டினபொழுது கோயில் மண்டபத்தில் தம்புராவின் நாதம் எதிரொலித்து வந்தது. பெரியவர் சுருதி சேர்த்துக்கொண்டு பாட ஆரம்பித்தார். கந்தர்வ கானம். அந்த கனமும் கம்மலும் நிறைந்த இனிமை, மண்டபத்தில் மேளம் கட்டி உள்ளத்தை மிதக்க வைத்தது. அந்த கானம் பட்டுப் பரவசமடைந்து, ஆகாகாரம் செய்வதுபோல், மண்டபம் குரல் நின்ற ஒவ்வொரு கனத்தையும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. யமுனாவும் ஒரு தூணில் சாய்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறாள். சுமார் ஒரு மணிக்குப் பிறகு இசை ஓய்ந்தது. யாரும் எழுந்திருக்கவில்லை. பேசவும் இல்லை. அப்படியே மௌனமாகச் சற்று நேரம் உட்கார்ந்திருந்தார்கள். மயக்கம் தெளியாதது போல.

யமுனாவிடம் சென்றான் பாபு. “என்ன யமுனா?”

“நெஞ்செல்லாம் வலிக்கிறது பாபு.”

“ஏன்?”

“இவர் ஏன் இப்படிப் பாடறார்? எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு, பாபு. இவ்வளவு பரவசமாய்ப் பாடினால், என்னால் கேட்க முடியவில்லையே. உடம்பெல்லாம் என்னமோ பண்றது,” என்று மீண்டும் கண்ணை மூடித் தூணில் பின்தலையைச் சாய்த்துக்கொண்டாள் யமுனா.

“உடம்பெல்லாம் கூடப் பறக்கிறது,” என்று கண்ணைத் திறந்து மீண்டும் சொன்னாள்.
அதன் பிறகு மறுநாள் அவர்களை நினைத்து மீண்டும் பாபுவிடம் சொல்கிறாள்: “எவ்வளவு நல்லாப் பாடினார், எனக்குப் பயமாயிருந்தது. மாரை மாரை வந்தடைச்சுது. அழுகை அழுகையா வந்தது. அவர் நிறுத்தினதால்தானோ என்னவோ. நிறுத்தாம பாடிட்டே இருந்திருந்தா நானும் அங்கேயே உட்கார்ந்து பிராணனை விட்டிருப்பேன்.”
***
“மோகமுள் படித்து விட்டேன்,” என்றேன் நண்பரிடம். “எப்படி இருந்தது?” என்று கேட்டார். “செத்துட்லாம் போலருக்கு.” அவ்வளவுதான் சொன்னேன். வடக்கத்திக் கலைஞர்களைக் கேட்டதும் யமுனா சொன்ன பதில். இதுதான் கலையின் உன்னதம். கலை தரும் அனுபூதி நிலை.
***
இதையெல்லாம்தான் பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதி விளக்கியிருக்கிறேன். 40 ஆண்டுக் கால வாசிப்பை இந்த நூலில் அடக்கியிருக்கிறேன். ஆனாலும் இது என் புத்தகம் அல்ல. என் முன்னோடிகளின் புத்தகம். இதை வாங்கிப் படிப்பதும் இதை உங்களுக்குத் தெரிந்த மாணவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் உங்கள் கடமை. தானத்திலேயே பெரிய தானம் அன்னதானம் என்பார்கள். ஆனால் வித்யா தானம் அதைவிடப் பெரிது. எனக்கு என் முன்னோடிகள் கொடுத்த ஞானத்தை இந்த நூலில் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாவது பாகத்தை 250 ரூ. செலுத்தி முன்பதிவு செய்யுங்கள். புத்தகம் வெளிவரும் போது 450 அல்லது 500 இருக்கலாம். இதுவரை 300 பேர் முன்பதிவு செய்திருப்பதாக அறிந்தேன். 500 பேராவது முன்பதிவு செய்தால்தான் நல்லது. இந்த ஒரு நூலுக்கு மட்டும்தான் நான் இப்படி எழுதுவேன். இந்த மாதம் 9-ஆம் தேதி வரை முன்பதிவுத் திட்டத்தை நீட்டிக்கும்படி பதிப்பக நண்பர்களைக் கேட்டுக் கொண்டேன். எனவே 9-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து விடுங்கள். ஒரு நண்பர் ஐந்து புத்தகங்களுக்கு முன்பதிவு செய்யலாம். இதை வாங்கி உங்கள் சிறார்களுக்கு அளியுங்கள். அவர்கள் இந்த மொழியை, இந்தப் பண்பாட்டை, இந்த நிலத்தை அறிந்து கொள்ள வேண்டும். என் நெருங்கிய நண்பர் ஒருவர் முன்பதிவு செய்து விட்டேன் என்று எனக்குச் செய்தி அனுப்பினார். எத்தனை பிரதிக்கு என்று கேட்டேன். ”இங்கே நூலகம் எதுவும் இல்லை. எனவே ஒரு பிரதிக்குத்தான் முன்பதிவு செய்தேன்” என்றார்.

நாலு அல்லது ஐந்து பிரதிக்கு முன்பதிவு செய்யுங்கள். வைத்திருந்து உங்கள் நண்பர்களிடம், உங்களுக்குத் தெரிந்த மாணவர்களிடம் கொடுங்கள்.
என்னுடைய நூல்களை ஒரே ஒரு பிரதி வைத்திருந்தால் நண்பர்கள் எடுத்துக் கொண்டு போய் திருப்பித் தர மாட்டார்கள். மூன்று நான்கு பிரதிகள் இருந்தால் பிரச்சினை இல்லை. விலையும் 250 ரூ. தான். 9 தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அறுநூறு எழுநூறைத் தொட்டால் நலம்.

மேலும், இந்த 250 ரூ. என்பது இதன் விலை அல்ல. என் முன்னோடிகளின் எழுத்து விலை மதிக்க முடியாதது. இந்த 250 ரூ. என்பது இதன் காகிதம், தட்டச்சுக் கூலி, தபால் செலவு ஆகியவற்றுக்கே போய் விடும். கையில் மிஞ்சுவது அஞ்சு பத்து கூட இருக்காது. எனவே முடிந்தவரை அதிகப் பிரதிகளுக்கு முன்பதிவு செய்யுங்கள்.
முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்.

https://tinyurl.com/pazhuppu2