பழுப்பு நிறப் பக்கங்கள் முன்பதிவுத் திட்டம்

https://tinyurl.com/pazhuppu2

ஜே. கிருஷ்ணமூர்த்தி நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி தேவையில்லை என்பார். ஆனால் அவர் பேச்சை ஆயிரமாயிரம் பேர் கேட்டனர். வழிகாட்டி வேண்டாம் என்று சொன்ன அவரை வழிகாட்டியாய் ஏற்றனர். அந்த oxymoron அவருக்குத் தெரிந்ததா இல்லையா தெரியவில்லை. போகட்டும். என்னைப் பொறுத்தவரை, நமக்கு வழிகாட்டி தேவை. அது நம் வாழ்க்கையில் இனிமை செய்யும். ஒரு அடர்ந்த கானகத்துக்குள் செல்ல நமக்கு ஒரு வழிகாட்டி இருந்தால் நலம்தான் இல்லையா? மேலும், எல்லா மனிதர்களும் சமமான திறமை கொண்டவர்கள் அல்ல. அத்வைதம் சொன்ன சங்கரரை நாம் படிக்க முடியுமா? படித்திருக்கிறோமா? ஆனால் அவர் பெயர் மட்டும் தெரியும். ஆக, வேதங்களையும் உபநிஷத்துக்களையும் சங்கரரையும் படித்த ஒருவர் அதைத் தன் கதைக்குள் பொதிந்து நமக்குக் கொடுக்கிறார் என்றால் – நான் ஃப்ரெஞ்சுத் தத்துவத்தை என் எழுத்தில் பொதிந்து வைத்திருப்பது போல – அது நமக்குக் கசக்குமா?

இதோ பாருங்கள், நளபாகம் நாவலில் ஆக்ராவில் மஜீத் பாய் சொல்கிறார்:

“தாஜ்மகால் கட்டுறான். பெரிய கோவில் கட்டுறான். பெரிய பெரிய அரண்மனையெல்லாம் கட்டுறான், சரி. அண்ணாந்தா களுத்து நோவும். அப்படியெல்லாம் கட்டுறாங்க. கட்டட்டும். அதிலெ ஆச்சரியப்படும்படியா என்னா ஆயிரிச்சு! வெறும் மண்ணு எப்படி சலவைக் கல்லாச்சு? வெறும் மண்ணும் கல்லும் எப்படி வைரமும் பச்சையும் கெம்புமா ஆச்சு? இக்கினியூண்டு விரை எப்படி மண்ணை இடிச்சுத் தள்ளிக்கிட்டு முளையா வருது? அது எப்படி இலையா ஆவுது? நிமிர்ந்து வளருதே. அதைவிடவா ஆச்சரியம் இருக்க முடியும்? முளை வர்றதுக்கு முன்னாலெ தளம் அடிச்சாப்பல இருக்கிற தரையிலே விரிசல் காணுது பாருங்க. இக்கினியூண்டு முளையைக் கண்டு தரையே பயந்து விரிஞ்சு குடுக்குதே, அதைவிடவா ஆச்சரியம்! அது பயந்துகிட்டு விரிஞ்சு குடுக்குதா? இல்லெ, ஆண்டவன் செடியா வர்றாருன்னு பக்தியோட ஆச்சரியமா, ‘எலே, ஒதுங்கிக்கிடுவோம்டா’ன்னு விரிஞ்சு குடுக்குதா? அதைத்தான் நினைச்சுக்கிட்டு வர்றேன். ஒரு புல்லு எப்படி நிலத்தைக் கீறிக்கிட்டுக் கிளம்புதுன்னே நமக்குத் தெரிஞ்சுக்கறதுக்கில்லெ. பத்தாயிரம் பேர் சேந்து இருபது வருசம் முப்பது வருசத்திலெ இந்த மாதிரி ஒரு கட்டடத்த கட்டிப்பிடலாங்க. ஒரு புல்லை உண்டாக்கிடறேன்னு சொல்லுங்க பார்ப்பம்.”

இதற்காகத்தான் தி.ஜானகிராமனையும் லா.ச.ரா.வையும் இன்னும் நம் முன்னோடிகள் யாவரையும் படிக்க வேண்டும் என்கிறேன்.

அன்றைய தினம் அராத்துவோடும், செல்வகுமாரோடும், கருப்பசாமியோடும் நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருக்கவில்லை; அதிகாலை ஐந்து மணி வரை பேசிக் கொண்டிருந்ததாக அராத்து பதிவு செய்திருக்கிறார். பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை. ஏன் அப்படி ஆவேசமாக உரையாடினோம்; ஏன் அன்றைய தினம் அவர்களைச் சந்திக்கப் போனேன் என்றால், புஷ்கினின் Prophet கவிதையையும் ஹேம்லட்டில் வரும் To be or not to be-யையும் நான் வாசிக்கக் கேட்டேன். அன்றைய தினம்தான் ஹிப்னாடிக் சர்க்கிளில் நான் ஒரு மாதம் பேசிய பேச்சை யூட்யூபில் பதிவேற்றி இருந்தார்கள். (நன்றி கபிலன்). ப்ராஃபட்டைக் கேட்ட பிறகு உயிராவது மயிராவது என்று கிளம்பி விட்டேன். ப்ராஃபட்டையும் ஹேம்லட்டின் to be or not to be-யையும் கேட்டால் அதை விடப் பேரின்பம் வேறு என்ன இருக்கிறது? அங்கேயும் போய் அது இரண்டையும் வாசித்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சாரு இத்தனை அழகாக ஆங்கிலம் வாசித்ததில்லை; இப்போது நிறைய வளர்ந்து விட்டார் என்றார் கருப்பு. (காயத்ரியிடமிருந்து கற்றது.)

பழுப்பு நிறப் பக்கங்கள் முன்பதிவுத் திட்டம் ஒன்பதாம் தேதி வரை உள்ளது. இன்னும் மூன்று தினங்கள். 250 ரூ. செலுத்தி முன்பதிவு செய்து விடுங்கள். இந்த நூல் ஒரு பொக்கிஷம். நாலைந்து பிரதிகளை ஆர்டர் செய்யுங்கள். இங்கே தமிழ் எழுத்தாளன் என்னதான் கத்தினாலும் அதிக பட்ச விற்பனை 1000 பிரதிகள்தான். அதுவும் அதிக பட்சம். மிக மிக அவலமான நிலை. ஒன்றும் செய்ய முடியாது.

இன்று படிமை அமைப்புக்காக நான்கு மணி நேரம் விடியோ பேட்டி அளித்தேன். என் பேட்டிகளில் இதுவே ஆகச் சிறந்ததாக அமையும். ஏனென்றால், என் எழுத்துக்களை முழுமையாகப் படித்திருந்தார்கள். விரைவில் நீங்கள் அதைக் கேட்கலாம்.

விரைவில் பழுப்பு நிறப் பக்கங்களுக்கு முன்பதிவு செய்யுங்கள்.  here is the link:

https://tinyurl.com/pazhuppu2