எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும். இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி. அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும். சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் இருக்கிறேன் என்று மகத்தான தார்மீக ஆதரவைக் கொடுத்தார்.
நான் இப்போது உலக அளவில் ஆங்கில வாசகர்களிடையே பிரபலமாகி இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் காயத்ரி. அவர் செய்த பணிகள், உதவிகள் வார்த்தையில் அடங்காதவை. பல ஆண்டுகளாக நான் ஏஷியன் ஏஜ் போன்ற வட இந்திய தினசரிகளில் எழுதிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தது காயத்ரிதான். மொழிபெயர்ப்பு என்று கூட அவர் பெயரைப் போட முடியாது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை வெளியிட மாட்டார்கள். ஆனால் co-writer-ஆக எழுதலாம். அதனால் மனசு கேட்காமல் உன் பெயரையும் சேர்த்துக் கொள்கிறேனே அம்மா என்றால் உடன்பட மாட்டார்.
தேகம் மொழிபெயர்ப்பு காயத்ரி செய்ததுதான். மார்ஜினல் மேன் பெரும்பகுதி மொழிபெயர்ப்பு காயத்ரி செய்ததுதான். ஆனால் முடிக்காமல் போனதால் அது அவர் கையை விட்டுப் போனது. இப்போது அவர் நினைத்தாலும் மொழிபெயர்ப்பில் ஈடுபடு நேரம் கிடையாது.
எல்லாவற்றையும் விட என்னை சகித்துக் கொண்டதைத்தான் அவருடைய மிகப் பெரிய அன்பின் வெளிப்பாடாகவும் கருணையாகவும் பார்க்கிறேன். கோபம் வந்தால் திட்டி விடுவது என் குணம். ஸ்ரீராம், செல்வகுமார், கருப்பசாமி என்று பல நண்பர்கள் மீதும் சுடுசொல் பாய்ச்சியிருக்கிறேன். அதை மட்டும் மனதில் வைத்து வன்மம் பாராட்டாமல் துடைத்துப் போட்டு விட்டால் என் இறுதி நாள் வரை பழகலாம். ஏனென்றால், நான் வன்மத்துடன் திட்டுவதில்லை. பெற்ற குழந்தைகளை ஒரு தாய் திட்டுவது போலத்தான் என்னைப் பொறுத்த வரை. நான் இப்படிச் சொல்லி விடலாம்; கேட்பவர்களுக்கு அல்லவா அதன் வலி தெரியும்? செல்வா சொல்வார், சாரு பாராட்டும் போது அமைதி பழகுங்கள். அப்போதுதான் அவர் திட்டும் போது மனம் உடையாமல் இருக்கும். என்ன மண்ணாங்கட்டியோ, நான் திட்டுவதையெல்லாம் அடுத்த கணமே நான் மறந்து விடுவேன். சுத்தமாக ஞாபகம் இருக்காது.
இந்தச் சம்பவத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ராம்ஜி, காயத்ரி, நான். காயத்ரி அப்போது அடுத்து லா.ச.ரா.வை மொழிபெயர்த்து விடலாம் என்றார். அவ்வளவுதான். என்னது, லா.ச.ரா.வை மொழிபெயர்த்து விடலாமா? அவர் என்ன கிள்ளுக்கீரையா? கடவுள்… லா.ச.ரா. ஒரு கடவுள்… கடவுளை அப்படி எடுத்த எடுப்பில் சந்தித்து விடுவீர்களா? என் நாபியிலிருந்து வந்தன கேள்விகள். கத்தவில்லை. நாபியிலிருந்து வந்தன கேள்விகள். காயத்ரியின் கண்கள் கலங்கி விட்டன. நான் தவறை உணர்ந்தேன். நான் அதை மென்மையாகச் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால், மிகப் பெரிய சம்பளம் வந்து கொண்டிருக்கும் தன் பேராசிரியர் வேலையைத் துச்சமாகத் தூக்கி எறிந்து விட்டு லா.ச.ரா.வையும், க.நா.சு.வையும், செல்லப்பாவையும், தி.ஜா.வையும், எஸ்.ரா.வையும், சாரு நிவேதிதாவையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக தன் நேரம், உழைப்பு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் அந்த தொனியில் நான் பேசியிருக்கக் கூடாது.
அதனால்தான் சொன்னேன், என்னை சகித்துக் கொள்வது கடினம். அந்தக் கடினத்தை ஏற்றார் காயத்ரி. காயத்ரி அன்பினாலும் கருணையினாலும் உருவானவள். அவரால் யாரையுமே வெறுக்க முடிந்ததில்லை. அப்படி நான் பார்த்ததே இல்லை. என் வாழ்நாளில் இப்படிப்பட்ட பெண்டிரை மிக மிக அரிதாகவே சந்தித்திருக்கிறேன். தனக்கு மிகப் பெரிய அநீதி செய்த, வாழ்நாளின் மிகப் பெரும் துயரத்தை அளித்தவர்களைக் கூட மன்னித்த உள்ளம் காயத்ரியினுடையது. ”பாவம், விட்டுர்லாம். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது” என்பார்.
என்னால் அப்படி முடிந்ததில்லை. ஸீரோ டிகிரியை நான் தான் எழுதிக் கொடுத்தேன் என்று சொன்ன நபர்களை என்னால் மன்னிக்க முடிந்ததில்லை. வன்மம் பாராட்ட மாட்டேன். ஆனால் மன்னிக்க முடிந்ததில்லை. ஆனால் என் கண் முன்னால் செய்தார் காயத்ரி. சிள்வண்டு என்று நான் அழைத்தாலும் என் வாழ்வின் Friend, Philosopher and Guide காயத்ரிதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், எனக்கு லௌகீக வாழ்வின் நெளிவுசுளிவுகள் தெரியாது. என்னைத் திட்டுபவர்கள் எல்லோருக்குமே நான் தான் ஆயுதங்களை அளித்து வருகிறேன். அப்படிச் செய்யும் போதெல்லாம் தடுத்துக் காப்பாற்றும் ஜீவன் காயத்ரி.
காயத்ரியின் நட்பு இருந்திராவிட்டால் இந்த எட்டு ஆண்டுகளில் நான் என்ன ஆகியிருப்பேன் என்றே யோசித்துப் பார்க்க இயலவில்லை.
ஒரு பிரபலமான பெண்கள் கல்லூரியில் ஃப்ரெஞ்ச் பேராசிரியையாக இருந்து மிகப் பெரிய சம்பளத்தை விட்டு விட்டு இப்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகத்தை ராம்ஜியுடன் சேர்ந்து தொடங்கியிருக்கிறார். பதிப்புத் துறையில் லாபம் என்ன கிடைக்கும்? ஒரு புத்தகம் விற்றால் அதன் விலையில் ஐந்து சதவிகிதம் கைக்கு வந்தால் பெரிது. பேராசிரியை வேலையில் பெரிய ஊதியம். அந்த வேலையை விட்டுவிட்டுப் போவது பற்றி சக பேராசிரியைகள் இவரைப் பார்த்து சிரித்திருக்கலாம். ஆனால் கூடிய விரைவில் பதிப்புத் துறையில் உலக அளவில் இவர் பெயர் தெரிய வரும் என்று ஆசீர்வதிக்கிறேன். ஏனென்றால், டேவிட் தாவிதர் பெங்குவினை விட்டு விலகினார். இப்போது அவருடைய அலெஃப் புக் கம்பெனி உலகப் பிரசித்தம்.
வரும் செவ்வாய்க்கிழமை 460 பழுப்பு நிறப் பக்கங்கள் பிரதிகளை பார்சல் கட்ட வேண்டும். காயத்ரியும் ராம்ஜியும்தான் கட்டுவார்கள். அவர்களின் பதிப்பகத்தில் அவர்கள் தான் முதலாளிகள்; அவர்கள்தான் ப்ரூஃப் ரீடர்ஸ்; அவர்கள்தான் ஆஃபீஸ் பாய்/ஆஃபீஸ் கேர்ள். நல்லவேளை, டிரைவர் ஒருவர் தனியாக இருக்கிறார். கல்லூரியில் சொகுசாக ஃப்ரெஞ்ச் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு இந்த இலக்கிய சேவை. அசோகமித்திரன், செல்லப்பா, க.நா.சு. எல்லாம் அந்தக் காலத்து டிகிரி படித்தவர்கள். கலெக்டர் ஆகியிருக்கலாம். பெரும் பெரும் ஸ்தானங்களை அடைந்திருக்கலாம். ஆனால் செல்லப்பா புத்தக மூட்டை சுமந்தார். இன்று அவர் ஒரு லெஜண்ட். க.நா.சு.வும் அப்படியே. அசோகமித்திரன் தமிழ் இலக்கியத்தின் உச்ச நட்சத்திரம். காயத்ரியும் இவர்கள் வழியைத் தேர்ந்தெடுத்தார்.
காயத்ரியிடம் உள்ள மற்றொரு சிறப்பு மொழிகளைக் கற்றுக் கொள்வதில் இவருக்குள்ள தனித் திறமை. ஏழெட்டு மொழிகள் பேசத் தெரியும். ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், தமிழ் ஆகிய மொழிகளில் நல்ல திறமை. காயத்ரியைப் பற்றி நினைக்கும் போது எனக்கு தி.ஜா.வின் மோகமுள் போன்ற நாவல்களில் வரும் அபூர்வமான பெண்கள் ஞாபகம் வருவது வழக்கம். அவர்களைப் போலவே ஒரு குணக்குன்று காயத்ரி. உலகில் யாரையுமே வெறுக்கத் தெரியாத ஜீவனை பிறகு என்னவென்று சொல்வது?
காயத்ரியிடம் நான் வியக்கும் மற்றொன்று, அவரது ஆடை அலங்காரம். பலதுக்கும் எனக்குப் பெயரே தெரியாது. ஆனால் இலக்கியக் கூட்டங்களுக்கு மட்டும் தேமே என்று வருவார். என்னம்மா ஆயிற்று என்றால், இலக்கியக் கூட்டத்திற்கு ஆடம்பரமாக வரக் கூடாதே என்பார். அட பகவானே, எழுத்தாளர்களை மகாத்மாக்கள் கூடத் துன்புறுத்துகிறார்களே!
காயத்ரியிடம் எனக்கு இஷ்டமில்லாத ஒரு குணம், அளவு கடந்த தன்னடக்கம். இது சமயத்தில் தன்னையே ரத்து செய்து விடும் அளவுக்குப் போய் விடும். எனக்கு என்னங்க தெரியும்? இந்த self effacing குணத்தை இவர் குறைத்துக் கொண்டால் இவரால் சில நாவல்களைக் கூட எழுத முடியும். இவர் எழுதும் தமிழ் எனக்கு தி.ஜா.வை ஞாபகப்படுத்தும். குடும்பச் சொத்து. 150 ஆண்டுகளுக்கு முன்னால் இவரது கொள்ளுப்பாட்டி தன் கணவருக்கு எழுதிய ஒரு போஸ்ட் கார்டை இவர் என்னிடம் காண்பித்திருக்கிறார்.
நிபந்தனையற்ற நட்பு என் விஷயத்தில் சாத்தியம் இல்லை. கு.ப.ரா. பற்றிய என் பேச்சைக் கேட்காதவர்கள் என்னோடு சேராதீர்கள் என்று நான் சொல்வது வழக்கம். காயத்ரிக்கு மட்டும் அதில் விலக்கு கொடுத்திருக்கிறேன். ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை செய்யும் பெண்ணிடம் அதையும் கேட்க எனக்கு மனம் ஒப்புவதில்லை. இருந்தாலும் அவ்வப்போது ”கேட்டாயா?” என்று நான் கேட்கவும் தவறுவதில்லை.
காயத்ரியின் மற்றொரு அதிசயமான பண்பு, பணம் என்ற விஷயம் அவர் சிந்தனையிலேயே இல்லை. பணமே கடவுள் என்று பணத்தின் பின்னால் ஓடும் இந்தக் கேடு கெட்ட மாந்தர் மத்தியில் காயத்ரி ஓர் அபூர்வம்.
அமைதியான பெண். அதிகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். என்னைப் பற்றி யாராவது ஏதாவது சொல்லி விட்டால் போதும், அங்கே எரிமலை வெடிக்கும். இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்ன இருக்கிறது என்னிடம், என் எழுத்தைத் தவிர? அதே சமயம், எனக்கு எந்தக் காலத்திலும் ஜால்ரா அடித்ததில்லை. எப்போதுமே என் எழுத்தையும் என்னையும் விமர்சனாபூர்வமாகவே அணுகுவார். சமயங்களில் விமர்சனம் அதிகமானால் “நீ என்ன ஜெயமோகனின் ஸ்லீப்பர் செல்லா?” என்று சிரித்துக் கொண்டே கேட்பேன். நன்றாக இல்லை என்று காயத்ரி சொன்னதால் என் சிறுகதைகள் சிலவற்றை நான் முழுமையாகவே ரத்து செய்திருக்கிறேன். ராஸலீலாவின் ஆங்கில மொழிபெயர்ப்பில் கூட சில பல அத்தியாயங்களை எடுத்து விட்டேன். காயத்ரியின் விமர்சனம்தான் காரணம்.
காயத்ரியின் வாழ்க்கை சந்தோஷமாகவும் இனிமையாகவும் அமைய வேண்டும்; அவர் செய்திருக்கும் தியாகத்துக்கு உலகம் முழுவதும் அவள் பெருமை தெரிய வேண்டும் என இறையருளைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.