பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா

பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா எப்போது என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர்.

இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் எழுதியிருந்தாலும் இன்னொரு முறை எழுதுகிறேன்.  மரியோ பர்கஸ் யோசாவுக்கு நோபல் பரிசு கிடைத்த போது சுமார் நூறு பேர் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள்.  அது நடந்தது 2010-இல்.  காரணம், நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக யோசா பற்றி எழுதி வருகிறேன்.

சமீபத்தில் விக்தோர் ஹாரா பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  அவரைப் பற்றி எழுதி சுமார் 15 ஆண்டுகள் இருக்கும்.  பினோசெத் டாக்டர் அயெந்தேயின் அதிபர் மாளிகையை சிஐஏவின் துணையுடன் தகர்த்து ஆட்சிக்கு வந்த நாள் 11 செப்டம்பர் 1973.  ஆட்சிக்கு வந்த ஐந்தே நாட்களில் விக்தோர் ஹாராவைக் கொன்று விட்டான் பினோசெத்.  (கொல்லப்பட்ட போது ஹாராவின் வயது 40.)  எப்படிக் கொன்றான் என்பதை ஒரு நாடகமாக எழுத வேண்டும் என்று பல காலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சந்த்தியாகோ தெ சீலேவில் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது.  அங்கே தான் விக்தோர் ஹாராவின் இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.  பினோசெத் ஆட்சிக்கு வந்ததும் ‘தேசத்துரோகி’களையெல்லாம் பிடித்து அந்த விளையாட்டு மைதானத்துக்குக் கொண்டு வந்தான்.  பினோசெத்தின் அர்த்தத்தில் தேசவிரோதிகள் என்றால் கம்யூனிஸ்ட் டுகளும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களும்.  மொத்தம் 6000 பேர். இதில் பெரும்பாலானவர்கள் பேராசிரியர்களும் மாணவர்களும் ஆவர்.

pinochet

ஹாராவின் கையை மேஜையின் மீது வைக்கச் சொன்னான் ஒரு அதிகாரி.  ஹாரா கையை வைத்ததும் ஒரு கோடரியால் விரல்களை வெட்டினான்.  இன்னொரு கையையும் வை என்றான்.  ஹாரா வைத்தார்.  அந்தக் கையின் விரல்களையும் வெட்டினான் அதிகாரி.  வேசி மகனே, இப்போது வாசிடா உன் கித்தாரை என்று நகைத்தான் அதிகாரி.  எந்தக் கலக்கமும் அடையாத ஹாரா நடந்து சென்று ஒரு மூலையில் வைத்திருந்த கித்தாரை எடுத்து தன் விரல்களற்ற கைகளால் நரம்புகளை வருடி தன் மகத்தான குரலால் பாட ஆரம்பித்தார்.  கூடியிருந்த கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர்.  கடும் சீற்றமடைந்த அதிகாரி தன் துப்பாக்கியால் ஹாராவின் தலையில் சுட்டான்.  பிறகு உடல் முழுவதும் சுட்டான்.  ஹாராவின் உடலில் மொத்தம் 44 இடங்களில் துளையிட்டன துப்பாக்கி ரவைகள்.

victor jara stadium

இப்படி என் ஊணிலும் உணர்விலும் கலந்த சந்த்தியாகோ நகரைப் பார்க்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன்.  முடியவில்லை.  இந்த நிலையில் எப்படி நான் வெளியீட்டு விழா நடத்துவது?  இங்கே தமிழ்நாட்டில் வாசிப்புச் சூழல் சரியில்லை.  என்னதான் பழுப்பு நிறப் பக்கங்கள் முன்பதிவுக்கு என் நண்பர்கள் பிரமாதமாகப் பணம் அனுப்பி அதை வெற்றி பெறச் செய்தாலும் என் எதிர்பார்ப்புகள் வேறு.  460 பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டன.  அதில் என் நெருங்கின நண்பர்கள் முப்பது முப்பது பிரதிகளாக முன்பதிவு செய்தது 200 பிரதிகள்.  மீதி 260 பிரதிகளே முன்பதிவுக் கணக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  இதுவே 1000 பிரதி முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் அட்டை hard bound ஆக இருந்திருக்கும்.

சீலே செல்ல இயலாமல் மிகவும் demoralized நிலையில் இருக்கிறேன்.  இனி எப்போதும் என் நூல்களுக்கு வெளியீட்டு விழா நான் நடத்த மாட்டேன்.  நண்பர்கள் நடத்தினால் கலந்து கொள்வேன்.