கட்டுக்கதை

இந்த தேசமும் இதன் பழம்பெரும் பாரம்பரியமும் நம்பிக்கைகளும் எந்த அளவுக்குக் கீழே விழுந்து சாக்கடை சகதியில் மாட்டிக் கொண்டு விட்டது என்பதை இன்று நான் போட்ட பதிவுக்கு வந்த இரண்டு எதிர்வினைகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

விஞ்ஞானம் என்ற விஷயம் நமக்கு எத்தனையோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  எத்தனையோ விஷயங்களைப் புரிய வைத்திருக்கிறது.  அதன் காரணமாக நான் அடைந்த அறிவு, என் பாட்டனையும் பூட்டனையும் அவமானப்படுத்துவதற்கு ஆயுதமாக இருக்கலாகாது.

என் முகநூல் நட்பு வட்டத்தில் இதுவரை சுமார் 4500 பேர் உள்ளனர்.  இவர்களில் 4300 பேர் ஆண்கள்.  இதிலும் 4200 பேர் இந்துக்கள்.  முகநூலில் 5000 பேர் தான் நட்பு வைத்துக் கொள்ளலாம் என்று கேள்விப்பட்டேன்.  அதனால் இப்போது நான் முஸ்லீம் நண்பர்களையும் பெண்களையும்தான் இணைத்து வருகிறேன்.  நான் கலாச்சார ரீதியாக ஒரு முஸ்லீமாகவே உணர்கிறேன்.  அப்படித்தான் வாழ்கிறேன்.  நான் கேட்கும் இசை, நான் படிக்கும் புத்தகம் எல்லாமே மெக்ரிப் தேசத்தவை.  அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் லெபனானிலோ எகிப்திலோதான் பிறக்க விரும்புவேன்.  இது ஒரு பக்கம் இருக்க, தற்காலத்தில் ஒருவர் முற்போக்கு என்றால் இந்து மதத்தைக் கீழ்மைப்படுத்துவது என்ற போக்கு காணப்படுகிறது.  இதைச் செய்வபவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லை.  இந்துக்கள்.  அரசியல்ரீதியான இந்துத்துவா வேறு.  இந்து தர்மம் வேறு.  விருட்சங்களை வழிபட்ட தர்மம் அது.  மக்களுக்கு ஞான தானம் செய்பவன் பிச்சை எடுத்து வாழ வேண்டும் என்று நெறி செய்த தர்மம் அது.  அப்படித்தான் வாழ்ந்தார்கள் ஞானிகள்.  இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்னைக் கிண்டல் செய்வதற்கு முன்னால் ஆதி சங்கரர் எப்படி வாழ்ந்தார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  அவர் ஒரு மகா கவியும் ஆவார்.  அவரை நேரடியாகப் படிக்காவிட்டாலும் அவரைப் பற்றி நான் எழுதியுள்ளவற்றையாவது படியுங்கள்.  எட்டு வயதில் தன் அன்னையின் அனுமதியுடன் சந்யாசம் ஏற்றவர் சங்கரர்.  நர்மதை நதிக்கரையில் கோவிந்த பகவத்பாதாவிடம் தத்துவம் பயின்றார்.  பிறகு அவரது அறிவுரையின்படி பத்ரிநாத் சென்றார்.  அங்கேதான் அவர் உபநிஷத்துகளுக்கும் பகவத்கீதைக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதினார்.  அந்தக் காலகட்டத்தில்தான் அத்வைதம் என்ற தத்துவ தரிசனத்தையே அவர் உலகத்துக்கு வழங்கினார்.  அப்போது அவர் வயது என்ன தெரியுமா?  12.  சங்கரரின் தத்துவ ஞானத்தினாலும் தரிசனத்தினாலும் மட்டுமே இந்தியா பௌத்தத்திலிருந்து விடுபட்டது.  அவர் கலந்து கொண்ட சம்வாதங்கள் அனைத்திலும் அவரே வென்றார்.  ஒருமுறை மந்தன மிஷ்ராவுக்கும் சங்கரருக்கும் ஒரு சம்வாதம் நடந்தது;  மந்தன மிஷ்ரா மீமாம்ச நெறியைப் பின்பற்றுபவர்.  மீமாம்ச நெறியில் சடங்குகள்தான் பிரதானம்.  இதுவும் வேதத்தில் உள்ளதுதான்.  யார் யாருக்கு எது எது ப்ரீதியாகத் தெரிகிறதோ அதைப் பின்பற்றினார்கள்.  மந்தன மிஷ்ராவை சம்வாதத்துக்கு அழைத்தார் சங்கரர்.  மீமாம்சமா? அத்வைதமா? எது சரி?  சம்வாதத்தில் தோற்றால் சங்கரர்  தன் அத்வைதத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மீமாசத்தை ஏற்க வேண்டும். அது மட்டும் அல்ல; தன் சந்நியாசத்தையும் துறந்து விட்டு ஒரு பெண்ணை மணக்க வேண்டும்; அதோடு மந்தன மிஷ்ராவின் சீடராகவும் ஆக வேண்டும். மந்தனர் தோற்றால் சந்நியாசம் பூண்டு சங்கரரின் சீடர் ஆக வேண்டும்.  வயதிலும் அனுபவத்திலும் மிக மிகப் பெரியவரான  மந்தன மிஷ்ராவை அதுவரை யாரும் வாதத்தில் வென்றதில்லை.   சங்கரரோ இளைஞர்.  இந்தியாவைக் கால்நடையாகச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்நியாசி.  மந்தன மிஷ்ராவின் மனைவியான உபய பாரதி இந்த சம்வாதத்துக்கு நடுவராக இருக்க சம்மதித்தார்.  உபய பாரதி தத்துவத்திலும் ஞானத்திலும் இந்த இரண்டு பேருக்கும் நிகரானவராக இருந்தார்.  அந்தக் காலத்தில் சரஸ்வதியின் அவதாரமாகவே கருதப்பட்டார்.  விவாதம் மாதக் கணக்கில் நீண்டது.  அக்காலத்திய தத்துவ நிபுணர்களும் சிந்தனையாளர்களும் அந்த விவாதத்தை தினந்தோறும் பார்த்து வந்தனர்.  கடைசியில் உபய பாரதி தன் தீர்ப்பை அளித்தார்.  விவாதத்தில் வென்றவர் சங்கரர்.  மந்தனருக்கே அது தெரிந்து விட்டது.  நிபந்தனையின்படி சந்நியாசம் பூண்டு சங்கரரை விழுந்து வணங்கினார்.

அப்போது  உபய பாரதி சொன்னார்.  நீங்கள் ஒரு மகாஞானி.  ஆனால் நீங்கள் இன்னமும் பூரணமான வெற்றியை அடைந்து விடவில்லை.  ஏனென்றால், ஒருவரை வெல்ல வேண்டும் என்றால் அவர் மனைவியையும் வென்றாக வேண்டும்.   17 நாட்கள் இருவருக்கும் சம்வாதம் நடந்தது.  தத்துவத்திலும் சாஸ்திரத்திலும் வேதங்களிலும் அவரை வெல்ல முடியாமல் போகவே உபய பாரதி அவரைக் காம சாஸ்திரத்தில் கேள்வி கேட்கத் தொடங்கினார்.  சந்நியாசிக்குக் காம சாஸ்திரம் எப்படித் தெரியும்?  ஒரு மாத கால அவகாசம் கேட்டார் சங்கரர்.

தன் சீடர்களுடன் பல இடங்களுக்குச் சென்றார்.  அப்போது செத்துப் போன ஒரு அரசனின் பிணத்தைப் பார்த்து அந்த உடலுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து காமம் அனுபவித்து விட்டுத் திரும்புகிறேனே என்றார்.  ஒரு சந்நியாசி இப்படிச் செய்யலாமா என்று கேட்ட சீடர்களுக்கு ஆதி சங்கரர் ஒரு அற்புதமான விளக்கத்தைக் கொடுத்தார்.

”இந்த உலகமே மாயை என்று பூரணமாக உணர்ந்து விட்ட ஞானிக்கு நல்லது கெட்டது என்ற பாகுபாடோ சாஸ்திரங்கள் கூறும் தடைகளோ சட்டதிட்டங்களோ எதுவுமே கிடையாது.  எந்தச் செயல்களும், அதன் பலன்களும் அவரைத் தீண்டாது.  எனவே நான் காமச் செயலில் ஈடுபட்டாலும் அதன் மூலம் என்னிடம் எந்தத் தீமையும் வந்து சேராது.  ஆனாலும் வரும் காலத்தில் என்னைப் போன்ற ஒரு சந்நியாசி இப்படி ஒரு செயலைச் செய்தார் எனக் குழப்பம் அடைந்து விடக் கூடாது என்பதனால் காம அனுபவத்தை நான் வேறொரு உடம்பின் மூலமாக அடைகிறேன்.  அதற்காக இப்போதைய இந்த உடலை விட்டு விட்டு அந்த அரசனின் உடலில் செல்கிறேன்.”

இதெல்லாம் வெறும் கட்டுக்கதை அல்ல.  சங்கரரே இதையெல்லாம் எழுதியிருக்கிறார்.  சரி, சங்கரர் 13 நூற்றாண்டுகளுக்கு முந்தையவர்.  நம் வள்ளலாரை எடுத்துக் கொள்வோம்.  அவர் காலம் 1823 – 1874.  வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்தவர்.  அண்ணன் ஊர் புகழும் சமயச் சொற்பொழிவாளர்.  தம்பி ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போவதில்லை.  எனக்கு இப்படி ஒரு தம்பியா, இனிமேல் உனக்கு இந்த வீட்டில் சாப்பாடு கிடையாது என்று சொல்லி விடுகிறார்.  அண்ணி தான் ராமலிங்கத்துக்குத் தாய் போல.  பிள்ளை பசியோடு கொல்லைப்புறத்தில் வந்து நிற்கிறான்.  கண்ணீர் விட்டபடி சோறு போடுகிறார்.   ஒருநாள் என் தாயைப் போன்ற உங்களையா கண் கலங்க விடுகிறேன் என்று வருந்தும் ராமலிங்கம் பள்ளிக்குச் செல்லத் தலைப்படுகிறான்.

ஒருநாள் அண்ணனுக்கு தேகநலம் சரியில்லை.  அன்றைய தினம் செய்ய வேண்டிய சமயச் சொற்பொழிவை ரத்து செய்ய மனம் இல்லாமல் அங்கே இருந்த பெரியவர்கள் இந்தச் சின்னப் பிள்ளையை ஒரு பாட்டுப் பாடச் சொல்கிறார்கள்.  ராமலிங்கத்துக்கு நல்ல குரல் வளம்.  தேவாரமோ திருவாசகமோ ஏதோ ஒரு பாடலைப் பாடி அதற்கு விளக்கமும் சொல்கிறான்.  எத்தனை மணி நேரம்?  மூன்று மணி நேரம்.  பெரும் பெரும் ஞானிகளால் கூட சொல்ல முடியாத விளக்கம்.  வயது பத்தோ பதினொன்றோ.  இதைக் கேள்விப்பட்ட ராமலிங்கத்தின் அண்ணன் தம்பியை அழைத்து நீதான் பள்ளிக்கே செல்வதில்லையே, இதையெல்லாம் எங்கே கற்றாய் என்று கேட்கிறார்.

முகநூலில் என்னை நக்கல் செய்யும் அன்பர்களே, ராமலிங்கம் சொன்னார்.  மாடியிலேயே போய் தனியாய் அமர்ந்து இருக்கிறேனே, அங்கே இருக்கும் கண்ணாடி வழியே வந்து முருகப் பெருமான் தான் எனக்கு இது எல்லாவற்றையும் கற்பித்தார்.

வள்ளலாரின் கட்டுரைகளில் இதை எழுதியிருக்கிறார்.  அவரது உரைநடை நூல்களை வாங்கிப் படியுங்கள்.  அதில் அவர் நான் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேன் என்றும் எழுதியிருக்கிறார்.  ஏன் சாமி, எப்போதும் கண்களை ஒரு துணியினால் மூடியே இருக்கிறீர்கள் என்று ஒரு சமயக் கூட்டத்தில் கேட்கப்பட்ட போது தலையைப் போர்த்தியிருந்த துணியை அகற்ற, அவர் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்த பலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.  எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது.  அவரோடு வாழ்ந்த பலரும் எழுதியிருக்கின்றனர்.

எனவே இப்போதைய இந்துத்துவ அரசியல் செய்யும் மனிதர்களைப் பார்த்து இந்து தர்மத்தை எடை போடாதீர்கள்.  எல்லா மதங்களையும் போலவே இந்து மதத்திலும் பிரச்சினைகள் உள்ளன.  தீண்டாமையும், சாதிப் பிரிவினைகளும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் அவற்றில் சில.  ஆனால் இந்தியாவின் ஆன்மீக மரபும், இந்தியாவின் பாரம்பரியமும்  இது போன்ற பிரச்சினைகளையும் தாண்டி வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மேலும், என்னைக் கிண்டல் செய்யும் பகுத்தறிவுக் குஞ்சுகளுக்கு விலங்கினங்களைப் பற்றிக் கூடத் தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.  பாம்பு, யானை, மாடு, நாய், பூனை போன்ற விலங்குகள் பல விஷயங்களில் மனிதர்களை விட புத்திக்கூர்மை உள்ளவை.  இதையெல்லாம் நான் மிக விரிவாக எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன்.  எதையுமே படிக்காமல் முகநூலில் கிண்டல் செய்து கொண்டிருந்தால் நாடு இந்த கதியில்தான் இருக்கும்.

கீழே வரும் பத்தியைப் பாருங்கள்.  இதுதான் காலையில் நான் பதிவிட்ட குறிப்பு.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர் என்ற ஊரில் உள்ள விஸ்வநாத சுவாமி ஆலயத்தில் தினமும் காலையில் ஒரு பெரிய நாகம் இக்கோவிலின் ஸ்தல விருட்சமான வில்வ மரத்தில் ஏறி வில்வ இலைகளை வாயில் கவ்விக் கொண்டு வந்து லிங்கத்தின் மீது ஏறி அதை வைத்து விட்டு இறங்கி படம் எடுத்து ஆடி விட்டுச் செல்கிறது என்று அறிந்தேன். இது கும்பகோணத்துக்காரர்கள் யாருக்காவது தெரியுமா? இப்படி நடந்தால் இதை நான் நேரில் வந்து பார்க்க விரும்புகிறேன். ஆனால் இந்தக் கோவிலில் வழிபட மாட்டேன். ஏனென்றால், இங்கே வழிபட்டால் அடுத்த ஜென்மா இருக்காது. மறு பிறவியே இல்லாதவர்கள் மட்டுமே இங்கே நுழைய முடியும். மீறிச் செல்ல முயன்றால் தடைகள் ஏற்படும். இன்னொரு விசேஷம், வருடம் பூராவும் அதிகாலையில் சூரிய ஒளி இந்தக் கோவிலின் லிங்கத்தின் மீது படுகிறாற்போல் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.