PEPS

யோவ் மிஸ்டர் பெருமாள்,

என்னுடைய நிறைய பிரார்த்தனைகள் நிலுவையில் இருக்கும் விஷயம் உமக்குத் தெரியுமா தெரியாதா தெரியவில்லை.  நீர் பிஸி.  அதனால் அந்தப் பிரச்சினைக்குள் நான் நுழைய விரும்பவில்லை.  ஆனால் ஒருமுறை அதையெல்லாம் மீள் பார்வை பார்த்து விடுவோம்.  சுமார் 30 ஆண்டுகளாக சீலே போக வேண்டும், அர்ஹெந்த்தினா போக வேண்டும், ப்ரஸீல் போக வேண்டும், எல் சால்வதோர் போக வேண்டும், மெஹீகோ போக வேண்டும், கூபா போக வேண்டும், தொமினிகன் ரிபப்ளிக் போக வேண்டும், பராகுவாய் உருகுவாய் போக வேண்டும், பெரூ போக வேண்டும் என்று பிரார்த்தனை விட்டு சலித்துப் போய் நானும் கிட்டத்தட்ட மறந்தும் விட்டேன்.  போகட்டும்.

காலையில் எழுந்தால் மொபைலில் I miss you da என்று மெஸேஜ் பார்க்கும்படியாக, ருக்மிணி தாயார் ஜாடையில் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வேண்டும் என்று மொபைல் ஃபோன் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து பிரார்த்தனை வைத்துக் கொண்டிருக்கிறேன்.  ம்ஹும், இன்று வரை கவனிப்பு இல்லை.

ஜெயமோகன் மஹாபாரதம் எழுதி பாரத ரத்னா விருது கிட்டத்தில் போய் விட்டார்.  எஸ்ரா அவரே ஒரு மஹாபாரதமாகி விட்டார்.  இப்படி இந்த இரண்டு பயபுள்ளைகளையும் புஷ்டியாகக் கவனித்த நீர் உம்மையே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருக்கும் அடியேனை ஒன்றுமே கவனிக்காமல் கமல் ரஜினி இளையராஜா போன்ற குட்டிக் கடவுள்களை நான் தினமும் திட்டி பலரிடமும் வசவு வாங்க வைத்துக் கொண்டிருக்கிறீர்.  டேய், நீ பண்ணின அக்குறும்புக்கெல்லாம் நான் என்னடா பண்ணுவேன் என்று கேட்காதீர்.  கொன்று விடுவேன்.  என் மனதில் ஏன் இப்படியெல்லாம் தோன்றப் பண்ணுகிறீர் என்பதுதான் என் கேள்வி.  கமலைப் பார்த்தால் பம்மியபடி ஒரு ஸலூட் அடிக்கத் தோணும்படி ஏன் என்னை வைக்கவில்லை?  ஒரு சிநேகன் மாதிரி என்னை ஆக்கியிருந்தால் நானும் மய்யத்தில் இணைந்திருப்பேனா இல்லியா?  சரி, உம் செல்லப்பிள்ளை அந்த அளவுக்கு இறங்க உம்முடைய ஈகோவே முதலில் இடம் குடுக்காது.  போகட்டும், ஒரு ஜெயன் அளவுக்காவது ஆக்கியிருக்கணுமா இல்லியா?  இளையராஜாவின் பாதம் பணிந்து என்று சொல்லும் அளவுக்கு என் மனதில் அடக்கத்தை விதைத்திருக்கணுமா இல்லியா?  இப்போ சொல்லும், யார் தப்பு?  எனக்கு இளையராஜாவைப் பார்த்தாலே காண்டு வருகிறதே?  ஏன் பாதம் பணியத் தோணாமல் இப்படி என்னைப் பண்ணி விட்டீர்?  கமல் “நீங்கள் முஸ்லீம்களாக இருப்பதில் தப்பு இல்லை” என்று சொல்லும் போது நாக்கை மடித்துக் கொண்டு நாலு சாத்து… ஐயோ ஐயோ வேண்டாம், கமல் ரசிகர்கள் என்னைக் கொன்றே போட்டு விடுவார்கள்.

சரி, இதை விடும்.  ஒரு ஆள் – உம் மீது நம்பிக்கை இல்லாதவர் – கொஞ்சம் இடது என்று வைத்துக் கொள்ளுமேன் – அவர் பாட்டுக்கு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.  அந்த மாதிரி தமிழ்நாட்டில் கொறஞ்சது அம்பதாயிரம் பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உமக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும்.  நீர் என்ன செய்தீர்?  பொத்திக் கொண்டு இருக்க வேண்டியதுதானே?  அவரை நீர் உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் வைத்தீர்.  நியூயார்க் டைம்ஸில் எழுதுகிறான் ஐயா அவரைப் பற்றி? என்ன, யாரா?  நீர் என்ன தினந்தினமா இப்படிச் செய்கிறீர்?  அதான், உம் பெயரிலேயே எழுதுகிறாரே ஒர்த்தர், அவர்தான்.  ம்?  எதாவது லாஜிக் இருக்கா?

இந்தப் பஞ்சாயத்தையெல்லாம்தான் உம்மிடம் நேரிலேயே கேட்டு ஒரு கை பார்த்து விடலாம் என்று அன்னிக்கு ட்ரிப்ளிகேன் வந்தேன்.  கொல கூட்டம்.  நீரும் திருவேங்கடன் மாதிரி ஆகி விட்டீர்.  மலைதான் பாக்கி.  அதுசரி, ட்ரிப்ளிகேனில் மலைக்கு எங்கே போவது?  க்யூ வரிசை அரை கிலோமீட்டர் இருக்கும்.  அந்தக் கூட்டத்தில் எவன் நிப்பான்?  அப்பனைப் பார்க்கக் கியூவில் நிற்பது எனக்கு அவ்மானமா உமக்கு அவ்மானமா?  கிளம்பலாம் என்று திரும்பும்போது நரசிம்மன்.  நீர் தான் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அந்த இடத்தில் நரசிம்மனுக்கு என்ன வேலை?  அவனைப் பார்த்தே பத்து வருஷம் ஆச்சு.  என்னோடு ஸ்டெனோவாக வேலை பார்த்தவன்.  உமக்குப் பக்கத்து வீடுதான்.  டேய், உடம்பு பூராவும் மூளையை வைத்துக் கொண்டு இங்கே ஏண்டா எங்களோடு போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் ஸ்டெனோவாக இருக்கிறாய் என்று கேட்ட போது அம்மாவுக்காக என்றான்.  இத்தனைக்கும் ஒரே பிள்ளையெல்லாம் இல்லை; அண்ணா தமக்கை எல்லாம் உண்டு.  அப்புறம் எப்படியோ அம்மாவின் சம்மதத்தோடு அமெரிக்கா போய் விட்டான்.  லீவில் வந்தவன் என் முன்னே நிற்கிறான்.  பட்டரே என் மாமா தான் என்று சொல்லி ரெண்டே நிமிடத்தில் ஜோலி முடிந்தது.  ஏன், ஜோலி என்று சொல்லக் கூடாதா?  இதோ பாரும் பெருமாள், உமக்கு ஜார்ஜ் பத்தாய் ஜார்ஜ் பத்தாய் என்று ஒரு ஆளைத் தெரியுமா?  ஃப்ரெஞ்சுக்காரர்.  என்னது, உமக்கு ஃப்ரெஞ்சு தெரியாதா? சும்மா விளையாடாதீர்.  சகல லோகத்தையும் பரிபாலித்துக் கொண்டிருக்கும் உமக்கா ஃப்ரெஞ்ச் தெரியாது?  அடக்கம்… அடக்கம்… இந்த அடக்கம் மட்டும் என்னிடம் இருந்திருந்தால் இந்நேரம் எங்கேயோ போயிருப்பேன்.  அது இருக்கட்டும்.  இந்த ஜார்ஜ் பத்தாய் இருக்கிறாரே, அவர் ரெண்டையுமே ஜோலி என்றுதான் சொல்கிறார்.  ஒன்னு, பெரிய ஜோலி.  இன்னோன்னு, சின்ன ஜோலி.  அதாவது, பெருமாள் என்பது என்ன?  மரணம்.  என்னது, நான் மரணமா என்று அதிர்ச்சி அடையாதீர்.  இன்னார் இறைவனடி சேர்ந்து விட்டார் என்றால் அது மரணம்தானே?  ஆக, உம்மோடு வைத்துக் கொள்ளும் சகவாசத்தை அந்த ஆள் பெரிய ஜோலி என்கிறார்.  பெண்களோடு மேட்டர் பண்ணுவது சின்ன ஜோலியாம்.  மேற்குலகில் இதை எல்லோரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடினாலும் நமக்கு இது பழைய விஷயம்தானே?   ஜனனம் – மரணம் – ஜனனம் – மரணம்…  இந்த வட்டம் பற்றித்தான் நாம் ஆதிகாலத்திலிருந்தே பேசியாச்சே?  அப்படியென்றால், மரணம்தானே ஜனனம்.  ஜனனத்துக்கு என்ன பண்ண வேண்டும்?  மேட்டர்.  தட்ஸ் ஆல்.  ஆக, மேட்டர் சின்ன ஜோலி.  கடவுளின் சகவாசம் பெரிய ஜோலி.

அப்படி அதிர்ஷ்டவசமாய்க் கிடைத்த ரெண்டு நிமிட சந்திப்பில் நான் உம்மிடம் என்ன பஞ்சாயத்து பண்ண முடியும்?  என் நண்பர் சந்தானம் சொன்னார், 25 வருஷங்களுக்கு முன்னே அவரும் இதே தெருவில்தான் இருந்தாராம்.  அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை தன் மகளோடு வந்தால் உம் வாசஸ்தலத்தில் ஒரு ஆத்மா இருக்காதாம்.  பட்டரும் இவரைப் பார்த்து விட்டு வெளியே போய் விடுவாராம்.  ஏனென்றால், அவர் ஒரு ஏழை பிராமணர்; அதனால் தக்ஷிணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.   ஆனால் மிஸ்டர் பெருமாள், எல்லா ஏழை பிராமணாளைப் போலவும் அடுத்த தலைமுறை எங்கோ போய் விட்டது.  உச்சம்.  சுந்தர் பிச்சை இருக்கானே, அவன் லெவலுக்குப் போய் விட்டாள் சந்தானத்தின் மகள்.  அது சரி, 25  வருஷத்துக்கு முன்னால் அப்படிக் காத்து வாங்கின உம் வாசஸ்தலம் இப்போது எப்படி ஜனசமுத்திர சங்கமமாகி விட்டது?  அதுதான் எனக்குப் புரியவே புரியாத புதிர்.  என் மனைவி இருக்கிறாளே அவந்திகா.   அவள் தெருவும் இந்தத் தெருதானாம்.  பாவாடை சட்டை போட்டிருந்த நாளில் உம்மோடு கண்ணாமூச்சி விளையாடுவாளாமே?  Of course, உம்மால் ஓட முடியாது.  அவளே ஓடி ஓடி உம் பக்கத்திலேயே ஒளிந்து கொண்டு சாரதி என்னைப் பிடி, சாரதி என்னைப் பிடி என்பாளாம்.   இன்னொன்றும் சொன்னாள், நீ மட்டும் இத்தனாம் உயரம் இருக்கும் போது நான் மட்டும் ஏன் இத்னூண்டா இருக்கேன் என்று உம்மிடம் கேட்பாளாமே?

உண்மையில் உம்முடைய பிரம்மாண்டத்தைப் பார்த்து நானுமே மலைத்துத்தான் போய் விட்டேன்.  என் பஞ்சாயத்தை உம்மோடு வைத்துக் கொள்ளாததற்கு அதுவும் ஒரு காரணம்.  இன்னொன்று, காலம்.  அது என்ன காலம் என்று கேட்கிறீரா?  உமக்கு அசோகமித்திரனைத் தெரியுமா?  நான் ரக்ஷிக்கும் கோடிக் கணக்கான பேரில் அசோகமித்திரன் என்ற ஆளை  எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீரா?  ம்ஹும்.  அசோகர் காலத்து ஆள் அல்ல;  இந்தக் காலத்து ஆள்.  ஒடிசலான தேகம்.  முகத்தை எப்போதுமே சுளித்தே வைத்திருப்பார்.  அவர் உம்மைப் பார்க்க வந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.  உள்ளுக்குள் அவர் ஒரு நாஸ்திகராகத்தான் இருந்திருக்க வேண்டும்.  அவ்வளவு கசப்பான உலகம் அவருடையது.  அவர் எனக்கு அப்பா மாதிரி.  ஞானத் தகப்பன் ஐயா, ஞானத்தகப்பன்.  அவர் கதை என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம்.  அப்போ அப்போ அழகியசிங்கரோடு அவரைப் பார்க்கப் போவேன்.  நிறுத்தும், நிறுத்தும்… உம்மைச் சொல்லவில்லை.  அந்தப் பெயரில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார்.  அவருக்கு அசோகமித்திரன் நெருக்கம்.  ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக் கொண்டு போவோம். மிளகாய் பஜ்ஜி என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால் ஒன்றுதான் அளவு.  அதற்கு மேல் சாப்பிட மாட்டார்.  எனக்கும் மிளகாய் பஜ்ஜி என்றால் உயிர்தான்.  ஆனால் நீர் தான் எனக்குக் கொலஸ்டாலைக் கொடுத்து இம்சை பண்ணி விட்டீரே, அதனால் எண்ணெய்ப் பலகாரம் எதையும் தொடுவதில்லை.   அசோகமித்திரனுக்கு எதானும் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை.  என்ன பிடிக்கும் உங்களுக்கு என்று கேட்பேன்.  சலிப்புடன் என்ன பிடிக்கும் என்று திருப்பிக் கேட்பார்.  முகம் ஒரு மாதிரி கோணும் அப்போது.  வாழ்நாள் பூராவும் கஷ்டத்திலேயே கிடந்ததன் சலிப்பு அது.  அப்புறம் ஒருநாள் தென்னமரக்குடி எண்ணெய் வாங்கி வாங்கோ என்றார்.  தெருமுனைக் கடையிலேயே கிடைக்கும் என்றும் சொன்னார்.  ஒரு பாட்டில் ஐந்து ரூபாய்.  வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன்.  அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை.  அவரைப் பார்த்து விட்டு வரும் போதெல்லாம் அது பற்றி ரெண்டு வார்த்தை எழுதுவது வழக்கமா, அதைப் பார்த்து விட்டு ஒரு ஆள் அவரிடம் என்ன, அடிக்கடி சாரு வந்து பார்க்கிறார் போலிருக்கே என்று கேட்க, அதற்கு அசோகமித்திரன் ஆமாம் ஆமாம், வர்றார, ஆனா பயமாவும் இருக்கு, ஏதாவது வெடிகுண்டு கிடிகுண்டு வச்சுடுவாரோன்னு என்று சொன்னாராம்.  கேள்விப்பட்டேன்.  அந்த க்ஷணம் என்னை ஒரு பெருந்துயரம் சூழ்ந்தது. எவ்வளவு துயரமான வாழ்க்கையைக் கடந்து வந்திருந்தால் அன்பைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆகியிருக்கும்?  எத்தனை முறை அவரது கரங்களை முத்தமிட்டிருக்கிறேன்?

என் பிரச்சினையே இதுதான்.  ஆரம்பித்ததை விட்டு விட்டு வேறு எதையோ பார்த்துப் போய்க் கொண்டிருக்கிறேன்.  ம், என்ன சொல்ல வந்தேன்?  காலம்.  ஆம்.  உம்முடைய பிரம்மாண்டத்தைப் பார்த்த போது நான் கொண்டு வந்திருந்த பிராதுகள் மறந்து போயின அல்லவா, அதோடு காலமும் சேர்ந்து கொண்டது.  உம் வயது என்ன?  அதுசரி, ஜனனமே இல்லாதவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது?  அங்கேதான் மூளை குழம்பிப் போனது.  காலத்தைப் பற்றி எப்போது யோசித்தாலும் மூளை கலங்குவது போல் இருக்கிறது.  அதனால்தான் ஓடி வந்து விட்டேன்.

சரி, அந்தக் கதையெல்லாம் வேண்டாம்.  என்னுடைய இப்போதைய பிரார்த்தனையை மட்டும் சொல்லி விடுகிறேன்.  நீ கேட்பியா மாட்டியா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை.   இப்போது எனக்கு அர்ஜெண்ட்டாக ஒரு மெத்தை தேவை. ப்பூ, இவ்வளவுதானா என்று கேட்காதீரும்.  இதில் என் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்கிறது.  பதினாறு வயதில் சில்லடியை ஒட்டி இருந்த குடிசை ஒன்றில் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றான் சிவா.  அவளோ சிறுமி.  பத்து வயதோ பனிரண்டு வயதோ?  காசைக் கொடுத்து விட்டு ஓடி வந்து விட்டோம்.   அந்தக் குடிசையில் ஒரு கிழிந்த பாய்தான் கிடந்தது இப்போதும் படம் பிடித்தாற்போல் ஞாபகம் இருக்கிறது.

அடுத்த என்கவுண்ட்டர் தில்லியில்.  அவரோடுதான் பத்து வருஷம் வாழ்ந்தேன்.  டிவோர்ஸ் ஆகி விட்ட பெண்ணை எப்படி ஐயா அவள் இவள் என்று மரியாதை இல்லாமல் பேச முடியும்?  அவர் தான்.  அந்தப் பத்து வருஷமுமே பாயும் ஜமுக்காளமும்தான்.  அப்போதெல்லாம் செக்ஸ் பண்ணினால் முழங்கால் வலிக்கும்.  எல்லோருக்குமே செக்ஸ் பண்ணினால் முழங்கால் வலிக்குமா என்ற பெருத்த சந்தேகம் ஏற்பட்டது.  ஆனால்  இதைப் போய் யாரிடம் கேட்க முடியும்?  அவரை டிவோர்ஸ் பண்ணின பிற்பாடு பெருந்தேவியைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட போது சோபன முகூர்த்தத்தின் போது – அது ஒரு மொட்டை மாடியில் தரையில் நடந்தது – பெருந்தேவி பயந்தே போய் விட்டாள்.  என்னது, பாயில் படுப்பதா?  இத்தனை காலமும் பாயிலா செக்ஸ் வைத்துக் கொண்டாய்?  மறுநாளே போய் ஒரு மெத்தையை வாங்கி வந்தோம்.  ஜோலியும் பிரமாதமாக நடந்தது.

ஆனாலும், அந்த மெத்தைதான் எனக்குப் பிடிக்கவில்லை.  என்னதான் இலவம் பஞ்சு என்றாலும் அதில் நான் எதிர்பார்த்த மென்மை இல்லை.  மென்மை என்ன மென்மை?  ரொம்ப முரட்டுத்தனமாக இருந்தது.  சமீபத்தில்தான் ஒரு நண்பரின் இல்லத்தில் அந்த மெத்தையைப் பார்த்தேன்.  பெயர் Peps.  விலை நாற்பது ஆயிரம்தான். (அதாவது சலுகை விலையில்!) மெத்தை என்றால் அது மெத்தை.  ஏதோ வாட்டர் பெட்டில் படுப்பது போல் இருந்தது.  உடனே நாற்பது ஆயிரம் கிடைக்கச் செய்யும்படி விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

அடியேன்,

——————