பிரார்த்தனை – லக்ஷ்மி சரவணகுமார்

பிரார்த்தனைகளின் மீது நம்பிக்கை இருக்கிறாதென்கிற கேள்வி சமயங்களில் பிறரிடம் இருந்தும் என்னிடமிருந்தே எனக்கும் கேட்கப்படும் பொழுதெல்லாம் எது பிரார்த்தனை என்னும் குழப்பமான எண்ணங்களும் அதோடு வந்துவிடுகிறது. வாழ்வின் பிரதான தேவைகளைத் தேடி கண்டடைய நிகழும் பயணத்தில் நாம் இழந்தவைகளுக்கு ஆறுதல் சொல்வதற்கான ஒரு வழியாய் நினைத்துக் கொள்ளலாமா? அல்லது தனது எதிர்கால கனவுகள் ஒவ்வொரு நாளும் புதிதொன்றாய் மாறிக் கொண்டே இருப்பதும் அதை துரத்தி செல்வதற்கான நம்பிக்கை இழக்கும் தருணங்களில் எல்லாம் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட துணை நிற்கும் ஊக்க சக்தியாக நம்பலாமா? இலக்கு எதுவென தெளிவில்லாதவர்களுக்கு பிரார்த்தனை எதுவென்கிற தெளிவு எங்கிருந்து வரும்? நாம் சொற்களின் வழி காணும் உலகம் யதார்த்தத்தில் நம்மிலிருந்து எவ்வளவு விலகி இருக்கிறது. வாழ்வை கொண்டாட்டமாய் அணுகும் சின்னஞ் சிறிய எண்ணிக்கையிலான மனிதர்களைத் தாண்டி இன்னும் ஒரு நாளை ஒரு மாதத்தை வருடத்தை கடனோடு கழிப்பதின் அவஸ்தையில் கழிக்கும் பெருவாரியான சமூகத்தின் வாழ்வைக் குறித்து நம்மால் யோசிக்க முடிகிறதா? ஆடம்பரப் பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டும் எளிய தேவைகளுக்கான வரிகள் உயர்த்தப்பட்டும் அந்த மனிதர்களின் வறண்ட கோவணங்களில் இருந்து திருட நினைக்கும் ஒரு அரசாங்கத்தை அதன் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டுமென்றாவது நினைத்ததுண்டா?
பிரார்த்தனைகளின் வழியாகத்தான் நம் மீதான அதிகாரங்கள் இரக்கமே இல்லாமல் அவிழ்த்துவிடப்படுகிறது. கோரிக்கைகளே இல்லாத பிரார்த்தனைகள் செய்யும் மனிதன் இருப்பதாக நான் நம்பவில்லை. விருப்பத்தின் ஆசைகளின் குளத்தில் தான் பிரார்த்தனை தொடர்ந்து தன்னை நோக்கி வரச் சொல்லி கல் எறிகிறது. தயக்கமின்றி நம்மில் பலரும் செலவு செய்யத் தயாராய் இருப்பது அந்த பிரார்த்தனைகளுக்குத்தான். மதமோ பிரார்த்தனையோ அதிகாரத்தின் பக்கமாய் நிற்கும் போது அதற்கு எதிரான குறைந்த பட்ச வன்முறைக்குக் கூட தயாராக முடியாத ஒருவன் ஏதோ ஒரு வகையில் அந்த அநியாயங்களின் பக்கமாகவே நிற்பவனாகிறேன். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறவர்களும் பசிக்கொடுமையால் எலிக்கறி தின்கிறவனும் ஒரு நாளிதழின் வழக்கமான செய்தியாய் உங்களுக்கு மாறிப்போய் கனகாலமாகிவிட்டது தானே. அந்த வலிக்கு துரோகம் செய்வது போல் தானே இருக்கிறது இந்த பிரார்த்தனைகள். சாமியார்களும் அவர்களின் அடிமைகளும் நம்மை ஆள்கிறார்கள் என்ற நிஜம் கொஞ்சத்தை புரிந்து கொண்டாலாவது சரி.
மிக மோசமான அரசியல் வாதி கூட ஆறு மாதத்திற்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. ஒரு தேசமே ஆறு மாதத்திற்கு ஒருமுறை புதிதாக பிறந்தபடியே இருக்கிறது. எத்தனை முட்டாள்த்தனம்? இரக்கமற்ற வன்முறை. நல்லது புதிய கோரிக்கைகளுக்காக பிரார்த்தியுங்கள் இன்னும் நீங்கள் கொல்லப்படவில்லை, உங்கள் உடல் திருடி விற்கப்படவில்லை. அதும் நிகழும் ஒரு நாளில் உங்கள் பிரதமரும் இன்ன பிற சாமியாரின் அடிமைகளும் தங்களுக்குத் தாங்களே ஹாப்பி பெர்த்டே சொல்லிக் கொள்வார்கள்.

மீள்…