பிறைகளுக்கான நாளில் உனக்கு ஒரு கடிதம்… கஸல் காஸ்

பிறைகளுக்கான நாளில் உனக்கு ஒரு செய்தி அனுப்பவா..
முதலில் ஆறும் அருவியும் கொட்டும் உன் ஊரின் சௌகரியங்கள் எப்படியென்று சொல்..
இந்த உலகம் தன்பாட்டுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது..
உன் சட்டையை மடித்துவிட்டு மீனுக்கு மஞ்சள்தடவி ஊற வைக்கும் நேரத்தில் தேவகுமாரரர்கள் அவதரிக்கிறார்கள்..
மரித்து போதல் பற்றி நீ சடைத்துக்கொண்டு எழுதியிருந்தாய்..மக்களுக்கு மரணம் என்றால் பயம்..உனக்கு அது சாகசம்..உன் அச்சில் அவர்களை பொருத்தாதே..மின்தடை நாட்களில் மெழுகுதிரிகளை ஏற்றும் உலகில் நின்றுக்கொண்டு இருளை வர்ணிக்காதே..
மரித்து போதல் என்பது வளம்.உனக்கு தெரியும்தானே..ஐந்தாண்டுகளுக்கு முன்பு நீ சென்று சந்தித்த அந்த எழுபத்தைந்து வயது கிழவன் சென்ற ஆண்டு இறந்து போனான்.கண்கள் பிதுங்கி எழுத்துக்கிறுக்கன் இறந்து போனபோது மழை பெய்யவில்லை..ஆழி பொங்கவில்லை..சுரத்தையற்று சுவாரசியமற்று மரித்து போனான்..
அப்படிதான் பிறைகள் மரித்தன..பிறகு வளர்ந்தன..தேய்ந்தன..
உன் மீனும் மரித்தது..நீயும் மரித்து போவாய்..நானும்..இந்த எழுத்தும் இந்த கடிதமும் மரித்து போகும்..
தேவக்குமாரா..இந்த பிறைகளுக்கான நாளின் யாரும் கூறாத கதையொன்றை சொல்லப்போகிறேன்..
கேட்பாயா ??

கஸல் காஸ்