கஸல் காஸின் கவிதை

நிசிகளின் பிரேத கணங்களில் ஒன்று நான் உறங்கியிருக்க வேண்டும் அல்லது உன்மத்தங்களின் பிடியில் லயித்திருக்க வேண்டு்ம்..
நான் வெறுமனே இந்த இரவை பார்த்திருக்கிறேன்..
பச்சைகட்டங்கள் சூழ்ந்திருக்கும் உலகில் எனக்கென்று கேள்விகளும் இல்லை பதில்களும் இல்லை..
நான் மெளனித்திருக்கிறேன்..
நீ கடந்துபோகும் சிலநூறு பெண்களுள் என் பக்கங்கள் சற்று அசுவாரசியமானவை..
நான் சுயமிகள் எடுப்பதில்லை,நீளநீளமாய் கட்டுரைகள் எழுதுவதில்லை..அரசியலும் இலக்கியமும் பேசுவதில்லை மாறாக நான் இருக்கிறேன்..
இருத்தலின் நிமித்தம் இருத்தல்தான் என்பதை முழுதாக நம்புவதால் உங்களின் பரிபாஷனைகளில் நான் ஈடுபடுவதில்லை.
மேலும் ஒரே வீட்டில் பதினைந்து பேரை அடைத்து இரைச்சல் புனைந்து நீங்கள் இன்புற்றிருக்கும் வேளையில் நான் சிலந்திவலைகளை எண்ணிக்கொண்டிருப்பேன்.