ரெண்டாம் ஆட்டம் – இலவசமாக

rendaam aattam

 

சனி மற்றும் ஞாயிறு அன்று கிண்டலில் ரெண்டாம் ஆட்டம் நூலை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/ebook/dp/B07DCZYRB3

***

 

ரெண்டாம் ஆட்டம் நூலுக்கு எழுதிய முன்னுரை:

நான் அடிக்கடி சொல்லி வருவது போல் என்னுடைய எழுத்து வெறுமனே படித்து இன்புறுவதற்கான பண்டம் அல்ல. ஒரு கலாச்சார அரசியல் செயல்பாட்டின் அங்கமாகவே என் எழுத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். ’எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவலிலிருந்து தொடங்கி என் எழுத்தைக் கவனித்து வருபவர்களுக்கு அது விளங்கும்.

நம்முடைய அரசியல், கலாச்சாரம், குடும்பம் போன்ற நிறுவனங்களில் நிலவும் பாலியல் ரீதியான ஒடுக்குமுறை தனிமனிதனின் சமூக வாழ்வையும், தனிப்பட்ட வாழ்வையும் நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது என்பது என் எழுத்து இயக்கத்தின் ஆதாரச் சரடுகளில் ஒன்று. இவ்வகையில் என்னுடைய ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டுவந்தவர்களும் பிணந்தின்னிகளும்’ என்ற சிறுகதையில் வரும் வில்ஹெல்ம் ராய்க்ஹ் பற்றிய குறிப்புகள் எதேச்சையானது அல்ல. ராயக்ஹின் ’செக்ஷுவல் ரெவல்யூஷன்’ என்ற புத்தகம் என்னை வெகுவாக பாதித்த ஒன்று.

ஆனால் பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை மேற்குலகில் கற்றுக்கொண்டு வந்து அதை இங்கே பதியன் போட்டு அந்தப் பாணியில் எழுதும் காரியத்தை நான் செய்ததே இல்லை. மேஜிகல் ரியலிசம், பின்நவீனத்துவம், நான்-லீனியர் எழுத்து என்று எதுவாக இருந்தாலும் அதைப் பற்றிய கோட்பாட்டு ரீதியான பயிற்சி எதுவும் இல்லாமல் நான் வாழும் சமூக, கலாச்சார சூழலிலிருந்தே என் எழுத்துக்கான தரவுகளைப் பெற்று அதைப் பகுப்பாய்வு செய்து எழுதுவதே என் போக்கு. உதாரணமாக, ‘கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ என்ற சிறுகதையை நான் எழுதியபோது அமைப்பியல்வாதத்தில் சொல்லப்படும் கட்டுடைத்தல் (de-construction) என்பது பற்றியெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. இந்தியாவில் இருந்துகொண்டு நான் எழுதினேன். கர்ட் வனேகட்டும், டொனால்ட் பார்த்தெல்மேவும் அமெரிக்காவிலிருந்து எழுதினார்கள். அவ்வளவுதான். நான் எழுதிய பிறகு யாரேனும் ஒரு நண்பர் “உங்களைப் போலவே ஒருவர் அமெரிக்காவில் எழுதுகிறார்; பெயர் டொனால்ட் பார்தெல்மே” என்பார். பிறகுதான் பார்த்தெல்மேவைப் படிப்பேன்.

இந்தப் பின்னணியில் என்னைக் கவனித்தால் என் எழுத்தையும், செயல்பாடுகளையும் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

1992 மே மாதம் மதுரையில் மு. ராமசாமியால் நடத்தப்பட்ட நாடக விழாவில் ஒரு நாடகத்தைப் போட எங்கள் குழுவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. குழு என்றால் ஒத்தச் சிந்தனையைக் கொண்ட ஒரு நாலைந்து பேர். அந்த நாலைந்து பேரும் இப்போது வெவ்வேறு கோட்பாட்டுத் தளங்களில் இருப்பது கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மாற்றம்.  ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத் துறையில் ஒரேவிதமான சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருப்பது அடியேன்தான் என்பதை இந்த நாடக நிகழ்வின் கூட்டறிக்கையிலிருந்தே நீங்கள் உணர்ந்துகொள்ளலாம்.

‘ரெண்டாம் ஆட்ட’த்தைப் பற்றி எழுதும் அ. ராமசாமி, நாடக விழாவை நடத்திய மு.ராமசாமியை நாங்கள் ஏமாற்றிவிட்டோம் என்கிறார். மு.ராமசாமி என்னிடம் “நாடகத்தில் கெட்ட வார்த்தை ஒன்றும் இல்லையே?” என்று கேட்டார். “இல்லை” என்று சொன்னேன். நான் சொன்னது உண்மைதான். நாடகத்தில் கெட்ட வார்த்தை எதுவும் கிடையாது.

மேலும், அ. ராமசாமி, வெளி.ரங்கராஜன் இருவரும் நாங்கள் தாக்கப்பட்டதை நியாயப்படுத்துகிறார்கள். ‘இப்படியெல்லாம் தான்தோன்றித்தனமாகச் செய்தால் அப்படித்தான் அடிப்பார்கள்’ என்பது இவர்களின் வாதம்.  தான்தோன்றித்தனமாகச் செய்வதற்கு நாம் என்ன படிக்காத முட்டாளா என்று யோசித்தேன். எத்தனையோ ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் The Drama Review என்ற நாடக இதழை நான் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். அந்தப் பத்திரிகையை சுருக்கமாக TDR என்று குறிப்பிடுவார்கள். அதைப் படித்து வந்தாலே ஒருவருக்கு நவீன நாடகம் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். அது மட்டுமல்லாமல் பனிரண்டு ஆண்டுகள் தில்லியில் இருந்தபோது வாரத்துக்கு எப்படியும் இரண்டு நாடகங்களைப் பார்த்து விடுவேன். அப்படி, உலகிலுள்ள எல்லா முக்கியமான நாடகங்களையும் தில்லி மண்டி ஹவுஸில் பார்த்துவிட்டேன். செ. ராமானுஜம், மு. ராமசாமி போன்றவர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்தும் நாடகங்களைக் கூட தில்லிக்கு எடுத்து வந்துவிடுவார்கள். அதனால் ஒரு நல்ல நாடகம் எப்படி இருக்கும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நான் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகத்தை இயக்கிவிடவில்லை.

ஆனால் நாடகம் பற்றிய பாரம்பரியமான அறிவை மட்டுமே கொண்டிருந்த நாடகப் பேராசிரியர்களுக்கு நான் இயக்கிய நாடகம் தான்தோன்றித்தனமாகத் தோன்றியதில் வியப்பில்லை. வேடிக்கை என்னவென்றால் அவர்கள் நாடகத்தில் பேராசிரியர்களாக இருப்பவர்கள். என்னைப் போன்ற வெளியாட்களுக்கு நாடகம் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நான் இயக்கிய நாடகம் புரியவே இல்லை என்பதுதான் இதிலுள்ள முரண்நகை.

அல்லது, இப்படியும் இருக்கலாம், நாடகத்தில் இருந்த பாலியல் குறிப்புகள் அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். நாடக விற்பன்னர்கள் எங்களைத் தாக்கினார்கள். இதுவே கிராமமாக இருந்திருந்தால் நகைச்சுவை என்று எண்ணிச் சிரித்திருப்பார்கள். மதுரை ஜில்லாவின் கிராமங்களில் நடத்தப்படும் ஸ்பெஷல் நாடகங்களில் இல்லாத ஆபாசத்தையா ‘ரெண்டாம் ஆட்டம்’ பேசிவிட்டது? இதிலிருந்து தெரிவது என்னவென்றால், புத்திஜீவிகள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் சாதாரண கிராமத்து மனிதனை விட பத்தாம்பசலிகளாகவும் இறுகிய ஒழுக்க மதிப்பீடுகளைச் சுமந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி என்னை அறியாமையினால் தாக்கியதைக் கண்டு மனம் நொந்த நான், நம்மைப் போன்ற ஆசாமி யாராவது நாடகத் துறையில் இருக்கிறார்களா என்று தேடியபோது கிடைத்தவர்தான் அகஸ்தோ போவால் (Augusto Boal). ப்ரஸீலைச் சேர்ந்த இவரது Forum Theatre-ஐத்தான் நாங்கள் ‘ரெண்டாம் ஆட்ட’மாக நிகழ்த்தியிருக்கிறோம். ஆனால் நாடகத்தை நிகழ்த்தியபோது எங்களுக்கு போவாலின் பெயர்கூடத் தெரியாது. அதனால் போவாலின் ஃபோரம் தியேட்டர் பற்றிய கோட்பாடுகளை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அது ‘வெளி’யில் தொடராகவும் வந்தது.

தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு நாடக நிகழ்வு இவ்வளவு பெரிய பத்திரிகைச் செய்தியாக மாறியது சுதந்திரப் போராட்டக் காலக் கட்டத்துக்குப் பிறகு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் என்று தோன்றுகிறது. சில பத்திரிகையாளர்கள் நாடகத்தையே பார்க்காமல் கேள்விப்பட்டதை மட்டுமே வைத்துக் கட்டுரை தயார் பண்ணியிருப்பதையும் இதில் நாம் காணலாம். ஏதோ செக்ஸ் லைவ் ஷோ பார்த்தது போல் எழுதியிருக்கிறார் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகைகள் எவ்வளவு பலஹீனமாக இருக்கின்றன என்பதற்கும், ஆளும் வர்க்க மதிப்பீடுகளைக் கட்டிக்காப்பதில் எவ்வளவு வன்முறையுடன் இயங்குகின்றன என்பதற்கும் இந்தச் செய்திகள் ஒரு வரலாற்றுச் சான்று.

எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்து நான் எதிர்கொண்டு வரும் பிரச்சினை, இலக்கியவாதிகளிடமிருந்தும், படித்தவர்கள் என்று கருதப்படுகின்றவர்களிடமிருந்தும்தான் வந்து கொண்டிருக்கிறது. சராசரி மனிதனிடமிருந்து இதுவரை எனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை இங்கே மீண்டும் ஒருமுறை பதிவு செய்ய விரும்புகிறேன். 1992-இல் நடந்த வன்முறைச் சம்பவங்களினால் நான் நாடகத்திலிருந்து விலகிவிட்டேன். மேலும் செயல்பட்டிருந்தால் சஃப்தர் ஹாஷ்மிக்கு நேர்ந்த கதியே எனக்கும் ஏற்பட்டிருக்கும். நிகழ்கலைக்கு இருக்கும் மிகப்பெரிய சக்தி அது.

அதற்குப் பிறகு இந்தச் சம்பவங்கள் பற்றி 1993-ஆம் ஆண்டு ’ஆய்வு’ இதழில் விபரமாக ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அது எந்தப் புத்தகத்திலும் தொகுக்கப்படாததால் அந்தச் சம்பவங்களுக்கு அவரவர் கண் காது மூக்கெல்லாம் வைத்துக் கதைகளை ஜோடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறாற்போல் இப்போது இந்த நூல் வெளிவருகிறது.

’ஆய்வு’ பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தவர் பூமா சன்னத்குமார் என்ற நண்பர். அவரைப் பார்த்துப் பனிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று. என்னிடமோ ’ஆய்வு’ இதழ்கள் கைவசம் இல்லை. பூமாவின் தொடர்பு எண்ணும் இல்லை. இந்த நிலையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ சம்பவம் வெளிவரும் சாத்தியமே இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ’உயிர்மை’யில் பூமா சன்னத்குமாரின் ஒரு கடிதத்தைப் பார்த்து அவரைத் தொடர்பு கொண்டேன். எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் தமிழ்ச் சமூகம் என்னென்ன மரியாதையெல்லாம் கொடுக்குமோ அதே மரியாதைதான் பூமா சன்னத்குமாருக்கும் கிடைத்திருந்தது. லௌகீக வாழ்வின் நெருக்கடிகளில் மூழ்கி பனிரண்டு ஆண்டுகளாக ஆசாமி வெளி உலகத்துக்கே வரவில்லை.

பனிரண்டு ஆண்டுகள் கழித்து என்னைச் சந்தித்த பூமா சன்னத்குமார் 1993-ஐ நினைவு கூர்ந்தார். “தபால் இலாகாவின் தலைமை அலுவலகத்தில் அமர்ந்து உங்கள் மகளுக்குச் சோறு ஊட்டிக்கொண்டிருப்பீர்களே, அந்தக் காட்சி ஞாபகம் வருகிறது” என்றார்.

மதுரைச் சம்பவத்தின்போது எனக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய நண்பர்கள் எம்.டி. முத்துக்குமாரசாமி, எஸ். ராமகிருஷ்ணன், டாக்டர் கே.ஏ. குணசேகரன், வே.மு. பொதியவெற்பன் மற்றும் பல நண்பர்களை இப்போதும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன்.

28.11.2009                                                                            சாரு நிவேதிதா

மைலாப்பூர்

சென்னை-4