பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் – முன்பதிவுத் திட்டம்

நேற்றிலிருந்து ஸ்ரீராம் ஒரே குஷியாக இருக்கிறார். என்ன காரணம் என்றால், ’எங்கே உன் கடவுள்?’ என்று என்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்று உள்ளது. சோ இருந்த போது துக்ளக் பத்திரிகையில் தொடராக வந்தது. கிழக்கு பதிப்பகம். அது கிண்டிலில் வந்துள்ளது. ஏதோ சலுகை விலைத் திட்டத்தில் இப்போது ஒன்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதன் கிண்டில் விற்பனை இப்போது ஏதோ இந்தியாவின் டாப் புத்தகங்களையெல்லாம், cult புத்தகங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு முதல் இடத்தில் இருக்கிறதாம். இதை நீங்கள் சாரு ஆன்லைனில் போட வேண்டும். இன்னும் பிய்த்துக் கொண்டு போகும்.

150 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களின் நிலை எப்படி இருந்தது தெரியுமா? அதேபோல் 150 ஆண்டுகளுக்கு முன்பு ப்ரஸீல். 18 மணி நேர வேலை. விபத்து ஏற்பட்டால் கொத்துக் கொத்தாக மரணம். கேட்க நாதியில்லை. தொழிலாளர்களின் உயிர் ஈ, எறும்பு, ஈசல் போல் கருதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அதை விடக் கேவலமான நிலையில் இருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள். சினிமா நடிகனுக்கு முன்னே கை கட்டி நிற்க வேண்டியிருப்பதே எழுத்தாளனின் அவலத்துக்கு ஒரு சின்ன உதாரணம். கையில் துட்டு இருந்தால் இவன் ஏன் கை கட்டுகிறான்? ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எழுத்தாளர்களை சினிமா இயக்குனர்கள்தான் இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சுஜாதாவை மணி ரத்னம் காப்பாற்றினார். பிரபஞ்சனை இன்னொரு இயக்குனர் காப்பாற்றினார். (அவர் பெயரை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்!) என்னை என் நண்பர்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்கார வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளரின் புத்தகம் கிண்டிலில் சாதனை படைக்கிறது. ஒன்பது ரூபாய் விலையில். ஆஹா ஆஹா!

ரெண்டாம் ஆட்டம் புத்தகம் இரண்டு நாட்கள் கிண்டிலில் இலவசமாகப் போட்டார்கள். 500 பேர் வாங்கினார்கள். என்னே ஒரு புரட்சி! இலவசமாகவே 500 தான். நீங்கள் சரியாக ப்ரமோட் பண்ணவில்லை சாரு என்று குற்றம் சாட்டினார் ஸ்ரீராம். சி.சு. செல்லப்பா மாதிரி என் புத்தகங்களை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு போய் விற்கிறேன். நேற்று கூட ஒரு ஆங்கிலப் பத்திரிகையாளர் மழையில் நனைந்தபடி என் வீட்டுக்கே வந்து மார்ஜினல் மேன் இரண்டு பிரதிகளை வாங்கிக் கொண்டு போனார். மதிப்புரை எழுதுவதற்காக. எழுதி என்ன பயன்? 10 லட்சம் பிரதி விற்பனையாகும் தினசரியில் என் புத்தகத்துக்கு மதிப்புரை வந்தது. 10 பேர் வாங்கினார்கள். நம்புங்கள், பத்தே பேர்.

புத்தகமே படிப்பதில்லை என்று சபதம் போட்டிருக்கும் மூட ஜென்மங்களைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. என் வாசகர்கள் 5000 பேரின் நிலை என்ன? என் வாசகர் வட்டத்தில் உள்ள 1000 பேரின் நிலை என்ன? என்னால் பெயர் சொல்லி அழைக்கப்படும் 200 பேரின் நிலை என்ன? பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றுக்கு முன்பதிவுத் திட்டம் பற்றி அறிவிப்பு ஒன்றைப் போட்டு விட்டு என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்த நூல்களைக் கொண்டு வர வேண்டுமே? அறிவிப்பைப் போட்டு விட்டு என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன கவலை? நானே கீழே இறங்கி, ஒருத்தர் ஒருத்தருக்காக போன் பண்ணிப் பண்ணிப் பேசி, பாதம் துடைத்து விட்டு, நைச்சியம் பேசி, மிரட்டி, அழுது, உருண்டு புரண்டு அழுதால் 500 – 600 முன்பதிவு செய்வார்கள். அறிவிப்பு போட்டதிலிருந்து இப்போது வரை 50 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்களாம்.

”நான் அப்போதே சொன்னேன் இல்லையா காயத்ரி?” முடிந்தது கதை. விஜயகாந்துக்கு எப்படி மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காதோ அதேபோல் காயத்ரிக்குப் பிடிக்காத வார்த்தை, அப்போதே சொன்னேன் இல்லையா? இருந்தாலும் என்ன செய்வது, சொல்ல வேண்டியிருக்கிறதே? நான் அப்போதே சொன்ன விஷயம் இதுதான். ”தமிழில் முன்பு எப்போதோ வெளிவந்து இப்போது கிடைக்காமல் இருக்கும் என்னுடைய புத்தகங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் திரும்பப் பிரசுரித்தாலும் அதிக பட்சம் 500 தான் போகும். 500 போனால் சூப்பர் ஹிட் என்று பொருள். என் கணக்கு 300 தான். எனவே என் புத்தகங்கள் ஆங்கிலத்தில் வருவதில் மட்டுமே எனக்கு ஆர்வம் உள்ளது. என் நூல்கள் தமிழில் வரவே வேண்டாம்.” ஏனென்றால், நாம் ஒருத்தர் ரெண்டு பேரையா குழி நோண்டிப் புதைத்தோம்? சி.சு. செல்லப்பா, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், கு. அழகிரிசாமி, அ. மாதவன், கிருஷ்ணன் நம்பி, தி.ஜ. ரங்கநாதன், கோபி கிருஷ்ணன், சார்வாகன், கு.ப.ரா… எத்தனை பேர், எத்தனை பேர்! அசோகமித்திரன், தி.ஜா., லா.ச.ரா. போன்ற ஒருசிலர் மட்டுமே இந்த ஒட்டு மொத்த அபத்த அலையில் சிக்காதவர்கள். இப்படி நம்முடைய பாரம்பரியத்தையே குழி நோண்டிப் புதைத்து விட்ட நம் சூழலில் என் புத்தகங்கள் மறுபதிப்பு அடைந்தால் என்ன, அடையாவிட்டால் என்ன?

கு.ப.ரா. தன் உயிரை விட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வந்துள்ளது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும். ( அடையாளம் பதிப்பகம்) அது யாருக்குத் தெரியும்? யார் படிக்கிறார்கள்? அதே மாதிரி போகட்டுமே என் புத்தகங்களும்? எதற்கு இந்த வீண் வேலை? இத்தனைக்கும் முன்பதிவுத் திட்டத்தில் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்தின் விலை 250 ரூ. அதற்கே 50 பேர் தான் முன்வந்துள்ளனர். இதற்கு நான் என்னென்ன வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது தெரியுமா? தினமணியில் வந்த கட்டுரைகளை வார்த்தை வார்த்தையாக எடிட் பண்ண வேண்டும். பிறகு டைப் செட்டிங் அன்பரிடம் கொடுக்க வேண்டும். டைப் செட்டிங் முடிந்து வந்த பிரதியை வார்த்தை வார்த்தையாக சரி பார்க்க வேண்டும். பிறகு அதை டைப் செட்டிங் அன்பர் நேரில் வந்து பிரிண்ட் அவுட்டை வாங்கிக் கொண்டு போய் சரி செய்வார். அதை வாங்கி மீண்டும் சரி பார்த்து பதிப்பகத்தில் கொடுக்க வேண்டும். எழுதுவதைத் தவிர இதெல்லாம் ஏன் செய்கிறேன் என்றால், நான் ஒரு perfectionist என்பதால் மட்டுமே. ஒரு பிரபல பதிப்பகத்தின் ஒரு பிரபலமான நாவலின் முதல் பக்கத்திலேயே மகாத்மா காந்தியை மகாத்மா காண்டு என்று அடித்திருந்தார்கள். காண்டு என்றால் ஓரினச் சேர்க்கையில் passive member. இப்படி இருக்கிறது பதிப்பகத் துறை. முதல் பக்கம் மட்டும் அல்ல; முதல் வரியிலேயே இந்த அக்கிரமம்.

முடிந்தால் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்தை முன்பதிவு செய்யுங்கள். இனிமேல் இது பற்றி எழுத மாட்டேன். வேறு வேலை இருக்கிறது.

https://tinyurl.com/pazhuppu3