நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்…

என்னைத் தெரியாதவர்கள், என்னை அறியாதவர்கள் என்னைத் திட்டினால் எனக்குக் கோபம் வருவதில்லை. உயர்ந்த இடத்தில் இருப்போர் அப்படித்தான் இருக்க வேண்டும். நன்னிலம் நடராசன், வண்ணை ஸ்டெல்லா, வெற்றி கொண்டான் போன்றவர்கள் எதிர்க் கட்சித் தலைவர்களை – குறிப்பாக ஜெயலலிதாவை – திட்டிப் பேசுவதைக் கேட்டு வளர்ந்தவன் நான். தீப்பொறி ஆறுமுகம் பேச்சை மட்டும் நேரில் கேட்டதில்லை. ஒரு பெண் அரசியல்வாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, இடையிலேயே வேறோர் விஷயத்துக்குத் தாவி பேசி விட்டு வந்து, ஒரு pause கொடுத்து, நக்கலாக “எங்க வுட்டேன்?” என்று கேட்கும் போது சிரிப்பலையில் ஊரே குலுங்கும். சிரிப்பது மட்டும் அல்ல; குறிப்பிட்ட பெயரைச் சொல்லி ஓட்டைல ஓட்டைல என்று கத்துவார்கள். இந்த தேசமே இப்படித்தான் இருக்கிறது. கமல்ஹாசனை நானும்தான் எதிர்க்கிறேன். ஆனால் அவருடைய ட்விட்டர் பக்கங்களில் அவர் புதல்விகளைப் பற்றித்தான் பச்சை பச்சையாக எழுதி வைக்கிறார்கள். திட்டுபவர்கள் எல்லோருமே புகைப்பட அடையாளத்தோடுதான் திட்டுகிறார்கள். வழக்குத் தொடுத்தால் பெரிய ஆள் ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

யாருமே இவர்கள் மீது வழக்குத் தொடுப்பதில்லை. போலீஸில் புகார் செய்வதில்லை. புகார் செய்தால் திட்டியவன் ஹீரோ ஆகி விடுகிறான். I saw the devil கொரியத் திரைப்படத்தில் வரும் வில்லன் மாதிரிதான். இவன்களை வெல்ல ஒரே ஒரு வழிதான் உண்டு. அது அவர்களைப் புறக்கணிப்பது. அவர்களைப் பொருட்படுத்தினால் அவர்கள் வெல்கிறார்கள்.
ஆனால் நான் வருத்தப்படுவது என் நண்பர்களால். முகநூலில் எனக்கு 4800 நண்பர்கள் உண்டு. இவர்களில் 100 பேரைத் தவிர மற்ற அத்தனை பேராலும் நான் துயரம் அடைகிறேன். கிறித்தவர்களின் கோட்டையான சாந்தோம் முழுவதும் கிறித்தவ அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளே சூழ்ந்திருக்கின்றன. என் வீட்டைச் சுற்றி ஒரு டஜன் பள்ளிகள். அதில் ஒரு சுவரில் ஒரு வாசகம் பார்த்தேன். உங்களைத் துயரப்படுத்துபவர்களை ஆசீர்வதியுங்கள். படிக்கவும் சிந்திக்கவும் நன்றாக இருந்தது. அந்த தேவ வசனத்தை நான் உங்கள் மீது பிரயோகிக்கிறேன். நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

பின்னே என்ன? வெறும் 250 ரூபாயில் முன்பதிவுத் திட்டத்தில் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்தை முன்பதிவு செய்து விடுங்கள் என்று எழுதினேன். வெறும் நூறு பேரைத் தவிர யாருமே முன்பதிவு செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில் எழுதி என்ன பயன்? முகநூலில் நண்பர்களின் நட்பு வேண்டுகோளை ஒத்துக் கொண்டு என்ன பயன்?

நான் ஏன் இந்த முன்பதிவுத் திட்டத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றால், சுமார் 500 பேர் முன்பதிவு செய்தால்தான் 1000 பிரதிகளுக்கு அச்சில் கொடுக்க முடியும். குறைந்த பட்சம் ஆயிரம் என்றால்தான் புத்தகத்தை தாம்ஸன், மணிபால் போன்ற உலகத் தரமான அச்சகங்களிலோ அல்லது அதற்கு இணையான அச்சகங்களிலோ கொடுக்க முடியும். மார்ஜினல் மேன், ஸீரோ டிகிரி (ஆங்கிலம்) இரண்டும் அச்சாக்கத்தில் உலகத் தரத்தை அடைந்தவை. அந்த நூல்களைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கேட்கும் முதல் கேள்வி அதுதான். இந்தத் தரத்தைத் தமிழ் நூல்களிலும் அடைய வேண்டுமானால் 500 பேராவது 250 ரூ செலவு செய்து புத்தகத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

https://tinyurl.com/pazhuppu3