பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய ஆவணம். இதன் கதாநாயகன், இந்த நாவலை எழுதிய சி.சு. செல்லப்பாதான். அத்தனை பாத்திரங்களும் நிஜம். கீழே வருவது ஜார்ஜ் ஜோசஃப் என்பவரைப் பற்றி:

அது அவனுக்கு வெறும் சரித்திரப் புஸ்தகம் அல்ல. ஒரு மானிட ஜாதியின் வாழ்வு பற்றியது. அதன் உரிமை பற்றியது. ரோம் தேசத்து அடிமைகளைப் பற்றிப் படித்திருந்தான். ‘பென்ஹர்’ சினிமா பேசாத படம் சென்ற வாரம்தான் சிட்டி சினிமாவில் அவன் பார்த்தான். அடிமைகள் பட்ட அவஸ்தை அவனைச் சிந்திக்க வைத்தது. அமெரிக்க அடிமை வியாபாரத்தை ஒழிக்க ஆப்ரஹாம் லிங்கன் என்ன பாடுபட்டு, அதுக்காகத் தன் உயிரையும் கொடுத்ததை அவன் படித்திருந்தான்.”

நாவலில் இந்த இடம் 1928-ஆம் ஆண்டின் நடப்புகளை விவரிக்கிறது. மேலே உள்ள பத்தியில் உள்ள ஒரு கண்ணியை கவனியுங்கள். பேசாத ‘பென்ஹர்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நமக்குத் தெரிந்த பேசும் படமான ‘பென்ஹர்’ வந்ததே 1959-இல். அதற்கு முன்பு இரண்டு பேசாத ‘பென்ஹர்’ வந்தன. முதல் படம் 1907-இல் Sidney Olcott-இன் இயக்கத்தில் வந்தது. அடுத்து 1925-இல் Fred Niblo ‘பென்ஹரை’ பேசாத படமாக எடுத்தார். செல்லப்பா குறிப்பிடும் படம் ஃப்ரெட் நிப்லோ இயக்கிய ‘பென்ஹர்’. அது பற்றி மௌன சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதில்லை என்று சொல்வார்கள். 1,50,000 நடிகர்கள் நடித்த பிரம்மாண்டமான படம் அது.

நாவலில் ஜார்ஜ் ஜோஸஃப் என்ற ஒருவர் வருகிறார். சுதந்தரப் போராட்டத்தின் காந்தி சகாப்தம் 1919 ஏப்ரல் 6-ஆம் தேதி ரௌலட் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எதிர்ப்பாகத் துவங்குகிறது. கடையடைப்பு, வேலை நிறுத்தம், பொதுக்கூட்டம், உபவாசம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலமாக அகில இந்திய கண்டன தினம் கொண்டாடும்பபடி ஆணையிடுகிறார் மகாத்மா. அந்த ஆணையை ஏற்று ஜார்ஜ் ஜோஸஃப் தலைமையில் சுந்தரம் பிள்ளை, கிருஷ்ண குந்து, சீனிவாச வரதன், மௌலானா சாஹேப் முதலியோர் மதுரையில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தைத் திகைக்க வைத்தனர். செல்லப்பா குறிப்பிடும் இந்தப் பிரமுகர்கள் அனைவரும் நிஜத்தில் வாழ்ந்தவர்கள். நான் ஓர் ஆய்வாளனாக இருந்தால் இவர்களின் வரலாற்றையும் தேடிப் போகவேண்டும்.

முதலாம் யுத்த காலத்தில், ஜார்ஜ் ஜோஸஃப் பிரிட்டிஷாருக்கு செய்த உதவிக்காக பாராட்டப்பட்டு அவருக்கு அளிக்கப்பட்ட விருதுகளை, ’தான் மதிக்கவும் அபிமானம் காட்டவும் இயலாத ஒரு சர்க்கார் அளித்த இந்தச் சின்னங்களை அணிய என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை’ என்று சொல்லித் திருப்பித் தந்துவிட்டார். அதோடு தான் பார்த்து வந்த வக்கீல் தொழிலையும் உதறினார்.

1928-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரம், பங்குனி பிறந்து சில நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. அன்றைய தினம் கல்லூரி முடிந்து சிவராமனும் (செல்லப்பா) அவனுடைய வகுப்புத் தோழன் சதாசிவனும் பேராசிரியரோடு வெளியே வருகிறார்கள். அப்போது கல்லூரியின் சுற்றுச் சுவரின் மேலே ஏறி நின்றபடி ஒருவர் பேச மாணவர்கள் பெரும் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்தான் ஜார்ஜ் ஜோஸஃப். பார் அட் லா. சைமன் கமிஷன் பகிஷ்காரம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை அப்படியே நாவலில் கொடுத்திருக்கிறார் செல்லப்பா. அந்த உரையின் ஒரு பகுதி இது:

“…நாம் இப்போது சீர்திருத்தங்கள் கேட்டுப் போராடவில்லை. அந்தக் காலம் மிதவாதிகளோடு போய்விட்டது. நாம் இப்போது கேட்பது பூரண சுயேச்சை. இப்போது அதைக் கொடுக்காவிட்டால் நாளை நாம் ஏகாதிபத்தியத்தின் தலையையே கேட்க வேண்டி வரும். எனவேதான் பிரிட்டனுக்கு ஒரு கடைசி எச்சரிக்கையாக இந்த பகிஷ்காரம். நம் தகுதியை நிர்ணயிப்பதற்கு இவர்கள் யார்? யார் இந்த ஏழு பேர்? அவர்கள் திரும்பிப் போய் சொல்லட்டும் தங்களை அனுப்பியவர்களிடம், இந்தியாவின் முப்பத்தைந்து கோடி ஜனங்களும் ஒரே முகமாக பிரிட்டாஷாரை வெறுக்கிறார்கள் என்று! அந்த வெறுப்பைக் காட்டத்தான் இந்த பகிஷ்காரம். நாளை மறுநாள் நம் நகருக்கு அவர்கள் வருகிறார்கள். மாணவர்களே, நீங்கள்தான் இந்த நாட்டு எதிர்காலப் பிரஜைகள். நாட்டை உருவாக்க வேண்டியவர்கள். இப்போது உங்களை வேறொன்றும் கேட்கவில்லை. 1920-இல் மகாத்மா காந்தி, ‘கலாசாலைகளை விட்டு வெளியேறுங்கள்’ என்று சொன்னது போல் படிப்பை உதறிவிட்டு வெளியே வரச் சொல்லவில்லை. நாளை மறுநாள் கமிஷன் அங்கத்தினர்கள் – அவர்களில் ஓர் இந்தியர்கூடக் கிடையாது என்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும் – நம் வீதிகள் வழியே போகையில் நகரின் தெருக்களில் நின்று கருப்புக் கொடி காட்டி, ‘ஸைமனே திரும்பிப் போ’ (Simon Go Back!) என்ற கோஷத்தை எழுப்பவேண்டும். அன்று கலாசாலைகளுக்குப் போகாமல் ஹர்த்தாலில் கலந்துகொள்ள வேண்டும். இது மகாத்மாவின் வேண்டுகோள். மாணவர்களே, நான் பேசிவிட்டேன். செயல் புரிய வேண்டியது நீங்கள். நாட்டின் விடுதலைக்கு உங்கள் பங்கைச் செலுத்த வேண்டிய வாய்ப்பைத் தவறவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஞாபகம் இருக்கட்டும். நீங்கள் எழுப்ப வேண்டிய ஒரே கோஷம், Simon Go Back! அதுக்கு மேல் ஒரு வார்த்தை கூடாது. அதுக்குக் குறைவாகவும் கூடாது. இதுதான் மகாத்மாவின் செய்தி. அவர் இயக்கத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும் உங்கள் செய்கை. நான் முடித்துவிட்டேன். இது இன்று என் முப்பதாவது கூட்டம். இன்னும் பேச வேண்டிய இடங்கள் பல… வருகிறேன்,” என்று தொப்பென கைப்பிடிச் சுவரிலிருந்து குதித்து கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டார்.

https://tinyurl.com/pazhuppu3