சாருவும் நானும் – பிச்சைக்காரன்

அப்போது சாருவுடன் எனக்கு பழக்கம் இல்லை… ஒரு புத்தக கண்காட்சியில் அவரைப் பார்த்தேன்.. அப்போது வலைப்பூ எழுத ஆரம்பிபித்த கால கட்டம். அவரை ஒரு பேட்டி எடுத்து எழுதலாமே என நினைத்து அவரை அணுகினேன்

– வணக்கம் சார் .. சில கேள்விகள்

-ம்ம்.. கேளுங்க

– உங்க பார்வையில் இலக்கியம் என்றால் என்ன ?

அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் … எதுவும் சொல்லவில்லை

சரி.. சொல்ல தெரியல போல… இன்னொரு கேள்வி கேட்போம் என நினைத்தபடி கேட்டேன்

– பின் நவீனத்துவம் என்றால் என்ன

இதற்கும் பதில் இல்லை

சரி பரவாயில்லை… இன்னொன்று கேட்போம்.. என நினைத்து கேட்க ஆயத்தாமானேன்

ஒரு நிமிஷம் வாங்க என தனியாக அழைத்தார்

– தம்பி… டெண்டுல்கரை பேட்டி எடுத்தால் , அவரை சந்திக்கும் முன் அவர் ஆட்டத்தை புள்ளி விபரங்களுடன் அலச வேண்டும். மற்ற வீரர்கள் , சம கால ஆட்டப் போக்கு , சாதனைகள் என எல்லாவற்ற்றையும் ஸ்டடி செய்து விட்டு அவருடன் பேச போக வேண்டும்.

கிரிக்கெட் என்றால் என்ன ,,, ஸ்ட்ரைட் டிரைவ் என்றால் என்ன என்றெல்லாம் பொதுவாக கேட்பது உங்களுக்கும் நேர விரயம். அவருக்கும் விரயம்… இனி என்னை சந்திப்பதாக இருந்தால் படிச்சுட்டு வாங்க என்றார்

திகைத்துப்போன நான் , யாரும் கவனிக்கவிலையே என நைசாக கவனித்து விட்டு , சத்தமில்லாமல் அங்கிருந்து அகன்றேன்.

இப்படியாக ஒரு “ மோதலுடன் “ சாருவுடன் என் நட்பு ஆரம்பித்தது… அப்படி ஆரம்பித்த நட்பு பிற்காலத்தில் இலக்கியம் குறித்து அவருடன் மணிக்கணக்கில் விவாதிக்கும் அளவுக்கு – பேட்டிகள் எடுக்கும் அளவுக்கு – வளர்ந்தது… அதே நேரத்தில் அவ்வப்போது அவர் என்னைக் கோபித்துக்கொள்வதும் தொடர்ந்தது… தொடர்கிறது…

அவருடம் இலக்கியம் பேசும் அளவுக்கு என் இலக்கிய அறிவு வளர காரணம் அவர்,,,, அவர் கோபத்துக்கு காரணம் என சொந்த சம்பாத்தியம்.

அதிகம் பிடித்தவர்களுடன் தான் , நாம் கோபத்தை காட்ட முடியும் அல்லவா என சொல்லி அந்த கோபத்திலும் அன்பை காண வைத்தவர் சாரு.. அது உண்மைதான்.. வெகு சிலரிடம் மட்டுமே அவர் கோபத்தைக் காட்டுவார்..அதே அளவுக்கு அன்பையும் காட்டுவார்

அவருடன் பழகிய இந்த கால கட்டத்தில் ஓர் அரசனை , ஒரு குருவை , ஒரு தோழனை , ஒரு மனிதனை , ஒரு மாணவனை , ஒரு மகானை , ஒரு குழந்தையை  நான் கண்டிருக்கிறேன்..

சாரு ஓர் அரசன்

அரசன் போல ஆடை அணிந்து , அரச வாழ்க்கை வாழ்பவர் சாரு என்பது பலருக்குத் தெரியும்.. அவரது மனோபாவம் ,  நடத்தை போன்றவையும் ஓர் அரசன் போலவே இருக்கும் என்பது நேரில் பழகிய என் போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும்..

ராமாயணத்தில் ஒரு காட்சி.  ராவணன் செய்வது தவறு என நினைக்கும் விபீடணன் ராமருடன் சேர்ந்து கொள்ள வருகிறான். அவனை சேர்க்கலாமா கூடாதா என விவாதிக்கிறார்கள்..

எதிரியின் ஆளை சேர்த்தால் , எதிரி வலுவிழப்பான்.. அவன் குறித்த ரகசியங்கள் நமக்கு தெரியும்.. சேர்க்கலாம் என்கிறது ஒரு தரப்பு.

ஒருவேளை அவன் உளவாளியாக இருக்கலாம்… வேண்டாம் என்கிறது ஒரு தரப்பு..

இரண்டையும் கேட்ட ராமன் சொல்கிறான்..

அவனை சேர்த்தால் எனக்கு நல்லதா கெட்டதா என்பது அடுத்த பட்சம்.. நான் நினைப்பது வேறு… அவன் என்னை நம்பி வந்து விட்டான்… அவனை காப்பாற்றவில்லை என்றால் நானெல்லாம் அரசனாக , ஆண்மகனாக இருந்தால் என்ன ,. இல்லாவிட்டால்தான் என்ன என வீர முழக்கம் இடுகிறான்.

இடைந்தவர்க்கு, “அபயம், யாம்!” என்று

இரந்தவர்க்கு, எறி நீர்வேலை

கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற்

கண்டிலீரோ?

உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று

ஈயான் ஆயின்,

அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என்

ஆம்? ஆண்மை என் ஆம்

இதை இங்கே சொல்ல ஒரு காரணம் இருக்கிறது..

ஒரு முறை சாருவின் நூல் ஒன்றுக்கு நான் முன்னுரை ஒன்று எழுதினேன்.. சாருவைப்பற்றி எழுதினால் எவ்வளவோ எழுதலாம் அல்லவா… எனவே முன்னுரை அளவு அதிகமாகிவிட்டது…

படித்த பதிப்பகத்தார் , முன்னுரை நன்றாக இருக்கிறது.. ஆனால் பெரிதாக உள்ளது…குறைக்க வேண்டுமே என்றார்கள்…கஷ்டப்பட்டு எழுதியது கட் ஆகப்போகிறதே என எனக்கு வருத்தம்.. ஆனால் என்ன செய்வது..

இந்த பிரச்சனை சாருவிடம் சென்றது…

அந்த முன்னுரையை சற்றும் குறைக்காதீர்கள்.. பக்கங்கள் அதிக்மானாலும் பரவாயில்லை… கட் செய்யும் பேச்சுக்கு இடமில்லை என திட்டவட்டமாக சொல்லி விட்டார்.

தன் எழுத்தை கட் செய்து விட்டனர்.. எடிட் செய்து விட்டனர் என சண்டை போடும் எழுத்தாளர்களைப் பார்த்துள்ளோம்.. ஆனால் தன்னை நம்பி வந்த வாசகனுக்காக , நண்பனுக்காக குரல் கொடுத்த சாரு ஒரு தலைவனாக , ஒரு அரசனாக என் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார்

சாரு ஒரு குழந்தை

சாருவின் வாழ்க்கை பல துரோகங்களை சந்த்தித்த ஒன்று… அப்படி துரோகம் செய்தவர்கள் வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பது வேறு விஷ்யம்.. இந்த துரோகங்களுக்கு காரணம் அவரது குழந்தை மனம்தான்…

வாசகர் வட்ட சந்திப்பு ஒன்றில் அவர் அடுத்த கட்டுரைக்காக சில விபரங்கள் சொன்னார்… அதை டைப் செய்ய கணினி இல்லை… உடனே என்னிடம் “ பிச்சை .. நான் சொல்வதை நோட் செய்து கொள்ளுங்க்ள்..பிறகு எனக்கு நினைவூட்டுங்கள் “ என்றார்.. ஒரு பேப்பரில் அவர் சொன்னதை குறித்துக்கொண்டேன்…

சில நாட்களுக்குபிறகு அவருக்கு அதை தட்டச்சு செய்து மெயில் செய்தேன்… அவர் பதில் அனுப்பினார்

அன்புள்ள பிச்சை..

வெகு அருமையான தகவல்… இதை என் கட்டுரைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பீர்களா

அன்புடன் ,

சாரு

படித்து திகைத்துபோனேன்… அவரை அனுமதிக்க நான் யார்? முழுக்க முழுக்க அது அவர் சிந்தனை… அவர் கட்டுரை.. நான் சும்மா தட்டச்சினேன்…

ஒரு வேளை அவர் அதை மறந்திருக்கலாம்… எனக்கு அந்த கணத்தில் அவர் ஒரு குழந்தையாக தோன்றினார்….

அவரது இந்த அப்பாவித்தனத்தை பயன்படுத்தி , தானே அவருக்கு கதை எழுதிக்கொடுத்ததாக சிலர் அந்த காலத்தில் பேட்டி அளித்ததும் , இயற்கையே அல்லது இறைவனே பிறகு அவர்களை கடுமையாக தண்டித்ததும் நினைவுக்கு வந்தது

வாசகர் வட்ட கூட்டங்களில் , நாங்களெல்லாம் உணவருந்தி ஓய்வாக இருப்போம்.. அப்போது ஏதேனும் நாய் வந்தால் , அவற்றுடன் அவர் குழந்தை போல பேசிக்கொண்டிருப்பார்..

என்னடா… சாப்பிட்டியா… பசிக்குதா என அன்பாக பேசுவார்.. அப்போது அவர் முகபாவத்தை பார்ப்பது ஒரு பேரனுபவம்

( இன்னும் எழுதுவேன் )