மன்னியுங்கள் நண்பர்களே…

ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் தொடர்ந்து இந்தியா பற்றிக் கடுமையாக விமர்சித்தே எழுதுகிறீர்கள்.  இந்த முறையாவது அப்படி எழுத வேண்டாம் என்று சில நண்பர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.  எனக்கும் அவர்கள் சொன்னதில் நியாயம் தெரிந்தது.  ஆனால் தொடர்ந்து தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது என்னால் இந்தியாவில் உள்ள நல்ல விஷயங்கள் பற்றி எழுத முடியாது என்றே தோன்றுகிறது.  இந்தியா என்றால் என்ன?  அதன் மக்கள்தானே?  அதன் மக்கள் தொகையில் கணிசமான பேர் ரேப்பிஸ்டுகளாக இருக்கும் போது நான் எப்படி இந்தியா பற்றிப் பாராட்டி எழுத முடியும்?  நிச்சயமாக இந்தியாவைப் பாராட்டி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன தான்.  அதெல்லாம் கலாச்சாரம் சார்ந்தவை.  ஆனால் இன்றைய நாட்டு நடப்பு ஒரு வீடே தீப்பற்றி எரிவதைப் போல் உள்ளது.  இன்றைய செய்தி: பனிரண்டு வயதுச் சிறுமியை 22 பேர் கடந்த ஏழு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.  ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் லிஃப்ட்மேன், வாட்ச்மேன், ப்ளம்பர், அவர்களின் நண்பர்கள் என்று 22 பேர் கடந்த 7 மாதங்களாக செக்ஸ் டார்ச்சர்.  22 பேர் என்பது குறைந்த பட்சம் என்கிறது விசாரணைக் குழு.  அதுவும் அந்தக் குழந்தைக்கு இரண்டு காதுகளும் சரியாகக் கேட்காது.

இதோடு போகவில்லை.  கடந்த ஒரு ஆண்டில் என்னோடு பேசிய ஐந்து பெண்கள் – ஐந்து பேருமே திருமண உறவை முறித்துக் கொண்டவர்கள், சமூகத்தில் பலராலும் அறியப்பட்டவர்கள் – தன் பார்ட்னர்கள் சிகரெட்டால் முலைகளில் சுட்டதாகச் சொன்னார்கள்.   அவர்களின் கதைகள் அனைத்தும் Marquis de Sade கதைகளில் வரும் சம்பவங்களைப் போலவே இருந்தன.

எனவே இந்தியாவில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஏற்படும் நிலை வரும் வரை – அதற்கு இன்னும் 1000 ஆண்டுகள் ஆகலாம், அல்லது அதற்கும் மேலும் ஆகலாம் – நான் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்தே எழுதுவேன்.

காது கேளாத அந்தப் பனிரண்டு வயது சிறுமிக்கு இப்போது மனநலம் கூடப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.  யோசித்துப் பாருங்கள் – 22 பேர்.  ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறுமியை அவள் தகப்பன், அவள் அண்ணன், அவள் மாமா என்று பத்துப் பனிரண்டு பேர் பல ஆண்டுகளாக ரேப் செய்த செய்தி வந்தது.  ஞாபகம் இருக்கிறதா?  திருப்பூர் பக்கம் என்று நினைக்கிறேன்.

என்னால் முடிந்தது, ஐரோப்பியர்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டும்.  இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.  பெண்கள் ரேப் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  பெண்களின்  முலைகளில் தீக்கங்குகள் நசுக்கப்படுகின்றன.  இங்கே குழந்தைகளின் ஜனன உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன.  இதை நான் சொல்லியே ஆக வேண்டும். சொல்லிக் கொண்டே தான் இருப்பேன்.