ஒரு காட்டுமிராண்டி சமூகத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமாக காரியங்களுக்கு எதிர்வினைகள் மட்டும் நியாயமான, தர்மமான முறையில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம், மடத்தனம் மட்டுமல்ல; அதர்மமும் கூட. எனவே 17 பேருக்கு எதிராக முடிவு செய்திருக்கும் வக்கீல்களின் முடிவு சரியானதுதான். இதை நாம் அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் கோணத்திலிருந்து மட்டுமே பார்க்க வேண்டும். அது எத்தனை முறையற்றதாக இருந்தாலும். 17 பேருக்கும் அவர்கள் சாகும் தினம் வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பரோல் அனுமதிக்கக் கூடாது.
பரோலில் விட்டால் வெளியே வந்து ரெண்டு மூணு பெண்களைக் கிழித்துப் போடுவான்கள். ஏழு வயதுக் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இளைஞனை அவன் தகப்பன் ஜாமீனில் எடுக்க, அவன் ஜாமீனில் வந்து தன் அம்மாவைக் கொலை செய்தான் அல்லவா? பரோலில் விட்டால் அப்படித்தான் நடக்கும். இப்படியெல்லாம் ஒரு எழுத்தாளன் பேசுவது political correctness இல்லைதான். ஆனால் இது காட்டுமிராண்டி சமூகம். இங்கே தர்ம நியாயங்கள் பேச முடியாது.
வாஸ்தவத்தில் சொல்லப் போனால் அந்த 17 பேருக்கும் மரண தண்டனைதான் சரி. ஆனால் அடுத்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் 40 பேர் 50 பேர் என்று பிடிபடுவார்கள் என நம்புகிறேன். அத்தனை பேருக்கும் மரண தண்டனை கொடுக்க முடியுமா என்ன? அந்த practical difficulties ஐ உத்தேசித்தே மேற்படி தண்டனை.
பெண்ணுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் வர்க்கம் ஜாதி எல்லாம் பார்க்க முடியாது. ஆண் மற்றும் பெண். அவ்வளவுதான். தில்லி பஸ்ஸில் அன்றைய தினம் 20 ஆண்கள் இருந்திருந்தால் அந்த 20 பேருமே அந்தப் பெண்ணைக் கிழித்து எறிந்திருப்பார்கள்.
தில்லியில் நான் வாழ்ந்த போது ஒரு உயர்நிலைப் போலீஸ் அதிகாரி முகம் முழுதும் ரத்தமாய் என் வீட்டுக்கு வந்த அந்த நள்ளிரவை என்னால் என்றுமே மறக்க முடியாது. அவர் கணவன் கொடுத்த பரிசு அது. எல்லாம் மேட்டுக்குடி. இப்படிப்பட்ட மேட்டுக்குடி கதைகள் மட்டுமே எழுத நூறு பக்கங்கள் உள்ளன.