பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் முன்பதிவு

https://tinyurl.com/pazhuppu3

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு இரண்டாம் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லை. காரணம், இரண்டாம் பாகத்துக்கு நான் ஒவ்வொரு நண்பராக போன் செய்து ஞாபகப்படுத்தினேன். இப்போது அப்படிச் செய்யவில்லை. நான் போன் பண்ணாவிட்டாலும் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களான 500 பேர் வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையே காரணம். உண்மையில், மூன்றாம் பாகம் இரண்டாம் பாகத்தை விட முக்கியமானது. சி.சு. செல்லப்பா, கு.ப.ரா. ஆகிய இருவரும் இதில்தான் இருக்கிறார்கள்.

மேலும், ப. சிங்காரம். அவருடைய புயலிலே ஒரு தோணி ஏன் தமிழின் மகத்தான நாவல் என்று இதில் ஆய்வுபூர்வமாக நிறுவியிருக்கிறேன். பின்னால் வருவது கு.ப.ரா. பற்றி தி.ஜா.வும், ந. பிச்சமூர்த்தியும் எழுதியிருப்பவை. கு.ப.ரா. ஆண் பெண் உறவு பற்றி எழுதியதாலேயே இன்று வரை இலக்கியவாதிகளின் நன்மதிப்பில் இல்லாதவர். நிறைவேறாக் காதல் என்ற ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு 25 கதை எழுதிய மௌனியெல்லாம் சிறுகதையின் திருமூலர்! ஆனால் தமிழ் வாழ்வின் சகல அம்சங்கங்களோடு உறவாடி, ஊடுருவி, இடையீடு செய்து எழுதியதோடு மட்டும் அல்லாமல் வங்காள இலக்கியம் மற்றும் உலக இலக்கியத்தையும் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மேதை கு.ப.ரா. இங்கே ஒரு தீண்டத்தகாதவர்! இத்தகைய கட்டுக்கதைகளை உடைத்து எறியும் நூல் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம்.

இந்த நூலை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் hard bound (கெட்டி அட்டை) நூல் கிடைக்கும். முன்பதிவு செய்யாமல் பிறகு வாங்குபவர்களுக்கு சாதா அட்டைதான். எனவே 250 ரூ. செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். விலையே மதிக்க முடியாத பொக்கிஷம் இந்த நூல் என்பதை இதைப் படிக்கும் போது உணர்வீர்கள்.

“ஆண் பெண் உறவையே முக்கியமான விஷயமாகக் கையாண்டதால் அவன் (கு.ப.ரா.) எழுத்தில் ஏதோ பச்சையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பெண் மனம் இப்படியா இருக்கிறது என்று நினைக்க இஷ்டப்படாதவர்கள் – உண்மையைப் பார்க்க, பேசப் பயந்தவர்கள் – கூறும் பேச்சு இது. அவர்கள் மறுப்பதே அவன் எழுத்தின் உண்மைக்கு அத்தாட்சி. பச்சையாக இருந்தால் அது அவன் குற்றமன்று. ஆண் பெண் உறவு இப்பொழுது நிலவி வரும் முறையின் குற்றம்,” என்று ந. பிச்சமூர்த்தி கூறுகிறார்.
‘வழிகாட்டி’ என்ற கட்டுரையில் தி. ஜானகிராமன் தனக்கும் கரிச்சான் குஞ்சுவுக்கும் வழிகாட்டியாக விளங்கிய கு.ப.ரா. பற்றி இப்படி எழுதுகிறார்:

“நாங்கள் (தி.ஜா.வும் கரிச்சான் குஞ்சுவும்) சற்று அதிகமாக அவரைப் பற்றியே பேசியதற்குக் காரணம் ஒரு கோபம். ‘செக்ஸ்’ கதைகளை எழுதி அவர் தீட்டுப்பட்டுவிட்டது போலவும், இலக்கிய நெறியிலிருந்து குப்புறச் சரிந்துவிட்டதாகவும் சில விமர்சகர்கள் அந்தக் காலத்தில் (முப்பதுகளில்) எழுதிக்கொண்டிருந்தார்கள். கற்பிழந்து ‘அந்தத்’ தெருவுக்குக் குடி போய்விட்ட பெண் பிள்ளை பற்றிப் பேசுவது போல் அவரைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர் மறுப்போ, பதிலோ எழுதிய ஞாபகம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களோடு பல நாட்கள் அதைப் பற்றிப் பேசியிருக்கிறார். ‘இதைப் படிக்கிறபோது, தன் பெண்டாட்டியைப் பற்றி எழுதுகிறானோ என்று கவலைப்படுகிறார்களோ?’ என்று இயல்பான மெல்லிய குரலில் பதில் அடங்கிய கேள்வி ஒன்றை அவர் எங்களிடம் கேட்டது ஞாபகம் இருக்கிறது.”

https://tinyurl.com/pazhuppu3