இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல்

நன்றி: தடம், ஜூன் 2018

இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்து வருகிறது.  அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது.  இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும்.  சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கி வைத்த நவீனத்துவம் (modernism) பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றம் அடைந்து இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகள் பின்னே போய் விட்டது.  நவீனத்துவம் என்பது ஒரு ஸ்டைல் அல்ல; டெக்னிக் அல்ல.  அது ஒரு பார்வை.  பாரம்பரியத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு நவீனகாலச் சிந்தனைகளை நோக்கிய பாய்ச்சலே நவீனத்துவம்.  உதாரணமாக, தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுபவள், பெய் என்றால் மழை பெய்யும் என்கிறது திருக்குறள்.  ஆனால், தி. ஜானகிராமனின் மரப்பசுவில் வரும் அம்மணி தனக்குப் பிடித்த அத்தனை ஆண்களோடும் உறவு வைத்துக் கொள்கிறாள்.  இப்படிச் சொன்னால் நவீனத்துவம் என்றால் பாலியலை எழுதுவது என்று தவறான புரிதலை ஏற்படுத்தலாம்.  அது தவறு.  நவீன சிந்தனை வளர்ச்சிக்கு ஏற்ப பிரச்சினைகளைக் காண்பதே நவீனத்துவம்.  ஒரு பெண்ணின் துயரத்தை ‘அது அவள் விதி’ என்று பார்க்கிறது பாரம்பரியம்.  ஆனால் அந்த விதியை எதிர்த்துக் கலகம் செய்கிறது நவீனத்துவம்.

ஆனால் பழைய இதிகாசங்களைத் திரும்ப எழுதுவதன் மூலம் நம் எழுத்தாளர்கள் மொழியையும், சிந்தனைப் போக்கையும் திரும்பவும் நூறு ஆண்டுகளுக்குப் பின்னே கொண்டு செல்கிறார்கள்.  பின்நவீனத்துவத்துக்கு நேர் எதிரான இந்தப் போக்கினால் இலக்கியத்தின் பன்முகத்தன்மை அடிபட்டுப் போகிறது.  எல்லாவற்றுக்கும் ஒற்றை முடிவு கொடுக்கப்படுகிறது.  இது ஒருவகையில் அரசியல்ரீதியான ஃபாஸிஸப் போக்கோடு ஒத்துப் போவதாகும்.  ‘வேறு’ அல்லது ‘பிறிது’ (Other) என்ற அடையாளத்தை அழித்து   ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு கடவுள், ஒரு கலாச்சாரம் என்று எல்லாவற்றையும் ஒரே அச்சில் வார்ப்பதுதான் இதன் இறுதி விளைவாக அமையும்.  ஆக, இதிகாசங்களைத் திரும்ப எழுதுவது இன்றைய இந்தியாவின் அரசியல் சமூகப் பிரச்சினையாக இருக்கும் ஒற்றை அடையாளத்தோடு ஒத்துப் போவதாகவே இருக்கும்.  இது இலக்கியத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரானது.  இங்கே இலக்கியம் என்பதை தேசம் என்றும் வாசித்துக்கொள்ளலாம்.